“எண்திசை வென்றேனே …                                                                                        இன்று போய் நாளை வாராய்                                                                                     என எனை ஒரு மானுடனும் புகலுவதோ”

 பள்ளிப் படிப்பு முடிந்து வேலைக்கென்று போவதற்குமுன் இடைப்பட்ட சுமார் இரண்டு வருடம் ஒரு நிலையில்லாத காலகட்டம்.  தட்டச்சு இன்ஸ்டிட்யூட், கொஞ்சம் லைப்ரரி தவிர ஒரு அரட்டை கோஷ்டி ஒன்று சேர்ந்துகொண்டது. யார் வம்புக்கும் போகாத, நாலுபேர் நடுவில் வாயைத்திறக்காத நான், தற்செயலாகத்தான் அதில் பதிவுபெறாத  உறுப்பினன் ஆனேன்.

என் வகுப்பில் விளையாட்டோ, பேச்சுப் போட்டியோ, எக்ஸ்கர்ஷன்  போகும்போது ஏதாவது வாங்கிவரவேண்டுமோ எல்லாவற்றிற்கும் முதலில் நிற்பவன் சீனா என்றும் சீனன்  என்றும் அறியப்படும் ஸ்ரீநிவாசன்தான். பள்ளிப் படிப்பு முடிந்ததும் கல்லூரியில் சேராமல், அடுத்த வருடம்தான் சேரப்போகிறேன் என்றான். மதிப்பெண் எல்லாம் ஒரு நல்ல  கல்லூரியில் பி. யூ. ஸி யில்  இடம் கிடைக்கக்கூடிய அளவிற்கு இருந்தது. முயன்றிருந்தால் அவன் மற்றவர்களைப்போல சென்னை, திருச்சி அல்லது மதுரையில் கல்லூரியில் சேர்ந்திருக்கலாம். அவனுக்கு நெருங்கிய உறவினர்கள் அந்த ஊர்களிலெல்லாம் இருந்தார்கள்.

அவனது சகோதரி திருமணமாகிப் பிள்ளைப்பேறுக்காக பிறந்தவீடு வந்திருந்தாள். அப்பா ஒரு சிறு வியாபாரி. சற்று உடல்நலம் குன்றியவர். இவன் வீட்டிலிருந்தது எல்லோருக்கும் உதவியாய் இருந்தது என்றுதான் ஒரு வருடம் படிப்பையே விட்டானோ என்று தோன்றும்.

ஒருநாள் மாலை நூலகத்திலிருந்து வெளியே வந்துகொண்டிருந்த என்னை சீனா கூப்பிட்டான். கொஞ்சம் தன்னுடன் வரமுடியுமா என்று கேட்டான். எனக்கு வேறு வெட்டிமுறிக்கிற வேலை இல்லை. ஏன் என்றுகூடக் கேட்காமல் அவனுடன் போனேன்.

Image result for village boys in thanjavur villages in 1970s

எங்கள் ஊர் கோடியில் ஒரு பூட்டிய கட்டிடம் இருந்தது. அதைக் கிட்டங்கி என்று சொல்வார்கள். ஒரு வெளியூர் வியாபாரி அக்கம்பக்கம் கிராமங்களில் கொள்முதல் செய்த பொருட்களைச் சேர்த்து வைக்க அந்தக் கட்டிடத்தை வாங்கியிருந்தார். சற்று அதிக விலைக்கு வாங்கியதாகச் சொல்வார்கள்.

அவர் வந்தால் அந்தக் கட்டிடத்திலேயே ஒரு அறையில் தங்கிக் கொள்வார். கொள்முதல் சீசன் முடிந்ததும் காலிசெய்து பூட்டிவிட்டுப் போவார். திரும்பவும் சீசனுக்குத்தான் வருவார். சில வருடங்களாக அவர் வரவும் இல்லை, அந்தக் கட்டிடம் திறக்கப்பட்டதும் இல்லை. ஐந்து வருட வீட்டுவரி மணியார்டரில் வந்துவிட்டதாம். எங்களுடையது நகரசபை அல்ல. டவுன் பஞ்சாயத்து என்று சொல்லப்படும் பேரூராட்சி. ஊருக்கு ஒதுக்குப் புறத்தில், சுற்றிலும் காலியிடமும் மரங்களும்  கொண்டது அந்தக் கட்டிடம்.  இது போன்ற இடங்களில் சமூக விரோதச் செயல்கள் தலைதூக்கும் என்கிற பயத்தில் அந்தப்பகுதி மக்கள் அதனை நன்றாகக் காபந்து செய்துவந்தார்கள்.

அங்கேதான் என்னைக் கூட்டிப்போனான் சீனா. போகும்வழியில் மகேந்திரன் என்னும் நபரும்  சேர்ந்துகொண்டார். அவர் எனக்கு அறிமுகம் இல்லாதவர். வெளியூர்க்காரர். சற்றுத் தொலைவில் இருந்த ஒரு கிராமத்தில் கால்நடை உதவியாளராக இருந்தாராம். அவரை அந்த ஊரில் மாடு டாக்டர் என்றுதான் அழைப்பார்களாம்.

கிட்டங்கி அருகில் போய்ச்சேர்ந்ததும் அங்கே மூன்று பேர்  ஏற்கனவே இருந்தார்கள். பரஸ்பரம் அறிமுகம் செய்துகொண்டோம்.

சம்பந்தமில்லாமல் சீனா ஒரு புருடாவிட்டான். வரும் வழியில் நான் வந்து அவனைச் சந்தித்ததாகவும் வீட்டில் யாரோ விருந்தினர் வந்திருப்பதால் கூட்டிக்கொண்டு வரச் சொல்லியிருந்தார்கள் என்றும், இங்கே வந்து சொல்லிவிட்டுப் போகத்தான் தான் வந்ததாகவும் சொன்னான். மறுநாள் வருவதாகச் சொல்லி என்னையும் அழைத்துக்கொண்டு கிளம்பினான்.

அங்கிருந்தவர்களில் வரதராஜன் என்பவர் எல்லோரிலும் வயதானவர். அவர் மகனுக்கும் மகளுக்கும் திருமணமாகி இருந்தது. மனைவி வெளியூரில் இருந்த மகன் மற்றும் மகள் வீட்டிற்கு மாறிமாறிப் போய்விடுவாளாம்.   வணிகவரி வருமானவரி கணக்குகள் பார்த்துக் கொடுக்கும் வேலை அவருக்கு. கன்சல்டன்ட் என்று சொல்லிக்கொள்வார்.

அவர் சீனாவைப் பார்த்து, “சூயன்லாய், இன்று உனக்குப்பதிலாக இவரைப் பிணையாய் வைத்துவிட்டுப் போயேன்.” என்று என்னைக் காண்பித்தார். எனக்குக் குழப்பமாக இருந்தது. முதலில் சீனா எப்படி சூயன்லாய் ஆனான் என்று புரியவில்லை. பிணையாய் வைப்பதா!

அப்போதுதான் மகேந்திரன் குறுக்கிட்டார். “சார், நீங்க ரொம்ப பயமுறுத்தாதீங்க. தம்பி, அவர் விளையாடறார். பேச்சுத் துணைக்குத்தான் இருக்கச்சொல்கிறார். நீ ஒண்ணும் பயப்பட வேண்டாம். நேரமிருந்தால் கூட இரு. போகணும்னா சூயன்லாய் கூடப் போயிடு” என்றார்.

நான் சீனாவைப் பார்த்தேன்.

“நீ இருந்துவிட்டு வா. நான் போகிறேன்.” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டான்.  சொல்லாமல் கொள்ளாமல் சபைக்கு மட்டம் போட்டால் அபராதம் உண்டாம். அதை தவிர்க்கத்தான்  நாடகமாடியிருக்கிறான் சூயன்லாய்.

அந்தக் காலத்தில் சீனநாட்டில் இரு முக்கியத் தலைவர்கள். ஒருவர் மா சே துங். இன்னொருவர் சூயன்லாய். தமிழக மந்திரியாய் இருந்த கக்கன் என்னும் எளிய மனிதர் போய்வந்த ஒரே வெளிநாடு சீனா. அப்போது அவர் சந்தித்த தலைவர் சூயன்லாய். அது செய்தித்தாள்களில் வந்த சமயத்திலிருந்து சீனாவாக இருந்த ஸ்ரீனிவாசன் சூயன்லாய் ஆகிவிட்டான்.

Image result for tanjore villages in 60s

பொதுவான அரட்டைக் கச்சேரிதான் நடந்தது. மற்ற இருவரில் ஒருவர் ஏகாம்பரம். இளைஞர். ஒரு காண்ட்ராக்டருக்கு உதவியாளராக இருந்தார். ஒருவருக்கு ஒருவர் கிண்டல் செய்துகொண்டதில் ஏகாம்பரம் நிறைய பொய் சொல்லுவார் என்று தோன்றியது. வெறும் சுவாரஸ்யத்திற்காகச் சொல்கின்ற பொய்கள் என்றும் புரிந்தது. கொச்சையாகச் சொன்னால் ‘பீலா’ விடுவாராம்.

மற்றவர் சந்துரு என்னும் வேலைதேடும் இளைஞர். ஏகப்பட்ட கனவுகளுடன் இருந்த அவருக்கு எந்த வேலை கிடைத்தாலும் அவர் தகுதிக்குக் குறைவு என்றுதான் தோன்றுமாம். “எனக்கு  ஜாக்பாட் மாதிரி ஒரு வேலை கிடைக்கத்தான் போகிறது. நீங்களெல்லாம் பார்க்கத்தான் போகிறீர்கள்.” என்று அடிக்கடி சொல்வாராம்.

கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை புரிந்தது. பொழுதைக் கழிப்பதற்காக (கொல்வதற்காக?)  அனைவரும் அங்கே கூடுகிறார்கள்.

சந்துரு நன்றாகப் பாடக்கூடியவர். அவர் மிக ஆர்வத்துடன்   ‘கனவின் மாயா லோகத்திலே கலந்தே உல்லாசம் காண்போமே’ என்றோ ‘சாலையில புளியமரம் ஜமீன்தாரு வச்ச மரம்’ என்றெல்லாம் உணர்ச்சிததும்பப் பாடுவார்.

தினமும் சபை கலையும்போது மேலேசொன்ன சம்பூர்ண ராமாயணம் பாட்டு ‘இன்றுபோய் நாளை வாராய்’  கோஷ்டி கானமாய் பாடிவிட்டுக் கலைவார்கள்.

ஆரம்பத்தில்  வாரத்தில் ஓரிரு நாட்கள் அந்தச் சபைக்குச் சென்றுவந்த நான், நாளடைவில் நிரந்திர உறுப்பினன் ஆகிவிட்டேன். ஒவ்வொருவர் குணாதிசயமும் புரிபடச் சில நாட்கள் ஆயிற்று. ரசிக்கும்படியாகவும் இருந்தது.

முதலில் வயதில் மூத்தவரான வரதராஜன்…   

(இன்னும் வரும்)