நிலவு சூடும் அழகும் – கங்கை
நீர் மலிந்த சடையும்
உலவும் அரவு புனையும் – எகின்
உறுதி வாய்ந்த உடலும்
அலகிலாத கருணை -பொழியும்
அமுத வதனம் ஐந்தும்
கலைகளான பரமே – என்றன்
கவிதையான சிவமே !
தாதையாகி நின்றாய் – நீயே
தாயுமாகி வந்தாய் !
வேத வடிவமானாய் – என்றும்
விரியும் அண்டமானாய் !
ஜோதி வடிவமானாய் – வானில்
சுடரும் கோள்களானாய்
நாதமான பரமே -என்னுள்
நானுமான சிவமே
அஞ்சு நெஞ்சினோடு – சூழும்
அசுரர் தேவர் கூத்தம்
தஞ்சமென்று நின்றன் – கமலத்
தாள்பணிந்த வேளை
‘அஞ்சல் அஞ்சல்’ என்றே – அங்கே
ஆலஹாலம் என்றோர்
நஞ்சை உண்ட பரமே- என்னுள்
நடனமாடும் சிவமே!
பாடுகின்ற நாவில் – பனுவல்
பரிமளிக்க வருவாய்!
தேடுகின்ற நெஞ்சில் – பக்தித்
தேன் துளிக்க வைப்பாய் !
ஏடு தந்த நின்மேல் -பாடல்
எழுத வைத்துகந்தாய்
காடு நாடும் பரமே – உமையாள்
காதலிக்கும் சிவமே!

