ஃப்ளாஷ் பேக் – விழா!
சுமார் 30-40 வருடங்களுக்கு முன்னால் –
அதாவது டிவி,நெட்,யூடியூப் எல்லாம் நம்மை ஆக்கிரமிப்பு செய்யும் முன்பு சினிமா மட்டுமே ஒரு நல்ல பொழுதுபோக்காக இருந்தது. அப்போதைய சினிமாக்கள் கூடியவரையில் நல்லனவற்றையே, கலை நயத்துடன் சொல்லி வந்தன. ஓரிரண்டு கலைஞர்களைத் தவிர, மற்றவர்கள் சினிமாவை அதன் பெருமைக்காகவும் , கலை வளர்ச்சிக்காகவும் மட்டுமே பயன்படுத்திவந்த பொற்காலம் –
தங்களது திறமையாலும், தொழில் மீது கொண்ட பக்தியாலும், படைப்புகளாலும் மட்டுமே பெயர் பெற்ற மூன்று பிரபலங்களுக்கு 11-3-2018 ஞாயிறன்று மாலை ஒரு பாராட்டு விழா நடைபெற்றது – மூன்று மணி நேரம், இனிமையான ’அந்தக் கால சினிமா’ நினைவுகளில் கரைந்தது!
சென்னை ‘ரசிகாஸ்’ கலை மற்றும் பண்பாட்டு அமைப்பின் சார்பில், திரு.முக்தாசீனிவாசன் (மூத்த திரை இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்) திரு.சித்ராலயா கோபு (மூத்த வசனகர்த்தா, மற்றும் இயக்குனர்), திரு.C.V.ராஜேந்திரன் (மூத்த திரைஇயக்குனர்) ஆகியோருக்கு விருது மற்றும் பாராட்டு விழா – திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்கள் மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்தத் திரை உலக ஜாம்பவான்களின் பங்களிப்பு, தமிழ்த் திரையுலக வரலாற்றில் மகத்தானது, மறக்க முடியாதது. பேரா.பிரகாசம், டெல்லி கணேஷ், சித்ரா லக்ஷ்மணன், ரமேஷ் கண்ணா, மோகன்ராம், காந்தி கண்ணதாசன், எம்எஸ்வி ஹரிதாஸ் என ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டம் – பேசுவதற்கும், பகிர்ந்துகொள்வதற்கும் ஏராளமான விபரங்கள் – நேரமோ குறைவு. இருந்தாலும் கிடைத்த நேரத்தில் அனைவரின் பங்களிப்பும் சுவையாகவும், சிறப்பாகவும் இருந்தது.
முக்தா V சீனிவாசன்:
எண்பத்தி எட்டு வயதானவர். 1947ல் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் ‘கிளாப்’பாயாகச் சேர்ந்தவர், பத்து வருடங்களில் தானே ஒரு படத்தை இயக்கி, அரசு விருதைப்பெறும் அளவுக்கு உயர்ந்தார். முதல் படம் முதலாளி (ஏரிக்கரையின் மேலே புகழ்), தொடர்ந்து ஏராளமான வெற்றிப் படங்கள். திட்டமிட்ட நேர்மையான உழைப்பு அவரைத் தயாரிப்பாளர் நிலைக்கு உயர்த்தின. தன் சகோதரர் திரு முக்தா ராமசாமி, தயாரிப்பு நிர்வாகத்தைத் திறம்படக் கவனிக்க, வெற்றிமேல் வெற்றிப் படங்கள் முக்தா பிலிம்ஸில் உருவாயின!
இதயத்தில் நீ, பனித்திரை, தவப்புதல்வன், அந்தமான் காதலி, கீழ்வானம் சிவக்கும், அவன் அவள் அது, சூரியகாந்தி போன்ற காலத்தால் அழியாத படைப்புகளைத் தந்தார். திரு.சோ அவர்கள் திரைக்கதை வசனத்தில் வந்த அத்தனைப் படங்களும் வெற்றிப் படங்களே – பொம்மலாட்டம் படப் பாடலை – வா வாத்தியாரே வூட்டாண்டே, நீ வராங்காட்டினா வுடமாட்டேன் – திரு சீனிவாசன் அவர்கள் மேடையிலேயே பாடி மகிழ்ந்தார்!
ஆரம்ப காலங்களில் கம்யூனிசக் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டார் – பின்னர் காங்கிரஸ் அவரை அரவணைத்துக் கொண்டது. தானே இராட்டையில் நூல் நூற்பார் – காந்தீயக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பார் – இன்றும் கதர் ஆடைதான் – விடுமுறைநாட்களில் மெளன விரதம்!
அவர் எழுதிய ‘தமிழ்த் திரைப்பட வரலாறு’ – தொடராக துக்ளக் இதழில் வெளிவந்தது –ஒரு முக்கியமான ஆவண நூலாகத் திகழ்கிறது. நூற்றுக்கும் அதிகமான நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். நான்கு வேதங்களைப் பற்றிய நூல் – சதுர்வேதி –எல்லோருக்குமானது, எளிமையானது.
ஏற்புரையில் அவரது நினைவாற்றலும், மனித நேயமும், நேர்படப் பேசும் தன்மையும்ஒருங்கே வெளிப்பட்டது!
சி.வி.ராஜேந்திரன்:
’தென்னிந்திய சாந்தாராம்’ எனப் புகழப்பட்ட டைரக்டர் ஸ்ரீதரின் சகோதரர் இவர். மீண்டசொர்க்கம் முதல் அவருக்கு அசிஸ்டெண்டாய், அசோசியேட்டாய்ப் பணிபுரிந்தவர். தனது படங்கள் எல்லாம் சிறப்பாக அமைந்ததற்குக் காரணம் ஸ்ரீதரிடம் தான் கற்றுக்கொண்ட சினிமாதான் என்கிறார். நில் கவனி காதலி, வீட்டுக்கு வீடு,கலாட்டாக் கல்யாணம், சுமதி என் சுந்தரி, ராஜா, நீதி, வாழ்க்கை, சிவகாமியின்செல்வன் என இவரது வெற்றிப்படப் பட்டியல் தொடர்கிறது. பாடல் காட்சிகளைப்படமாக்குவதில் இவருக்கு இணை இவரேதான் என்ற பெயர் பெற்றவர்.
‘சித்ராலயா’ கோபு:
1936 ஆம் ஆண்டு பிறந்த இவர் டைரக்டர் ஸ்ரீதரின் பால்ய சிநேகிதர். தன்னுள்ளிருந்த ‘ஹ்யூமரிஸ்ட்’டை வெளிப் படுத்தியவர் ஸ்ரீதர்தான் என்கிறார். ஸ்ரீதருடன் ஆரம்ப காலம் முதல் பணியாற்றியவர். எல்லாப் படங்களின் நகைச்சுவைப் பகுதிகளையும் எழுதியவர். காதலிக்க நேரமில்லை படத்தின் டைட்டில் கார்டில் ”கதை,வசனம் – ஸ்ரீதர் – கோபு” என்று தனக்கு நிகரான அந்தஸ்தைக் கொடுத்த ஸ்ரீதரைப்பற்றிப் பெருமைப்படுகிறார். இவர் முதன் முதலாக டைரக்ட் செய்த படம், ஏவிஎம் மின் “காசேதான் கடவுளடா”! மிகச் சிறந்த, நல்ல நகைச்சுவை எழுத்துக்குச் சொந்தக்காரர்– காதலிக்க நேரமில்லை, கலாட்டாக் கல்யாணம், சுமதி என் சுந்தரி, வீட்டுக்கு வீடு,உத்தரவின்றி உள்ளே வா போன்ற நல்ல நகைச்சுவைப் படங்கள் இவரது கைவண்ணத்தில் உருவானவையே! சோவுடன் தனக்கிருந்த தனிப்பட்ட நட்பை மிகவும் சிலாகித்துக் கூறுகிறார்.
ஸ்ரீதர், நடிகர் திலகம், கண்ணதாசன், எம் எஸ் விஸ்வநாதன், ஆகிய திறமை மிக்ககலைஞர்களுடன் பணி புரிந்ததைப் பெருமையாக எண்ணி மகிழ்கின்றனர் சி விஆரும், கோபுவும்!
நிகழ்ச்சி துவங்குமுன், சுமார் 35 நிமிடங்களுக்கு, இந்த மூன்று ஜாம்பவான்களின்படங்களிலிருந்து வசனம் மற்றும் சில காட்சிகளின் ”க்ளிப்பிங்” காட்டப்பட்டது.அரங்கத்தில் எழுந்த கைதட்டல்களும், சிரிப்பும், மகிழ்ச்சியும் இவர்களின் புகழை உரத்துச் சொல்வதாய் அமைந்திருந்தன !
ஓர் இனிமையான ஃப்ளாஷ் பாக்” தான் – சந்தேகமே இல்லை!



