
‘நீங்க சொல்லுங்க குருஜி… இது எந்த ஊர் நியாயம்..?’
அந்த ஆசிரமத்தின் அமைதியான, தெய்வீகமான, நிசப்தமான
சூழ்நிலையைக் கிழித்துக்கொண்டு சென்றது அந்தக் குரல்.
கண்ணை மூடிக் கொண்டு ஆழ்ந்த தியானத்தில் இருந்த குருஜி
மெதுவாகக் கண்ணைத் திறந்து குரல் வந்த திசையை நோக்கினார்.
சரவணன்…. அடிக்கடி ஆசிரமத்திற்கு வந்து குருஜியிடம்
ஆசி வாங்கிச் செல்பவன்.
‘என்னப்பா சரவணா…? இன்னிக்கு என்ன குழப்பம்..? யாருக்கு
என்ன அநியாயம் நடந்து விட்டது..?’ என்றார் குருஜி புன்முறுவலோடு.
‘குருஜி… உங்களிடம் முன்பே சொல்லியிருக்கேன்.. இரண்டு
வருடமா நான் செய்யும் வேலையிலே எனக்கு அமைதியில்லே…
பிரச்னைகள் வந்துட்டே இருக்கு. எப்படா இந்த வேலையிலிருந்து
மாறி வேறு இடத்துக்குச் செல்வோம் என்று துடிச்சிட்டிருக்கேன்..’
‘ஆமா.. சொல்லியிருக்கே.. இப்போ என்ன ஆச்சு..?’
‘ஒரு ஆறு மாதம் முன்னாலே ஒரு ஜோசியரைப் பார்த்தேன்.
என் பிரச்னைகளைச் சொன்னேன். அவர் என் ஜாதகத்தைப்
பார்த்து சில பரிகாரங்கள் பண்ணச் சொன்னார். ஸ்ரீரங்கம் சென்று
ரங்கநாதனுக்கும், தாயாருக்கும் அபிஷேகம் செய்து, ஆராதனை பண்ணி
வேண்டிக்கொள்ளச் சொன்னார்.
பின் பழனி சென்று அந்தப் பழனிஆண்டவனுக்கு பால் காவடி எடுத்து, அபிஷேகம் பண்ணி, ஆராதனைசெய்து மனமுருக வேண்டிக் கொள்ளச் சொன்னார். முழு நம்பிக்கையோடு எல்லா புகழ் பெற்ற கம்பனிகளுக்கும் நம்பிக்கையோடு அப்ளிகேஷன்ஸ் போடச் சொன்னார். அவர் சொன்னபடியே ஸ்ரீரங்கம் சென்றேன். ரங்கநாதனையும், தாயாரையும் வேண்டிக் கொண்டேன்.
அந்தப் பழனி ஆண்டவனையும் தரிசித்து மனமுருக வேண்டிக் கொண்டேன். எல்லாக் கம்பனிகளுக்கும் நம்பிக்கையோடு அப்ளிகேஷன்ஸ் போட்டேன்…. ஒரு மாசமாச்சு .. இரண்டு மாசமாச்சு… மூன்று மாசமாச்சு..
ஒரு தகவலும் இல்லை… என் மனதிலிருந்த நம்பிக்கையும் கரைஞ்சு
போகத் தொடங்கிடுச்சு… என் வேண்டுதல்களுக்கு பலனில்லாமல்
போயிடுச்சோ என்ற வேதனை வாட்டத் தொடங்கிடுச்சு….
பதினஞ்சு நாட்களுக்கு முன்னாலே என் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த அம்மன்
கோவிலுக்குச் சென்றேன்.. அம்மனை நமஸ்கரித்து நின்றேன்…
அக்கோவிலிலிருந்த சிவபெருமான் சந்நிதியையும், பிள்ளையார்
சந்நிதியையும் மூன்று முறை வலம் வந்தேன். ஏனோ அப்போதிருந்த
மனக்குழப்பத்தில் ஒன்றுமே வேண்டிக் கொள்ளத் தோன்றவில்லை..
‘கடவுளே காப்பாற்று… நல்லதே நடக்கட்டும்.. நல்லபடியாயிருக்கட்டும்..’
என்று நினைத்துக்கொண்டு அந்தத் தெய்வங்களை நமஸ்கரித்தேன்.
அக்கோயிலுக்குப் போய் வந்த இரண்டாம் நாள் ஒரு பெரிய கம்பனியிலிருந்து
எனக்கு இன்டர்வியூ கார்டு வந்தது.. இன்டர்வியூ அட்டென்ட்
செய்ய, நல்ல பொஸிஷனில் எனக்கு வேலையும் கிடைத்தது.. இதோ
அப்பாய்ன்ட்மென்ட் ஆர்டர்…’ என்றார் சரவணன் ஒரே மூச்சில்.
‘ சரி.. அதுதான் எல்லாம் நல்லபடியா நடந்து விட்டதே… இதிலென்ன
குழப்பம்..?.. இப்போதுதான் உனக்கு அது அமைய வேண்டிய காலம்
கனிந்து வந்திருக்கு…’ என்றார் குருஜி புன்னகையோடு.
‘ஸ்ரீரங்கம் வரை சென்று ரங்கநாதருக்கும், தாயாருக்கும் அபிஷேகம்
ஆராதனை பண்ணினேன். பழனி சென்று முருகனுக்குக் காவடி எடுத்து,
அபிஷேகம் செய்தேன். அந்த மாலவனோ, முருகனோ உதவிக்கு
வரவில்லை. வீட்டுப் பக்கத்திலேயுள்ள கோவிலுக்குச் சென்று,
அம்மனையும், சிவபெருமானையும், பிள்ளையாரப்பனையும் தரிசித்தேன்.
வேண்டிக் கொள்ளக் கூட இல்லை… அவர்கள் என் பிரச்னைகள் புரிந்து
உடனே உதவி இருக்காங்க… இதுக்கென்ன குருஜி அர்த்தம்..?’
மெதுவாகச் சிரித்தார் குருஜி.. ‘உன் ஜாதகப்படி இப்பொழுதுதான்
அதுக்கான நேரம் வந்திருக்குன்னு அர்த்தம்.. எதெது எப்படி எப்படி
எப்போது நடக்கணுமோ அதது அப்போது அப்படி நடக்கும்னு அர்த்தம்’
‘அப்படின்னா அந்த ஜோசியர் சொன்னது தப்புன்னு சொல்றீங்களா..?’
‘இல்லை… அவர் சொன்னது கரெக்ட்தான்… நீ அவரைப் போய்ப்
பார்க்கும்போது ரொம்ப மன உளைச்சலில் இருந்திருக்கே… உனக்கு
தன்னம்பிக்கையே இல்லாமல் இருந்தது… உன் மனதுக்குச் சற்று ஆறுதலும்
நம்பிக்கையும் தேவைப்பட்டது. அதுக்குத்தான் உன் தன்னம்பிக்கை
லெவலை அதிகமாக்கத்தான் ரங்கநாதனுக்கும் முருகனுக்கும் அபிஷேகங்கள்.
நீ போய் வேண்டுதலை நிறைவேற்றிவிட்டுத் தன்னம்பிக்கையோடு
எல்லாக் கம்பனிகளுக்கும் மும்முரமாக அப்ளிகேஷன்ஸ் போட்டே…
உன் ஒரே குறிக்கோள்..’நல்ல வேலை தேடிக் கொள்வது’ என்று
இருந்தது. அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம்
செய்தே….’
‘ஆமாம் குருஜி… இப்போ எனக்குக் கிடைச்சிருக்கிற வேலைக்குத்
தேவையான ஒர் எக்ஸாம் பாஸ் பண்ண வேண்டியிருந்தது. அதையும்
இரண்டு மாசம் முன்னே எழுதி பாஸ் பண்ணிட்டேன்…’
‘பார்த்தியா… அதைத்தான் சொல்ல வந்தேன்.. சரவணா.. ஒன்று
மட்டும் நினைவில் வெச்சுக்கோ… நீ கடவுளைப்பற்றி நினைக்கும்
நினைப்புகளும் நாமாவளிகளும் உன் புண்ணியக் கணக்கில் சேர்ந்து
கொண்டே இருக்கும். எல்லாவற்றுக்கும் பலன் நிச்சயமாக உண்டு.
நீ செய்த அபிஷேகங்கள் உனக்கு இந்த வேலை கிடைக்கப் பாதையை
ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த வேலைக்கு வேண்டிய எக்ஸாமை பாஸ்
பண்ணிட்டே… அதேபோல் இந்தப் புதிய கம்பனியில் உனக்குக் கிடைத்த
இந்த பொஸிஷனில் இருந்தவருக்கு வேறு நல்ல வேலையை அமைத்துக்
கொடுத்தது. இதற்கெல்லாம் சிறிது காலம் ஆகுமல்லவா.. அதுதான்
ஆகியிருக்கு…’
‘ஆமாம் குருஜி… நீங்க சொல்றது சரிதான்… நான் ஸ்ரீரங்கத்திலேயும்,
பழனியிலேயும் மனமார வேலைக்காக வேண்டிக் கொணடேன்.. ஆனால்
அம்மன் கோயிலில் ஒன்றுமே வேண்டிக் கொள்ளவில்லையே’ என்றான்
சரவணன் குழப்பத்தோடு..
‘சரவணா… நீ கடவுள் முன்னே நின்று கண்களை மூடி சில
நிமிடங்கள் அவரை மனதில் நிறுத்தி தியானம் செய்தாலே போதும்.
உனக்கு என்ன வேண்டும்… எப்போது, எப்படி அதை நிறைவேற்ற
வேண்டும்னு அந்தக் கடவுளுக்குத் தெரியும். நீ தனியாக வேண்டிக்
கொள்ள வேண்டும் என்ற அவசியமே இல்லெ.. அந்தக் கடவுள்
நிறைவேற்றிக் கொடுப்பார்..’ என்றார் குருஜி.
கண்களில் நீர் தளும்ப நின்றிருந்தான் சரவணன்.
—————————————————–
