Image result for old school teacher from tamilnadu

நான் மேல் படிப்புப் படித்துக்கொண்டிருந்த காலம். நம் நாட்டின் மிகச் சிறந்த, மனநல அரசு மருத்துவமனை. அன்றாடம் ஒரு மருத்துவர் தன் டீமுடன் நோயாளிகளைப் பார்ப்பது வழக்கம். இன்று எங்கள் முறை.

அன்று வந்திருந்தவர் ஒரு ஐம்பது வயதுள்ளவர்.  ஜானகி, நன்றாக வாரிய தலை, பச்சை நிற நூல் சேலை, கையில் பை. சற்றுத் தடுமாறித் தள்ளாடியபடி என்னை நோக்கிவந்தார். அருகில் வரவர, அவரின் கைகளில், முகத்தில் பல தழும்புகள் இருப்பதைக் கவனித்தேன். நான் கவனித்ததால் தன்னுடைய தலைப்பினால் மறைத்து, “கீழே விழுந்துவிட்டேன், ஒண்ணும் இல்ல” எனச் சொன்னாள். சொல்வதை ஏற்றுக்கொண்டேன்.

எதிர்நாற்காலியில் உட்கார்ந்ததும் ஜானகி கண்கலங்கி, தன் நிலையை விவரித்தாள். அவள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை. வேலையிலிருந்து ஓய்வுபெற யோசிப்பதாகவும், முப்பது வயதுடைய மகன் ராஜாவுடன் இருப்பதாகவும் கூறினார். கடந்த நான்கு வாரமாகத் தனக்குப் பசி மற்றும் தூக்கம் சரியில்லை என்றும், ஒரு இனம்தெரியாத பதட்டநிலை உணர்வதாகவும், சட்டென்று அழுகை வருவதாகவும் கூறினாள். அவர்களின் வீட்டில் வாடகைக்கு வசிக்கும் அம்மா சொன்னதால் வந்ததாகத் தெரிவித்தாள். தான் இங்கு வருவதை ராஜாவிற்குச் சொன்னதும் அவன் கோபத்தில் சத்தம் போட்டதாகவும், அதில் திகில் அடைந்து கீழேவிழுந்து அடிபட்டுக்கொண்டதாக மெல்லிய குரலில் சொன்னாள்.

என்னை நிமிர்ந்து பார்த்து, “தப்பாக நினைக்காதீர்கள், ராஜா ரொம்ப நல்லவன்” என்றாள். அவனுடைய வேலை பளு, விரும்பிய பெண் ராதா அவனைவிட்டு விலகிவிட்டது அவனுக்கு அவமானமாக இருக்கிறது, அதனால் கோபம் என விவரித்தாள்.

இதுவரையில் வீட்டு நிர்வாகம் பூராகவும் ஜானகி பொறுப்பில்தான் இருந்தது. சமீப காலமாக, ஏன் செய்யவேண்டும் எனச் சலிப்பு வருவதாகக் கூறினார். அவர்களின் கணவர் மாரடைப்பால் இரண்டு வருடங்களுக்கு முன் மரணம் அடைந்த சம்பவத்தை விவரித்தார். மகனிடம் அதிக பாசம் இருந்ததால் அவர் மறைவை ஏற்றுக்கொள்ள முடிந்தது. அவர் எப்பொழுதும் ஜானகியிடம் கோபித்துக்கொள்வார். குறிப்பாக அவள் ராஜாவுக்குப் பார்த்துப் பார்த்து எல்லாம் செய்துதருவதில் அவருக்கு உடன்பாடு இல்லை.

அதே மூச்சில், ராஜா நல்லவன், இளகிய மனம் உள்ளவன் என்றும் சொன்னாள். எந்தத் தொந்தரவும் அவனை அணுகாமல் பார்த்துக்கொள்வதே தன் பிரதானப் பொறுப்பு என்றாள்.  இதற்காகவே ஜானகி புத்தகம் படிப்பது, பாட்டுக் கேட்பது, நடைப் பயிற்சி என்று ஒவ்வொன்றாக நிறுத்தவேண்டியதாயிற்று.  நிறுத்தினாள்.  நாளடைவில் மந்தமாக ஆவதுபோல் தோன்றியது என்றாள்.

விவரங்களை ஒட்டு மொத்தமாகப் பார்க்கையில் மன உளைச்சல் என முடிவானது. மருந்துகள் இல்லாமல் ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கர் என்ற முறையில் அவர்களைச் சிகிச்சைக்கு எடுத்துக்கொண்டேன்.

வாரம் ஒருமுறை அவள் வருவதாக முடிவெடுத்தோம். வந்தாள். தான் சூழ்நிலைகளைக் கையாளும்விதம் சரியில்லாததால் சில நெருக்கடி நிகழ்ந்தன எனப் புரிய ஆரம்பித்தது. குறிப்பாக ராஜா இளைஞன் என்றாலும்,  ஜானகியே அவனுக்கு எது நல்லது, எது  கெட்டது என்று முடிவு எடுப்பதால், அவனுடைய முடிவு செய்யும் திறன்கள் எப்படி, ஏன் பாதிக்கப்படும் என்பதை ஆராய்ந்தோம். மேலும் ஜானகி சூழ்நிலையைக் கையாளுவதை மையமாக வைத்துப் பல வழிமுறைகள் சிந்தித்தோம். அதேபோல் மனதை அமைதிசெய்ய என்ன செய்யலாம் என்பதையும் ஆராய்ந்தோம்.

மூன்று வாரங்களுக்குப் பின்பு குணமாகும் சாயல் எட்டிப்பார்த்தாலும் ஏதோ இடையூறாக இருப்பதை உணர்ந்தேன். எங்கள் சீஃப் இடம் பகிர்ந்தேன். நாங்கள் மாணவர்கள் என்பதால், செய்வதைக் கண்காணிக்கும் பொறுப்பு அவர்களுக்கு. அவர்களிடம் உரையாடி, தெளிவுபெற்றேன்.

அடுத்த சந்திப்பில் வெளிப்படையாக என் கணிப்பை ஜானகியுடன் பகிர்ந்தேன். அவள் முழு நலன் அடையாததை அவள் கவனத்திற்குக் கொண்டுவந்தேன்.

ஜானகி மௌனமாக என்னைப் பார்த்துப் பல நிமிடங்களுக்குப் பிறகு ராஜாவைப்பற்றிப் பேசினாள். அவன் மது அருந்துவதுபற்றி யாரிடமும் சொல்லாமல்  மறைத்தாள். அவனுக்குத் தான் விரும்பிய ராதா இல்லை என்றதும், சோகத்திலிருந்து மீள அதிகமாக அருந்தினான். ராஜா போதையில் விழுந்துகிடக்கும் தகவல் தெரிந்ததும் ஜானகி அவனை எப்படியாவது கூட்டி வந்துவிடுவாளாம். இதைச் செய்கையில் பலமுறை கை கால் தவறி விழுந்து இந்தக் காயங்கள்.  தன் மகனிடம் வேறு எந்தக் குறையும் இல்லை என்பதை வலியுறுத்தினாள்.

இந்த வர்ணனைகள், இதற்கு முன்னால் வார்த்தைக்கு வார்த்தை ராஜா நல்லவன் எனச் சொன்ன சூழல்களை அவளுக்கு நினைவூட்டி, அதிலிருந்து அவள் செய்வதைப் புரிந்துகொள்ளச் செய்தேன்.

எங்கள் பாஷையில் இப்படி நடந்துகொள்வதை, ‘கோ டிபென்டன்ஸீ’ என்போம். அதாவது போதைக்கு அடிமையானவர்களுடன் கூட இருப்பவர்கள் அவர்களின் பழக்கத்தை மூடிமறைக்க முயல்வார்கள்.  கஷ்டமோ நஷ்டமோ போதையில் உள்ளவர்களுக்கு எல்லாம் அனுகூலமாகச் செய்வது என்று முற்படுவார்கள். அக்கம்பக்கத்தில், உறவுக்காரர்கள் யாருக்கும் போதைப் பழக்கம் தெரியக்கூடாது என முயல்வது. அப்படியாவது பழக்கம் அடங்கும் எனக் கருதுவார்கள். தங்களின் பொழுதுபோக்கைப் பலிகொடுத்து விடுவார்கள். தாங்கள் இப்படிச் செய்வதால் போதையினால் நிகழும் முழு மாற்றத்தையோ விளைவுகளையோ கண்டுகொள்ளமாட்டார்கள்.

மாறாக, போதைப் பழக்கம் இன்னும் அதிகரிக்கும். இப்படிக் கூட இருப்பவர்கள் பொறுத்துக்கொள்வது, அவர்களுக்கு உதவுவது ‘கோ டிபென்டஸீ’ எனப்படும்.  இந்த நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என எண்ணிப்பார்க்க, பல வாரமோ, வருடங்கள்கூட ஆகலாம்.

கடைசியில் உதவி தேடிவந்ததே பாராட்டப்பட வேண்டியது!  ஜானகிக்குத் தன்னுடைய கோ டிபென்டஸீ, அதன் தோற்றம், விளைவுகளைப்பற்றிப் பல ஸெஷன்களில் ஆராய்ந்தோம்.

ராஜாவும் அவ்வப்போது, “என் அம்மாபோல் யாரும் இல்லை” எனப் புகழாரம் சூட்டுவதாகச் சொன்னாள். இதுதான் ஜானகிக்கு டானிக் என்றாள். இதைப் பெறுவதற்காகத் தன் பங்குக்கு அவனுக்கு எல்லாம் செய்தாள். அவள் தன் நிலைமையை மேலும் புரிந்துகொள்ள, மாற்ற யோசித்தேன்.

இப்படித் தான் செய்வதின் விளைவுகள் புரிய, அவளை ஆல் அனோன் (Al Anon) ஏ ஃப் ஜீ (AFG, Alcoholics Anonymous Family Group) என்று அழைக்கப்படும் கூட்டத்தில் கலந்துகொள்ள பரிந்துரைத்தேன். போதைக்கு அடிமையானவர்களின் மனைவி, பெற்றோர், கூடப்பிறந்தவர்கள், நண்பர்கள் எனப் பாதிக்கப்பட்ட நபர்கள் குழுவாகும். இதற்குக் கட்டணமோ, அனுமதிக் கடிதமோ தேவையில்லை. இந்தக் குழுவில் எல்லோரையும் ஒன்றுபடுத்துவது வீட்டில் ஒருவரின் போதைப்பழக்கம், அதனால் நேரிடும் சஞ்சலங்கள்.  குழுவில், அவரவர் தங்களின் அனுபவங்களைப் பகிர, தாங்கள் செய்யும் தவறுகளை அறிய, மாற்றி அமைக்கச் சிறந்த வாய்ப்பாகிறது.

இப்போது ஜானகி அணுகியது மாற்றத்தின் முதல் கட்டம். மிக முக்கியம். ஆல் அனோன் (Al Anon)ல் பங்கேற்புடன் ஆரம்பித்து, மெல்லப் பேசத்தொடங்கினார், ஜானகி. அதே நேரம், தானாக நிறுத்திய தன் பொழுதுபோக்கை மறுபடி ஆரம்பிக்க நாங்கள் கலந்துரையாடினோம்.

தன் அம்மாவின் மாற்றத்தைக்கண்டு, ஆச்சரியப்பட்டு எங்களைக் காணவேண்டும் என ராஜா கூறியதை ஜானகி என்னிடம் பகிர்ந்தாள்.  அடுத்தபடியாக ராஜாவை அழைத்தேன். தன் அம்மாவிற்காக என எண்ணி வந்தான். முப்பது வயதுடையவன், ஏனோதானோ என உடை.

ஜானகிபற்றிக் கேட்க, அவனைப்பற்றிச் சொல்லச் சொன்னேன். தனக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என்று சொன்னான். இவன் ஒத்துழைப்பிற்கு அவன்போக்கில் போக முடிவெடுத்தேன்.

எங்கள் துறையில் இது ஒரு பெரிய வரப்பிரசாதம். அவரவருக்கு ஏற்றவாறே சிகிச்சை முறையை அமைப்பது. நான் இதைக் கடைப்பிடிப்பதுண்டு. ராஜாவிற்கு அவர் போக்குவழியில், ஊக்குவிக்கும் முறையைக் கையாண்டேன்.

ராஜா தன் சூழ்நிலையை விவரித்தான். வேலைப்பளுவை சமாளிக்க 30 எம்.எல் மது அருந்துவதைத் தொடங்கியதாகச் சொன்னான். அவன் விரும்பிய ராதா விலகியதும் எம்.எல் அதிகம் ஆனதாகச்சொன்னான். ராதா, மது அருந்துவதைத் தடுக்க முயன்று,  தோல்விபெற்றதும் விலகியதாகத் தெரிவித்தான். தன்னால் சமாளிக்க, தாங்கமுடியவில்லை என்றால் மது அருந்துவானாம். அப்படி என்றால் சமாளிக்கும் திறன் தரைமட்ட நிலையில் இருப்பதை அவன் கவனத்திற்குக் கொண்டுவந்தேன். பல நாட்கள் தூக்கம் சரியில்லை, பசி எடுப்பதில்லை, கவனித்து வேலை செய்யமுடியவில்லை என்பதால் வேலைக்குப் போகவில்லை என்றான்.

மது அருந்துவது பிடிக்கவில்லை என்றும் விளக்கினான். மது அருந்தினால்தான், மனோதைரியம் வருகிறதுபோலத் தோன்றியது என்றும் கூறினான். இதனை அடிப்படையாகவைத்து, ராஜாவைத், தன் எண்ணம், உணர்வு, நடத்தை எல்லாமே எவ்வாறு தான் மது அருந்த வசதிப்படுத்தி ஒன்றுக்கொன்று பிணைந்து இருக்கிறது என்பதைக் கவனிக்கச் சொன்னேன். அவனால் புரிந்துகொள்ள முடியாததால் இவற்றை மூன்றாகப் பிரித்து: நிலை-உணர்வு-எண்ணம் என வரிசைப்படுத்தி எழுதி வரச்சொன்னேன்.

இதே தருணத்தில் அம்மாவுடன் ஒரு வாரம் அவர்கள் ஊர், குலதெய்வம் தரிசனமும் ஆனது. அந்த முழு நேரமும் மது ஞாபகம் வரவில்லை, அருந்தாமல் இருந்தான். இந்த நிலையைப்பற்றி விலாவாரியாக உரையாடியதில், தன்னுடைய சமாளிக்கும் திறனைப்பற்றி, நலத்திற்கு ஏற்றவாறு எவையெல்லாம் செய்தால், மது அருந்தும் பழக்கத்தை வெட்டி வீசமுடியும் என்பதில் கவனம் செலுத்தினோம். இதைத்தான் சற்று முன் சொன்னது, அவர்கள் போக்கில் போனால் எதிர்ப்பு இல்லாமல் அவர்களாகச் சரிசெய்ய முயல்வார்கள்.

இந்த யுக்தியை இன்னொரு தெளிவு பெறவும் உபயோகித்தேன். ராஜா தான் உறுதிகொள்ள, அவமானம் மறக்க மது அருந்துவதாகக் கூறியிருந்தார். ஏன் இப்படிக் கருதவேண்டும் என்பதை ஆராய்ந்தோம்.  இங்கே ஜானகியை உடன் சேர்த்துக்கொண்டேன்.  அவர்களும் ராஜாவுக்குத் தானாக முடிவுகளைச்செய்ய வாய்ப்பளிக்கும் தேவையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதால். வீட்டு நிலவரங்கள், அனுபவங்கள் என வரிசைப்படுத்தி முடிவுகள் எடுக்கும் திறன், பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் விதங்களை அம்மா பிள்ளை இருவரும் தெளிவு பெறும்வரை, வெவ்வேறு கோணங்களில் பல ஸெஷன்களில் பயிற்சிசெய்தோம்.

ராஜா தான் சிந்திக்கும் விதத்தைப் பார்த்ததில், எவ்வளவு சுலபமாக ஒரே ஒரு நிகழ்விலிருந்து எப்போதும் இப்படித்தான் என்று பொதுமைப்படுத்தி விடுகிறோம் என்று பளிச்சென்று புரிய வந்தது. இதிலிருந்து ராஜாவிற்குத் தன்னுடைய இன்னொரு குணாதிசயம்பற்றியும் தெளிவானது. அவனைப் பொறுத்தவரை ஒன்றை அனுபவித்தால் எப்பொழுதும் அப்படியே என்று இருந்துவிடுவான். வேறு விதத்தில் இருக்கலாம், நடந்துகொள்ளலாம் என யோசிக்கத் தோன்றாது. அதாவது எல்லாவற்றையும் நல்லது அல்லது  கெட்டது என்று அச்சுப் போட்டுவிடுகிறோம் என்று. இந்த மனப்பான்மை கடிவாளம் போடும் என்று, ராஜா அனுபவ உதாரணங்களை வைத்துப் பல ஸெஷன்களில் ஆராய்ந்து புரிந்துகொண்டான்.

தான் மாற்றம் அடைவதை வெளிப்படையாகக் கூறினான். மனதில் ராஜாவிற்குச் சஞ்சலம். இதுவரையில் சந்தித்த சிக்கல்களை இனி சந்திக்கக்கூடுமே? அபாய நிலைகளை வரிசைப்படுத்தினோம். ஸெஷன்களில், ஒவ்வொன்றையும்
அவனுடைய அனுபவம் மற்றும் கதைகள் உபயோகித்துப் புரியவர;  இவற்றுடன் தானாக எழுதி, மற்றும் ஜானகியுடன் கலந்து உரையாடினான். தெளிவு பிறக்க ஆரம்பித்தது.

ராஜாவும் ஜானகியும் எங்களைத் தாம் ஏன் அணுகினோம், என்னவாயிற்று, எங்கு இருக்கிறோம் என்ற சுய பரிசோதனை செய்ய விரும்பினார்கள்.

அதற்கு அவர்களை ஆராயச்சொன்னது – எதனால் அவன் மது அருந்தலை வெற்றியின் பரிசாக எண்ணியது, தன் சோகத்தை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளாமல் மது குடித்து அதை முழுக வைத்தது, மற்றும் தோழமை மற்றவர்களுடன் இருக்கவில்லை என ஆராயப் பரிந்துரைத்தேன். ஜானகி விட்டுக் கொடுத்தது ஏன் உதவவில்லை என்பதையும் தைரியமாக ஆராய்ந்தார்கள்.

இத்துடன் முடியவில்லை. இங்குப் பகிர்ந்தது சிலவற்றையே. அவர்கள் மறுபடியும் ராதாவைச் சந்தித்து, வாழ்வில் பல மாற்றங்கள் நேர்ந்தது; அது நீண்ட தொடர்…

இந்தக் கேள்விகளோ, பதிலோ முக்கியம் இல்லை. நம் முகத்தைக் கண்ணாடியில் பார்ப்பதுபோல் துணிச்சலாகத் தன்னை, தன் செயல், சிந்தனைகளை ஆராயத் தயாராக இருப்பதே மாற்றத்தின் ஆரம்பம் என்பேன். என்னசெய்வது என்ற கேள்வி கேட்கும் எண்ணங்கள் பக்குவத்தைக் காட்டுகிறது. அதனால்தான் எங்கள் துறையில், ஒருவர் “சரி செய்யப் போகிறேன்” என்ற ‘தயார்’ நிலையிலிருந்து ஆரம்பித்தால் எந்தப் பிரச்சினையும் பெரியது அல்லவே அல்ல. நம்பிக்கை மிகப் பெரியதே!
**********************************************************************