Image result

ஆசிரியர் தினத்தன்று பிறந்த நாள் காணும் தன்னிகரில்லாத் தமிழர்  வ உ சிதம்பரம் பிள்ளை   அவர்களை நினைவு கூர்வோம்.  

சிறையில் இருக்கும்போது அவருடைய சுயசரிதையைக் கவிதை வடிவில் எழுதினார். தமிழ் மொழியில் தன்னுடைய சுயசரிதையைக் கவிதை வடிவில் எழுதிய முதல் மனிதர் வ.உ.சி என்றே கூறலாம்.

பரலி சு.நெல்லையப்பரின் வேண்டுகோளுக்கு இணங்கி வ.உ.சி இதை உருவாக்கினார்.

இது ஒரு வரலாற்று ஆவணம்.

அவருடைய குடும்ப வரலாறு, அக்காலச் சிறைக் கொடுமை, கப்பல் வணிகம் ஆகியன இதில் இடம் பெறுகின்றன.

அதிலிருந்து சில வரிகள் :

இள வயதில் இவர் விளையாடிய விளையாட்டுகளைப்பற்றி:

“சுவர் மேல் நடத்தல், தொன்மரம் ஏறுதல்,
கவண்கொடுங் கைகொடுங் கல்லெறி பழகுதல்,
கண்ணினைப் பொத்திக் காட்டில் விடுதல்,
எண்ணினைச் சுவாசம் இழுக்காது இயம்பல்,
குதி வட்டாடுதல், கோலி தெறித்தல்,
குதிரை மீது ஊரிதல், கோலேறி நடத்தல்,
காற்றிரி எறிதல், கால்மாறி ஓடுதல்,
மேற்றிரி பந்தின் விளையாட்டுப் பலப்பல
சடுகுடு, கிளியந்தட்டு, பல்லி
நெடுகடும் ஓட்டம் நீர் விளையாட்டம்
கம்பு சுற்றுதல், கத்தி வீசுதல்,
‘தம்’ மினை அடக்கித் தலைகீழ் நடத்தல்,
கசரத்து, பஸ்கி, கலப்புறு குஸ்தி
நிசத்துச் சண்டையில் நிற்கும் முறைகள்
வெடிகொடு சுடுதல், வில்லொடு தெறித்தல்
அடிபிடி சண்டை அளவில் புரிந்தேன்.”

சிறையில் காலில் விலங்கிட்டதினை இங்ஙனம் விவரிக்கிறார்:

“தந்தான் வலதுகால் தண்டைகள் எமக்கே;
அரும்பொன் காலிடல் அபசாரமாதலால்
இரும்பினை அணியுமென் றீந்ததைப் போன்றே”

செக்கிழுத்ததைப் பற்றி:

“திங்கட்கிழமை ஜெயிலர் என் கைத்தோல்
உரிந்ததைப் பார்த்தான், உடன் அவன் எண்ணெய்
ஆட்டும் செக்கினை மாட்டிற்குப் பதிலாப்
பகலெலாம் வெயிலில் நடந்து தள்ளிட
அனுப்பினன் ; அவனுடைய அன்புதான் என்னே!”

ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கப்பல்  ஓட்டிய தமிழர், தொழிலாளர்களுக்காகப் போராடிய தொழிற்சங்கத் தலைவர், சுதந்திரத்துக்காகத்  திலகரைத்  தலைவராகக்கொண்டு கர்ஜித்த  சிங்கம் , நீதி மன்றத்தில் சுதேசிகளுக்காக் குரல் எழுப்பிய வழுக்குரைஞர் கடைசியில் சிறைப்பட்டு, செக்கிழுத்து வறுமையில் வாடினார் என்பதை எண்ணும்போது கல்லும் கரையும்.

வ உ சி அவர்களே  எழுதிய இந்தப் பாடலைப் படித்தால் நெஞ்சம் விம்மும். 

வந்த கவிஞர்க்கெல்லாம் மாரியெனப் பல்பொருளும்
தந்த சிதம்பரன் தாழ்ந்தின்று – சந்தமில் வெண்
பாச்சொல்லிப் பிச்சைக்குப் பாரெல்லாம் ஓடுகிறான்
நாச்சொல்லும் தோலும் நலிந்து.

அப்படிப்பட்ட வ உ  சியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் படம் தான் சிவாஜி கணேசன் நடித்த  கப்பலோட்டிய தமிழன். 

இத்திரைப்படத்திற்கு ஜி. ராமநாதன் இசையமைத்திருந்தார்.

சுப்பிரமணிய பாரதியாரின் பாடல்கள் இத்திரைப்படத்தில் இடம்பெற்றன.

கதையை ம. பொ. சிவஞானமும், திரைக்கதையை கிருஷ்ணசாமியும், வசனத்தை எஸ். டி. சுந்தரமும் எழுதியிருந்தனர்.

இது வீரபாண்டிய கட்டபொம்மனை தயாரித்து இயக்கிய பி. ஆர். பந்துலு அவர்கள் இயக்கித் தயாரித்த திரைப்படம்.

Image result for கப்பலோட்டிய தமிழன் திரைப்படம்

இப்படம் 1962ல்  9வது சிறந்த தேசிய பட விருதை பெற்றது
இது  வரிவிலக்கு பெற்ற முதல் தமிழ் படம்.

இப்படத்தில் வ உ  சியாக வாழ்ந்து காட்டிய சிவாஜியின் நடிப்பின் சில பரிமாணங்களை இந்த வீடியோவில் காணலாம்.