ஆற்றோரக் கல்லறை !

ஆற்றோரம், ஆற்றோரம் குளிரெ டுக்க
ஆராரோ,ஆராரோ பாட்டி சைக்கும்
காற்றேநீ, காற்றேநீ மெதுவாய்ப் பாடு,
கண்மணியை, கண்மணியை எழுப்பி டாதே.
தோற்றோட , தோற்றோடச் செய்யும் துன்பம்
தூக்கத்தில், தூக்கத்தில் விட்டுப் போனாள்.
நேற்றேநான், நேற்றேநான் போன போது
நெருஞ்சிப்பூ, நெருஞ்சிப்பூ விரியக் கண்டேன்.
நெருஞ்சிப்பூ, நெருஞ்சிப்பூ விரிந்த போது
நெஞ்சத்தாள் ,நெஞ்சத்தாள் சிரிக்கக் கண்டேன்.
கருஞ்சிறகு, கருஞ்சிறகுக் குயிலின் பாட்டில்
காதலியின், காதலியின் குரலைக் கேட்டேன்.
அருஞ்செக்கர், அருஞ்செக்கர் ஒளிரும் வானில்
அவள்சேலை, அவள்சேலை மிளிரக் கண்டேன்.
கருஞ்சிவப்பு கருஞ்சிவப்புக் கல்ல றையில்
காய்ந்தமலர், காய்ந்தமலர் ஆமோ காதல்?
காய்ந்தமலர், காய்ந்தமலர் ஆவ தற்கோ
காலமெலாம், காலமெலாம் காத லித்தோம் ?
சாய்ந்தமனம், சாய்ந்தமனம் ஓயும் மட்டும்
சருகாகி, சருகாகிக் காயும். மட்டும்,
வேய்ந்தவுடல், வேய்ந்தவுடல் சாயும் மட்டும்
வேரற்று, வேரற்று மாயும் மட்டும்,
ஓய்ந்திடுமோ,ஓய்ந்திடுமோ உண்மைக் காதல் ?
உயிர்பிரிந்தால்,உயிர்பிரிந்தால் சேர்வோம் மீண்டும்!
— தில்லைவேந்தன்

miga arumaiya negizhchiyaana kavidhai…
LikeLike