
ஞாயிற்றுக்கிழமை. காலை எட்டுமணி.
வாசற்கதவு தட்டும் சத்தம் கேட்டது. உள்அறையில் பேப்பர் படித்துக்கொண்டிருந்த சிவஞானம் மெதுவாகச்சென்று கதவைத் திறந்தான்.
வாசலில் மூன்று காலேஜ் பையன்கள் நின்றிருந்தனர்.
“ஸார்.. சிவஞானம் என்பது..” என்றான் ஒருவன் தன் கையில் வைத்திருந்த பேப்பரைப் பார்த்தபடியே.
“ஆமாம்.. நான்தான் சிவஞானம்.. என்ன வேணும்..”
“ஸார்.. நம்ம கிருஷ்ணபுரம் தொகுதியிலே இன்னும் ரெண்டுமாசத்திலே இடைத்தேர்தல் வருது. நாங்க மாரி அண்ணன் கட்சிக்காரங்க.. அவர் இந்த எலக்ஷன்லே போட்டியிடறாரு..” என்றான் இரண்டாவது வாலிபன்.
“ஸார்.. உங்க வீட்டிலே மொத்தம் நாலு ஓட்டுக்கள் இருக்கு..நீங்க எங்க அன்பளிப்பைப் பெற்றுக்கொண்டு, எல்லோரும் நிச்சயமா மாரி அண்ணனுக்கு ஓட்டுப்போடணும்” என்றான் முதலாமவன்.
மூன்றாவது வாலிபன் தான் கொண்டுவந்த பையிலிருந்து நாலு கவர்களை எடுத்து சிவஞானத்திடம் கொடுத்தான்.
“என்னப்பா இது..? எலகஷனுக்கு இன்னும் ரெண்டுமாசம் இருக்கே… அதுக்குள்ளே என்ன இதெல்லாம்..” என்றபடியே அந்தக் கவர்களை வாங்கிக்கொண்டான் சிவஞானம்.
“நீங்க என்ன ஸார்.. பேப்பரே படிக்கிறதில்லையா..? இப்பல்லாம் எலக்ஷன் அதிகாரிகள் கெடுபிடி ஜாஸ்தியாயிருக்கு..முன்னேயெல்லாம் எலக்ஷனுக்குப் பத்துப் பதினஞ்சுநாள் முன்னிருந்து கெடுபிடிபண்ண ஆரம்பிப்பாங்க.. இந்தத்தடவை ஒரு மாதம் முன்பிருந்தே ஸ்ட்ரிக்டா மானிடர்பண்ண ஆரம்பிக்கப்போறாங்களாம்.. அதனாலேதான் நாங்க கொஞ்சம் முன்னாலேயே எங்க வேலையை ஆரம்பிச்சுட்டோம்.. மறந்துடாதீங்க ஸார்.. உங்க வீட்டு நாலு ஓட்டுக்களும் எங்க மாரிஅண்ணனுக்கு வந்துடணும்.. தாங்க் யூ ஸார்..” என்றபடியே அடுத்த வீட்டிற்கு நகர்ந்தார்கள்.
சிவஞானம் கதவைச் சாத்திவிட்டு உள்ளேவந்து கவர்களைப் பிரித்துப்பார்த்தான். ஒவ்வொரு கவரிலும் இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் இருந்தன.
விட்ட இடத்திலிருந்து பேப்பரைப் படிக்கஆரம்பித்தான்.
காலை பத்துமணி. பேப்பரையெல்லாம் படித்து முடித்துவிட்டுக் குளிக்கலாம் என்று எழுந்தான்.
மீண்டும் வாசற்கதவு தட்டும் சத்தம்.
போய்க் கதவைத் திறந்தான். வயது முப்பதிலிருந்து நாற்பதுக்குள் இருக்கும். மூன்று இல்லத்தரசிகள் நின்றிருந்தனர்.
“ஸார் நம்ம இடைத்தேர்தல்லே குருசரண் ஸார் போட்டியிடப்போறார். உங்களுக்கு அவரைப்பற்றி நன்றாகத் தெரியும்.
பெரிய சோஷியல் வர்கர். நம்ம ஜனங்களுக்காகக் குரல்கொடுப்பவர். உங்க வீட்டிலே உள்ள நாலு ஓட்டுக்களையும் அவருக்கே போடணும். எங்களுடைய சிறிய அன்பளிப்பு.. ” என்றாள் ஒரு இல்லத்தரசி.
இரண்டாமவள் தன் கையில் வைத்திருந்த லிஸ்டைப் பார்த்தபடியே நாலு கவர்களை எடுத்து நீட்டினாள்.
“தாங்க் யூ ஸார்.” என்று அவர்கள் விடைபெற்றுச் சென்றபின் கதவைச் சாத்திவிட்டு உள்ளே வந்தான் சிவஞானம். கவரைப் பிரித்துப்பார்த்தான். ஒவ்வொரு கவரிலும் மூன்று ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் இருந்தன.
இன்னிக்கு என்ன..! லக்ஷ்மிதேவி கண்ணை நன்றாகத் திறந்துபார்த்து அருள்பாலிக்கிறாளா..! கவர் கவராக வரவு..ஒருவேளை மூன்றாவது வேட்பாளர் தொண்டர்களும் இன்னிக்கே வருவார்களோ..?
நண்பகல் பன்னிரண்டுமணி.
மீண்டும் வாசற்கதவு தட்டும் சத்தம். மீண்டும் தொண்டர்கள்.
“ஸார்.. நாங்க சுந்தரம் ஐயாவுடைய கட்சித் தொண்டர்கள். உங்கள் வீட்டு நாலு ஓட்டுக்களையும் அவருக்கே போடவேண்டும். எங்களுடைய அன்பளிப்பு..” என்று நான்கு கவர்களைக் கொடுத்துவிட்டுச் சென்றனர்.
ஒவ்வொரு கவரிலும் நாலு ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் இருந்தன.
அவற்றைப்பார்த்து மெதுவாகச் சிரித்தபடியே, கைபேசியை எடுத்து சில நம்பர்களை அழுத்தினான் சிவஞானம்.
“யாரு.. குமரன் ஸாரா.. நான் சிவஞானம் பேசறேன்.. நாம நெனச்சபடியே மூணு போட்டியாளர்களும் வந்து அன்பளிப்பு கொடுத்துட்டுப் போயிட்டாங்க.. நாம ப்ளான்பண்ணியபடியே ஆக்ஷன் இனீஷியேட்பண்ணிடலாம்னு தோணுது. நம்ம
மெம்பர்ஸ் எல்லோருக்கும் சொல்லிடுங்க.. சாயந்திரம் ஐந்துமணிக்கு நம்ம யூஷ்வல் ப்ளேஸ்லே மீட்பண்ணி டிஸ்கஸ்பண்ணி ஆக்ஷன் எடுக்க ஆரம்பிச்சிடுவோம்..”
காலம் யாருக்காகவும் நிற்பதில்லை. அதுபாட்டுக்கு உருண்டு ஓடுகிறது. அடுத்து வந்த இரண்டு மாதங்களும், மீட்டிங் என்ன..ஊர்வலங்கள் என்ன.. விழாக்கோலம் பூண்டிருந்தது கிருஷ்ணாபுரம்.
தேர்தல் முடிந்து இதோ இன்றுதான் ஓட்டுக்களை எண்ணி முடிவைத் தெரிவிக்கும் நாள்.
நாட்டு மக்கள் எல்லோரும், குறிப்பாக கிருஷ்ணாபுரம் தொகுதி மக்கள், ஆர்வமாக டி.வி. திரையையே பார்த்துக்கொண்டிருந்தனர்.
டி.வி. செய்தி வாசிப்பாளர் ஒரு புன்னகையோடு திரையிலே தோன்றினார். அவர் சொல்லப்போகும் முடிவையே கண்இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தனர் தொகுதி மக்கள்.
“நடந்து முடிந்த கிருஷ்ணாபுரம் தொகுதி எலக்ஷன் முடிவுகள் இதோ என் கையில். அதன்கூட சில ஆச்சரியமும், அதிசயமுமான சம்பவங்களும் இருக்கின்றன. அந்தத் தொகுதியில் போட்டியிட்ட திரு.சுந்தரம் அவர்கள் இரண்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார். இதில் ஆச்சரியமான, அதிசயமான விஷயம் என்னவென்றால், இந்தத் தொகுதியில்
அடங்கும் பத்தாம் வார்டு பகுதியில் நூறு பர்ஸன்ட் வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. அவற்றில் செல்லாத ஓட்டுக்கள் ஒன்றுகூட இல்லை.. அந்த நூறு பர்ஸன்ட் ஓட்டுக்களில் ஒன்றுகூட ஒரு வேட்பாளருக்கும் கிடைக்கவில்லை.. அவையெல்லாம் ‘நோட்டா‘விற்குப் போடப்பட்டிருக்கின்றன. இந்த ஆச்சரியமான, அதிசயமான விஷயத்தைப்பற்றி, அதை நிறைவேற்றிக் காட்டிய காரணகர்த்தாக்களில் ஒருவரான சிவஞானம் என்பவரைப் பேட்டிகண்டுள்ளோம்.. அவரின் பேட்டி இதோ உங்களுக்காக..” என்று செய்தி வாசிப்பாளர் திரையிலிருந்து மறைய, சிவஞானமும்,அவரைப் பேட்டிஎடுப்பவரும் திரையிலே தோன்றினார்கள்.
“வணக்கம் மிஸ்டர் சிவஞானம்.. இது உண்மையிலேயே ஒரு சாதனை என்றுதான் சொல்லவேண்டும்..எப்படி உங்களுக்கு இப்படி ஒரு ஐடியா தோன்றியது..?’ என்றார் நிருபர்.
சிவஞானம் மெதுவாகச் சிரித்தபடியே, ” ஒவ்வொரு தேர்தல் வரும்போதும், போட்டியிடும் வேட்பாளர்கள் ‘இதைச் செய்கிறேன்..அதைச் செய்கிறேன்‘.. என்று ஏகப்பட்ட வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள்.. ஆனால் தேர்தல் முடிந்து வெற்றிபெற்ற வேட்பாளரை அடுத்த ஐந்து வருடங்களுக்கு ‘அவர் எங்கே‘ என்று தேடவேண்டியிருக்கு. அவர்களது வாக்குறுதிகளெல்லாம் தண்ணீர்மீது எழுதப்பட்டவைதான்”
“ஆமா.. அப்படி ஒரு கம்ப்ளெய்ன்ட் மக்கள் மத்தியிலே இருக்கத்தான் செய்கிறது..”
“ஆனா… அது ஒரு கொந்தளிப்போடு, பேச்சோடு நின்றுவிடுகிறது. அதற்கு என்ன செய்யலாம்..? என்ன செய்யவேண்டும்? என்று யாராவது யோசிக்கிறார்களா..? இல்லை.. எங்களது வார்டில் உள்ள ரெஸிடென்ட்ஸ் வெல்·பேர் அஸோஷியேஷன் அதைப்பற்றி யோசித்தது. ஸார் நமது நாடு குடியரசு நாடு..நமது ஓட்டு, நம்மை ஆள்பவரைத் தேர்ந்தெடுக்கக் கொடுக்கப்பட்ட நமது உரிமை.. அது விற்பனைப் பொருளல்ல காசு கொடுத்து வாங்குவதற்கு. அதனாலே முதற்படியா காசுகொடுத்து ஓட்டுக் கேட்பவர்களுக்கு ஓட்டுப் போடுவதில்லை என்று முடிவுபண்ணினோம். ஐயா ஒவ்வொரு வேட்பாளரும் கொடுக்கும் காசு வறுமையில் வாடும் மக்களுக்கு எத்தனை நாட்களுக்கு வரும். பத்து நாளோ.. ஒரு மாதமோ வரும்.. அப்புறம்… அந்தப் பணத்தை மக்களுக்கு வேலை வாய்ப்புகள் செய்துகொடுப்பதற்கோ, அந்தப் பகுதியில் புகையும் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண்பதற்கோ பயன்படுத்தினால் எத்தனை நன்றாக இருக்கும்? அது நிரந்தரமாகவும் இருக்குமே… மக்களின் வாழ்க்கைத்தரமும் உயருமே..” என்று நிறுத்தினான் சிவஞானம்.
” ஆனா.. அவர்கள் கொடுத்த காசை வாங்க நீங்கமறுத்திருக்கலாம்.. நீங்களும் வாங்கிக்கொண்டீர்களே.. வாங்கிக்கொண்டு ஒரு வேட்பாளருக்கும் ஓட்டுப்போடாதது துரோகம் இல்லையா?”
“நீங்க சொல்வது சரிதான்.. அதைப்பற்றியும் யோசித்தோம்.பல வார்டுகள்கொண்டது எங்கள் தொகுதி.. நாங்கள் இந்தத் தடவை ஆஸ் அன் எக்ஸ்பெரிமென்ட் ஒரே ஒரு வார்டிலேதான் இதைச் செய்திருக்கிறோம்.. மற்ற வார்டுகளில் மக்கள் ஓட்டுப்
போட்டிருப்பார்கள். வேட்பாளர்களில் ஒருவர் எப்படியும் ஜெயிப்பார்.. அதனாலே தேர்தல் செலவுகளால் அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படாது..”
“ஆனா.. வேட்பாளர்களிடமிருந்து பணம் வாங்கிக்கொண்டு அவர்கள் யாருக்குமே ஓட்டுப்போடாமல் இருந்தது துரோகம் இல்லையா..?”
“ஏதேதோ வாக்குறுதிகள் கொடுத்து எங்களது வாக்குகளை வாங்கிக்கொண்டு ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றாதது மக்களுக்குச் செய்யும் துரோகம் இல்லையா..? ஓட்டுக்குக் கிடைத்த பணத்தைமட்டும் அல்ல.. இப்போதுதான் கட்சிகள், கூட்டங்களுக்கும் , ஊர்வலங்களுக்கும் வரும் மக்களுக்குத் தலைக்கு இவ்வளவு என்று பணம் கொடுக்கிறார்களே… எங்கள் வார்டிலே உள்ள மக்கள் யார் யாருக்கெல்லாம் முடிகிறதோ அவர்களும் அவற்றில் கலந்து கொண்டுவந்த பணத்தையும் சேர்த்து ஒரு அக்கவுண்டில் போட்டோம். அப்படிக் கிடைத்த பணம் அத்தனையையும் வார்டு மக்கள் நன்மைக்காகச் செலவுசெய்யத் தீர்மானித்தோம். அந்தப் பணத்தால் எங்களது வார்டிலுள்ள பல வருடங்களாகச் சீராக
இல்லாத ரோடுகளைச் செப்பனிட்டோம். கழிப்பறை இல்லாத வீடுகள் எல்லாவற்றிற்கும் கழிப்பறை கட்டிக்கொடுத்தோம். இப்போது எங்களது வார்டைப் போய்ப்பாருங்கள். ‘ஓபன் டெ·பகேஷன் ·ப்ரீ‘யான வார்டாக மாறியிருப்பதை நீங்கள் பார்க்கலாம். இதை அரசாங்கம் செய்ய முற்பட்டிருந்தால் வருடக்கணக்காகி இருக்கும். நாங்கள் மக்கள் ஒத்துழைப்போடு ஒருமாசத்தில் செய்துமுடித்துட்டோம். இதுலே இன்னொரு ப்யூட்டி என்னன்னா, நார்மலா அரசாங்கத்துக்குப்பண்ணற கான்டிராக்டர்ஸ்தான் எங்களுக்கும் பண்ணிக்கொடுத்தார்கள். பட் இந்த ப்ராஜக்ட் காஸ்ட் அரசாங்க காஸ்ட்கூட கம்பேர் பண்ணினா பாதிகூட ஆகவில்லை. ஆனா தரமான வேலை.. பல வருடங்களுக்குச் சீர்கெடாமல் அப்படியே இருக்கும்.”
“அதெப்படி சாத்தியம்..? அப்படீன்னா அந்த கான்ட்ராக்டர்ஸ் அரசாங்கத்தை ஏமாத்தறாங்கன்னு அர்த்தமா..?”
“அப்படிச் சொல்லமுடியாது.. அவர்கள் என்ன செய்வார்கள் பாவம். கான்ட்ராக்ட் கிடைப்பதற்கு எல்லோருக்கும் பணம் கொடுக்கவேண்டியிருக்கு. நஷ்டத்திலே செய்யமுடியுமா..? அதைத் தரத்திலே காட்டிடறாங்க.”
“அப்படீன்னா இதுக்கு என்னதான் செய்யறது….?”
“இனி வரும் எலக்ஷன்லே வாக்காளர்கள் யாரும் ஓட்டுகளை விற்கக்கூடாது. ‘நோட்டுக்கு ஓட்டு‘ என்று வருபவரை மக்கள் ஓரங்கட்டவேண்டும். இதனால் வேட்பாளர்களுக்குத் தேர்தல் செலவுகள் கணிசமாகக் குறைந்துவிடும். வேட்பாளர்கள் தங்கள் தொகுதி மக்களை அடிக்கடி சந்திக்கவேண்டும். இப்பொழுதுதான் வார்டுக்கு வார்டு வெல்·பேர் அஸோஸியேஷன் இருக்கே. .அவர்களிடம் தொகுதியின் குறைகளைக் கேட்டறிந்துகொண்டு, அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் என்ன செய்ய இருக்கிறார்கள் என்று விரிவாகத் தொகுதி மக்களுக்குச் சொல்லவேண்டும். மக்களும் எந்த வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதிகமாக நன்மைகள் கிடைக்கும் என்றும் ஆராய்ந்து அவரைத் தேர்ந்தெடுக்கலாம். வேட்பாளர்களுக்கோ ஓட்டுக்காகச் சல்லிக்காசு செலவு செய்யவேண்டாம். பதிலாக தொகுதியில் வேலைவாய்ப்பு பெருகவும், ஆலைகள் நிறுவவும் என்னவெல்லாம் செய்யலாம் என்று கலந்தாலோசித்து நடைமுறைக்குக் கொண்டுவரலாம். இவர்கள் தேர்தலுக்காகச் செய்யும் செலவுகள் கணிசமாகக் குறைந்துவிடுவதால் அதைச் சரிசெய்ய சம்பாதிக்கும் வழிகளைப்பற்றி யோசிக்கவேண்டிய அவசியமே இருக்காது.”
“கேட்பதற்கு நன்றாக இருக்கிறது.. இது எல்லா இடத்திலும் சாத்தியமா…?” என்றார் நிருபர் சந்தேகத்துடன்.
“நீங்கதான் அதை சாத்தியமாக்கி விட்டீர்களே..! எங்கள் வார்டில் நடந்த இந்தப் புரட்சியை இப்போது நாடு முழுக்கக் கேட்டுக்கொண்டிருக்கும். நாமும் இதைப்போல் பண்ணினால் என்ன என்ற எண்ணம் இப்போது எல்லாத் தொகுதி மக்களுக்கும் கண்டிப்பாகத் தோன்றி இருக்கும். இந்த ‘நோட்டா‘ இயக்கம், அடுத்த தேர்தல் வருவதற்குள் எல்லாத் தொகுதிகளிலும் பரவிவிடும். இனி வேட்பாளர்களுக்கு நோட்டுக்கொடுத்து ஓட்டு வாங்கலாம் என்ற தைரியம் வரக்கூடாது. ‘எங்கே கிருஷ்ணாபுரம் தொகுதி பத்தாம் வார்டு மாதிரி ஆகி விடுமோ’ என்ற பயம் இருக்கவேண்டும். அதேபோல் நோட்டை வாங்கி ஓட்டுப்போடலாம் என்ற சபலம் மக்கள் மத்தியிலும் தோன்றக்கூடாது. அனாவசிய ஆடம்பரத் தேர்தல் செலவுகள் கணிசமாகக் குறையவேண்டும். சொந்தக் காசைப் போட்டு.த் தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களுக்கு, அதை எப்படித் தங்கள் பதவிக் காலத்துக்குள் வட்டியுடன் மீட்டலாம் என்று எண்ணவேண்டிய அவசியமே இருக்காது.”
“ஆமாம்.. இதை எப்படி இவ்வளவு ரகசியமாக வைத்திருந்தீர்கள்?”
“அதற்கு எங்கள் வார்டு மக்களைத்தான் பாராட்டவேண்டும்.அதுமட்டுமல்ல.. அந்த வேட்பாளர்களுக்காக எங்கள் வார்டில் உள்ள பூத்தில் வேலைசெய்த ஏஜன்டுகளுக்கும் இதுதெரியும்.அவர்களும் இதை மிக ரகசியமாக வைத்திருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் என் நன்றிகள்.”
“நீங்கள் ஒட்டுமொத்தமாக இப்படிச்செய்திருக்கிறீர்களே..பணம் கொடுத்த வேட்பாளர்கள் உங்கள்மீது கோபம்கொண்டால்..?”
“நிச்சயமாக மாட்டார்கள். இந்த நிகழ்ச்சியை அவர்களும் பார்த்துக்கொண்டிருப்பார்கள். எங்கள் பக்க நியாயத்தை நன்றாகப் புரிந்துகொண்டிருப்பார்கள்… அதுமட்டுமல்ல. நாங்கள் இப்படிக் கிடைத்த பணத்தைவைத்துச் செஞ்ச எல்லாக் கட்டுமானத்திலேயும் ‘உபயம் — திரு. சுந்தரம், திரு. குருசரண், திரு. மாரி ‘ என்று மறக்காமல் குறிப்பிட்டிருக்கோம்… நன்றி.. வணக்கம்,,”
டி.வி. திரையிலிருந்து சிவஞானமும், நிருபரும் மறைந்தனர்.
