சரித்திரம் பேசுகிறது! – யாரோ
ஸ்கந்த குப்தன்
பள்ளியில் சரித்திரப் பாடத்தின் பரீட்சையில் தவறாமல் வரும் கேள்வி!
குப்தசாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு இரண்டு காரணங்களைக் கூறுக. (இரண்டு மதிப்பெண் )
விடை:
- ஸ்கந்தகுப்தனுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த குப்த மன்னர்கள் திறமையற்றவர்களாக இருந்தனர்.
- ஹூணர்கள் என்ற நாடோடி சாதியினரின் தாக்குதல்கள் குப்தராஜ்யத்தை அழிக்க அடிகோலியது.
இரண்டு மதிப்பெண்கள் நிச்சயம்!
உண்மைதான்…அதைத்தான் இந்த இதழில் நாம் காண்போம்..
மனிதனுடைய மண்ணாசை, பொன்னாசை – பல காரியங்களைச் செய்யத் தூண்டுகிறது. அதில் முக்கியமான ஒன்று – மற்றவரிடம் இருக்கும் பொருளை அபகரிப்பது. நாட்டைப் பாதுகாப்பதற்குப் பெரும் செல்வம் தேவைப்படுகிறது. ஒரு நாட்டு மன்னன் மற்ற நாடுமீது படையெடுத்து வென்று அதனால் அடைந்த செல்வத்தால் (கொள்ளைதானே அது?) தன் நாட்டைப் பணக்கார நாடக்குகிறான். மேலும் ஒரு பணக்கார நாட்டைக் கொள்ளையடிக்க அனைவரும் ஆசைப்படுவர். ஆக – சண்டையில்லாமல் ஒரு அரசாங்கம் நடந்தால், அது விரைவில் ஏழை நாடாகி விடுவதற்கு சாத்தியக்கூறுகள் நிறைய உள்ளன!
குமாரகுப்தன் காலம்…
30 வருடம்.
அப்படிப்பட்ட ஓர் அமைதிக்காலம்!
அதாவது செலவுக்காலம்!
புஷ்யமித்திரன் மற்றும் ஹூணர்கள் படையெடுத்தனர் – கொள்ளையடித்தனர். அவர்களைத் துரத்துவதில் பெரும் பணம் செலவாகி- கஜானா காலியாகக் கிடந்தது.
குமாரகுப்தன் இறக்கும்போது குப்தராஜ்யத்தில் நிலை இது …
எல்லாத் தலைமுறைகளிலும் வருவதுபோல்… அன்றும் அரசுரிமைக்கு அடிதடி.
குமாரகுப்தனின் மூத்த மனைவி … தலைமை ராணி- ஆனந்த தேவி.
இளைய ராணிக்குத்தான் முதலில் மகன் பிறந்தான் – ஸ்கந்தன் என்று பெயரிட்டான் – குமாரகுப்தன்.
மூத்த ராணி புகைந்தாள் – தனக்கு மகன் பிறக்கவில்லையே என்று.
ஐந்து வருடம் கழித்து ஆனந்ததேவிக்கு மகன் பிறந்தான்.
பூரகுப்தன் என்று பெயரிட்டனர்.
அன்றிலிருந்து தன் மகன் பூரகுப்தன் குப்த மன்னனாக வர வேண்டி ‘கனவு’ கண்டாள் ஆனந்ததேவி.
சில கனவுகள் சாதிக்கவைக்கிறது!
சில கனவுகள் சதி செய்ய வைக்கிறது!
இதில் ஆனந்ததேவி இரண்டாம் ரகம்.
ஸ்கந்தன் மாவீரனாக வளர்ந்தான்..
குமாரகுப்தன் ஆட்சியில் புஷ்யமித்திரன், ஹூணர்கள் தாக்குதல்களை படை நடத்தி முறியடித்திருந்தான் ஸ்கந்தன்.
ஸ்கந்தன் மக்களிடம் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்தான்.
குமார குப்தனும் ஸ்கந்தனை உயிராகக் கருதியிருந்தான்.
ஸ்கந்த குப்தனை யுவராஜாவாக்கினான்.
ஆனந்ததேவி – பூரகுப்தன் – பொறாமையால் புகைந்தனர்.
கி பி 455:
(ஸ்கந்தகுப்தன் வெள்ளி நாணயம்)
குமாரகுப்தனின் மரணத்திற்குப் பின் ஸ்கந்தகுப்தன் மன்னனானான்.
அவன் ஆட்சிக்காலம் எப்படியிருந்தது?
‘சரித்திரம் பேசுகிறது’- இதை ஒழுங்காகப் படித்து வரும் வாசகர்களே!
சுதர்சனா ஏரி – ஞாபகம் இருக்கிறதா?
‘இந்த மாதிரி கேள்வி கேட்டதால்தான் சரித்திரத்தையே நான் வெறுத்தேன்’ என்று சொல்லும் வாசகர்களே!
பயப்படாமல் மேலே படியுங்கள்..
இனி கேள்வி கேட்டுத் தொந்தரவு செய்யமாட்டேன்!
இந்த சுதர்சனா ஏரி உடைப்பெடுத்தபோது ..அன்று .. சந்திரகுப்த மௌரியன் அதைச் செப்பனிட்டான்…
வேறொரு காலத்தில் இந்த ஏரி உடைப்பெடுத்தபோது… ருத்திரதாமன் அதைச் செப்பனிட்டான்…
இன்று இதே ஏரி உடைப்பெடுத்தபோது… ஸ்கந்தகுப்தன் அதைச் செப்பனிட்டான்…
ஆனந்ததேவி, பூரகுப்தன் இருவரும் – அனுதினமும் – ஸ்கந்தகுப்தனுக்குத் தொந்தரவு கொடுத்து – எவ்வாறேனும் அரசாங்கத்தை அடைய சதி செய்து வந்தனர்.
ஸ்கந்தகுப்தன் மாவீரன் மட்டுமல்ல – பெரும் அறிவாளியும் கூட. வீரத்துடன் விவேகத்தையும் கலந்து தன்னை எதிர்நோக்கியிருக்கும் பிரச்னைகளை அணுகினான்.
ஆனால் பிரச்னைகள்தான் மலை போல வந்தது..
மலைவாசல் வழியாக ஒன்று வந்தது..
இந்தியாவின் வடமேற்குக் கணவாய் – கைபர் கணவாய். அது மலைவாசல் என்று சாண்டில்யனால் அழைக்கப்பட்ட இந்தியாவின் நுழைவு வாசல். அது வழியாக அயல் நாட்டவர் இந்திய அரசுகளுக்கு அளித்த தொல்லைகளின் விபரங்கள் சரித்திரத்தில் பரவிக்கிடக்கிறது.
ஹூணர் என்ற நாடோடிக்கும்பல்!
மின்னல் வேகத் தாக்குதல்..
அட்டூழியங்கள்..
அவர்கள் …
சாரிசாரியாகக் குதிரையில் வந்தனர்..
கிராமங்களை அழித்தனர்..
ஜனங்களைக் கொன்று குவித்தனர்..
தீப்பந்தத்தால் பயிர்களை அழித்தனர்.
சிம்மாசனம் ஏறி ஐந்து வருடத்தில் ஸ்கந்தகுப்தனே படை நடத்தி புருஷபுரம் (இன்றைய பெஷாவர்) அருகில் அவர்களைத் தோற்கடித்துத் துரத்தினான். படையெடுப்பில் தோற்று ஓடிய ஹூணர்கள் – கரையான்போல மீண்டும் படையெடுத்து வந்தனர்.
பத்து வருடங்களில் சிந்து நதிப் பிராந்தியத்தை முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டனர்.
கபீசம் (இன்றைய காபூல்) அவர்கள் வசப்பட்டிருந்தது.
அவர்களில் சிலர் ஹிந்து – கூர்ஜர பெண்களைத் திருமணம் செய்துகொண்டனர்.
(இவர்கள் சந்ததி பின்னாளில் ராஜபுத்திரவம்சமாக வந்தது என்றும் சொல்லப்படுகிறது).
வாழ்க்கையின் பெரும் பகுதியைப் போர்முனையிலே கழித்த ஸ்கந்தகுப்தன்..
நோய்வாய்ப்பட்டான்.
தோள்வலி காட்டி எதிரிகளை நடுங்க வைத்தவன்.
தோள் வலியால் துவண்டான்.
அயோத்தி அரண்மனையிலேயே மருத்துவர்கள் தயவால் கிடக்கவேண்டி வந்தது.
(அந்நாளில் பாடலிபுத்திரம் தலைநகராக இல்லாது …அயோத்தியே தலைநகராக இருந்தது…)
ஹூணர்களுக்குத் தோரமானா என்ற தலைவன் –அரசனாகி – ஹூணர்களுக்கு ஒரு சிறந்த ஆட்சியை அளித்தான். காட்டுமிராண்டிபோல இருந்த படையை ஒழுங்குபடுத்தி, கட்டுப்படுத்தி வலிமைமிக்கதாய் செய்து குப்த ராஜ்யத்தை ஊடுருவி வந்தான். ஹூணர்களின் வழிகளை விட்டு ஹிந்து மன்னர்களைப்போல் நடந்து கொண்டான். மகாராஜா என்ற பெயரையும் சூட்டிக்கொண்டான்.
உறவினர்களின் சதியோ அனுதினமும் ஸ்கந்தகுப்தனை ஆட்டிப் படைத்தது.
மாற்றாந்தாய் ஆனந்ததேவி தோரமானாவுடன் கூட்டு சேர்ந்து ஸ்கந்த குப்தனுக்குத் தலைவலியை அதிகரித்து வந்தாள்.
உள்நாட்டு அமைதி குலைந்தது.
நாட்டின் நிதி நிலைமை மோசமானது.
மன்னன் தங்க நாணயத்தின் மாற்றை 108 லிருந்து 73 ஆகக் குறைத்து விடுகிறான்.
சரித்திரத்தில் முதன் முறையாக பணவீக்கம் (devaluation) செய்த மன்னன் இவன் தானோ?
கஜானாவில் பணமில்லை.
பணவீக்கத்தால் வெளிநாட்டு வர்த்தகமும் குறைந்துபோனது.
அரண்மனைத் தூண்களிலிருந்த தங்கத்தகடுகளையும் உருக்கி நாணயம் செய்யப்பட்டது.
பாரதத்தின் சக்கரவர்த்தி அன்று ஒரு பரதேசி!
சைனியத்திலிருந்த வீரர்களுக்கு சம்பளம் கொடுக்க இயலாமையால் பல வீரர்கள் ஹூணர் படையில் சேர்ந்தனர்.
பொருள் இல்லாதோருக்கு இவ்வுலகம் இல்லை!
ஸ்கந்தகுப்தனுக்கும் நேர் வாரிசு ஒன்றுமில்லை.
தீர்க்கதரிசனம் கொண்ட அவன் மனது சொன்னது:
‘நமது மூதாதையர் இந்த குப்த ராஜ்ஜியத்தை ஸ்தாபித்து வளர்த்துப் பொற்காலமாக்கினர்.
ஏற்கனவே நமது தந்தைக்குக் கூறியதுபோல் என் காலத்திற்குப் பிறகு இந்த குப்தப்பேரரசு மெல்ல அழியுமோ? பூரகுப்தன் என்ன செய்வானோ? எது எப்படி ஆனாலும் எதிர்காலம் நம் கையில் இல்லை. நான் செய்யவேண்டியதை செய்யத்தான் வேண்டும்’.
ஒரு சிறு காட்சி விரிகிறது:
கி பி 467:
இடம்:அயோத்தி அரண்மனை.
மன்னன் பஞ்சணையில் நோயுற்றுக் கிடக்கிறான்.
முதன் மந்திரியை அழைத்து , பூரகுப்தன், ஆனந்த தேவி இருவரையும் வரவழைக்கிறான்.
‘தாயாரே! பூரகுப்தா! நான் அரியணையேறி 12 வருடங்கள் பூர்த்தியாக உள்ளது. எனது வாழ்வு சில நாட்களுக்கு மேல் தாங்காது. நமது முந்தையர் இந்த சாம்ராஜ்யத்தைத் தங்கமாக்கிக் கொழித்தனர். இன்று பலமுனைகளில் இதற்கு சவால் ஏற்பட்டு இருப்பது நீங்கள் அறியாததல்ல. தோரமானா மற்றும் ஹூணர்களை வளரவிட்டால் – குப்தர்கள் கட்டிக்காத்த இப்பொன்னாடு அழிந்து விடும். நீ இந்த ராஜ்யத்தைப் போற்றிப் பாதுகாக்கவேண்டும்.எனக்கு வாரிசு வேறு யாரும் இல்லை . நீதான் அடுத்த மன்னன் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. இருக்கவும் கூடாது. அதனால் நாளையே உனக்கு யுவராஜ்யப் பட்டாபிஷேகம் நடக்கும்’
என்றும் கலங்கிடாத மன்னன் கண்கள் சற்றே கலங்கியது…
‘மகாராஜா! அது என் கடமை.. என்னால் இயன்றதை நான் செய்வேன்’ – பூரகுப்தன் கண்களிலும் கண்ணீர் வார்த்தது..
ஆனந்ததேவியின் கண்கள் முதல் முறையாகப் பொறாமையை விடுத்தது – சோகத்தைக் காட்டியது.. சில கண்மணிகளும் திரண்டன – கல்லுக்குள் ஈரம்..
அவர்களை அனுப்பிவிட்டு – முதல் அமைச்சரிடம்:
‘மந்திரியாரே! என் வாழ்வு முடியும் நாள் நெருங்கிவிட்டது…சமுத்திர குப்தனும் குமாரகுப்தனும் சென்ற வழியில் நான் சென்றேன். என் வழியில் அடுத்த குப்தன் வந்தால் குப்த ராஜ்ஜியம் நிலைக்கலாம். இன்றேல் அழிந்துவிடும். அப்படி அழிவதானால் அதை நான் தடுத்து நிறுத்த முடியாது. என் கடைசி மூச்சுவரை என் கடமையை செய்தாகவேண்டும். இன்னொரு கடமையும் இருக்கிறது. எனது மூதாதையரின் சிறப்பு – மற்றும் என் ஆட்சியின் சோதனைகளும், சாதனைகளும் சரித்திரத்தில் எழுதப்பட வேண்டும். பின்னாளில் ‘சரித்திரம் பேசுகிறது’ என்று எழுதுபவர் யாரோவாக இருந்தாலும் இதுபற்றி எழுத வேண்டும்’
ஒரு சுய சரிதை எழுதினான்…
முதன் முதலாக சரித்திரத்தில் தன் சுயசரிதத்தை ஒரு சிறு கவியாக எழுதிய மன்னன் இவன்தானோ?
பத்தொன்பதே வரிகளில்..
அதை பிடாரியில் (உத்திரப்பிரதேசம்) தூணில் பொறித்தான்..
முதலில் தனது ஆன்றோர்கள் அனைவரையும் அதில் விவரித்தான்.
பின்னர் தன்னைப்பற்றி எழுதுகிறான்..
அதில் ஒரு சில வரிகள்..
….
ஆட்சியில்…
முழுமை அடைந்து விட்டோம்!
என் தந்தையாரின் பாதங்கள்..அது
விரிந்து வளரும் குளத்து அல்லிகள் போன்றது..அது போல்
விரிந்து வளர்ந்தது அவர் புகழ் இந்த அகிலத்தில் ..
இந்த அல்லிகள் நிரம்பிய குளத்திலே ரீங்காரமிட்டு சுற்றி வரும் தேனி நான்!
இந்தத் தேனி..
கொடுக்கு கொண்டது!
எதிரிகளைக் கொட்டும்..
நான்..
பெரும் புகழ் உடையவன் ஆனவன்.
(ஸ்கந்தகுப்தனில் பிடாரி (உத்திரப்பிரதேசம்) தூண் கல்வெட்டு)
வாசகர்களே! ஒரு நாடு சுபிக்ஷமாக இருக்கும்போது அதை ஆள்பதற்குப் பெரிய திறமைசாலியான அரசன் தேவையில்லை. நாட்டிற்குப் பெரும் துன்பம் வரும்போது அதைப் போக்கி ஆள்பவனைத்தான் சரித்திரம் வெகுவாக மதிக்கிறது. பின்னாளில் எத்தனையோஅமெரிக்க அதிபர்கள் வந்தாலும் – நாடு கண்ட சோதனைகளை எதிர்கொண்டு- வென்று – புகழ்பெற்றான் ஆப்ரகாம் லிங்கன்! அதே போல்தான் நமது ஸ்கந்தகுப்தன். பன்னிரண்டு வருடங்களில் பல விதமான இடையூறுகளைத் தகர்த்தெறிந்து சரித்திரத்தில் நிற்கிறான். அதனால்தான் சாண்டில்யன் குப்தர் காலத்தில் சரித்திரம் எழுத நினைத்தபோது – ஸ்கந்தகுப்தனால் வசீகரிக்கப்பட்டு- மலைவாசல் எழுதினாரோ?
இப்படி ஒரு பொற்காலம் இனி இந்த நாடு கண்டதா?
சரித்திரம் தேடப்படும்…
விரைவில்…


