நரசிம்மவர்ம பல்லவன்
![]()

புலியைப் பற்றி எழுதினோம்.
இப்பொழுது ஒரு சிங்கத்தைப் பற்றி எழுதுவோம்.
அது லயன் கிங் !
நரசிம்மம்!
புலியை விழுங்கி ஏப்பம் விட்ட சிங்கம் அது.
நரசிம்மவர்ம பல்லவனைப் பற்றி தான் சொல்கிறோம்..
இந்தியாவின் சரித்திரத்தில் மொத்தம் பன்னிரெண்டு அரசர்கள் தான் தோல்வியை சந்திக்காத மன்னர்களாம்!
அது யார்.. அது யார்.. என்று துடிக்கக்கூடாது.
அந்த பன்னிரண்டு பெரை நான் இங்கு குறிப்பிட..பிறகு வாசகர்கள் அதைப் பற்றி என்னைக் கிழிக்க …
எனக்கேன் அந்த வம்பு!
ஆக அந்த பன்னிரண்டு மன்னர்களில் நமது நரசிம்ம பல்லவனும் ஒன்று!
புள்ளலூர்ப் போர் (Battle of Pullalur) 618-19 ஆண்டுகளில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனுக்கும் இரண்டாம் புலிகேசிக்கும் இடையில் காஞ்சிபுரத்தில் அருகில் நடந்தது. இந்தப் போரில் இளவரசன் நரசிம்மவர்மனும் போர் செய்திருந்தான்..புலிகேசியின் பராக்கிரமத்தை நரசிம்மன் நேரில் பார்த்திருந்தான். பல்லவர்கள் தோல்வி அடைந்தாலும்- மகேந்திரன் சாமர்த்தியமாக நரசிம்மனை காஞ்சிக் கோட்டையைக் காக்கும் பொறுப்பில் விட்டான். நரசிம்மனது ஆற்றல் காஞ்சிக்கோட்டையை புலிகேசி நுழையாமல் காத்தது. இருப்பினும் பெருத்த அவமானம் அவர்களைப் பீடித்திருந்தது.
நரசிம்மன் இளமையிலேயே – போர்க்கலையை நன்குக் கற்றுணர்ந்தான்.
உடல் வலியைப் பெருக்கினான்.
மல்யுத்தம் செய்வதில் பெரும் வீரனாகத் திகழ்ந்தான்.
காஞ்சியின் மல்லர்கள் அனைவரையும் வெற்றி கொண்டான்.
மக்கள் அவனை மாமல்லன் என்று பட்டம் சூட்டி மகிழ்ந்தனர்.
சேனாபதியின் மகன் பரஞ்சோதி!
அந்த இறையருள் பெற்ற பாலகன்- இளவரசன் நரசிம்மனுடைய தோழன் ஆனான்.
இருவரும் பல்லவ நாடு வெகு உன்னத நிலை அடைவதை கனவு கண்டனர்.
கல்கி எழுதிய ‘சிவகாமியின் சபதம்’ நமக்கு ஒரு பரிசு.
அந்த கதாபாத்திரங்கள் நமக்கு உற்சாகம் தருகின்றது.
கல்கிக்கு நன்றி தெரிவித்து நாம் சற்று கதைப்போம்.

கதை விரிகிறது.
வாலிபன் நரசிம்மன்.
தந்தையின் சிற்பக் கோவில்களை மேற்பார்வையிட்டு வந்தான்.
தலைமை சிற்பி ஆயனரிடம் பெரு மதிப்புக் கொண்டிருந்தான்.
‘இவரது சிற்பங்கள் மட்டும்… அதிலும் நர்த்தகம் ஆடும் பெண்களின் சிற்பங்கள்.. எப்படி இப்படி தத்ரூபமாக இருக்கிறது?’ -என்று வியந்தான்.
அவரது மகள் சிவகாமி தான் அந்த சிற்பங்களுக்கு உயிர் கொடுத்த நர்த்தகி என்று அறிந்ததும்.. அவள் மீது காதல் பெருகியது.
சிவகாமியும் நரசிம்மனைக் காதலித்தாள்.
இருவரும் இன்றைய மாமல்லபுரத்தின் கடற்கறையில் இருவரும் அமர்ந்து எதிர்காலத்தைப் பற்றி இன்பக்கனவுகளைப் பகிர்ந்தனர்.
“இந்தக் கடற்கரையில் காலத்தால் அழியாத சிற்பக்கோவில்களை அமைத்தால் .. ஆஹா.. அதன் அழகு.. கால காலமாக நமது காதலையும் உலகிற்குச் சொல்லுமே” – என்பாள் சிவகாமி.
“என் எண்ணமும் அதுவே தான் சிவகாமி…”- என்று கனவில் நரசிம்மன் மூழ்கினான்.
திடீரென அவன் முகம் கோபத்தால் சிவந்தது…
‘காஞ்சி வரை வந்த.. அந்த.. அந்த புலிகேசியை.. கண்டம் துண்டமாக வெட்டி வாதாபியைக் கொளுத்தி அதைக் கண்டபின் தான் இந்த சிற்பக்கோவில் ” – அவனது அத்தனை அங்கங்களும் வீரத்தால் துடித்தன.
சிவகாமியின் அழகிய மேனி பயத்தால் துவண்டது.
“இளவரசே…” – அவள் குரல் பயத்தால் கெஞ்சியது.
“தாங்களும் … தங்கள் தந்தை மன்னரும் புலிகேசியால் பட்ட அவமானங்கள் நான் அறியாதது அல்ல.. ஆயினும் பழிக்குப் பழி வாங்குது என்று இருந்தால் .. அது நம் தலைமுறைகளைத் தானே பாதிக்கும்” – என்றாள்.
“அப்படியானால் கோழையாக உனது ஆடைக்குள் முகம் மறைத்து இருக்கச் சொல்கிறாயா?” – வெடித்தான் நரசிம்மன்.
“இளவரசே.. நான் சொல்வது என்னவென்றால்.. நீங்கள் படையைப் பெருக்குங்கள்.. வலிமையாக விளங்குங்கள்… படையெடுத்துச் செல்லாதீர்கள். ஆனால்.. அந்தப் புலிகேசி படையெடுத்து வந்தால்.. நீங்கள் சொன்னபடி.. வெட்டுங்கள்..கொல்லுங்கள்… ஒரு படை வீரன் தங்காமல் … அழியுங்கள்.”
நரசிம்மனுக்கும் புரிந்தது தான்.
முதலில் படைபலத்தைப் பெருக்கவேண்டிய அவசியத்தை நன்கு உணர்ந்திருந்தான்.
காலம்-விதி இரண்டும் கூட்டு சேர்ந்து விசித்திரங்கள் பல நடத்துகின்றன.
புள்ளலூர் சண்டையில் சாளுக்கிய சேனைகள் பல நஷ்டங்கள் அடைந்து…
காஞ்சிக்கோட்டை பலப்படுத்தப்பட்டதால் அதையும் அடைய முடியாமல் சாளுக்கிய சேனை – பல்லவ கிராமங்களை நெருப்பிட்டு சூரையாடி- பெண்களைக் கவர்ந்து வாதாபி செல்லத் துவங்கினர்.
சிவகாமி இந்த அவலங்களைக் கண்டு வெம்பினாள்.
வலம் வந்த புலிகேசியைப் பார்த்து ‘இந்த அபலைப் பெண்களை விட்டு விடுங்கள். பதிலாக என்னை வேண்டுமானால் அழைத்துச் செல்லுங்கள்”.
புலிகேசி : “சரி .. அப்படியே செய்வோம்.. அப்படியனால் நீயே .. வாதாபி வா”
சிவகாமி வாதாபி செல்கிறாள்..
சீதை அசோகவனத்தில் இராமனுக்குக் காத்திருந்தது போல் காத்திருந்தாள்.
மாமல்லன் சிவகாமியை வரவழைக்க பரஞ்சோதியை மாறுவேடத்தில் வாதாபி அனுப்பினான்.
அவனும் அனுமன் போல் சிவகாமியை சந்தித்தான்.
சிவகாமி வர மறுத்து:
” மாமல்லர் எப்பொழுது படையெடுத்து வருகிறார்?”
“படையைப் பலப்படுத்தி விரைவில் வருவார்” – பரஞ்சோதி
.சிவகாமிக்கு மாமல்லரிடம் அன்றொரு நாள் ‘ புலிகேசியை தாக்கக் கூடாது’ என்ரு கெஞ்சியது நினைவுக்கு வந்தது..
‘இங்கு சிறையிருக்கும் மற்ற பல்லவ பெண்களை விட்டு விட்டு நான் மட்டும் வர முடியாது. மாமல்லரிடம் சொல்லுங்கள் ‘படையெடுத்து வந்து புலிகேசியைக் கொன்று வாதாபியை எரித்தபின் என்னை அழைத்துச் செல்லட்டும்’ – என்று சபதமிட்டாள்.
காலம் கடந்தது.
கி பி 630: மகேந்திரன் காலமாகினான்.
நரசிம்ம பல்லவன் பலத்தைப் பெருக்கினான்.
நட்பு நாடுகளின் மன்னர்களது நட்பைக் கூட்டினான்.
சிவகாமி சென்றபின் பாண்டிய இளவரசியை மணக்கிறான்.
பாண்டியர்களது நட்பும் கிடைக்கிரது.
கி பி 640ல் சீனத்து யாத்திரிகன் யுவான் சுவாங் காஞ்சிபுரம் வருகிறான்.
நரசிம்மன்-யுவான் சுவாங் நட்பு துளிர்க்கிறது.
மாமல்லபுரத்தில் ஒரு கற்சிலையில் யுவான் சுவங்கைப் பொறிக்கிறான்.
இலங்கை இளவரசன் மானவர்மன் நரசிம்மனுடைய நண்பனாகிறான்.
புலிகேசியைப் பழிவாங்கும் எண்ணம் நரசிம்மனிடம் கொழுந்து விட்டெரிந்தது
சரியான நேரத்துக்குக் காத்திருந்தான்.
புலிகேசிக்குக் காஞ்சி மேல் காதல்.. அது தணியாமல் புறப்பட்டான்
கி பி 642ல் முதலில் பாணர்களைத் தாக்கி வென்றான்.
பிறகு நேராகக் காஞ்சி மீது படையெடுத்தான்.
நரசிம்மன் இம்முரையும் புலிகேசியை காஞ்சி அருகில் வரவிட்டு – பின்னர் தன் தாக்குதலைத் தொடங்கினான்.
காஞ்சியின் பாதுகாப்பை மானவன்மனிடம் விட்டான்.
மானவன்மன் படைகளும் புலிகேசியுடன் போரிட்டன.
காஞ்சியிலிருந்து 20 மைல் தொலைவில் – மணிமங்கலம் என்ற இடத்தில் சாளுக்கியப் படைகள் தோற்கடிக்கப்பட்டன.
பல இடங்களில் நடந்த சண்டைகள்பல்லவர்களுக்கு சாதகமாக முடிந்தது.
தோல்வியைக் கண்டிராத சாளுக்கிய படை பின்னடைந்து வாதாபி நோக்கி ஓடத் துவங்கியது.
உற்சாகமடைந்த நரசிம்மனின் பல்லவர் படை – தளபதி பரஞ்சோதி தலைமையின் வாதாபி
சென்று தாக்கியது. அப்படையை புலிகேசி வாதாபியின் புறநகரில் எதிர்கொண்டான். சாளுக்கியப்படை நிர்மூலம் அடைந்தது.
அடுத்தடுத்த போர்களில் தோல்வியடைந்த புலிகேசி முடிவில் போர்க்களத்தில் கொல்லப்பட்டான்.
நரசிம்மன் வாதாபி கொண்டான் என்ற பெயர் கொண்டான்.
சிவகாமி மீட்கப்பட்டு காஞ்சி அடைந்தாள்.
வருடம் பல கடந்திருந்தது.
மாமல்லன் மனைவியுடன் இரு குழந்தைகளுடன் இருந்தான்.
சிவகாமி மனம் உடைந்து போனாள்.
மானவன்மனுக்கு ஆட்சி அளிப்பதற்காக நரசிம்மன் ஒரு கடற்படையை இலங்கைக்கு அனுப்பி வைத்தான்.
தலைவன் அருகில் இல்லாதலோ – பல்லவன் படை இலங்கையில் வெற்றி பெறாமல் திரும்பினர்.
மறுமுறை …நரசிம்மன் படையை கப்பலில் அனுப்பினான்.
இம்முறை- நரசிம்மன்- தானும் கப்பலில் வருவதாக நடித்தான்.
படைகளும் – நமது மன்னன் நம்முடன் இருக்கிறான் – என்ற உற்சாகத்தில் போரிட்டு வெற்றி பெற்றனர்.
எதிரி அரசன் கொல்லப்பட்டான்
அனுராதபுரம் கைப்பற்றப்பட்டது..மானவர்மன் இலங்கையில் முடி சூடினான்.
மாமல்லபுரத்தில் கடற்கறைக் கோயில்கள் அமைத்தான்.
மாபெரும் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான்.
சிவகாமி சொன்னது போல … பழி வாங்குதல் தலைமுறை பல தொடரும்.. அது சரித்திரத்தில் தொடர்ந்தது..
