எங்களின் எளிமையானவர்களுக்கான மருத்துவமனைக்கு வந்திருந்தார் அரசு மேலதிகாரி தியாகராஜன். பளிச்சென்ற உடைகள், எனினும், அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த சாதரணமானவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். தியாகராஜனை வரிசையில்தான் அழைத்தோம்.
அவருடைய நண்பர் பரிந்துரைத்ததால் எங்களை அணுகினார். இரண்டு மாதத்திற்குமுன் அவருடைய மனைவி ஜெயலஷ்மி காலமாகி விட்டார். எதிர்பாராத திடீர் மரணம். இவர்கள் அன்யோன்யமான தம்பதிகள். மனைவியை இழந்ததினால் கண் கலங்கியபடி இருந்தார். தியாகராஜனின் நெருங்கிய நண்பர், டாக்டரிடம் ஆலோசனை செய்வது உதவும் என நம்பி, எங்களிடம் அனுப்பி வைத்தார்.
தியாகராஜன் 57 வயதானவர். கௌன்ஸலிங் ஆரம்பமானது. துயரத்தின் வழிமுறைகள் இப்படித்தான் என்று புரியவர, மறுபடி வேலைக்குப் போக ஆரம்பித்தார். அவருக்கு டில்லிக்கு மாற்றல் ஆனது, எங்கள் சிகிச்சையில் தடங்கல் ஏற்பட்டது. அவருடைய இளைய மகன் துஷ்யந்த், தென் ஆப்பிரிக்கா சென்று அங்கு பள்ளிக்கூடம் திறக்க விரும்பினான். உல்லாசப் பயணம் போனபோது துஷ்யந்த், அங்குள்ள மக்களின் நிலையைப் பார்த்ததினால் இப்படி ஒரு முடிவு எடுத்தான்.
அப்பாவும் -பிள்ளையும் ஒன்றாகப் புறப்பட்டார்கள். தியாகராஜன் டில்லி சென்று, அவருடைய நிறுவனத்தின் க்வாடர்ஸில் குடியேறினார். ஆறு மாதத்திற்குப் பின்பு திரும்பியதும் எங்களைப் பார்க்க வந்தார். மகள் கெளரி வெளிநாட்டில் எம்.ஐ.டீ. என்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில், அஸிஸ்டன்ட்ஷிப் தொகை கிடைத்து, படிக்கப் போவதாக பெருமையுடன் சந்தோஷமாகச் சொன்னார். அன்று வந்த அனைத்து நோயாளிகளுக்கும் இனிப்பு கொடுத்து, அவர்களில் ஐந்து பேருக்கு மருந்து வாங்கிக் கொடுத்தார்.
இரண்டே வாரத்தில், தியாகராஜன் மறுபடி இனிப்புடன் வந்தார். அவர் மூத்த மகன் பாரிவள்ளல் இயற்பியல் (Physics) மேதை. வெளி நாட்டுக்குப் பெரிய ப்ராஜெக்ட்க்கு பொறுப்பு ஏற்கப் போவதைத் தெரிவித்தார். இந்த முறை மகனையே இனிப்பைத் தரச்சொன்னார். மாத்திரை வாங்கித் தந்தார்கள்.
அதே வருட இறுதியில், தியாகராஜன் வேலையிலிருந்து ஓய்வு பெற்றார். வேலையை நீடித்துக்கொள்ளச் சொன்னார்கள், ஆனால் இவர் ஒப்புக்கொள்ளவில்லை.
ஓய்வு பெற்றவருக்கு, திடீரென நெற்றியில் வலி இருப்பதுபோல் தோன்றியது. விக்ஸ், அமிர்தாஞ்சன் தடவி, காபி அருந்தினால், வலி குறைவதுபோல் இருக்கிறது என்றார். காலை வேளையில் வலி இல்லை, மாலை ஆறு -ஏழு மணிக்கு வருவதைக் கவனித்தார். சில நாள் இல்லாமலும் இருந்தது. வீட்டிற்கு விருந்தாளி வந்தால், அவர்களைக் கவனிக்கையில் தலைவலி தானாகப் போய்விடுவதையும் கவனித்தார். தலைவலி தினம் வர ஆரம்பித்ததும் ‘என்னவாக இருக்கும்?’ என்று யோசித்தார். ஓரிரு வாரத்தில் தூக்கம் குறைந்தது. பசி எடுப்பதில்லை என்பதையும் கவனித்தார்.
தியாகராஜன் சிந்தனை தன்னுடைய மூன்று பிள்ளைகள்பற்றியே இருந்தது. அவர்களைப் பார்த்துப் பார்த்து வளர்த்ததால் என்று கூறினார். தன் மனைவி, பிள்ளைகளை இவரிடம் விட்டுச் சென்றதைப் பொறுப்பாகக் கருதினார். சரியாக இதைச் செய்கிறோமா என்பது அவரை மிகவும் வாட்டியது. மூவருக்கும் தங்களைப் பார்த்துக்கொள்ளும் வயதுதான். பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்ளாதது, பெற்றோரின் கடமையிலிருந்து விலகிவிட்டோமே என மனம் துடித்தது. குழந்தைகள் வெவ்வேறு தேசங்களில் இருப்பதால், தன் கடமையில் குறைவு உள்ளது என்று நினைத்தார்.
இதனால் பெரும்பாலும் சோகமாக இருந்தார். தன்னால் யாருக்கும் உபயோகம் இல்லை என்ற எண்ணம்தான் அதிகரித்தது. தியாகராஜன், தன்னை ஒரு தகப்பனாராகப் பார்த்தாரே தவிர, வேறு எப்படியும் தன்னைப் பார்த்துக்கொள்ளவில்லை.
இவ்வளவு ஆண்டுகளாக, சதாகாலமும், “இவள் என்ன படிக்கிறாள்?”, “அவன் ஏன் பாட்டை நிறுத்தினான்?” “இவன் ஏன் டென்னிஸ் விளையாடலை” என்ற சிந்தனைகள் கவ்வும். இவர்கள் வெளிநாடு போகும் வேளையிலும் மிக மும்முரமாகச் செயல்பட்டார்.
இப்போது ஒரு வெறிச்சோடிய நிலைபோல் தோன்ற, வீடும் காலியாகத் தோன்றியது. எதைப் பார்த்தாலும், அவர்கள்பற்றிய நினைவாகவே இருந்தது. எப்பொழுதும் நன்றாக உடை அணிபவர், இப்பொழுதெல்லாம் கசங்கிய உடைகள், சவரம் செய்யாத முகமாக, தோழர்களைச் சந்திக்காமல், நாள் இதழைப் படிக்காமல் இருந்தார்.
தியாகராஜன் தான் இப்படி என்றும் இருந்ததில்லையே என்று தன்மேல் வியந்தார். அவர் அக்காவோ, தலைவலியின் காரணம் தலையில் ஏதேனும் கட்டி இருக்கலாம் என்றார். இதற்கு ஒரு பதில் காண எங்களிடம் வந்தார்.
தியாகராஜன் தனக்குக் கட்டி இருக்காது என்று சொன்னார். எங்கள் டிபார்ட்மென்ட் சீஃப் டாக்டர் இதைக் கேட்டு மகிழ்ந்தார். முழுதாகப் பரிசோதனை செய்து, அவர் சொன்னதுபோல் கட்டி ஒன்றும் இல்லை என்றார். பளிச்சென்று, “இதற்கு மாத்திரை வேண்டாம். நீங்கள் முதல்முறை பார்த்தவரிடமே அனுப்பி வைக்கிறேன்”என்று என்னிடம் அனுப்பி வைத்தனர். நான் ஸைக்காட்ரிஸ்ட் ஸோஷியல் வர்கர் என்பதால் நோயாளியின் திறன்கள், வளங்கள், குடும்பத்தினர் என அறிந்துகொண்டு விடை காண்போம்.
தியாகராஜன், இவ்வளவு நாளாகச் சுறுசுறுப்பாக இருந்தவர், திடீரென எல்லாவிதத்திலும் அவர் வாழ்க்கை மாறியது. வாழ்க்கைத் துணைவி மறைவு, அது ஆன சில மாதங்களில் அவர்களின் கடைக்குட்டி வெளிநாடு பயணம், அதே நேரத்தில் இவரும் ஜாகை மாறினார். திரும்பி வந்த சில மாதங்களில் அவரின் பெண்ணும், மூத்த மகனும் சிறிய இடைவெளியில் வெளிநாடு சென்று விட்டார்கள். மூவரும் வாழ்க்கையில் அடுத்த கட்டம், மேல் கட்டத்திற்குத்தான் சென்றார்கள். தியாகராஜன், தன் தனிமை, பெற்றோர் என்ற அந்த முத்திரையைத் தேடுகிற நிலையில் இருந்தார்.
இதைப்பற்றியே எங்கள் செஷன் ஆரம்பமானது. ஒவ்வொருவர் தயாராகும் தினங்கள், இவர்-அவர்களின் பயணம், அங்கே இருப்பதற்கு வேண்டிய தேவைகளைப் பார்த்துச் செய்ததை, எந்த மாதத்திலிருந்து என்பதை வரிசைப்படுத்திக் குறித்து வந்தோம். முழுதாக விவரிப்பு ஹோம்வர்க்கானது. தியாகராஜன், இவ்வளவு மாறுதல்களை எதிர்பார்க்கவில்லை என்று சொன்னார். நினைவூட்டிக் கொண்டதில் மெதுவாக நிஜத்தை ஏற்றுக்கொள்ளத் தொடங்கினார்.
தூக்கம் தடைப்பட்டதால், ரிலாக்ஸேஷன் எக்ஸர்ஸைஸ் ஆரம்பித்தேன். இத்துடன் “விஷுவல் இமேஜரீ” (visual imagery) அதாவது, பிடித்ததைக் கற்பனைசெய்து, உடலைத் தளர வைப்பது. இவை இரண்டும் செய்ய, மூன்றே நாட்களில் தூக்கம் சரியானது. உற்சாகம் கூடியதில் தியாகராஜனுக்கு தன்மேல் நம்பிக்கை ஆழமானது!
இருந்தும் தனக்கு என்னவாயிற்று என்பதைப்பற்றிய உறுத்தல் இருப்பதைத் தயக்கத்துடன் பகிர்ந்தார். அவர் பக்கத்து வீட்டுக்காரர் இது மன உளைச்சல் என்று சொன்னதாகக் கூறினார்.
இது டிப்ரஷன் (Depression) / மன உளைச்சல் அல்ல என்றும் இவருக்கு நேர்ந்ததைப் புரியவைத்தேன். தன் பிள்ளைகள் ஒருவர் மாற்றி ஒருவர் படிப்பு, வேலை, என்று சென்றுவிட்டார்கள். அன்யோன்யமான மனைவி இறந்தார், ஓய்வு பெற்று ரிடையர் ஆனார். சுறுசுறுப்பான வாழ்வில் இப்பொழுது “எம்ப்டி நெஸ்ட்” (காலியான கூடு) ஆனதால் “எம்ப்டீ நெஸ்ட் ஸின்ட்ரோம்” என்ற நிலையில் இருந்தார். ஒரு நிகழ்வு நடந்தபின் அதற்கு இணங்கி அடுத்த கட்டம் வரும்வரை வரும் தவிப்புகளை இதில் வர்ணிக்கலாம். பல கேள்விகள், சந்தேகங்கள் எழும். வியப்புகள் வாட்டும். அதனாலேயே சுதாரித்து கொள்ளும்வரை பல இன்னல்கள் நிலவும். இது ஒரு நிலை, டையக்னோஸிஸ் அல்லவே அல்ல என்று விளக்கினேன்.
தியாகராஜனுக்கும், பிள்ளைகளுக்கும் இஸ்திரி போடுபவர் வேலு. தினம் வந்து துணிகளை எடுத்து, இஸ்திரி போட்டு, கஞ்சி தேவையானால் அந்தச் சலவை செய்து, மாலையில் துணிகளை திருப்பித் தந்துவிடுவது பல வருடப் பழக்கம். இப்போது, பிள்ளைகள் எப்படிச் சமாளிப்பார்கள் என்ற கவலை தியாகராஜனுக்கு.
இதையே எடுத்துக்கொண்டு அடுத்த சில செஷன்களில் ஆராய்ந்தோம். தன் வளர்ப்பு விதத்தை விவரிக்க, தான் செய்து கொடுத்ததையும், மூவரும் தானாகவே செய்வதையும் ஒப்பிடத் தொடங்கினார் தியாகராஜன். தன் பிள்ளைகள், தங்கள் வேலைகளைத் தானே செய்துகொள்கிறார்கள் என்பது புரிய, அவருடைய கவலை மறைந்துவிட்டது.
இந்த புரிதல் எந்த வித ராக்கெட் ஸைன்ஸ் அல்ல. தியாகராஜன் தன்னை, பெற்றோர் என்ற வட்டத்துக்குள் வைத்தே தன்னுடைய ஆசை, நிராசை, தேவை எல்லாவற்றையும் அடக்கினார். தந்தை என்ற பொறுப்பில் மூழ்கிய தியாகராஜன், தன்னைத் தனி மனிதனாகப் பார்வை இடவில்லை. மூன்று பசங்களுக்காகப் பல வருடங்களாக யோசித்து, செய்து, இப்போது தனக்கு என்று யோசித்துச் செய்வது உதயமானது. இதைச் பழக்கிக்கொள்ளவேண்டி இருந்தது.
மற்றவர்களைப்பற்றி யோசித்து, அதற்கு ஏற்றவாறு செய்வது இவருக்கு இயல்பானது. இதை நாங்களும் கவனித்து வந்தோம். தியாகராஜன் எங்களைப் பார்க்க வரும் நாட்களில், அவர் முதலாக வந்து விடுவார். இருந்தாலும் நாங்கள் கடைசியாகத்தான் பார்ப்போம் என்பதும் இவருக்கு நன்றாகத் தெரியும். ஸெஷன்ஸ்களுக்கு அதிக நேர அவகாசம் தேவையாக இருப்பதால் கடைசியாகப் பார்ப்பது வழக்கம்.
இதையே அவரைக் குணமாக்கும் வழியாக செஷனில் யோசித்து முடிவெடுத்தோம். அவருக்கான அழைப்பு வரும்வரை ஏதாவது மற்றவருக்கு உதவி செய்யமுடியுமா என்பதை யோசித்து, பல வழிகளை வகுத்தோம். அவரும் செய்ய ஆரம்பித்தார்: மருந்து சீட்டை படித்துப் புரியவைப்பது, மருந்து தரும் இடத்தில் உதவுவது, நாளடைவில் இவர் ஃபைனான்ஸ் துறையைச் சேர்ந்தவராக இருந்ததால், மருத்துவமனை நிர்வாகியின் அனுமதியுடன், கணக்கு வழக்கையும், டோக்கன் தரும் விதத்தையும் சீர் செய்தார். என்னுடைய ஸெஷன்ஸ் நேரத்தைத்தவிர பல நாட்கள் உதவி செய்தார். இதுவே தன் சுபாவத்தை அவர் அறிய ஒரு வாய்ப்பானது.

அடுத்த கட்டமாக, உடற்பயிற்சிபற்றி சிந்தித்து, காலை வேளை நடைப் பயிற்சி என்று முடிவானது. இதில் நான் இட்ட ஒரு கட்டளை, வழியில் தினம் சந்திப்பவருக்கு வாழ்த்துக் கூறவேண்டும். இதனால் மெதுவாக ஒரு குழு சேர்ந்தது. அடுத்த கட்டமாக, தியாகராஜன் அந்தக் குழுவில் யாருக்கு என்ன தேவை என்று புரிந்து, தன்னால் என்ன முடியுமோ அதைச் செய்வது என்று ஆரம்பமானது. ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசை தொடங்கியது, கறிகாய் வாங்குவது, மருந்து மாத்திரைகள் வாங்க, போஸ்ட் ஆபீஸ், பீச் போக என்று போக வர அவர்களுக்குள் பரிச்சயம் அதிகரித்தது.
காலைப்பொழுதை உபயோகமாகச் செலவழிக்க விருப்பப்பட்டார். இவரிடம் இருந்த மற்ற திறன்களை பட்டியலிட்டோம். வீட்டுப் பக்கத்தில் உள்ள சிறுவர்கள் பள்ளியில், குழந்தைகளுக்காகக் கதை சொல்லுவது, மூன்று நாட்களுக்கு அரசினர் பள்ளியில் கணக்கு, ஆங்கில பாடங்களின் சந்தேகம் தீர்ப்பது என்றும், வேலை வாய்ப்புபற்றிய ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ளலாம் என்று திட்டமிட்டார். மற்ற நாட்களில் தன் நண்பர்களுடன் பேங்க், போஸ்ட் ஆபீஸ் செல்லும்பொழுது பல பேர் கஷ்டப்படுவதைப் பார்த்ததால் தியாகராஜன் மற்ற நாட்களில் அங்கு செல்வது என்று முடிவெடுத்தார். அவர்கள் நண்பர்கள் குழுவிலிருந்து சிலர் சேர்ந்துசென்று அரை நாளைக்கு உதவி செய்தார்கள்
இவை அனைத்தும் ஒரு உத்வேகத்தைத் தந்தது! புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ள விரும்பினார். ஃப்ரெஞ்ச் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். அப்பொழுது நுங்கம்பாக்கத்தில் உள்ள அலையான்ஸ் ஃப்ரான்ஸெயில்மட்டும் இந்த வகுப்புகள் இருந்தன. காரை ஓட்டிக்கொண்டு போய்வந்தார். சனிக்கிழமை கர்நாடக வாய்பாட்டு கற்றுக்கொண்டார்.
முன்பைவிட சுறுசுறுப்பாக இருந்தார். தலைவலி இல்லை. பசி எடுத்தது ஆனால் சுவையாக சமைக்கத் தெரியாதது இடையூறாக இருந்தது. இதற்கு அவர் நடை குழுவினரான ரமாமணி, விஜயாவிடமும் சமைக்கும் விதமும், கூடவே மீனாட்சி அம்மாளின் புத்தக துணையுடன் சமையல் செய்தார். குடும்பத்தினருக்குப் பிடித்த வகைகளைச் செய்துபார்த்தார். சமைப்பதும் கலை என்பதால் மனதுக்கு ஆறுதலானது.
தியாகராஜன் தன் நினைவுகளைப் பகிரும்போது கண்ணீர் அருவியாகக் கொட்டியது. இவரின் குடும்பம் மிக நெருக்கமானதாக இருப்பதால் நேர்ந்தது. பசங்களுடன் வாராவாரம் பேசிவர இது குறைந்தது. இவர்களின் பாசத்தினாலும் பாரிவள்ளல், துஷ்யந்த், கெளரி என்று ஒவ்வொரு வாரமும் இவர்களில் ஒருவர் ஆஸ்பத்திரியின் தொலைபேசியில் அழைத்து விவரங்களைக் கேட்டுக்கொண்டார்கள்.
தியாகராஜன், தன் வெறுமையைச் சமாளிக்கும் விதத்தை, தான் தினம் செய்துவருவதை அவர்களுடன் கடிதத் தொடர் செய்யப் பரிந்துரைத்தேன். அவர்களுக்கும் அப்பாவின் நிலை தெரியவரும், பகிர்ந்து கொள்ள மனம் லேசாகும், பந்தம் அதிகரிக்கும். இதைச் செய்துவர, என்னுடைய செஷனை மெதுவாக முடித்துக்கொண்டேன். தியாகராஜன், தன்னுடைய தனித்துவத்தை உபயோகப்படுத்தும் தருணமாக இந்தக் காலகட்டம் அமைந்தது. அவர் உள்ளத்தில் இருந்த பாசத்தைச் செயல் மூலமாகப் பலபேருக்குக் காட்டினார்.
