Image result for மேற்குத்தொடர்ச்சிமலைRelated image

 

Image result for மேற்குத்தொடர்ச்சிமலை

தமிழில் ஒரு மைல்கல் படம்! பார்க்கத் தவறாதீர்கள்!

முதலில் இந்தத் திரைப்படத்தைத் தயாரித்த நடிகர் விஜய் சேதுபதிக்கு அன்பின் நன்றி.
சினிமாவில் சம்பாதித்ததை நல்ல சினிமா எடுக்கும் கனவுகளோடு அலையும் பல புதிய இயக்குநர்களுக்கு அவர் வாழ்வு கொடுக்கட்டும்.

மழைகொட்டிக்கொண்டிருக்கிற விடியலில் ரெங்கசாமி மலைகிராமத்திற்கு வேலைக்குக் கிளம்புகிறபோதே நாமும் அவனுடன் கிளம்பிவிடுகிறோம்.
தேய்ந்த அந்த ஹவாய் செருப்புக்களுடன் அவன் நடக்கிறபோது என்றும் தேயாத ஒரு கனவொன்றை அவன் சுமந்து செல்கிறான் விவசாயம் செய்து பிழைத்துக்கொள்ள அவனுக்கென்று ஒரு சிறிய இடம்.
வாங்க வேண்டுமென்பதே அந்தக்கனவு.

உழைப்பை உறிஞ்சி அவனுக்குக் கிடைக்கப்பெற்ற அந்த நிலமே அவனை தன் காவல்காரனாக்கிக் கொள்வது ஒரு துயரம்.

அதற்காக இந்தப்படம் துயரத்தையும்,வலியையும் மட்டுமே சொல்லி அயர்வை ஏற்படுத்தவில்லை.

நிஜத்தில் போக்குவரத்தில்லா மலைகிராமங்களில் பயணிக்கும்போது சந்திக்கும் மனிதர்களை ,இரண்டு மாநில எல்லைகளில் வாழும் அம்மக்களின் புரிந்துணர்வை ,தோட்டத்தொழிலாளர்களின் உழைப்பை அட்டை போல் உறிஞ்சும் முதலாளிகள் இருப்பினும் ,நல்ல “கங்காணியை” கம்யூனிஸம் பேசினாலும் நிஜ பரிவுடன் அத்தொழிலாளிகளுக்காக நடந்து கொண்டிருக்கும் ” சாக்கோ”வை , கொஞ்சமும் சினிமாத்தனமின்றி காண்பிக்கிறது. இயக்குனர் “லெனின் பாரதிக்கு” வாழ்த்துகள்.

யதேச்சையாக தேநீர்க்கடையில் நிச்சயிக்கப்படும் ரெங்கசாமியின் திருமணம், தான் வாங்க இருக்கும் நிலத்தை தன் மகனுக்கு அடையாளம் காட்ட வேட்டியை மரத்தில் கட்டிவிட்டு வரும் தகப்பன்.எல்லாம் யதார்த்தம்.

உரியடியில் வழுக்குமரத்தில் ஏறி சறுக்கிக்கொண்டே இருப்பதுமாதிரிதான் நம் எல்லோரையுமே ,நம் சிறிய/ பெரிய கனவுகளை அடைந்து விட முடியாமல் நம் வாழ்க்கை திசை திருப்பி எங்கெங்கோ கொண்டு நிறுத்துகிறது. ஆனாலும் எப்படியோ சமரசமோ ,சமாதானமோ செய்து கொண்டு வாழ்க்கையை நாம் ஓட்டி விடுகிறமாதிரி ,உழைப்பை தவிர வேறொன்றறியாத மக்களால் இருக்க முடிவதில்லை என்பது எத்தனை வருத்தம் தருவது அதைவிட அப்படி இருப்பவர்கள் எப்படியாவது முன்னுக்கு வந்துவிட மாட்டார்களா என நாம் ஏங்கி தவிக்க நேரிடுவதும்.

ரெங்கசாமியின் சேமிப்பில் வாங்கப்பட்ட ஏலக்காய் மூட்டை பிரிந்து உருண்டு சரிகிறபோது மனம் பதைபதைப்பதெல்லாம் அதனால்தானோ ?

கட்சி சந்தா கொடுக்க மரத்தின் மேலிருந்து இறங்கி வருபவனை காட்டுகிறஅந்தக்காட்சி ஒன்று போதும் தேனி ஈஸ்வரை பாராட்ட.

வெகுநாட்களுக்குப்பிறகு மனதை மீட்டும் இளையராஜாவின் பின்னணி இசை. நானும் இந்தப்படத்திலொரு பாத்திரம் என்கிறது.

ரெங்கசாமியின் வீட்டில் பளபளவென்று தேய்த்து வைக்கப்பட்டிருக்கும் அந்தப் பித்தளை தவலையும் அதன் மேல் வைத்திருக்கும் எவர்சில்வர் சொம்பும் ஆஹா!

படத்தில் வாழ்ந்திருக்கும் அத்தனை பேருமே அருமையான தேர்வு.

எனக்கு இந்தப்படம் மிகவும் பிடித்திருந்ததற்குக்காரணமென்னவெனில்,நானும் இப்படிபட்ட கிராமம் ஒன்றிற்கு பணிநிமித்தம் நடந்து சென்றிருக்கிறேன்.” இந்தா ஊர் வந்துரும் ஊர் வந்துரும் ” என என்னை எட்டு கிலோமீட்டர் நடக்க வைத்திருக்கிறார்கள் .வழியில் அவர்கள் கும்பிடும் சிறுதெய்வம் போலொரு தெய்வத்திடம் நானும் பிரார்த்தனை செய்திருக்கிறேன்.
நடை பழகியபிறகு அவ்வூர் மக்களுக்கு தகவல்களைக் கொண்டு செல்பவளாக இருந்திருக்கிறேன்.

ஒரு பாய்,ட்ரங்க் பெட்டி ,இரண்டு மூன்று தாம்பாளங்கள் ஒரு குடம் கொஞ்சம் பாத்திரங்கள் என திருமணம் முடித்து ஊருக்குத் திரும்புபவர்களுடன் நடந்திருக்கிறேன்.விடைபெறும்போது அதிரச தூக்கிலிருந்து எனக்கும் கொடுத்திருக்கிறார்கள்.

மற்றொரு கிராமத்தில் இரவானால் கரும்புக்காட்டுக்குள் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்ததை போகிற வருகிறவர்களிடம் ” தண்ணீ தேடி வருதுங்க அதுங்களும் பாவம் எங்க போவும்” என சொல்பவர்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.

கழுதைகள் மட்டும் சுமைதூக்கிச்செல்லும் ஊரில் கயிற்றுக்கட்டிலில் உடம்புக்கு முடியாதவரை ஊர்சனங்களே சேர்ந்து ஓட்டமும் நடையுமாய் வந்து ஆஸ்பத்திரியில் சேர்த்துப் பிழைக்க வைத்ததைப் பார்த்திருக்கிறேன்.

அதனால்தானோ என்னவோ இந்தப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் என் கண்களை விட்டுப் போகமறுக்கிறது.

மிகுந்த அன்புடன் தரப்படும் இனிப்பின் ஒரு விள்ளலைப் பெற்றுக்கொள்கிற மகிழ்வுடன் .

வீட்டிற்கு வந்தும் ” கிறுக்குக் கிழவியின் ” ஓலமும்,ரத்தம் கக்கி சாகும் வனகாளியின் இருமலும், கைப்பையும் குடையுமாய் தொழிலாளர்களுக்காக நடந்து திரிந்து விரக்தியுறும் ” சாக்கோவும்” நினைவில்.