Image result for நெஞ்சே
 ஏற்றம்வரும்,  தாழ்வுவரும்,
     இன்பதுன்பம்  வந்துசெலும்,
யாவர்க்கும்  வகுத்தநெறி ஒன்றே ஆகும்.
ஆற்றுவெள்ளம் பின்செலுமோ?
     அதைப்போல்தான்  வாழ்வுசெலும்.
அன்பிருந்தால் நடப்பதெல்லாம் நன்றே ஆகும்.
மாற்றங்கள்  நிலையாகும்,
      வாழ்வதுமோர்   கலையாகும்.
வந்துவந்து போகின்ற அலையே ஆகும்.
போற்றியொரு பாதொடுத்துப்
      பொன்றமிழின்  தேன்கொடுத்துப்
புதுச்சந்தம்  நீயெடுத்துப்  பாடு நெஞ்சே!ஊற்றெடுக்கும் அன்பொன்றே
உடல்வளர்க்கும்.  உயிர்வளர்க்கும்,
உறவென்னும் பயிர்வளர்க்கும், பயன்கொ டுக்கும்.
காற்றென்ற மூச்சதுதான்
      கழன்றுவெளி போனபின்னர்க்
காதறுந்த ஊசியதும் வருவ துண்டோ?
தோற்றவர்யார், வென்றவர்யார்
      தொல்லுலகில் சேர்த்துவைத்த
சொத்துவைத்துச் சொல்கின்ற வழக்கம் உண்டோ?
சாற்றியொரு  பாதொடுத்துத்
       தண்டமிழின் தேன்கொடுத்துச்
சந்தமொன்று நீயெடுத்துப் பாடு நெஞ்சே!
                                             —-      தில்லைவேந்தன்