Image result for kalidasa

 

காளிதாசன்-ரகுவம்சம் -2 

Image result for raghuvamsa

 

‘தோள் கண்டார் தோளே கண்டார்” என்றார் கம்பர்.

‘இராமபிரானது தோள் அழகைக் கண்டவர்கள் (அவ்வழகை முற்றும் கண்டுகளித்து – முடியாமையால் அதனால் பிற உறுப்புக்களின் அழகைப்பார்க்க இயலாமையால்) அத்தோள் அழகினையே கண்டவர் கண்ட வண்ணம் இருந்தார்கள்’ –என்கிறார்!

அதே நிலைதான் நமக்கும்.

 

ரகுவம்சம் எழுதத்தொடங்கி அதை விட்டுப் போக மனம் வரவில்லை.

மேலும் அது இன்னும் முடிக்கப்படாமல் இருப்பதால் அதைத் தொடர்வோம்.

உடனடியாகக் கதைக்குச் செல்வோம்.

 

 

ரகு

திலீபனுக்குப் பிறந்த பிள்ளைக்கு ரகு என்ற பெயரைச் சூட்டினார்கள்.

தன்னைப் போலவே அறிவையும் ஆற்றலையும்  பெற்ற மகனிடம் ராஜ்ய பரிபாலனத்தைத் தருவதற்கு முன்னர்… அஸ்வமேத யாகம் செய்யுமாறு வசிஷ்டர் திலீபனுக்கு  அறிவுறுத்தினார்.

அஸ்வமேத யாகமும் துவங்கியது.  அஸ்வமேத யாகக் குதிரைக்குக் காவலாகச் செல்ல, திலீபன் தன் மகன் ரகுவை நியமித்தான். அந்த யாகத்தைக் கண்டு ‘பொறாமை’ கொண்ட தேவலோக அதிபதியான இந்திரன்  அந்த யாகக் குதிரையைகக் கவர்ந்து சென்றுவிட்டான்.

இப்படிப் பல முறை ‘பொறாமை’ கொண்டு அநீதி செய்த இந்திரன் எந்த தெய்வ நீதி மன்றத்திலும் தண்டனை அடைந்ததாகத்  தெரியவில்லை – இந்நாளின் குற்றம் செய்த அரசியல்வாதிபோல!

யாகம் துவங்கியது. 99 குதிரைகள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டு யாகம் ஒருவாரியாக நடந்து முடிந்த நிலையில் இருந்தது. நூறாவது குதிரையை அழைத்து வர ரகுவை அழைத்தபோதுதான் … தாம் காவலுக்கு வந்திருந்த யாகக் குதிரையைக் காணோம் என்கின்ற உண்மையை ரகுவும் உணர்ந்தான்.

இந்திரனைப் பார்த்து ரகு  கூறினான்:

இந்திரனே! யாகங்கள் எங்கு நடந்தாலும் அதன் அவிர்பாகத்தில் முதல் பாகத்தைப் பெற்றுக் கொள்பவராக உள்ளவர் நீங்கள் என்றல்லவா முனிவர்கள் கூறுவார்கள். அப்படி இருக்கையில் என்னுடைய தந்தை செய்யும் யாகத்துக்கு இடையூறாக இருக்கும் வகையில் நீங்கள் குதிரையைக் களவாடிக் கொண்டுபோகலாமோ?  யாகங்களைக் காப்பவரே யாகத்தைத் தடுத்து நிறுத்துபவராக இருக்கலாமா?

இந்திரன் கூறலானான் (வில்லன் நம்பியார் பேசுவதாகச் சற்று கற்பனை செய்யவும்):

ராஜகுமாரனே! உன்னுடைய தந்தை செய்யும் இந்த யாகமானது நடந்து முடிந்தால் அது என்னுடைய செல்வாக்கை மறைத்து விடும். ஆகவே நான் என்னுடைய  நிலைமையில் இருந்து இதைத் தடுத்தேன்.

பதவி ஆசை தேவர்களுக்கும் உண்டு போலும்!

சற்றும் பயமில்லாத ரகு கூறினான்:

இந்திரனே, நீ அந்தக் குதிரையைக் கவர்ந்து செல்ல உன்னை அனுமதிக்க மாட்டேன். நீ வீரனாக இருந்தால் என்னுடன் போரிட்டு என்னை வென்று குதிரையைக்  கொண்டுசெல்

இருவரின் படைகளும் சளைக்காமல் கடுமையாக யுத்தம் நடந்தது. இருவரும் ஒருவரைஒருவர் பயங்கரமாகத்  தாக்கிக்கொண்டார்கள்.  ரகு மீண்டும் மீண்டும் விதவிதமான அம்புகளை ஏவி இந்திரனை நிலைகுலைய வைத்தான். இந்திரன் பவனி வந்த ஐராவத யானையே கதிகலங்கும் வண்ணம்  போர் தொடர்ந்தது. இந்திரனும் ரகுவை ரத்தமயமாக்கிக் கீழே விழவைத்தான்.  ஆனாலும் சளைக்காத ரகு யுத்தத்தைத் தொடர்ந்தவண்ணம் இருக்க யார் வெற்றி பெறுவார்கள் என்பதே தெரியாத நிலை ஏற்பட்டது.  இந்திரனும் களைத்துப் போனான்.

ரகு ஒரு வீரன் மட்டுமல்ல..

தான் ஒரு ராஜதந்திரி என்பதை நிரூபித்தான்..

இந்திரனை நோக்கிக் கூறினான்:

தேவலோக அதிபதியே, இன்னும்  உன்னால் என் குதிரையைக் கவர்ந்து கொண்டுசெல்ல   முடியும் என்ற நம்பிக்கை உள்ளதா ? என்னைக் கொன்றால் ஒழிய உன்னால் குதிரையை எடுத்துச் செல்ல முடியாது.   எனக்குத் தேவை ஒன்றே ஒன்றுதான். என் தந்தை செய்யும் யாகத்தின் பலனை அவர் அடைய வேண்டும்.  அதற்கு அந்தக் குதிரை தேவை. அதைக் கொடுக்காமல் உன்னைத் தேவலோகத்துக்குச் செல்ல விடமாட்டேன். ஆனால் அதற்கு மாற்றாக இதற்கொரு உபாயம் உள்ளது. அந்தக் குதிரையை விட மனமில்லை என்றால் என்னுடைய தந்தை செய்யும் யாகத்தின் முழுப் பலனையும் அவர் அடையட்டும்   என சத்தியம் செய்து வாக்குக் கொடுத்து  விட்டுச் செல். நானும் திரும்பிச் சென்றுவிடுவேன். நீயும் யுத்தம் செய்யத் தேவை இல்லை.

அதைக் கேட்ட இந்திரனும் இனிமேலும் தன்னால் சண்டையைத் தொடர்ந்துகொண்டு  ரகுவைத் தோற்கடிக்க முடியாது என்பதை உணர்ந்தான். அவன் கேட்ட வரத்தை அப்படியே தருவதாக வாக்குறுதி தந்து சத்தியமும்  செய்தபின் தேவலோகத்துக்குத் திரும்பினான்.

ரகுவும் அரண்மனைக்குத் திரும்பிச் சென்றான்.  ரணகாயத்தோடு வந்த மகனை ஆரத் தழுவி வரவேற்றான் திலீபன். நடந்த அனைத்தையும் கேட்டறிந்ததும் ஆனந்தக் கண்ணீர் விட்டு  அழுதான்.  மீதி இருந்த யாகத்தைத் தொடர்ந்தான். யாகம் நல்லமுறையில் நடந்து முடிந்ததும் – சில நாட்கள் பொறுத்து ரகுவிடம் தனது ராஜ்யத்தைத் தந்துவிட்டுத் தன்னுடைய கடமை முடிந்து விட்டதாக எண்ணி இந்த உலகை விட்டு மறைந்தான்.

Related image

ரகு எனும் ரகுராமன் ராஜ்ய பதவியை ஏற்றுக் கொண்டு அரச பதவியில் அமர்ந்ததும், அவன் மன்னன் ஆக வேண்டும் என எதிர்பார்த்துக் காத்திருந்த மக்களும் மற்றவர்களும் மனதார மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் -அக்கம்பக்கத்தில் இருந்த அரசர்கள் பொறாமை கொண்டார்கள்.ரகு நான்கு திசைகளையும் நோக்கிப் பெரும் படையுடன் சென்றான்.

வங்க மன்னர்கள் வீழ்ந்தார்கள், கலிங்க மன்னர்கள் சாய்ந்தார்கள். மன்னனின் படையினர் மகேந்திர மலையைத் தாண்டிச் செல்ல, அங்கிருந்த மன்னர்களும் ஒருவர் பின் ஒருவராக வீழ்ந்தார்கள்.  ஆனால் மன்னர்களைச் சிறை பிடித்தபின் அந்தந்த மன்னர்கள் தாமே தமது செல்வங்களை ரகுராமனுக்குத் தந்து விட அந்த மன்னர்களை விடுவித்துவிட்டு அவர்கள்  தந்த  செல்வத்தை மட்டுமே தன் நாட்டுக்குக் கொண்டுவந்தான்.

சமுத்திரகுப்தன் பின்னாளில் இதே மாதிரி செய்தான் அல்லவா? ரகுவைப் பின்பற்றியோ என்னவோ?

தென் பகுதியில் காவேரிக் கரையைத்தாண்டி அனைவரையும் வென்று வந்தான் மன்னன் ரகுராமன்.

பாரசீகம் முதல் காஷ்மீர்வரை அனைத்து மன்னர்கள், மற்றும்  நான்கு திசைகளிலும் இருந்த அனைத்து  மன்னர்களையும்  தோற்கடித்த பின்னர் நாடு திரும்பினான்!

அவன் சென்ற இடங்களெல்லாம் வெற்றி!

அவன் வழியில் வந்த எந்த மன்னரும் அவனிடம் தோற்றனர்!

அவன் வழி தனி வழி!

அவன் டிரான்சோக்சியானா (இந்நாளில் Uzbekistan) படையெடுத்துக் கண்டது வெற்றி! மத்திய ஆசியாவில் படையெடுத்துக் கோர யுத்தம் செய்தான்! தோற்றவர் முகங்கள் கொடூரமாகச் சிதைக்கப்பட்டது!

மன்னர்களின் கொலைவெறியைத்தான்  என்னவென்று சொல்வது!

காம்போஜ நாடு (இந்நாளில் ஈரான்)… சென்றவுடனே –அந்த மன்னன் அடிபணிந்தான்.

இங்கே காளிதாசனது  வர்ணனையைக் காணலாம்:

ரகுவின் திக்விஜயம்:

அன்னப் பறவைக் கூட்டங்களிலும், விண்மீன்களிலும், நீரில் மலர்ந்த ஆம்பல் பூக்களிலும் அவனுடைய புகழ்ச் செல்வமே பரவிக் கிடந்தது போலும்!

கரும்பின் அடர்ந்த நிழலில் அமர்ந்து நெற்பயிர் காக்கும் வேடுவப் பெண்கள், காவலனான ரகுவின் நற்புகழை குமரப் பருவம் தொடங்கிப் பாடினர்.

ஒளிமிகும் அகஸ்திய நட்சத்திரத்தின் உதயத்தால் நீர் தெளிந்தது.

ரகுவின் எழுச்சியால், அவமானத்தை எதிர்நோக்கிய எதிரிகளின் மனம் கலங்கியது.

மதங்கொண்டு, நதிக் கரைகளை முட்டி இடிக்கின்ற, பெருந்திமிள்  படைத்த காளைகள், ரகுவின் பராக்கிரமத்தையே அனுசரித்து அழகாக விளையாடிக் காட்டின.

நதிகளை ஆழமற்றதாக்கி, வழிகளின் சேற்றை உலர்த்தி, ரகுவின் உற்சாகத்திற்கும் முன்னாகச் சென்று அவனை யுத்த யாத்திரைக்குத் தூண்டியது போலும் சரத்காலம்!

மந்தர மலையை இட்டதால் பாற்கடலின் அலைகள் தளும்பித் தெளிப்பதுபோல, நகர மூதாட்டிகள் அவன் மீது பொரிகளைத் தூவினர்.

தேர்கள் கிளப்பிய புழுதியால் ஆகாயம் மண்ணாயிற்று.

மேகங்களை ஒத்த யானைகள் மண்மீது நடந்து சென்று பூமியை ஆகாயமாக்கின.

சிவனாரின் செஞ்சடையினின்று நழுவும் கங்கை நதியை கீழ்க்கடலை நோக்கி அழைத்துச் செல்லும் பகீரதன் போல், ரகு தன் சேனைக் கடலைக் கிழக்கு நோக்கி அழைத்துச் சென்றான்.

செல்வம் துறந்த, பதவி இழந்த, தோல்வியடைந்த மன்னர்கள் நிரம்பிய ரகுவின் வழி, தெளிவானதாக இருந்தது – பழங்கள் உதிர்ந்து, வேர்கள் பறிக்கப்பட்டு, மரங்கள் முறிந்த யானையின் பாதைபோல.

நாற்றாங்காலில் பெயர்த்து நடப்பட்டு, தங்கள் வேரடியில் நிற்கும் தாமரை வரையில் வணங்கித் தாழும் நெற்கதிர்கள்போல, போரில் தோற்றபின் தங்கள் அரசபதவிகளைப் பெற்ற வங்கதேச மன்னர்கள், ரகுவின் மலரடி வணங்கி அவனுக்குச் செல்வமளித்து வளர்த்தனர்.

மகேந்திர மன்னனை சிறைப்பிடித்து, பின்னர் விடுவித்தான். அவனிடமிருந்த திருவை (செல்வத்தை) மட்டும் கவர்ந்துகொண்டான்; நிலமகளைத் (பூமியை) தொடவில்லை.

யானையின் மதநீர் வாசனை பெருக, ரகுவின் சேனை களியாட்டமிட்ட காவேரி, கணவனான சமுத்திரராஜனின் சந்தேகத்திற்கு உள்ளானாள்.

வெகுதூரம் கடந்துவந்த அந்த வெற்றிவீரனின் சேனை, கிளிகள் திரியும் மிளகுக் காடுகள் கொண்ட மலயகிரியின் சரிவுகளில் தங்கிற்று. அங்கு, குதிரைகள் நசுக்கிய ஏலச்செடிகளின் காய்ந்த துகள்கள் மேலே கிளம்பி, ஒத்த மணங்கொண்ட மதநீர் சொரியும் யானைகளின் கன்னங்களில் சென்று படிந்தன. கால் சங்கிலிகளை அறுக்கும் கம்பீரமான யானைகள், கட்டிய கயிற்றைக்கூட நழுவவிடாமல், சந்தன மரக் காட்டில் பாம்புகள் சுற்றிய பள்ளங்களில் நின்றன. தெற்கு திசையில் செல்கையில் கதிரவனின் ஒளிகூட சற்று குறைந்து விடுகிறது. ஆனால் அத்திக்கிலும், ரகுவின் பிரதாபத்தைப் பாண்டியர்கள் தாங்கவில்லை.

தக்ஷிணாயன காலத்தில் (ஆடி – தை வரை) தெற்கு திசையில் தோன்றும் சூரியன் சற்று ஒளி குன்றி இருப்பது இயல்பு. இங்கே கவி அதை சாதுர்யமாக, வீரம் மிகுந்த பாண்டியர்களுக்கு அஞ்சி சூரியனும் (பாண்டியர்கள் சந்திர குலம்), தன் ஒளியை குறைந்தவனாக இருக்கிறான்; ஆனால் அந்த பாண்டியரே ரகுவின் போர் திறனைத் தாங்கவில்லை என்கிறார்!

தாங்கள் சேர்த்துவைத்த புகழைக் கொடுப்பதுபோல், தாமிரபரணி சேரும் கடல் தந்த முத்துக் குவியலை ரகுவின் அடிபணிந்து அவர்கள் அளித்தனர்.

ரகுவின் சேனை எழுப்பிய புழுதி, பயத்தினால் தங்கள் அணிகளைத் துறந்த கேரள நாட்டு மகளிரின் முன்னுச்சிக் கேசங்களுக்கு நறுமணப் பொடியாயிற்று.

முரளா நதியில் வீசிய காற்று கொணர்ந்த தாழம்பூவின் மகரந்தம் படைவீரர்களின் மேலுடையில் படிந்து முயற்சியின்றிக் கிடைத்த ஆடை-வாசனைப் பொடியாயிற்று.

கவசமணிந்த குதிரைகள் எழுப்பிய பேரொலி, அங்கு காற்றிலசையும் பெரும் பனங்காட்டு மரங்களின் சலசலப்பையும் தோற்கடிப்பதாயிருந்தது.

குதிரைகளைமட்டுமே கொண்டு ரகு இமய மலைமீது ஏறுகையில், அங்கு கிளம்பிய தாதுப் பொடிகளால் அந்தச் சிகரங்கள் வளர்வதுபோலத் தோன்றின.

சரள மரங்களில் கட்டிய யானைகளின் கழுத்துச் சங்கிலியில் பிரதிபலித்த ஒளிவீசும் செடிகள் தலைவனான ரகுவிற்கு இரவிலேயே எண்ணையில்லா விளக்குகளாக வழிகாட்டின.

இந்த வர்ணனைகளில் மயங்கிக் கிடக்கும் வாசகர்களே!

எழுவீர்!

அல்லது..

சரித்திரம் பேசுகிறது என்று சொல்லிவிட்டு இது என்ன கதை சொல்கிறாய் என்று கோபம் கொள்ளும் வாசகர்களே!

நதிநீர் தான்  எங்கு போகிறது என்று தெரியாமல் போவதுபோல் நமது கதை போகிறது!

(காளிதாசன் வர்ணனை நமக்கும் சற்று ஒட்டிக்கொண்டதோ!)

ஆக… காளிதாசனிடம் நாம் வசமாய் மாட்டிக்கொண்டோம்!

சரி…ரகுவம்சக் கதை தொடரட்டும்!

 

(சரித்திரம் இன்னும் நிறைய பேசும்)