
சரிதானோ….!
தர்ம ஆஸ்பத்திரிகள் நிறுவி நடத்திவரும் அந்த மடத்தின் குருஜியிடம், ஆஸ்பத்திரி விவரங்களைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். என் பத்து வயது மகள் மிதிலாவும் கூட இருந்தாள்.
ஏதோ யோசித்துக்கொண்டே நாங்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த மிதிலா திடீரென்று,
‘ குருஜி.. நாம் இந்த ஜன்மத்தில் நோய்களும், நொடியும் வந்து படும் அவஸ்தைகள் பூர்வ ஜன்ம கர்மா – பாவங்களின் பயன்.. அதனாலே எல்லோரும் நல்லதையே நினையுங்கள்.. நல்லதையே செய்யுங்கள்னு ஒவ்வொரு சொற்பொழிவிலும் சொல்றீங்க.. அப்படியிருக்கும்போது, மக்களுக்கு நோய் வந்தால் அவர்களுக்குச் சிகிச்சையளித்துக் காப்பாத்தி அனுப்பறீங்க.. அவங்க பூர்வ ஜன்ம பாவக் கணக்கு முடியாம, கொஞ்சநாளைக்குப் பிறகு மறுபடியும் நோய்வாய்ப்பட்டு அவதிப்படறாங்க… எதுக்கு இந்த இன்ஸ்டால்மெண்ட் அவஸ்தை.
அதனாலே அவங்க நோய்வாய்ப்பட்டா பூர்வ ஜன்ம பாவங்களின் பலனை முழுதுமாக அனுபவிக்கட்டும்னு சிகிச்சையளிக்காம விட்டுட்டீங்கன்னா அவங்க பூர்வ ஜன்ம பாவத்தின் பலனை முழுமையா ஒரேயடியா அனுபவிச்சிட்டு, எஞ்சிய வாழ்க்கையை நிம்மதியாக கழிக்கலாமே…
அதனாலே எதற்கு இவ்வளவு செலவு செய்து ஆஸ்பத்திரிகள், டாக்டர்கள், மருந்துகள்…..!’ என்றாள்.
விக்கித்துப்போய் உட்கார்ந்திருந்தேன் நான்… அவளையே வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்த குருஜியின் முகத்தில் ஈயாடவில்லை…!
அவள் சொல்வது சரிதானோ..!
