
ரமணனுக்குப் பயமாக இருந்தது. அப்பா பிழைக்கவேண்டும். அப்பா போய்விட்டால், அம்மாவை, அக்காவை, தங்கையை என்று வாழ்க்கையை, அவனால் தனியாக சமாளிக்க முடியாது.
அவனுக்கு மாத்திரம் ஏன் இப்படி ஒரு பித்துக்குளி அம்மா வாய்த்திருக்கவேண்டும்? கேட்டால் கடைசி தங்கை பிரபாவின் பிரசவம்வரை, அப்பாவும் சரி, மற்றவர்களும் சரி, தவறாமல் சான்றிதழ் வழங்குகிறார்கள்.
“டெலிவரிம்போது ஏதோ ப்ராப்ளம்டா, ரமணா.!”
“இந்த உலகில் எவ்வளவோ அம்மாக்களுக்கு டெலிவரி ஆகவில்லையா? ஆனால் அவன் அம்மாவுக்கு மட்டும்தான் இந்தப் பிரச்சனையெல்லாம் வரவேண்டுமா? அவனால் அவன் அம்மாவை , இந்தக் குடும்பத்தை மும்பைக்குக் கூட்டிக்கொண்டு போகமுடியாது. யார் காட்டிய தயவிலோ , அவனே இன்னமும் ‘ஒரு பேயிங் கெஸ்டாகத்தான்’ ஏதோ ஒரு குடும்பத்துடன் ஒரு சிங்கிள் பெட்ரூம் ஃபிளாட்டில் ஒட்டிக்கொண்டு இருக்கிறான். பெரும்பாலான நேரங்களில், பால்கனிதான் அவன் குடியிருப்பு. காலை எட்டு மணிக்குப் புறப்பட்டால், அவன் மீண்டும் பால்கனியைப் பார்க்க இரவு எட்டுமணி, ஒன்பதுமணி ஆகிவிடும். வாரத்தில் ஒரு நாளோ, இரண்டு நாளோ, தென்னகச் சாப்பாட்டிற்காக, கன்சர்னில் சாப்பிடுவதோடு சரி, மற்றப்படி, மின் ரயில் பயணம், ஓட்டம், பஸ் பிடித்தல், … எவ்வளவு சம்பாதித்தாலும் பத்தாத பம்பாய்!
அவன் அப்பாவுக்கு என்ன வேலை என்று அவன் யாரிடமும் சொன்னதில்லை.. சொல்லிக்கொள்கிறார்போல் ஒரு வேலையிலோ, பதவியிலோ அப்பா என்றைக்குமே இருந்ததில்லை.ஒரு ஆறு மாதம் ஏதாவது சைவ விடுதியில் சரக்கு மாஸ்டராக இருப்பார். பிறகு பார்த்தால் ஒரு ஆறு மாதம் கல்யாண வீடுகளில் இலை வைத்து, தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருப்பார். திடீரென்று சில காலம், ஏதாவது ஒரு கோயிலில் லட்டு பிடித்துக்கொண்டு இருப்பார். இரண்டு வேட்டிகள், இரண்டு துண்டுகளுடன் காலத்தைத் தள்ளும் அப்பா. ஆனால் நல்ல வெள்ளையாக உடுத்துவார். எந்த வேலையிலும் அவரால் நிரந்தரமாக இருக்க முடிந்ததேஇல்லை. குழந்தைகளுடன் சேர்ந்து, ஒரு பித்துக்குளியான மனைவியையும் கவனித்துக் கொள்ளவேண்டிய ஒரு கட்டாய வாழ்க்கை அவர்மீது திணிக்கப்பட்டிருந்ததும் இதற்கு ஒரு காரணமாக இருக்குமா?
அப்பா இவ்வளவு காலம், இவ்வளவுபேரை எப்படிக் காப்பாற்றினார்? அதுவே ரமணனுக்குப் புரியாத புதிர். பெண் குழந்தைகளுக்குச் சமயத்தில் தீபாவளிக்குக்கூட , தாவணி வாங்கமுடியாத காலங்கள் உண்டு. பித்துக்குளி அம்மாவின் வைத்தியச் செலவு, மருந்துச் செலவு, ஆட்டோ செலவு.. இதைத் தவிர அவன் குடும்பம் எதைத்தான் கண்டது?
பம்பாய், மும்பையான சில வருடங்களுக்கு முன்னரே, ரமணனுக்கு அங்கு வேலை கிடைத்தது. அக்காவுக்கு கல்யாணம் என்று நிச்சயம் ஆன தருணம். இது என்ன சோதனை? அவன் மும்பையில் இருந்து ஓடி வரவேண்டி இருந்தது.
அப்பா இன்டென்சிவ்கேர் யூனிட்டில்.
……………..
ஏதோ தற்செயலாக மேஜையின் மேலிருந்த அந்தக் கல்கி இதழைப் புரட்டிய மணிக்கு, அந்தக் கம்ப்யுட்டர் காகிதம் முதலில் லேசான ஒரு நெருடலாகத்தான் இருந்தது. அது ஒரு பாங்க் பாஸ் ஷீட். மாதாந்திர ஸ்டேட்மென்ட். அதாவது பாங்க் பாஸ் புத்தகம்போல. வங்கிகள் எல்லாம் கணிப்பொறிமயமாக்கப்பட்ட பின்னர், மாதா மாதம், அவர்களின் வங்கிக் கணக்குவழக்குகளை சரிபார்த்துக்கொள்ள வழங்கப்படும் அக்கௌன்ட்ஸ் ஸ்டேட்மென்ட். கொஞ்சம் கசங்கலாக இருந்தது. அதையே வெறித்துப் பார்க்கும் மணியின் மூளையில் ஏதோ ஒரு பொறி.
…………………..
போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் தயாராகிக் கொண்டிருந்தசமயம். பாலக்காட்டுப் பாட்டியின் சார்ட்டர்ட் அக்கௌன்டன்ட் பிள்ளை, துபாயில் இருந்து வந்துவிட்டான். மல்ஹோத்ராவிடம் விசிட்டிங் கார்ட் கொடுத்துவிட்டு வருத்தமாக நின்றான். மல்ஹோத்ரா, மணியை அறிமுகம் செய்துவைக்க , கிட்டத்தட்ட அழும் நிலைக்கே வந்துவிட்டான். அவன் பெயர் அனந்தகிருஷ்ணன்.
“அம்மா ரொம்ப ஆச்சாரம் சார். பாலக்காட்டுலேர்ந்து , பம்பாய்க்குக் கூட்டிக்கிட்டு வரவே ரொம்பக் கஷ்டப்பட்டேன். துபாய்க்கு நான் போனப்புறம் ஒரே ஒரு தடவை வந்தா.இனிமே வர மாட்டேன்னுட்டா. கடல் கடந்ததே பிடிக்கலை. இங்கே மாதுங்கா ரொம்ப பிடிச்சுப்போச்சு. சங்கரமடம், மகாலட்சுமி கோயில்னு ஏனோ ஒரு ஒட்டுதல். தனியாகவே இருந்தா. எவ்வளவு பணம் அனுப்பி என்ன பிரயோஜனம்? கூட நான் இங்க இருந்திருந்தா இதெல்லாம் நடந்திருக்குமா ? யார் சார் அந்த ராஸ்கல்?”
“தேடிக்கிட்டிருக்கோம். உங்க ஒத்துழைப்பு தேவை.”
“என்ன செய்யணம்?, சொல்லுங்க”
“ ஒரு கண்டோலன்ஸ் ரெஜிஸ்டர் போட்டிருக்கோம். துக்கம் விசாரிக்க வரவங்ககிட்ட ஒரு கையெழுத்து வாங்கிக்கணம்.”
“ஏன் சார், கொலைசெஞ்சவன், துக்கம் விசாரிக்கவும் வருவான்னு எதிர்பார்க்கறீங்களா? வாட் இஸ் திஸ் நான்சென்ஸ்?”
“மிஸ்டர், ஆனந்த், ப்ளீஸ். இது ஒரு நெருடலான கேஸா போருக்கு. எங்களுக்கு ஏதாவது ஒரு சின்ன நுனி கிடைக்கணம். கிடைக்கும். யூ ஆர் வெல் எஜுகேட்டட். எங்க நிலையைப் புரிஞ்சுக்கோங்க. உங்க ஒத்துழைப்பு முழுக்க முழுக்கத் தேவை”
“ஓகே. கோ அஹெட்….. யாரும் இன்சல்ட்டிங்கா ஃபீல் பண்ணாம பார்த்துக்குங்க. மை மதர் வாஸ் ஆ ஜெம் ஆஃப் எ வுமன். அவளை கடைசியாகப் பார்க்கவரவங்க மனசு நோகறாமாதிரி எதுவும் ஆயிடக்கூடாது.”
“ நிச்சயமா, ஆகாது.”
“ அப்படியானா, சரி.”
“ அது மாத்திரம் இல்லை, மிஸ்டர் அனந்து. எல்லாம் முடிஞ்சு, நீங்க ஊருக்குப் போறதுக்கு முன்னாடி, நீங்க கொஞ்சம் எங்களை வந்துபார்க்கணும். கூடவே உங்க அம்மாவுக்கு எதிரிங்கன்னு யாராவது இருக்காங்களான்னு செக் பண்ணுங்க”
“எழுபது வயசுல எதிரியா?” – அனந்து சிரித்தான்.
யாரோ வர, நகர்ந்தான்.
( ஸஸ்பென்ஸ் தொடரும் )
