எதிர் மரியாதையும் சுதாமன் குபேர செல்வமும்!
திருமணங்களில் எதிர் மரியாதை செய்வது என்பது ஒரு சாங்கியம்! சம்பந்திக்கு, புடவை, வேட்டி, வெற்றிலைப் பாக்கு, பழம் எல்லாம் வைத்துக் கொடுப்பது ஒரு வழக்கம்! அதுபோலவே, திருமணத்திற்கு வந்திருப்பவர்கள், திரும்பிச் செல்லும் போது, கையில் ஒரு தாம்பூலப் பை கொடுப்பது – அவர் மொய் எழுதியிருந்தாலும் இல்லாவிட்டாலும்! – ஒரு வகையான எதிர் மரியாதை, வந்து வாழ்த்தியதற்கு ‘நன்றி’ கூறுதல்!!
தாம்பூலப் பைகள், பல வகை – துணிப் பை, காகிதப் பை, அலங்காரக் கைப் பை என. மணமக்கள் பெயர், மண நாள், ஏதாவது சுவாமி படம் அல்லது கூப்பிய கரங்கள், தேங்க் யூ என பையின் மேல் ப்ரிண்ட் செய்யப்பட்டிருக்கும். சிலர் தங்கள் ‘கெத்’தைக் காண்பிக்கும் வகையில் மிக ஆடம்பரமான தாம்பூலப் பைகளைக் கொடுப்பதுவும் உண்டு! சுவாரஸ்யம் பையின் உள்ளே இருக்கிறது – தேங்காய், வெற்றிலைப் பாக்கு, மஞ்சள் குங்குமம் போன்றவைதான் வழக்கமாக இருக்கும். செலவைக் குறைக்க, தேங்காய் இடத்தில் சின்ன சாத்துக்குடி அல்லது ஒரு ஆரஞ்சு (சீசனுக்குத் தக்கபடி) வைப்பதுவும் உண்டு. வீட்டில் வந்து, அது நார்த்தங்காயா அல்லது வாடிய சாத்துக்குடியா என பட்டி மன்றம் நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்!
சில பைகளில் சாக்லேட்டுகள், திருமண பட்சணம், வளையல் என வித்தியாசமான வஸ்துக்களும் இடம் பெறும். மிகத் தெரிந்தவர்கள், உறவினர்களுக்கு ஸ்பெஷலாய் சில பரிசுப் பொருட்களை, தனியான பையில் போட்டுக் கொடுப்பவர்களும் உண்டு – ‘ரிடர்ன் கிஃப்ட்’ – பெண்களுக்குத் தனியாகவும், ஆண்களுக்குத் தனியாகவும் (என்ன உபயோகிப்பார்கள் என யோசித்து) கிஃப்ட் பொருட்கள் கொடுப்பது வழக்கம். இதற்காக எல்லோரையும் தெரிந்த உறவுக்காரப் பெண்மணி ஒருவர் வாசலில் டியூடியில் இருப்பார்!
சஷ்டி அப்தப் பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற விசேஷங்களில், புத்தகங்கள் கொடுப்பதைப் பார்த்திருக்கிறேன் – இதை, காரைக்குடி செட்டியார்கள் வீட்டு திருமணங்களில், நிச்சயமாக நடைபெறும் ஒரு வழக்கமாகவே பார்த்திருக்கிறேன்! வாழ்த்துரைகள், பக்திப் பாடல்கள், ஸ்தோத்திரங்கள் அடங்கிய புத்தகங்கள், சுய முன்னேற்றம் பற்றிய புத்தகங்கள், முதுமையில் மகிழ்ச்சி, பகவத் கீதை, மகான்களின் பொன்மொழிகள் இப்படிப் பல தலைப்புகள், நமக்குக் கிடைக்கும்!
சமீபத்தில் நண்பர் ஒருவருடைய மகள் திருமணத்தில், அருமையான புத்தகம் ஒன்றை, தாம்பூலப் பையுடன் கொடுத்தார்கள் – டாக்டர் டி எஸ்.நாராயணஸ்வாமி தொகுத்திருந்த, ”தெரிந்த புராணம் தெரியாத கதை”என்ற புத்தகம். சுவாரஸ்யமாக இருந்தது! வாசிக்கும் பழக்கம் தொலைந்து வரும் இந்த நாட்களில், இப்படிப்பட்ட புத்தகங்களைக் கொடுப்பது, வாசிப்பை மீட்டெடுக்கும் முயற்சியாகக் கொள்ளலாம். இரண்டு வயது குழந்தைக்குக் கூட ‘யூ ட்யூபி’ல் கார்டூன் காண்பித்து சாதம் ஊட்டும் பெண்கள் / ஆண்கள் கதை சொல்லி குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கலாம் – இந்தப் புத்தகம் அதற்கு ஒரு நல்ல முன்னோடி என்பேன் நான். இராமாயண, மகாபாரதக் கதைகள் நல்ல வாசிப்பானுபவத்தையும், வாழ்க்கை குறித்த ஒரு நல்ல பார்வையையும் அளிக்க வல்லவை என்பது என் எண்ணம். அதை வளரும் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுப்பது பெரியவர்களின் கடமை!
குசேலசர் கதை நாமெல்லாம் அறிந்ததுதான். இந்தப் புத்தகதில் அந்தக் கதையிலிருந்து:
துவாரகையில் ஶ்ரீகிருஷ்ணனுக்குப் பாத பூஜை செய்யும் ருக்மணி, கண்ணனின் பாதங்களில் வழியும் இரத்தம் கண்டு திடுக்கிட்டு, காரணம் கேட்கிறாள். ”வறுமையில் வாடும் என் நண்பன் சுதாமன் என்னும் குசேலன், என்னைக் காண பசியிலும், உடல் தளர்ச்சியிலும் வாடி வந்துகொண்டிருக்கிறான். அவன் கால்களில் குத்தும் முட்களையும், இரத்தத்தையும்தான் இங்கு நீ காண்கிறாய். அதனால் அவன் கால்களில் முட்கள் தைத்ததை அறியாமல் நடந்து வந்து கொண்டிருக்கிறான்” என்கிறார் ஶ்ரீகிருஷ்ணர்.
குசேலனை நன்கு உபசரித்து, பாத பூஜை எல்லாம் செய்து மகிழ்கிறான் கண்ணன். அவன் கொடுக்கும் அவலில் இரண்டு பிடிகளைத் தின்பதின் மூலம் சகல ஐஸ்வர்யங்களையும் குசேலனுக்கு அளிக்கிறார். மூன்றாவது பிடி அவலை தின்னுமுன், ருக்மணி அதனைத் தடுத்து விடுகிறாள்! எங்கே இருக்கும் மற்ற செல்வங்களையும், தன்னையும், தன் பரிவாரங்களையும் தானமாக்க் கொடுத்து விடுவானோ கண்ணன் என்று தடுத்து விடுவதாகச் சொல்லிவருகிறார்கள் கதை சொல்பவர்கள் – தர்மத்தை, கணவன் செய்யும் தர்மத்தை, அதுவும் மஹாலக்ஷ்மியின் அவதாரமான ருக்மணி தடுப்பாளா? என்ற கேள்வி எழுகிறது. ஶ்ரீகிருஷ்ணன் கேட்கும்போது, ருக்மணி, “ ஸ்வாமி, தங்களுக்குச் சமர்ப்பிக்கப்படும் எந்தப் பொருளும் பிரசாதமாகிறது. சுதாமன் அன்புடன் தந்த அவல் அனைத்தையும் தாங்களே சாப்பிட்டு விட்டால், அந்தப் பிரசாதத்திற்காகக் காத்திருக்கும் எனக்கும், தங்களின் பரிவாரத்திற்கும் பிரசாதம் இல்லாமல் போய்விடுமே என்றுதான், மூன்றாம் பிடி அவலை தங்கள் கைகளைப் பிடித்துத் தடுத்தேன்” என்கிறாள்! ருக்மணி தர்மத்தைத் தடுக்கவில்லை – தர்ம பலன் எல்லோருக்கும் கிடைக்கவே அவ்வாறு செய்தாள்!
தன் வறுமை நீங்கியது அறியாமல் சுதாமன், கண்ணனின் கருணையால் பேரானந்தத்தில் இருந்தான். அவன் மனம் சலனமேதுமின்றி இருந்தது. வந்த வழியே நடந்து ஊர் திரும்புகிறான். இதைக் கண்ட ருக்மணி, “அவருக்குத் தெரியாமலே சகல செல்வங்களையும் கொடுத்துவிட்டு, திரும்பவும் வந்த வழியே நடந்து செல்ல வைத்துவிட்டீர்களே?” என்று கேட்கிறாள். அதற்கு ஶ்ரீகிருஷ்ணர் கூறும் விளக்கம் நாம் அனைவரும் உணர்ந்து விளங்கிக் கொள்ள வேண்டிய ஒன்று! பகவான் சொல்கிறார்: “சுதாமன் வாழ்க்கையில் அமைதியும் ஆனந்தமும் திருப்தியும் நிறைந்திருக்கும் நேரம் இன்னும் சில நாழிகைகளே உள்ளன. வீட்டிற்குச் சென்று குபேர செல்வத்தால் ஏற்படும் ஆசை, பாசம், பேராசை, கர்வம் மற்றும் செல்வத்தை மேலும் சேர்க்க வேண்டும் என்ற பேரவா போன்ற புதிய பிரச்சினைகளால் சுதாமன் வாழ்க்கை முற்றிலும் சுழல ஆரம்பித்துவிடும். அதனால்தான், அவன் அனுபவித்துக் கொண்டிருக்கும் பரமானந்தத்தை சிறிது நேரம் அவனிடம் இருக்க, திரும்பவும் நடந்து செல்ல அனுமதித்தேன்” என்கிறார்.
பக்தியின் பேரானந்ததையும், குபேர செல்வத்தால் ஏற்படும் தீமைகளையும் எளிமையாகச் சொல்கிறார் ஶ்ரீகிருஷ்ணர்.
இப்படி 31 புராண, இதிகாசக் கதைகள் உள்ளன – வாசிக்க வேண்டிய புத்தகம். இதில் வரையப்பட்டுள்ள கோட்டோவியங்கள் மிகச் சிறப்பு (ஓவியர் ஜே.பாலாஜி)! தாம்பூலப் பைகளில் இப்படிப்பட்ட புத்தகங்கள் கொடுப்பதை வரவேற்கிறேன் – வாசிப்பது அவரவர் விருப்பம்!
(தெரிந்த புராணம் தெரியாத கதை – டாக்டர் டி எஸ் நாராயணஸ்வாமி. LKM Publication, Chennai 600 017. Phone : 24361141).


