dr1

Dr.Eric Hodgings – ‘Episode’ என்னும் தன் சுயசரிதையில், தனக்கு திடீரென்று ஸ்ட்ரோக் வருவதை விவரித்திருப்பார் – சில நொடிகளில் மனிதனாக இருந்த அவர் ஒரு ‘கேஸாக’ (பேஷண்டாக) மாறியதைச் சொல்லியிருப்பார். பொதுவாகவே, மருத்துவர்கள், எழுத்தாளர்களாக மாறும்போது (இது மாறி நிகழும்போது, பெரும் விபத்தாகிறது!), மனித வாழ்க்கை குறித்த தத்துவார்த்த விபரங்கள் இயல்பாகவே வெளிப்படுகின்றன. அதுவும், அவர்களே நோயின் பிடியில் சிக்கும்போது பிறப்பு, இறப்புபற்றிய பார்வை புதிய பரிமாணம் பெறுகிறது.

சமீபத்தில் நான்வாசித்த “WHEN BREATH BECOMES AIR” புத்தகம் இந்த வகையில் ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தந்தது. எழுதியவர் டாக்டர் பால் கலாநிதி (DR.PAUL KALANITHI).  நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் மற்றும் எழுத்தாளர்.  ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்தவர்.  கேம்பிரிஜ் பல்கலையில் ‘விஞ்ஞானம், மருத்துவம் – சரித்திரமும், தத்துவார்த்த பார்வைகளும்’ பற்றி ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர். யேல் பல்கலைக்கழகத்தில் இளநிலை மருத்துவமும், ஸ்டான்ஃபோர்டில் நியூரோ சர்ஜிகல் ரெசிடெண்ட் மருத்துவப் பணியும், நியூரோ ஸயன்ஸில் மேற்படிப்பும் படித்து மருத்துவர் ஆனவர். ‘அமெரிக்கன் அகாதமி ஆஃப் நியூரோசர்ஜரி’யின் நரம்பியல் அறுவை சிகிச்சை ஆராய்ச்சிக்கான உயரிய விருதினைப் பெற்றவர். இதெல்லாம் அவரது 36 வயதுக்குள் சாதித்தவை!

“எமர்ஜென்சி” என்று சொன்னால் ஒப்புக்கொள்பவர்கள், “நான் எழுதப் போகிறேன்” என்றால், வேறுவிதமாகப் பார்க்கிறார்கள் – ‘வார்த்தைகளுக்கு இடையேயான மெளனங்கள்’ இவரது இலக்கியப் பார்வையை சொல்கின்றன. பால் தனது பேனாவிலிருந்து வார்த்தைகளைத் தங்க இழைகளாகப் பின்னியிருக்கிறார்” – என்கிறார் எழுத்தாள மருத்துவர் ஆபிரகாம் வர்கீஸ் தனது அணிந்துரையில்!

தந்தை கிருத்துவர் (இதய நோய் மருத்துவர்), தாய் இந்து – தென்னிந்தியாவில் பல எதிர்ப்புகளுக்கிடையே திருமணம் செய்துகொண்டு, நியூயார்க் வந்துவிடுகிறார்கள் பாலின் பெற்றோர்கள். அரிசோனா பாலைவனம் அருகில் ஒரு சிறு ஊரில் தன் இளமைக் கால நாட்களையும், அம்மா வாங்கிக்கொடுத்த புத்தகங்களையும், லாஸ்வேகஸில் படிப்புக்காக அம்மா எடுத்துகொண்ட முயற்சிகளையும் சுவையாக விவரிக்கிறார். புத்தகம் படிப்பதும், இலக்கியத்தில் ஈடுபாடும் அம்மாவினாலே வந்தது என்று நெகிழ்ச்சியுடன் எழுதுகிறார்.

பல புத்தகங்களைப் படித்து, மனித மனங்கள் எப்படி மூளையின் செயல்பாடுகளால் மாற்றங்கள் அடைகின்றன என வியந்து, இலக்கியம் மற்றும் நரம்பியல் துறைகளில் விருப்பம் கொள்கிறார். “இலக்கியங்கள் மனித மனங்களை விவரிக்கின்றன. மூளையின் செயல்பாடுகளையும், கூறுகளையும் சொல்வது நரம்பியல். இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பு சுவையானது. எலியட்ஸின் உருவகங்கள், என் எழுத்துக்களில் வழிவதை நான் உணர்ந்தேன்” என்கிறார் பால்!

மலை உச்சியில் ஒரு காலைப் பொழுதினை – கிழக்கே வெளுப்பும், மேற்கே முந்தைய இரவின் கருப்பும் – விவரிக்கும்போது பால் என்னும் இலக்கியவாதி தெரிகிறார். இரண்டு வருட இலக்கிய, தத்துவம் சார்ந்த படிப்பு வாழ்வின் அர்த்தத்தை விளக்கினாலும், மருத்துவம் அவரை ஈர்க்கிறது – நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவம் அவரை அரவணைத்துக்கொள்ளுகிறது! தன் மாமா, தந்தை, அண்ணன் எல்லோரும் மருத்துவர்கள் – கலை, இலக்கியம் எல்லாம் மருத்துவர்களால்தான் நன்கு புரிந்து கொள்ளமுடியும் என்று நரம்பியல் படிக்க முடிவெடுக்கிறார் பால்!

இடையில் ஒரு வருடம் விஞ்ஞானம்,மருத்துவத்தின் வரலாறு மற்றும் தத்துவங்களைப் படிக்கிறார்! பிறப்பு, இறப்பு, வாழ்கை இவற்றின் சூட்சுமம் இவரது மருத்துவ வாழ்க்கையில், நோய்களையும், நோயாளிகளையும், உடனிருந்து கவனித்துக் கொள்கின்றவர்களையும் அவர்கள் பார்வையில் உணர்ந்துகொள்ள உதவியதாக எழுதுகிறார்.

மருத்துவ மாணவனாக அவரது அனுபவங்களை மிகவும் மனித நேயத்துடனும், சுவாரஸ்யத்துடனும் எழுதிச்செல்கிறார்! அனாடமி பயில உதவும் ‘கேடாவர்’களைப் “பிணமல்ல – கொடையாளர்” என்கிறார். மூளையில் காயம்பட்டு, தன் சுய நினைவுகளை இழந்து வாழும் நோயாளிகளைப் புறக்கணிக்கும் சொந்தங்களைச் சாடுகிறார். ‘இவர்கள் இப்படி வாழ்வதைவிட இறப்பதேமேல்’ என்று சொல்லும் சீனியர் மருத்துவரைப் பார்த்து வருந்துகிறார்.

பல நோயாளிகளின் வினோதமான அனுபவங்கள், நரம்பியல் ரெஸிடென்சியில் மிரண்டு ஒடும் மருத்துவர்கள் – இவரது எழுத்தில் நம்மை வசீகரிக்கின்றன.

மருத்துவத்துறையில் எல்லாம் கற்று, நரம்பியல் அறுவைச் சிகிச்சையில் சிறப்பாகச் செயல்படத் துவங்கும்போது, வாழ்வின் துயரமான செய்தியை – அவரே விரும்பாத ஒன்றை – அறிகிறார். அவருக்கு “நுரையீரல் புற்றுநோய்” வந்திருப்பதை மிகுந்த சோகத்துடன் ஏற்றுக்கொள்கிறார். அதுவரையிலும் மருத்துவராக இயங்கிவந்தவர், தானே ஒரு பேஷண்டாக மாறிவிடும்போது – அந்த அறைகள், வியாதி குறித்த விவாதங்கள், நர்சுகள், சீனியர், ஜூனியர் மருத்துவர்கள், எதிர்பார்ப்புகள் – எல்லாமே மாறிவிடுவதை விவரிக்கிறார்.

ஏர்போர்ட்டில், வலியில் சுருண்டு படுக்கும்போது, ஒரு சிப்பந்தி வந்து, ‘இங்கே படுக்கக் கூடாது’ என்று சொல்லும்போது, பதில் ஏதும் சொல்லாமல், சிரமத்துடன் எழுந்து வெளியேறுவதைப் படிக்கும் எவருக்கும் மனம் கலங்கும். மருத்துவமனையில் கீமோதெரபி, மருந்துகளினால் உபாதைகள், சக மருத்துவர்கள் தவறும்போது ஏதும் செய்யமுடியாத இயலாமை எல்லாம் இதயத்தைக் கனமாக்கும் – “ஒவ்வொருமுறை கீமோதெரபி முடிந்தபிறகும், வாயில் போட்ட எல்லாம் கடல்நீரைப்போல் உப்பு கரிக்கும் – சாப்பாடு பிடிக்காது. எழுத வேண்டியவை, படிக்க வேண்டியவை இருந்தாலும், மனதில் பிடிப்பின்றி, ஏதும் செய்ய முடியாது” என்கிறார்.

டாக்டர் மனைவி, லூசி, அளிக்கும் சப்போர்ட், தைரியம், அன்பு, கரிசனம் ஒவ்வொரு நிலையிலும் அவரது எழுத்தில் பிரதிபலிக்கிறது. நோய் கண்டுபிடித்தது முதல், கீமோதெராபி கொடுக்கும்போதும், எப்போதும் முடிவு வந்து விடக்கூடும் என்னும் நிலையிலும் லூசியின் பங்களிப்பு அளவிட முடியாதது – கையில் எட்டு மாதக் குழந்தை, உயிருக்குப் போராடும் அன்புக் கணவன் – லூசியின் வாழ்க்கை, புனைவுகளைவிடவும் சோகம் நிறைந்தது.

தன் இறப்பை அறிந்தும், எதிர்பார்த்தும் இருப்பதற்கு ஓர் மனஉறுதி வேண்டும். உயிருடன் இருக்கப்போகும் நாட்களை எப்படி உபயோகமாகவும், அர்த்தமுடனும் கழிப்பது என்று திட்டமிட்டு வாழ்வது முடியுமா?  இவரால் முடிந்திருக்கிறது. தன் சுய சரிதையை எழுதுவதற்கும், தன் மறைவுக்குப் பிறகானாலும், அது புத்தகமாக வரவேண்டும் – தன் அன்பு மகள் தன்னைப்பற்றி அறிந்துகொள்ளவும், தன் வாசகர்கள் தன் எழுத்தைப் படிப்பதற்கும் – என்பதற்காக அவர் காட்டிய முனைப்பு வியக்க வைக்கிறது.

வாழ்க்கையை அனுபவிக்க ஆரம்பிக்கும் வேளையில், அவரது போராட்டம் முடிவுக்கு வருகிறது – மார்ச் 2015 ல் பால் இறந்து விடுகிறார் – யாரும் எதிர்பார்க்காத ஒரு நொடியில் மூச்சை நிறுத்தி அமைதியாகிறார்.

இறுதி நாட்களையும், இறந்தபிறகு நடந்தவைகளையும், டாக்டர் பாலின் விருப்பப்படியே அவர் மனைவி லூசி எழுதி, புத்தகத்தை நிறைவுசெய்து வெளியிடுகிறார். (நன்றி சொல்லும் போது, ‘எழுத்தாளர் என்பவர் யார், ஏன் எழுதுகிறார்கள்’ என்பதைத் தான் உணர்ந்து கொண்டதாகக் குறிப்பிடுகிறார் லூசி).

வாழ்க்கையின் நிரந்தரமின்மையை,  இறப்பை எதிர்கொள்ளவேண்டிய வகையை இப்புத்தகம் தெளிவாகச் சொல்கிறது. எல்லோரும்,  குறிப்பாக மருத்துவர்கள், இப்புத்தகத்தை வாசிக்க வேண்டும்.