
எளிமையும் இனிமையும் கருத்தும் நிறைந்த பாடல்கள் பல எழுதிப் பிரபலமானவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்.
அவரது கல்யாணப்பரிசு படப்பாடலை இம்மாத திரைக்கவிதையாகத் தேர்ந்தெடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
1959 இல் வெளியான படப்பாடல் இது.
ஒவ்வொரு வருடமும் தீபாவளியன்று ரேடியோவில் – டி வி யில் இந்தத் தீபாவளிப் பாடல் ஒளி பரப்பாமல் தீபாவளியே நிறைவு ஆகாது.
கேப்பு, மத்தாப்புக்களை வைத்து ‘உன்னைக் கண்டு நான் ஆட’ என்று இனிமையான பாடலைத் தந்திருக்கிறார் பட்டுக்கோட்டையார்!
அதே மெட்டில் சோகம் இழையோடும் ‘ உன்னைக் கண்டு நான் வாட’ என்று வரிகளை மாற்றி அமைத்திருப்பார்.
ஏ.எம்.ராஜாவின் இசையில் சுசீலா/ராஜாவின் குரல்களில் பாடலும் இசையும் காதில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கும்.
படம் : கல்யாணப் பரிசு
பாடல் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இசை : ஏ.எம்.ராஜா

ஆனந்தம்
உன்னக் கண்டு நானாட
என்னைக் கண்டு நீ ஆட
உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து உல்லாசம் கலந்து
உறவாடும் நேரமடா…
உறவாடும் நேரமடா…
கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா
கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா
எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன்
எனக்கு இனி நீ என்னென்ன தருவாய்
வல்லமை சேர நல்லவனாக
வளர்ந்தாலே போதுமடா..
வளர்ந்தாலே போதுமடா..
சித்திரப் பூப்போலே சிதறும் மத்தாப்பு
தீயெதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு
முத்திரைப் பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு
முகமோ மலரோ இது என்ன ரசிப்பு
மின்னொளி வீசும் உன் எழில் கண்டால்
வேறேன்ன வேண்டுமடா…
வேறேன்ன வேண்டுமடா…
(சோகம்)

உன்னக் கண்டு நான் வாட
என்னைக் கண்டு நீ வாட
கண்ணீரும் கதை சொல்லும் தீபாவளி
ஊரெங்கும் மணக்கும் ஆனந்தம் நமக்கு
காணாத தூரமடா காணாத தூரமடா
நெஞ்சமும் கனலாகி நீராகும் போது
நிம்மதி என் வாழ்வில் இனியேது
கொஞ்சிடும் மொழிகேட்டு மகிழ்ந்தவள் எங்கே
குலத்தின் விளக்காய் திகழ்ந்தவள் எங்கே
கண்ணுக்குள் நடந்த காட்சிகள் எல்லாம்
கனவாகிப் போனதடா கனவாகிப் போனதடா
ஆசைக்கு அணைபோட்ட அறிவான நங்கை
அன்புக்குப் பொருள் சொன்ன அருள் மங்கை
பாசத்தின் சுமையோடு பறந்து சென்றாளே
பழகும் உனையும் மறந்து சென்றாளே
கண்டதும் நினைவில் கொண்டதும் முடிவில்
கதையாகிப் போனதடா கதையாகிப் போனதடா
