
காற்றுச் சீரமைப்பியின் வெளிப்புறக் கூறுகள்
ஆங்காங்கே
கதறிக் கொண்டிருக்க
சமிக்ஞை உள்வாங்கும்
உணரித் தட்டுகள் – இவள்
சங்கதிகளையும் சேர்த்து உள்வாங்க
கவ்விகள் இருக்கும் துணிச்சலில்
கவலை மறந்து
கொடித் துணிகள் கொட்டமடிக்க
நிலவும் நட்சத்திரங்களும்
மேகங்களுள் முங்கியிருக்க
உலவும் உணர்வுகளோ
தேகத்திலேயே தேங்கியிருக்க
வீசும் காற்று இவளை
வேரோடு இடம் பெயர்க்க முயல –
வழக்கமான மொட்டை மாடி ஒன்று
இவளது
மௌனங்களை மெதுவாய்
மொழி பெயர்த்துக் கொண்டிருந்தது..!

