Image result for chit fund in tamilnadu villages

 

வென்றிடுவேன் நாதத்தால் வென்றிடுவேன்

நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன் எந்த

நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்

 

வெட்டிச்சங்கத்தின் நிரந்தர உறுப்பினர்கள் வரதராஜன், மகேந்திரன், ஏகாம்பரம், சந்துரு, சீனா ஆகியோரோடு  நான் போய்ச் சேர்ந்தது, சீனாவைக் காட்டிலும் ‘ரெகுலர்’ என்று ஆனது, எப்படியோ ஏற்பட்டுவிட்டது. அவர்கள் பேசும்போது சில பெயர்கள் அடிபடும்.  ஒருசில மாதங்கள் தொடர்ந்து வந்துகொண்டு இருந்தவர்கள் வராமல் நின்றுவிடுவதும் உண்டு. அதில் பெரும்பாலும்  வேறு ஊருக்குப் போய்விட்டவர்கள். சிலர் தானாகவே வருவதைக் குறைத்துக்கொண்டு நாளடைவில் வராமலேயே இருந்துவிடுவார்கள்.

நிரந்தர உறுப்பினர்கள் ஒருபுறம் இருக்க, நான் பார்த்து விலகிப்போனவர் ராஜதுரை. அவரைத் தவிர துரைராஜ் என்று ஓருவர் வருவாராம்.  நான் துரைராஜைப் பார்த்ததில்லை. பெயரில் இருந்த ஒற்றுமை (இல்லை வேறுபாடா?) அவர்களிடம் கிடையாதாம்.  இவர் சிவாஜி ரசிகர் என்றால் அவர் எம்ஜியார் ரசிகர்.  இவர் காங்கிரஸ் அனுதாபி என்றால், அவர் திமுக.  இவர் டீ- அவர் காப்பி.  இவர் ஒல்லியாக சற்று உயரமாக இருப்பார் என்றால் அவர் குள்ளமாகச் சற்று குண்டாக இருப்பார்.  வரதராஜன் அவர்களை ‘ஆக்டிவ் வாய்ஸ்’ – ‘பாஸிவ் வாய்ஸ்’ என்றோ ‘இட வல மாற்றம்’ என்றோ  சொல்வாராம். அடித்துப் பேசும் ராஜதுரைதான் ‘ஆக்டிவ் வாய்ஸ்’

நான் சங்கத்திற்குப் போக ஆரம்பித்த காலத்தில் பெரும்பாலும் ராஜதுரை இருப்பார். சற்றுத் தாமதமாக வருவார். துரைராஜ் வேறு ஊருக்குக் குடிபெயர்ந்துவிட்டார். நான் சேர்ந்து ஓரிரு மாதங்களிலேயே ராஜதுரை வருவதும் நின்றுபோனது.

 

Image result for கிராமத்தில் வெட்டி அரட்டை கும்பல் ராஜதுரை இங்கு வரக் காரணமாக இருந்ததே துரைராஜ்தான். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், ஊர் ஊராகக் கிளைகளைத் திறந்துகொண்டு வந்த காலம் அது.  எங்கள் ஊரில்  ஏற்கனவே இருந்த வங்கி ஒன்று தேசியமயம் ஆக்கப்பட்டது. சில நாட்கள் கழித்து இன்னொரு வங்கி திறக்கப்பட்டது. அதற்கு மாற்றலாகி வந்தவர்தான் ராஜதுரை. துரைராஜ் அந்த வங்கியின் ஆரம்ப வாடிக்கையாளர்களில் ஒருவர். மேலும் புதிய ஊரில் வீடு தேடிக்கொடுத்தது, மற்றும் குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடம்,  கடைகள், எலக்ட்ரீஷியன், ப்ளம்ர் போன்றோரை ஏற்பாடு  செய்து கொடுத்ததும் துரைராஜ்தான். வங்கி வேலைகள் முடிந்து வீட்டுக்கு வந்து பொழுதுபோக என்ன செய்வது என்ற கேள்விக்கு ‘வெட்டிச்சங்கம்’ என்று  விடை தேடிக் கொடுத்ததும்  துரைராஜ்தான்.

துரைராஜ் ஒரு ‘சிட்பண்ட்’ நிறுவனத்தில் மேலாளர்.  அவரது ஊரே இதுதான். அவர் தாய்மாமன் தனது  ஊரில் ஒரு சிட்பண்ட் நடத்திவந்தார். அவர் மூலமாக துரைராஜுக்கு இந்த வேலை கிடைத்தது. சொந்த ஊரிலேயே ஒரு நல்ல வேலை.     

ராஜதுரை வந்து சேர்ந்த சில நாட்களிலேயே துரைராஜ் வேறு ஊருக்குக் குடிபெயர நேர்ந்தது. மாமாவின் உடல்நலம் சரியில்லாமல் போனது. தனது தொழிலைப் பார்க்க நம்பகமான ஆள் தேவைப்பட்டதால் துரைராஜை அங்கு வரவழைத்துவிட்டார். அதில் ‘டைரக்ட’ராகவே சேர்த்துக்கொண்டார்.  இப்போது மாமா இல்லை.  இவர்தான் நிறுவனத்தில் ‘ஆல் இன் ஆல்’.

எனக்கு துரைராஜ் பழக்கமில்லை. ஏகாம்பரம், சீனா, சந்துரு ஆகியோருக்கு முன்னால் ராஜதுரையைப்பற்றிக் கொஞ்சம் சொல்லலாம்.

பேச்சு எந்த விஷயத்தைப்பற்றி இருந்தாலும் அதில் சொல்வதற்கு  ஏதாவது இருப்பதாக ராஜதுரை நினைப்பார் போலும். தெரிந்தது தெரியாதது எல்லாவற்றிலும் ஏதேனும் ஒரு கருத்தைச் சற்று ஆணித்தரமாகச் சொல்வார். பல ஊர்களில் வேலை பார்த்ததால் ‘அனுபவஸ்தர்’ என்ற நினைப்பு. அனுபவங்கள் ஏற்படாமல் இல்லையென்றாலும் தனக்குத் தெரிந்ததுதான் எல்லாவற்றிக்கும் சிகரம் அல்லது ‘அல்டிமேட்’ என்பதுபோலத்தான் அவர் பேசுவார்.

அவர் ஆரம்பிக்கும் விதமே அந்த எண்ணத்தைத் தெரியப்படுத்தும்.  தான் பார்த்த ஒரு விபத்தைப்பற்றி யாராவது சொன்னால் இவர் இப்படித்தான் ஆரம்பிப்பார்.  …  “இதெல்லாம் ஒண்ணுமில்ல.. நான் காஞ்சீபுரத்தில இருந்தபோது….” 

என்ன சைக்கிள் வாங்கலாம் என்று ஏகாம்பரம் பேசிக்கொண்டிருந்தபோது,  இவர் ஆரம்பித்தார், “உங்களுக்கு ஒன்றும் தெரியாது..  நான் சொல்வதைக் கேளுங்கள்.  வாங்கினால்  ‘…..’ சைக்கிள்தான் வாங்கணும்.” அப்போதே கட்டாயம்  வேறு கம்பெனி சைக்கிள்தான் வாங்குவது என்று ஏகாம்பரம் தீர்மானித்து இருப்பார் என்று தோன்றியது.

அவர் பேசுகின்ற முறையும் அதில் தொனிக்கும் ஆணவமும் மகேந்திரனுக்குச் சற்று எரிச்சலையே ஏற்படுத்தி இருந்தது.  ஒரு சமயம் மூக்குக் கண்ணாடிபற்றி பேச்சு வந்தது. மகேந்திரன் “ராஜதுரை சாரைக் கேளுங்கள் அவர்தான் ‘ஐ’ ஸ்பெஷலிஸ்ட்.”

எனக்குப் புரியவில்லை. ஆனால் ராஜதுரையைத்தவிர மற்றவர்கள் சிரித்துவிட்டார்கள். ராஜதுரை சங்கடத்துடன் பேசாமல் இருந்துவிட்டார்.

திரும்பிப் போகும்போது, சீனா விளக்கினான். எப்போதுமே ‘நான்’ ‘எனக்கு’ என்றே பேசுபவர்களை  ‘I’ ஸ்பெஷலிஸ்ட் என்பார்களாம். யார் எது சொன்னாலும் எதிர்வினையாக contest செய்பவர்களை ‘கண் டெஸ்ட் செய்யும் ‘I’ ஸ்பெஷலிஸ்ட்’ என்று சொல்வது பொருத்தம் தானே? இரண்டு வரையறைகளிலும் ராஜதுரை பொருந்துகிறார்.

வேலையில் திறமைசாலியாக இருந்தாலும் அலுவலகத்தில் இவருக்கு நல்லபெயர் இல்லாமல் போனதற்கு  இதுவும் காரணம் என்று ஏகாம்பரத்தின் உறவினர் ஒருவர் சொன்னாராம். அதே வங்கியில் வேறொரு ஊரில்  வேலை பார்த்து வருபவர் அவர். மேலும் குறைந்த காலத்தில் நிறைய மாற்றல்களைச் சந்தித்ததும் இதனால்தானோ?

இப்போதும் அப்படித்தான் ஆயிற்று. ராஜதுரை வேறு மாநிலத்திற்கு மாற்றல் ஆகிப் போய்விட்டார். அவரை வழியனுப்ப நாங்கள் எல்லோரும் போயிருந்தோம். தானே மாற்றலைக் கேட்டுப் பெற்றதாக அவர் சொன்னாலும் மற்றவர்கள் நம்பியதாகத் தெரியவில்லை.  

மேலே சொன்ன பாட்டை ராஜதுரை எழுதியிருந்தால் நாதத்தால் வென்றிடுவேன் என்பதை வாதத்தால் வென்றிடுவேன் என்று எழுதியிருப்பாரோ?