
இந்த ஆண்டிற்கான(2018) யுவ புரஸ்கார் விருதுபெற்றுள்ள Suneel Krishnan அம்புப்படுக்கையை வாசித்து முடித்தேன்.
(வெளியீடு:
யாவரும் பதிப்பகம்)
” அம்புப்படுக்கை” என்றவுடன் தன்னிச்சையாக பீஷ்மர் நினைவுக்கு வருகிறார்.
சுனில் கிருஷ்ணன் முன்னுரையில்…
// பீஷ்மர் காலத்தின் முன் தன் துயர் நீங்க அமைதியுடன் வேண்டிக் கிடக்கிறார். போதும்போதுமெனக் கதறி அரற்றவில்லை. துயரத்திலிருந்தும் கொண்டாட்டத்திலிருந்தும் சம அளவில் பற்றற்று இருப்பவராகப் பீஷ்மர் எனக்குத் தோன்றவில்லை. வாழ்வின் மீது பெரும் விழைவும் வாஞ்சையும் ஒருபக்கம் நம்மை இருத்தி வைக்கின்றன. நம் பிடிப்பை ஒவ்வொரு விரலாக நெகிழ்த்தி வாழ்வைக் கைவிடச் செய்ய வதைக்கும் ஆற்றல்கள் மறு எல்லையில் நம்மை வற்புறுத்துகின்றன. இவற்றில் ஒன்றை தேர்வு செய்யத் தயங்கி, இயன்றவரை ஒத்திப்போடுபவராக, வலியில் வதங்கி வாழ்வின் நினைவுகளை மீட்டியபடி தனது கேள்விகளுக்கு விடைதேட முனைபவராகப் பீஷ்மர் இருக்கிறார் எனத் தோன்றுகிறது, இக்கதை மாந்தர்களைப்போல.//
இத்தொகுப்பில் பத்து கதைகள்.
அதில் முதல் கதை ” வாசுதேவன்” இக்கதையை படித்த அன்று என்னால் தூங்க முடியவில்லை. பிழைப்பது அரிது என நூறு சதவீதம் தெரிந்தபிறகும் ஏதோவொரு நம்பிக்கையில் எந்த உணர்வுமற்றப் படுத்திருக்கும் உயிர்.
சற்றே கை/ கால் விரல்களை அசைத்தால்கூட ஒரு நம்பிக்கை( துளி) துளிர் விடுவதை விரைவில் குணமாகிவிடுவான்/ வாள் என பெரு நம்பிக்கையாக மாற்றிக்கொள்ளும் அந்நபர் சார்ந்த மனிதர்களை நான் கண்ணாரக் கண்டிருக்கிறேன். அதனாலே எனக்கு அந்தக் கதையப் படித்த அன்று வேறு கதைகளைப் படிக்க முடியவில்லை.
// எஞ்சியிருப்பவர்களின் ஆற்றலையும், நம்பிக்கையையும் ,செல்வத்தையும் உறிஞ்சுவதைத் தவிர
என்ன பயனுள்ளது இந்த உயிருக்கு? உண்மையில் என் உயிருக்கு என்ன பயன்? அல்லது பிறக்கும்,மரிக்கும் எந்த உயிருக்கும் தான் என்ன பயன் இருந்திட முடியும் விளங்கவில்லை.//
தானும், நண்பனுமாகப் படுக்கையில் கிடக்கும் ” வாசுதேவனுக்கு” ஆயுர்வேத சிகிச்சை செய்யப்போகும் ஒருவனின் அனுபவம்.
இத்தொகுப்பின் மிகச்சிறந்த கதையென்று சொல்வேன் .
* ” பொன் முகத்தைப் பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும்”
தன் பேத்தியின் அழுகுரல் கேட்டவுடன் பதறி எழுந்து வருகிற லெட்சுமண செட்டியார், மருமகள் வேலைக்குப் போவதால் அக்குழந்தையை முழுநேரமும் பார்த்துக் கொள்கிறவர்.
தன் பேத்திக்காக, நாக்குக்கோ மனசுக்கோ வாகாக இருக்கிறதென்பதற்காக // பொன்னழகைப் பார்ப்பதற்கும் //என்கிற ஆயர்பாடி மாளிகையில் எனத்தொடங்கும் பாடலை
பொன் முகத்தைப் பார்ப்பதற்கும் எனப்பாடுகிற தாத்தா!
தான் இரண்டு நாள் ஊரிலில்லாதபொழுதில் பேத்தியைத் தூங்க வைக்க செல்பேசியில் spbகுரலில் அதே பாடலை கேட்டுப் பழகி தான் வந்தபிறகும் அதையே பழக்கப்படுத்திக் கொண்டுவிட்டாளோ என நினைத்துக் கலங்கிப்போகிற அந்தப்பெரியவரின் உணர்வுகள் ..அருமை.
ஒருநாள் அக்குழந்தை எதற்கும் சமாதானமாகாமல்
அவர் , பொன் முகத்தைப் பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும் ” எனப்பாடினவுடன் தாத்தாவைப் பார்த்துச் சிரிப்பதாகக் கதையை முடித்திருப்பது அழகோவியம்.
மூன்றாவதாக ” பேசும் பூனை”
செல்போன் ஒவ்வொருவரின் அத்யந்தமாகிவிட்டதைச் சொல்கிறது.
அப்படி ஆனதின் பின்விளைவுகளில் ஒன்றுதான் அந்தரங்கம் என்பதேதுமில்லாமல் அத்தனையும் கடைவிரிக்கப்படுவது. கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்களை விலகிப்போக வைத்து செல்போனின் செயலிகள் ஒரு மனுஷியை ஆட்கொள்வதை விவரிக்கிறது.
அடுத்ததாக ” குருதிச்சோறு”
அக்கதையில் விவரிக்கப்படுகிற ஸ்ரீ அன்ன சௌரக்ஷாம்பிகைபற்றிய கதை சிலிர்ப்பை ஏற்படுத்தியது.
எளிய மனுஷியான ” பாலாயி” தனக்குக் கிடைத்ததைப் பஞ்சத்தில் வாடுகிற, தன்னைத் தேடிவந்து கேட்கிற அத்தனைபேருக்கும் கொடுத்தருளுவதில் அன்னபூரணியாக இருக்கிறாள்.
கூண்டு, திமிங்கலம் ,ஆரோகணம் இந்த கதைகளை நான் மீண்டும் படிக்கவேண்டும்.
புனைவுகதைகளைப் புரிந்து ,ஆழ்ந்து படிப்பதற்குப் பழக்கம் வேண்டுமென நினைக்கிறேன்.
போலவே, 2016 கதை :
வின்ஸ்டன் ஸ்மித் & நரோபா இருவருக்குமிடையேயான உரையாடல் இடம்பெறுகிறது
இக்கதையைப் படித்து விமர்சிக்கவும், எனக்கு வெகுகாலமாகுமெனத் தோன்றுகிறது.
எல்லாக்கதைகளிலும் மரணம் அல்லது மரணத்தின் சாயை ஓரிழையாக வந்துகொண்டே இருக்கிறது. அதுபோலவே சர்ப்பமும், சாமியாடியும். நாகர்கோயில், கன்யாக்குமரிக்காரர்கள் எழுதும் கதைகளில் உலவிடும் யட்சி இவர் கதைகளிலும் இருப்பதுபோல எனக்குள் ஒரு பிரமை.
தொகுப்பப் படித்து முடித்ததும்.
இளம் தலைமுறை எழுத்தாளர்களில் பல நூறு கதைகளை எழுதிப் பழக்கப்பட்டதுபோன்ற சரளமான நடையும், மொழியும் வாய்க்கப்பெற்ற டாக்டர். சுனில் கிருஷ்ணனுக்கு (ஆயுர் வேத மருத்துவர்) என் வாழ்த்துக்கள்.
