Image result for வேலை இல்லாத கிராம வாலிபர்கள்

“மேற்கோள் காட்டிப் பேசுவது

அழகே அல்ல

எதையும் சுயமாகச் சிந்திக்க  வேண்டும்

மேற்கோள் காட்டிப் பேசுபவன் எல்லாம்

முட்டாள் என்றான்

சீன அறிஞன் சியாங்கு புயாங்கு”

(எப்போதோ படித்த ஒரு கவிதை)

 

அரட்டைச் சங்க நண்பர்களுடன் செலவிட்ட நேரங்கள் எல்லாம் வெறும் பொழுதுபோக்கு என்று சொல்லமுடியாது. சில நல்ல விஷயங்கள் காதில் விழும். சில உபயோககரமான தகவல்களும் கிடைக்கும். எல்லாவற்றிக்கும் மேலாக எனக்கு ஒவ்வொருவரும்  ஒரு விஷயத்தைப் பார்க்கும் முறையில்  உள்ள வித்தியாசங்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.

எப்போதாவது இரண்டுபேர் மத்தியில் ஒரு கருத்து முரண்பாடு இருக்கும்போது, எல்லோருடைய  உடனடித் தேர்வும் மகேந்திரன்தான். வரது சார்,  ஏதாவது ஜோக்கடித்துப் பேச்சைத் திருப்பிவிடுவாரே தவிர, ஒரு தீர்வோ   – ஏன் குறைந்தபட்சம் ஒரு நிலைப்பாடோகூட –  கிடைக்காது. ஏகாம்பரம், ‘இப்படித்தான் ஆறு வருஷம் முன்னால், என் மாமா வீட்டில்…’ என்று   எதாவது ஒரு நிகழ்ச்சியைச் (சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ) சொல்ல ஆரம்பித்துவிடுவார்.  சந்துரு சமயத்தில் நிதானமாகவும் சமயத்தில் உணர்ச்சிவசப்பட்டும் எதாவது ஒரு பக்கம் பேசுவார் என்றாலும் அது லாஜிகல் ஆக இருக்கும் என்று சொல்லமுடியாது. கேள்விக்குப் பதிலளிக்கவே  மிகவும் தயக்கம் காட்டும் நான், கருத்துச் சொல்வதோ விவாதம் புரிவதோ நடக்காத காரியம்.

நடுவில் கொஞ்சநாட்கள் சங்கத்திற்கு வந்துபோய்கொண்டிருந்தார் ஒருவர். பெயர் ராஜசேகரன் என்று நினைக்கிறேன். அவர் இந்தக் கோஷ்டியில் எப்படி வந்தார் என்றும் தெரியவில்லை. அங்கத்தினர் யாருக்கும் உறவினரோ தெரிந்தவரோகூடக் கிடையாது. ஏகாம்பரம் ஒருநாள் ஏதோ ‘கொறிக்க’ கொண்டுவந்திருந்தார்.  நாங்கள் அமரும் இடத்தின் அருகில் எதற்காகவோ வந்து அமர்ந்திருந்த  அவரையும் கூப்பிட்டுக் கொடுத்தார். அவரும் எங்களுடன் அமர்ந்து அதைச் சாப்பிட்டார்.  மறுநாளே அவரும் ஏதோ கொண்டுவந்து எங்கள் எல்லோருக்கும் கொடுத்துக் கணக்கைச் சரி செய்துகொண்டார்.  அதன் பிறகு அவ்வப்போது எங்களுடன்  அமர்ந்து கொள்வார்.

‘என்ன சார் நான் சொல்வது?’ என்று யாரவது அவரை விவாதத்திற்குள் இழுத்தால் “ரொம்பச்  சரி… ஆமாம் என்ன சொன்னீங்க?”  என்று கேட்டு எல்லோரையும் திகைக்க  வைத்து விடுவார். எப்படி திடீரென்று சேர்ந்து கொண்டாரோ, அது போலவே காணாமலும் போனார்.  ஆனால். அவர் சொன்ன ஒரு விஷயம் யோசிக்க வைத்தது.  ‘நீங்களெல்லாம் ரொம்பநாள்  நண்பர்கள். இன்னிக்கு அடித்துக்கொள்வீர்கள்- நாளைக்குச் சேர்ந்து கொள்வீர்கள். நான் எதாவது சொல்ல …. சரி விடுங்கள்’ இதுவும் என் சித்தாந்தத்திற்கு ஒட்டி வருகிறது.

பார்த்தீர்களா? நான் ஏதோ பரம ஞானிபோல சித்தாந்தம் , கோட்பாடு, உளவியல் என்று அடித்து விடுகிறேனே?  இதுபோல் எதையும் (உலக வழக்கம், கூட்ட மனவியல், சமூகப் பண்பாடு)   யாரையும் (அடங்காப்பிடாரி, பரோபகாரி, அதிகப் பிரசங்கி, எந்த வம்புக்கும் போகாதவன்)  வகைப்படுத்தித்தான் பார்க்கவேண்டும் என்று ஏன் தோன்றுகிறது? மேலாண்மை (MANAGEMENT) மேற்படிப்புகளில் ‘EFFECT’ , SYNDROME’ ‘ISAM’  என்றெல்லாம் பெயர்வைத்துத்தான்    (ஆங்கிலத்தில் ஜார்கன் என்று சொல்வார்களாம்) பாடமும் நடத்துவார்கள். நல்ல மதிப்பெண் வேண்டுமென்றால் தேர்வில் அவற்றை எழுதத்தான் வேண்டும். அதுபோல் ராஜசேகரன் நினைவு வந்ததும் அவர்போலவே யோசிக்கிறேனோ என்னவோ? அவரது இன்னுமொரு மேற்கோள்… “வாழ்க்கையில் ஸ்ட்ராட்டஜி தேவைதான் . ஆனால் அதுவே வாழ்க்கையாகிவிடக் கூடாது.’

மேடைப் பேச்சுகளிலும் இதுபோல மேற்கோள், ஜார்கன், கவிதை, சிறு நிகழ்வுகள், குட்டிக் கதைகள் என்று நிரவி விட்டால்தான் தாக்குப் பிடிக்க முடியும். கூட்டத்திற்குச் சற்று தாமதமாக வந்தார் ஒரு பேச்சாளர். அவர் ஆர்ப்பாட்டமாகச்  சொன்ன இரண்டு குட்டிக்கதைகள், ஒரு ஜோக், ஒரு நிகழ்ச்சி எல்லாமே அவருக்கு முன்பு பேசியவர்கள் சொல்லிவிட்டர்கள்.  இவர் பேச்சை மயான அமைதியுடன் எல்லோரும் கேட்க, இவர் பேச்சை சீக்கிரம் முடித்துக்கொண்டார். ‘ரசனை கெட்ட கும்பல்’ என்று முணுமுணுத்தது மேடையிலிருந்த சிலர் காதில் விழுந்தது.

ஏதோ சுவாரசியமாகப் போய்க்கொண்டிருந்த வெட்டிச்சங்க வாழ்க்கை திடீரென்று முடிவுக்கு வந்தது –  எனக்கு வேலை கிடைத்த காரணத்தால். என் அண்ணன் கல்லூரிப் படிப்பை முடிக்கும் தருவாய் அது. ஏதோ ஒரு குருட்டு அதிர்ஷ்டம்தான்  என்று சொல்லவேண்டும். சிவகுமார் என்னும் ஒரு நல்ல மனிதர்  ஒரு ஸ்டேஷனரி கடை வைத்திருந்தார். அவர் கடையில் பேப்பர் வாங்கிக் கொண்டிருக்கும்போது எதேச்சையாக என் அப்பா அங்கே வந்தார். இருவரும் பொருள் வாங்கக் காத்துக்கொண்டு இருக்கும்போது, சிவகுமார் அப்பாவைப் பார்த்து, “நீங்க நேஷனல் ஸ்கூல்லதானே படிச்சீங்க?” என்று கேட்டார். “அட.. சிவகுமாரா?” என்று என் அப்பா கிட்டத்தட்ட கூச்சல் போட்டார்.

அந்தக் காலத்தில் இருவரும் இணைபிரியாத நண்பர்கள். பள்ளியை விட்டபிறகு சந்திக்கவும் இல்லை. சிவகுமாரின்  அப்பாவிற்கு மாற்றல் ஆகிவிட்ட காரணத்தினால், படிப்பு முடிந்ததுமே வேறு ஊருக்குப் போய்விட்டாராம். பள்ளியிலிருந்து எஸ்.எஸ்.எல்.ஸி புத்தகம் வாங்கிய அன்றுதான் இருவரும் கடைசியாக  சந்தித்து இருக்கிறார்கள்.

கடையைப் பையனிடம் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, எங்களுடன் பக்கத்துக்கு ஹோட்டலில் காப்பி சாப்பிட வந்தார். இருவரும் பழைய நினைவுகளையும் தற்போதைய நிலைமைகளையும் பரிமாறிக் கொண்டார்கள். அதன் பிறகு இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டுதான் இருந்தார்கள்.

அன்று அப்பா தாமதமாக வீட்டிற்கு வந்தார். அவர் வரும் முன்பே நான் தூங்கிவிட்டிருந்தேன்.  காலையில் என்னைக் கூப்பிட்டுக் கடிதம் ஒன்றைக் கொடுத்தார்.  சிவகுமார் அவரது உறவினர் ஒருவருக்கு என்னை அறிமுகப்படுத்தி எழுதிய கடிதம் அது. அந்த உறவினரைப்  பார்க்க நானும் அப்பாவும் மாவட்டத் தலைநகர் போனோம்.

அந்த  மனிதர் மிகவும் செல்வாக்குள்ள பரோபகாரி. என்னைப்பற்றி எல்லாம் விசாரித்துக்கொண்டு ஒரு விண்ணப்பப் படிவத்தைக் கொடுத்து நிரப்பித் தரச்சொன்னார். பின்னாட்களில் நான் ‘வேலை’ என்று பார்த்த நிறுவனத்தின் பெயரையே அன்றுதான் நான் முதலில் பார்த்தேன்.  ஊருக்குத் திரும்பி வந்துவிட்டோம்.

அது விஷயம் மறந்தும் போய்விட்டது. கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கழித்து  எனக்கு நேர்முகத் தேர்விற்கு அழைப்பு வந்ததும், என்னை ஒரு கேள்வியும் கேட்காமல் வேலையில் சேரச் சொன்னதும் ஒரு கனவுபோல்தான் இருந்தது.

வரது சார், மகேந்திரன் சார், ஏகாம்பரம், சீனா எல்லோரும் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். சந்துருவும் என்னைப் பாராட்டினார். அவர் இது போன்ற ‘சிறிய’ வேலைகளுக்குப் போவதாக இல்லையே! சற்றுத் தொலைவிலிருந்த இன்னொரு ஊரில்தான் வேலையில் சேரவேண்டும்.  சங்க வாழ்க்கை முடிவடைந்தது.

என்னை உளமாரப் பாராட்டியவன் எதிர் வீட்டு வேம்புதான். அவன் கதை ஒரு சோகக் கதை. நான் வேலை பார்த்த லட்சணத்தைச் சொல்லும் முன் வேம்புவின் கதையைச் சொல்லவேண்டும்

… இன்னும்