Image result for ராகு + விஷ்வகர்மாImage result for ராகு + விஷ்வகர்மா

ராகுதேவனின் நிலை மிகவும் கேவலமாக இருந்தது. தனக்கும் விஷ்வகர்மாவிற்கும் இடையே நடக்கும் அறிவுப் போட்டியில் தான் வெற்றி அடைந்துவருவதாக எண்ணி அதன் மிதப்பில் சற்று இறுமாந்திருந்த ராகு தற்போது தோல்வியின் அதலபாதாளத்திற்குத்  தள்ளப்பட்டுவிட்டோம் என்பதை உணர்ந்து திக்பிரமையில்  ஆழ்ந்தான்.

தன்னைப் பார்த்து நடுநடுங்கிக் கொண்டிருக்கிறார் விஷ்வகர்மா  என்று முதலில் எண்ணிய  ராகு , உண்மையில் அவர் தன்னைப் பார்த்து நகைத்துக்கொண்டிருந்தார் என்பதை அறிந்ததும் அவன் மனம் துடியாய்த் துடித்தது.

ஆனால்  நிலைமை தலைக்குமேல் போய்விட்டது.    ராகுவிற்கு அவர் சொல்வதைக் கேட்பதைத்தவிர வேறு வழி  எதுவும் இல்லை. அவரும் தன்னைபோலவே இரு வரம் கேட்பது அவன் உள்ளத்தை அறுத்தது.

அவனைச் சுற்றிலும் உறைந்துகிடக்கும் ஆயிரக்கணக்கான பாம்புகளையும் பனிச்சிலைபோல நின்று கொண்டிருக்கும் தன் இரு நாக  மனைவிகளையும் பார்த்தான்.

“விஷ்வகர்மா அவர்களே! தங்கள் பெருமை அறியாது தங்களுடன் மோதவந்தது என் தவறுதான்.  நான் என்ன செய்யவேண்டும் என்று எனக்குக் கட்டளையிடுங்கள் ” என்று  உணர்ச்ச்சிகளை அடக்கிக்கொண்டு கூறினான்.

“ராகு தேவனே! நீ உடனடியாகச்  செய்யவேண்டியவை  இரண்டு. முதலாவது, நீயும் உன் நாகப்படைகளும் இனி ஒருகணம்கூட இந்த உலகில் இருக்கக்கூடாது. உங்களுக்கென்று பூவுலகில் ஒரு தளம்  அமைத்துத் தருகிறேன்.  திருநாகேஸ்வரம் என்ற சிவத்தலத்தில் நீயும் உன் மனைவியரும் இருந்து அங்கு எழுந்தருளியிருக்கும் நாகேஸ்வரர் என்ற திருப்பெயர் கொண்ட  சிவபெருமானை வணங்கி உன்னைப் பார்க்க வரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரவேண்டும்.

Related image

தன்னை நாடு கடத்துகிறார் என்பதைப் புரிந்துகொண்ட ராகு  ‘ தங்கள் உத்தரவு ‘ என்று பணிவாக அதை ஏற்றுக்கொண்டான்.

“இரண்டாவது. இது மிக முக்கியமானது. கவனமாகக் கேட்டுக்கொள் !  என் மகள்  ஸந்த்யாவின் நிழலில்கூட உன் பார்வைபடக்கூடாது. அதற்கான சத்தியம் நீ செய்துதரவேண்டும்” என்றார் விஷ்வகர்மா.

ஸந்த்யாவின் நிழலில்.. என்று அவர் கூறியதும் ராகுதேவனின் மனதில் சட்டென்று  ஒரு கபடப்  புன்னகை தோன்றியது. மிகவும் சாமர்த்தியமாக அதை வெளிக்காட்டாமல் மறைத்துக்கொண்டான்.

“விஷ்வகர்மா அவர்களே!  நீங்கள் கேட்டுக்கொண்டபடி சத்தியம் செய்துதருகிறேன். ஸந்த்யாவின் நிழலுக்கு என்னால் எந்தவிதத் தீங்கும் நேராது. இது சத்தியம் சத்தியம்” என்று அவசர அவசரமாகக் கூறினான்.

வேண்டுமென்றே நிழலுக்குக்கூட என்று சொல்லாமல் நிழலுக்கு என்று மட்டும் கூறினான்.

வெற்றிக் களிப்பில் இருந்த விஷ்வகர்மாவும் ராகுதேவனின் வார்த்தையில் மறைந்திருந்த  சாமர்த்தியத்தைக் கவனிக்கவில்லை.

அதனால் பிற்காலத்தில்  என்னென்ன விளைவுகள் ஏற்படப்போகின்றன  என்பதை அந்தக் கணத்தில் யாரும்  உணரவில்லை.

ராகுவைத் தன் மனத்திலிருந்தும் அந்த  இடத்திலிருந்தும் அப்புறப்படுத்திவிட்ட விஷ்வகர்மா அடுத்து ஸந்த்யாவின் நிலைமை என்னவாயிற்று  என்று யோசிக்கஆரம்பித்தார். 

சூரியதேவனைத் தொடர்ந்து சென்ற ஸந்த்யாவும் சூரிய மண்டலத்திற்குள் சென்றாள்.  சூரிய மண்டலம் தகதகவென்று நெருப்புக் கோளமாக இருந்தது. காந்தச் சிகித்சை எடுத்துக் கொண்டதால் அவளுக்கு அந்த நெருப்புக் கோளங்களின் பாதிப்பு சகித்துக்கொள்ளும் அளவில் இருந்தது.  சூரியனின்மீது அவளுக்கு இருந்த அளவிடமுடியாத காதல் எதையும் தாங்கும் மனப்பாங்கையும் அவளுக்குக் கொடுத்திருந்தது.  

சூரிய மண்டலத்தின்  முகப்பில் சூரியனின் சாரதி  அருணன் குதிரைகளுடள் அமர்ந்துகொண்டிருந்தான்.  வான ஊர்தியில் அங்கு வந்து இறங்கும் ஸந்த்யாவைக் கண்டதும் அவனுக்கு ஆச்சரியம் தாளவில்லை.  சூரியதேவனுக்கும்  ஸந்த்யாவிற்கும் இடையே உள்ள உறவைப்பற்றி அவனுக்கு ஆரம்பத்திலிருந்தே தெரியும். அவர்களுக்குத் திருமணம் ஆனபிறகு தோழிகளுடனும் அலங்காரப் பொருட்களுடனும் ஆடம்பரமாக வருவாள் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த அவனுக்கு இப்படி திடீரென்று எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வந்தது ஆச்சரியமாக இருந்தது. 

அதுமட்டுமல்ல. சற்று முன்தான்  ஏதோ ஒரு மயக்க நிலையில் சூரியபகவானும் வந்து தன்னிடம் சரியாகக்கூடப் பேசாமல் அரண்மணைக்குச்சென்று கதவைத் தாளிட்டுக்கொண்டு தன்னை  யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என்று எச்சரித்துவிட்டுப் படுத்துவிட்டார்.  

இப்போது ஸந்த்யாதேவி வந்திருப்பதால் அதனால் என்ன பிரச்சினை வருமோ என்றும் பயந்தான்.  

இருப்பினும் ஸந்த்யாதேவியை மரியாதையுடன் வரவேற்று,

” தேவி! சூரிய மண்டலத்திற்குத் தங்கள் வரவு நல்வரவாகுக! தாங்கள் திடீரென்று வந்ததால் தங்களுக்கு உரிய மரியாதையைத்  தர இயவில்லையே என்ற கவலையில் இருக்கிறேன். தங்களுடைய கட்டளை யாதோ?” என்று பவ்யமாக வினவினான் அருணன். 

” தங்கள் மரியாதையை எல்லாம் பிறகு வைத்துக் கொள்ளலாம். இப்போது உடனே என்னை சூரியதேவனிடம் அழைத்துச் செல்லுங்கள்” என்று உத்தரவிட்டாள் ஸந்த்யா. 

” தேவி! தற்போதுதான் வந்த அவர் தன் அரண்மனையில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார். தன்னை யாரும் பார்க்கக்கூடாது என்று கட்டளையும் போட்டிருக்கிறார். தங்களுக்கு என்ன பதில் சொல்வதென்று எனக்குத்  தெரியவில்லை ” என்று உண்மையான கவலையில் கூறினான் அருணன். 

” நீர் செய்யவேண்டியது ஒன்றே ஒன்று. என்னை அவரிடம் உடனே அழைத்துச் செல்லவேண்டியதுதான்” என்று கோபத்தோடு மொழிந்தாள் ஸந்த்யா . 

வேறு வழியின்றி அவளை ரதத்தில் அமர்த்தி சூரியதேவனின் அரண்மனையை நோக்கிச்  செலுத்தினான். அரண்மனையின் எல்லாக் கதவுகளும் அவர்களுக்காகத் தானாகவே  திறந்து வழிவிட்டன. 

சூரியதேவன் இருக்கும் அறைக்கு வாசலில் வந்து சேர்ந்தார்கள். அருணணின் மரியாதை கலந்த எதிர்ப்பைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாத ஸந்த்யா அந்த அறைக்கதவைத் தன் கரத்தால் வேகமாகத் தட்டத்தொடங்கினாள். 

Image result for suryadev and sandhya

“யாரது என்னைத் தொந்தரவு செய்வது”? என்று கேட்டுக்கொண்டு கோபாவேசத்துடன்  எரியும் நெருப்புபோலக் கதவைத் திறந்தான் சூரியதேவன். 

அந்த ஒளிவெப்பத்தைப் பொறுத்துக் கொள்ளமுடியாத அருணனே கண்களை மூடி கைகூப்பி நின்றுகொண்டான். 

எதற்கும் கலங்காத ஸந்த்யா சூரியதேவனை நோக்கிக் கோபப் பார்வை பார்த்தாள். 

சூரிய மண்டலமே ஸ்தம்பித்துப்போயிற்று. 

(தொடரும்) 

 

இரண்டாம் பகுதி

 

 

 

நாரதரும் எமியும் அந்த விவாத மண்டபத்திற்குச் சென்றதும்தான் புரியவந்தது அது ஒரு ஸ்பான்சர் நிகழ்ச்சி என்று.

எமபுரிப்பட்டணம் பிராஜக்டை மக்கள் மத்தியில் பிரபலமாக்குவதற்காக சிவா மற்றும் ராம் கன்சல்டிங்க் சேர்ந்து இந்த விவாதத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். 

சன் டிவி தான் இதனை நடத்தப்போகிறது.

அவர்களின் ஆஸ்தான பட்டிமன்ற பேச்சாளர்கள் மூவரையும் அழைத்து வந்திருக்கிறது. 

ராஜா , பாரதி பாஸ்கர், திண்டுக்கல் லியோனி 

சாலமன் பாப்பையா தான் நடுவர். 

பட்டிமன்றம் என்றால் இரண்டில் ஒன்று.  விவாதமேடை என்றால் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட விவாதத் தலைப்புக்களைக் கொடுத்து அதில் எது சிறந்தது என்பதைத் தீர்மானிப்பது. 

இப்போதைய தலைப்பு “எது சிறந்தது? ஆக்கலா? காத்தலா? அழித்தலா? ” என்பதுதான். 

பிரும்மபுரி, வைகுந்தபுரி, கைலாசபுரி மூன்று உலக மக்களும் திரண்டு வந்திருக்கின்றனர். 

ஆக்கல் சார்பில் பாரதி பாஸ்கர் அணி 

காத்தல் சார்பில் ராஜா  அணி 

அழித்தல்  சார்பில் திண்டுக்கல் லியோனி  அணி 

இந்த நிகழ்வு எமபுரிப்பட்டணத்தில் நடைபெறுவதால் சொர்க்கபுரி, நரகபுரி மக்களும் கலந்துகொண்டு நிகழ்ச்சியைப் பார்க்க வந்திருக்கிறார்கள். 

பிரும்மா விஷ்ணு சிவன் மூவர் மட்டும்  வரவில்லை. அவர்களுக்குத் தெரியும் இதில் பெரிய பிரச்சினை உண்டாக்கப்போகிறது என்று. 

காரணம்  சரஸ்வதியும் பார்வதியும் லக்ஷ்மியும் நாரதர் வைத்திருந்த அழைப்பிதழைப் பார்த்து அங்கே சென்றிருக்கிறார்கள். 

நல்லவேளையாக அவர்கள் மூவரும் கல்லூரி மாணவிகள்போல மாறுவேடம் பூண்டு சபையின் மூன்றாவது வரிசையில் அமர்ந்திருந்தார்கள்.

மூவரும் தங்கள் அணியை வெற்றிபெறச் செய்ய என்ன செய்வது என்று தனித்தனியே  தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்கள். 

நிகழ்ச்சியைத் துவக்கிவைத்து சாலமன் பாப்பையா பேச எழுந்தார். 

சபை கரகோஷத்தில் நிறைந்தது. 

அப்போது கடைசி வரிசையில் அமர்ந்திருந்த எமி  நாரதரிடம் கேட்டாள்.

” நீங்கள்தான் முக்காலமும் அறிந்த ஞானி ஆயிற்றே? சொல்லுங்கள் ! எந்த அணி ஜெயிக்கும்? “

“எமி ! என்னுடைய கருத்து சரியாக இருந்தால், இன்று எந்த அணியும் ஜெயிக்காது!”

“அதெப்படி? சாலமன் பாப்பையா எப்போதும்  மற்ற பேச்சாளர்மாதிரி பட்டிமன்றத்தில் இரண்டும் சரி என்று சொல்லாமல் அவருக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதைத்தான் சொல்வாராமே? அவர் சொல்வது இருக்கட்டும். நீங்கள் சொல்லுங்கள் ! எது சிறந்தது?  ஆக்கலா? காத்தலா? அழித்தலா?” 

” எமி,  நாமிருவரும் இந்த விவாதமேடைக்கு வந்திருக்கவே கூடாது. இங்கே பார் எமி, பிரும்மா  என்னைப் படைத்த தந்தை . காக்கும் கடவுள்  நாராயணர் எனது  ஞானத் தந்தை.  அழிக்கும் கடவுள் மகாதேவரோ எனது ஆத்மத் தந்தை. அதனால் நான் எது ஜெயிக்கும் என்று சொல்வது சரியல்ல. அது கிடக்கட்டும். நீ சொல்லு . எது ஜெயிக்கும்? “

” நான் எப்பவும் அண்ணா கட்சிதான்.  அழித்தல் தொழில்தான்  சிறந்தது. பாருங்கள் அதுதான் ஜெயிக்கும்.”

” எமி! அதோ மூன்றாவது வரிசையில் அமர்ந்திருக்கும் மூவரையும் பார்.! யார் என்று தெரிகிறதா?” 

” கல்லூரி மாணவிகள்போல் இ ருக்கிறார்களே! யார் அவர்கள்? ” 

” முப்பெரும் தேவியர்தான். இந்த நிகழ்ச்சியில் அமைதியாகத் தீர்ப்பு சொல்ல அவர்கள் விடுவார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை!”

ஐயையோ! அப்போது தீர்ப்பு என்ன ஆகும்?” 

“பொறுத்திருந்து பாரேன்! “

சாலமன் பாப்பையா துவக்கினார். 

(தொடரும்)