Related image 

அந்த  விஸ்தாரமான நகர பஸ்நிலையம்  பயணிகள்  அதிகம்பேர்  தென்படாமல் அநேகமாகக்  காலியாகஇருந்தது.. பஸ்வளாகத்தில்  காலியாக  வரிசையாக  நிறையப் பேருந்துகள்  புறப்படுவதற்கு  இன்னும்  தயாராகாத  நிலையில்  வெறுமையாக  நின்றுகொண்டிருந்தன.

 அங்கே  வளாகத்தில்  நுழைந்தபோது சரியான உச்சி  வெய்யில்    என் மண்டையைப்  பிளந்து  வேர்த்து வழிந்துகொண்டிருந்தது.   வளாகத்தில்  நான்  போகவேண்டிய  எண்ணுள்ள  பேருந்துகளும்  இரண்டு மூன்று நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தபோது  சற்று  ஆறுதலாக  இருந்தது. எப்படியும் ஏதாவது  ஒரு பஸ்ஸில்  நிம்மதியாகப்  பயணம்செய்யலாம் என்ற  நம்பிக்கையும்கூட.

   ஆனால் அங்கே  எந்த  பஸ்  முதலில்  கிளம்பும்?  சுற்றுமுற்றும்  விவரமறியத்  தகவலுக்காக  யாரையாவது  தேடினேன்.  அங்கே  சற்றுத்தூரத்தில் தள்ளியிருந்த டீக்கடை  மரநிழலில்  மூன்று  போக்குவரத்து  நெறியாளர்கள்  சீருடையில்  நின்றுகொண்டு  கையில் பஸ்  அட்டவணைகளுடன்  தோளில்  விஸில் பட்டைகளுடன்  வாயில் லேசாகப் புகைந்துகொண்டிருந்த  சிகரட்டுடன்  நின்றுகொண்டிருந்தார்கள்.  அவர்களைக்  கேட்டால்  எனக்குச்  சுலபமாகத்  தகவல்  கிடைக்கும்.

  நான்  அவர்களை  அணுகியபோது  அவர்கள்  பேச்சு  மும்முரமாக  வேறு எதைப்பற்றியோ  இருந்தது.  நான்  அவர்களிடம்  எதையோ  கேட்க  முயற்சிசெய்வதை  அவர்கள்  கவனித்ததாகத்  தெரியவில்லை.. பொருட்படுத்தியமாதிரியே தெரியவில்லை.

   “எப்படியும்  இரண்டு  நாளில்  முடிவு  தெரிந்துவிடும்..”  என்றார்  ஒருவர். “போன வருஷத்து  வெலைவாசிவேறே…இந்த  வருஷம்வேறே!.. ஒரு பெர்ஸண்ட்கூட சேத்துக் கொடுக்கலைன்னா..வேஸ்ட்!..”  என்றார்  இன்னொருவர்.                          “என்னய்யா…செய்யறான்  அந்த  செக்ரட்ரீ?  எப்பக் கேட்டாலும்  இன்னும்  அமைச்சர்  கூப்பிடலை  கூப்பிடலைன்னு  சொல்றான்…”  வாயிலிருந்து  கோபமாக  பீடியைத்  தூக்கிஎறிந்தார்  இன்னொருவர்.

 நான்  இரண்டு  முறை  “ ஸார்…ஸார்..”  என்று  கூப்பிட்டேன்.  அப்போது  ஒரு  பேருந்து  வேகமாகக்   கிளம்பி  வெளியேறியதால்  நான்  கூப்பிட்டது  அவர்கள்  காதில்  விழவில்லை.  நான்  இப்போது  இன்னும் உரத்த  குரலில்  கூப்பிட்டேன்.  அந்த  மூவரும்  என்னை  அப்போதுதான்  திரும்பிப்  பார்த்தார்கள்.  நான்  கத்தியது  அவர்களுக்கு  வினோதமாகத்  தோன்றி இருக்கவேண்டும். 

  “ என்னய்யா? ” 

 “ ஸார்.. நான்  மாம்பலம்  போகணும்  இந்த  ரெண்டு  மூணு பஸ்ஸுலே   எந்த  பஸ்  முன்னால கெளம்பும்னு  தெரியணும்…”

 “அடடா…நீங்க  அதுக்காகவா  நிக்கறீங்க….இப்பத்தானே   ஒரு  பஸ்  போவுது…” என்றான்  ஒருவன்  அனுதாபத்துடன்.

நான்  பேசாமல்  நின்றேன்.  தகவலைக்  கேட்பதற்காக  அவர்களிடம் வந்துநின்றது  என்  தவறு  என்கிறானோ?  நான் என்  பதிலுக்காக  அவர்களை எதிர்பார்த்துநின்றேன்.

 அவர்களில்  ஒருவன்  பக்கத்திலிருந்த  பேருந்துகளை இரண்டுமுறை  பார்த்தான். 

 “அதோ  அந்த  ரெண்டாவது  பஸ்ஸுலே  போய் ஏறிக்கோங்க..” 

“ அதுதான்  முதல்லே  போகுமா? “

“  போகும்  போகும்…”

  “ரொம்ப  நன்றி ஸார்…” 

நான்  அவர்களைவிட்டு  விலகி நடந்து  அந்தப் பேருந்திடம்  போய் ஏறப்போனேன்.

“எதுக்கும்  கேட்டுட்டு  ஏறுங்க..”  என்று  தூரத்திலிருந்து  இன்னொரு  அதிகாரி  சொன்னான்! 

அவர்  சொன்னது  எனக்கு  விளங்கவில்லை.   அதில்  ஏதாவது  பொறுப்பான   தகவல் இருக்கிறதாவென்று  தெரியவில்லை. அவர் என்ன சொல்லுகிறார்!! மீண்டும்  அவர்களிடம்போய்  விவரங்கள்  கேட்க  முயலும்போது  அந்தப்  பேருந்துகளில்  இன்னொன்றும்  என்னை  விட்டுவிட்டுச்  சென்றுவிடலாம்.  எனக்கு  இப்போது   தேவை  உட்காருவதற்கு  ஒரு  இடம்.  நின்று கொண்டிருக்கும் ஒரு பஸ்ஸுக்குள்  ஏறிக்கொள்வதுதான்  அதற்கு  வசதி.

  நான்  ஏதோ  நம்பிக்கையுடன்  அந்தப்  பேருந்துக்குள் ஏறி   உட்கார்ந்துகொண்டேன்.  பதினைந்து  நிமிடங்கள்  ஆகியிருக்கும்..  அநேகமாகத்  தூங்கியேவிட்டேன்,  திடீரென்று  எனக்கு  அருகாமையில்  நின்றுகொண்டிருந்த  இன்னொரு  பேருந்து  க்ரீச்சென்ற  சப்தத்துடன்  சீறிக்  கிளம்பிக்கொண்டிருந்தது.  பயணியை  ஏமாற்றிவிட்டு  ஓடுவதில்  இந்த  பஸ்களுக்கு ஏனோ  இவ்வளவு  ஆனந்தமும்  அவசரமும்!

    நான் கிளம்பிய  பஸ்ஸை  நிறுத்த   உரக்கக்  கத்தியதும்  அதன்  காதில்  விழவில்லை.  இப்போது  நான்  என்ன  செய்வது”  இப்போது  இத்தனை  நேரம்வரை உட்கார்ந்துகொண்டிருந்த  பஸ்ஸைவிட்டுக்  கீழே இறங்கினால்  ஒருவேளை  இதுவும்  என்னை  விட்டுவிட்டு  ஓடிவிடலாம் பிறகு  எல்லாம்  கைவிட்ட  அனாதை நிலை!

  அந்த  மூன்று  போக்குவரத்து  நெறியாளர்களும்  டீக்கடை விவாதங்களை  ஒருவாறு  முடித்துக்கொண்டு  இப்போது மெதுவாக  வந்துகொண்டிருந்தார்கள்  அவர்களில்  ஒருவன்  நான்  பஸ்ஸுக்குள்  உட்கார்ந்திருப்பதைப் பார்த்து  அடையாளம்  தெரிந்துகொண்டான். அவனுக்கு என்மேல்  ஏனோ  ஒரு  அக்கறை…

“அடடா..  ஏய்யா.. பெரியவரே…. இந்த  பஸ்ஸுலே ஏன்  ஏறினீங்க ?  இப்பத்தானே…  அந்த  வண்டி  போச்சு? 

நான்  பதில்  பேசவில்லை.  எனக்குள்  வெந்துகொண்டிருந்த  கோபத்தை நானே  ஜீரணித்துக்கொள்ளவேண்டி இருந்தது.

அவர்கள்  மேலும் நிற்காமல்  என்னைக் கடந்து  நடந்து போய்க்கொண்டிருந்தார்கள்.

அவர்களில்  இன்னொருவன்  மட்டும்  என்னைப்  பார்த்து  “ஸார்…  இந்த  வண்டி  கெளம்பறதுக்கு  இன்னும்  இருபது  நிமிஷம்  ஆகும்..”  என்று  உபகார சிந்தையுடன்  என்னைப் பார்த்துச்   சொல்லிவிட்டுப்  போய்க்கொண்டிருந்தான்..

“அட்டா.. மேலும்  எவ்வளவு  நேரம்  காத்திருக்கவேண்டுமென்ற   ஒரு  அவசியமான   தகவலை    அக்கரையுடன்  எனக்குத்  தெரிவித்தற்காக  நான் அவருக்கு நன்றி  சொல்லித்தான்  ஆகவேண்டும்!!

  நான்  பேருந்தைவிட்டுக்  கீழே இறங்கினேன்.  நிதானமாக  நடந்தால்  என்  வீட்டுக்கு ஒரு  அரைமணி நேரத்தில்  சென்றுவிடலாம். ஆனால்  இப்போது  உச்சி  வெய்யில்.  நிழல்  பார்த்து  நின்றுநின்று  போனால்கூட எப்படியும்  முக்கால் மணியில்  போய்விடலாம்

 என்  மனதுக்குள்  பொருமிக்கொண்டிருந்த  இந்த  பஸ்நிலைய  அனுபவத்தைவிட  வெய்யிலின்  உக்கிரம்  குறைவாகத்தான்  இருக்கும்.  நான்  நடக்கஆரம்பித்தேன்.   பத்து  நிமிஷம்  நடந்திருப்பேன். .  நான்  விட்டுவிட்டு  இறங்கி வந்த  அந்த  பஸ்  என்னைக்  கடந்து புழுதியைக் கிளப்பிக்கொண்டு  காலியாகப்  போய்க்கொண்டிருந்தது!.

                                                         *************

  வெளிநாட்டிலிருந்து  வருகிறவர்கள்  நம்மூரில்  நடக்கும்  இப்படிப்பட்டச்  சின்னச்சின்ன  விபரீதங்களைப்பற்றி  மிகுந்த  மனக்கசப்புடன்  பேசுவதைப்  பார்த்திருக்கிறேன்.   அவர்களுக்கு  என்ன  பதில் சொல்லுவதென்று எனக்குள்  எப்போதுமே  சங்கடம்.  அவர்கள் சொல்லுகிறார்கள்……”  நாம்  எப்போதுமே    இந்தியாவின்  சுதந்திரத்தைத்  தவறான  வழியில்  பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம் என்று.!!.