நெட் வைத்தியம்!

அறுபத்தி இரண்டு வயதுப் பெண்மணி – மினிமம் படிப்பு, வசதியானமத்தியதரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை கழுத்துப் பவுன் தாலிச்சரடு சொல்லியது.
உடன் வந்திருந்த கணவர் நெற்றியில் கோபிச் சந்தனம், முன் தலையில் முடி நரைத்த கிராப், பின் தலையில் ஒரு சின்ன ‘கொத்தாக’த் தனித்துத்தெரியும் மாடர்ன் குடுமி. அரசு உத்தியோகத்திலோ, பிரைவேட்கம்பெனியிலோ ஹெட் கிளார்க்குக்கு மேல் உயரம் காணாத முகம்!
தெரிந்தவர் யாரோ சொல்லி,என்னைப் பார்க்க வந்ததாகத் தெரிவித்தார்கள்.
வந்த பெண்மணி, “கை, கால் குடைச்சல், இடுப்பு வலி” என்றவுடன், வழக்கமான கேள்விகளுடன், ‘சுகர்’ உண்டா? என்றேன்.
“உண்டு” – தலையாட்டியவாறே, கோபிச் சந்தனத்தைப் பார்த்தார். “கண்ட்ரோல்ல இருக்கு”
“என்ன மருந்து எடுத்துக் கொள்கிறீர்கள்?”
“மருந்தெல்லாம் கிடையாது – நிறுத்தி இரண்டு வருஷம் ஆச்சு”
“ஓ…” ஆச்சரியம் என்னையும் மீறி முகத்தில் சுருக்கங்களாய் விழுந்தது.
“மூணு வர்ஷமா சுகர் நூற்றி சொச்சத்திலேயே இருந்தது – ஏறவும் இல்லே, இறங்கவும் இல்லே”
“சரி, நல்ல கண்ட்ரோல்தானே, பிறகென்ன?”
அம்மணி அய்யாவைப் பார்க்க, அவர் தலையைக் குனிந்துகொண்டார்.
“இவர்தான், இங்கிலீஷ் மருந்தெல்லாம் பழக்கம் ஆயிடும் – சைடுஎஃபெக்டெல்லாம் வரும், நிறுத்திடுன்னார். நிறுத்திட்டேன்.” (ஏனோ,கிணற்றுக் கயிற்றில் அந்தரத்தில் தொங்கும் குடம் நினைவுக்கு வந்துதொலைத்தது!)
“நல்லதுதான் – டயட், வாக்கிங், எக்சர்சைஸ் ன்னு கண்ட்ரோல்ல இருக்கீங்கபோல”
“இல்லே, வேற மருந்து சாப்பிடறேன்”
கோபிச் சந்தன முகத்தில் மருட்சியுடன் ஒரு பிரகாசம்!
“நாவ இலெ, கொய்யா இலெ, மாவிலை, சிறுகுரிஞான் இலெ, ஆவாரம்பூ –எல்லாத்தையும், முந்தின நாள் இரவே கொதிக்கிற தண்ணீல போட்டு, மறுநாள் குடிக்கணும்”
“வேப்ப இலை கெடையாதா?” – நான்.
“ம்..ஹூம், ரொம்ப கசக்கும்!”
“ம்ம்… சில பேர் வெந்தயம் சாப்பிடறாங்களே?”
“அதுவும் உண்டு. நல்ல தண்ணீல ஊற வெச்சு, வெந்தயத்த வெறும்வயத்துலெ அப்படியே சாப்பிடுவேன்!”
”இதெல்லாம் யார் கொடுத்தாங்க?”
”கூகிள் பாத்துதான் சார்” – முதன் முறையாக வாயைத் திறந்தார் கோபிச்சந்தனம்.
“வெரிகுட்! எந்த மருந்தானா என்ன? சுகர் கண்ட்ரோல்ல இருந்தாவே போதும். லேடஸ்ட் ப்ளட் சுகர் என்ன?”
“ப்ளட் டெஸ்டே வேண்டாம்னுட்டார் இவர். இரண்டு வருஷமாச்சு டெஸ்ட்எடுத்து. கேட்டா, அதுதான் ப்ராப்ளம் ஒண்ணும் இல்லையே’ ங்கறார்.இப்போ கை கால் எல்லாம் கொடையறது, ஏதாவது மருந்து எழுதிக்கொடுங்கோ”.
விபரமறிந்த பக்கத்து வீட்டு மாமி, கடிந்துகொண்டு, டாக்டரைப் போய்ப்பாருங்கோ. சர்க்கரையோட விளையாடாதீங்க. எழுத்த வீட்டு மணிமாமாவுக்கு முட்டிக்குக் கீழே காலை எடுத்துட்டா – ஆம்புடேஷன். . அவரும்இப்படித்தான், சுகர இக்னோர் பண்ணினார்” – பயத்தில்வந்திருக்கிறார்கள்.
ஃபாஸ்டிங், போஸ்ட் பிராண்டியல், மூன்று மாத ஆவரேஜ் HbA1C எல்லாம் எழுதிக் கொடுத்து மறுநாள் வரச்சொன்னேன்……
“அதுவரைக்கும் நாவ இலெ, வெந்தயம்……”
”ம்ம், சாப்பிடுங்க, தப்பில்லே – ப்ளட் டெஸ்ட் ரிஸல்ட் பார்த்து முடிவுசெய்துக்கலாம்”
சந்தோஷமாகக் கணவனும், மனைவியும் எழுந்து சென்றார்கள் –
எனதுமூளைக்குள் இரண்டு ஆடுகள் ‘மே.ஏ.ஏ’ என்று கத்துவதைப் போலிருந்தது.
இரண்டு நாள் கழித்து தயங்கியபடியே வந்த இருவரையும் பார்த்த உடனேயே தெரிந்துவிட்டது –
அம்மணியின் இரத்தத்தில் ஒரு ரேஷன்கடையில் உள்ள அளவு சர்க்கரை இருந்தது! (நான் அந்தக்கால ரேஷன் கடையைச் சொன்னேன்!).
இப்போது என்ன செய்வது?
இன்று தொந்திரவு இல்லாத நீரிழிவு நோயை – SYMPTOM FREE DIABETES கட்டுப்படுத்தாவிட்டால், நாளை அதன் விளைவுகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும். இரத்தக் குழாய்களின் மிகச் சிறிய, கடைசி முனைமயிரிழை போன்ற குழாய்கள் பாதிப்பால் உடல் உறுப்புகள் – END ORGANS – செயலிழக்கும். முக்கியமான எல்லா இரத்தக் குழாய்களும் பாதிக்கப்படுவதால், கண்களின் விழித்திரை (பார்வை இழத்தல்), சிறுநீரகங்கள்( கிட்னி ஃபெய்லியர், முடிவு டயாலிசிஸ்), மூளை (ஸ்ட்ரோக் – பக்கவாதம்), வெளி நரம்புகள் (நியூரைடிஸ் – ஊசி குத்துவது, மரத்துப் போவது, சிலநரம்புகள் செயலிழப்பது), இதயம் (ஹார்ட் அட்டாக்) – அனைத்து உறுப்புகளும் தனியாகவோ, சேர்ந்தோ பாதிக்கப் படலாம். இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் ஒவ்வொரு நாளும், சிறிது சிறிதாக இந்த உறுப்புகள் பாதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.
நான் சொல்லி முடித்தபோது, முகத்தில் எந்த மாறுதலும் இன்றி ஒருவரைஒருவர் பார்த்துக் கொண்டனர்.
மருந்துகள், உணவில் சேர்க்க / தவிர்க்க வேண்டியவை, உடற்பயிற்சி, நடைப்பயிற்சி எல்லாம் விபரமாகக் கூறி, அனுப்பி வைத்தேன். எந்தவகை சிகிச்சை எடுத்துக் கொண்டாலும், அவ்வப்போது சுகர் லெவல் மானிட்டர் செய்யவேண்டியதின் அவசியத்தைச் சொன்னேன்.
யூ டியூப், நெட் பார்த்து, வீட்டில் பிரசவம் பார்ப்பதைக் காட்டிலும், இந்தநெக்லிஜென்ஸ் பரவாயில்லையோ என்று தோன்றியது.
உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு அவசியம்தான் – அது SELF MEDICATION TREATMENT வரை செல்வது ஒரு சொஸைடியின் ஆரோக்கியத்துக்கு நல்லது அல்ல!
