குளுகுளு ஊட்டியான தக தக சென்னை ...

 

கோடைச் சூரியன் உமிழ்ந்த

ஒட்டுமொத்த வெயிலையும்

வெக்கையாய்க் கீழிறக்கிக் கொண்டிருக்கிறது

ஓட்டு வீடு.

தூங்க முடியாமல்

முதுகு நனைந்து படுத்துக்கிடக்கையில்

எப்படியோ வந்து தொலைத்தது ஆசை.

 

“கடைசியா பங்குனி உத்திரத்து அன்னைக்கு…

பத்து நாள் ஆச்சு”

மெதுவாகத் தொட்டுத் திருப்பிய விரல்களுக்கு

கிளர்ச்சி வயப்பட்டு

மெதுவாக மேலேறிப் படர்ந்தபோது

‘சொத்தென’ முதுகில் விழுந்தது ஏதோவொன்று.

 

பதறியபடி உதறி எழுந்து பார்த்தபோது

‘சின்னவ’ தலைமாட்டில் கிடந்தது

செந்தேள்க் குஞ்சொன்று. 

 

‘பெரியவ’ எழுந்து “அம்மா தண்ணீ” ன்னா

தேள் எடுத்துப் போட்டு

நீர் எடுத்துக் கொடுத்து

பாய் திரும்பி

விட்டம் பார்த்துக்கிடந்தோம்

ரகசியமாய்ப் புன்னகைத்தாள் !

வெக்கையும், வேட்கையும்,

விரக்தியும் ஏமாற்றமும் கசிய.

மொத்தமாய்க் கலைந்துவிட்டது

 

இனி மேகங் கூட எத்தனை நாளாகுமோ?

இந்தக் கொடுங் கோடையில்.