சேரமான் பெருமாள்

 

‘சரித்திரம் பேசுகிறது’ – இந்தத் தொடரில் கூறப்பட்டிருக்கும் சில விஷயங்கள் உண்மைக்குப் புறம்பானது – என்று ஒரு வாசகர் குற்றம் சாட்டியுள்ளார்.

பதில் சொல்வது நமது கடமை.

சரித்திரத்தில் எது உண்மை என்று சொல்வது என்பது..

…சில நேரங்களில் கடினமானது.

…பல நேரங்களில் இயலாத ஒன்று.

கிடைத்த ஆதாரங்களை வைத்து பல சரித்திர வல்லுனர்கள் ‘சரித்திரம்’ என்னும் ‘கதையை’ ஜோடிப்பர்.

அது கதை பாதி? உண்மை பாதி? அல்லது இரண்டும் சேர்ந்த கலவையா?

ஆதாரங்களில் சில புத்தக வடிவாக இருக்கும்.

சில கருத்துக்கள் அந்த ஆதாரத்தை எழுதியவர் யாரைச் சார்ந்திருப்பவர் என்பதைப் பொறுத்திருக்கிறது.

உதாரணத்துக்கு ஹர்ஷரைப் பற்றி அவரது அரண்மனை கவிஞர் பாணர் அவரது வெற்றிகளை பற்றி மட்டும் சொல்வார்.

அவரது தோல்விகளையும் வெற்றிகளாகவே சொல்வார்.

கிடைத்த ஆதாரங்களை ஆய்ந்தறிந்த வல்லுனர்களின் இடையேயும் கருத்து வேறுபட்டிருக்கும்.

ஒரே மரணம்!

ஒரு பார்வையில்…அது படுகொலையாக – மற்றும் கொடிய செயலாக சித்தரிக்கப்படலாம்.

மறு பார்வையில்…அதுவே மாவீரமாகவும் சித்தரிக்கப்படலாம்.

பொன்னியின் செல்வனில்..

சோழர்கள் ஹீரோக்கள்!

பாண்டியர்கள் துரோகிகள்!

அது கல்கியின் பார்வையில்..

(பொன்னியின் செல்வனின் தீவிர ரசிகர்கள் கொதித்தெழுந்தால்.. ‘யாரோ’ அப்படி சொல்லிவிட்டார் என்று சொல்லித் தப்பித்துக்கொள்ளலாம்).

எதற்காக இத்தனை பெரிய பீடிகை என்று தானே கேட்கிறீர்கள்?

பல்லவர்-சாளுக்கிய யுத்தங்களையே பார்த்துப் பார்த்து நொந்து போன வாசகர்களுக்கு ஒரு இடைவேளை.
கேப்பில கிடா வெட்டின கதை!

இந்த இதழில் .. சேரமான் பெருமாள் – கதை.

குழப்பங்கள் நிறைந்த ஒரு கதை.

சில சினிமாக்களின் ஒரே கதை இரண்டு மாறுபட்ட கதைகளாக கதைக்கப்படுகிறது.

அது போல் தான் இங்கு..

ஆகவே.. பொங்கவேண்டாம். பொறுத்திருங்கள்.

 

சேரமான் பெருமாளிள் என்ற சேர மன்னன் – தனது ராஜ்ஜியக் காலம் முடிந்தவுடன் என்ன செய்தான் என்பதில் தான் இரண்டு கதைகள்:

ஒரு கதை: ‘மெக்கா’.. மறு கதை: ‘கைலாசம்’

என்னடா இது?.. கைலாசம் எங்கே .. மெக்கா எங்கே?

அமாவாசைக்கும்- அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்?

சரித்திரம் பல விந்தைக் கதைகளை தனக்குள்ளே தக்க வைத்திருக்கிறது.

அந்தப் பெட்டகத்திலிருந்து ஒரு கதை ..சொல்வோம்.

முதல் கதை: மெக்கா

கி பி 625

இடம் : மகோதயபுரம்.-

ஒரு துறைமுக நகரம்.

பின்னாளில் இதை முசிரிப்பட்டினம் என்றும் சொல்வர்

இந்நாளில் இது கொடுங்களூர்.

சங்களா நதி (இன்றைய பெரியார் நதியின் துணை நதி) அரபிக்கடலுடன் சங்கமிக்கும் நகரம்.

சேர மன்னன் சேரமான் பெருமாளின் அரண்மனை நதியின் சங்கமத்துக்கு அருகிலிருந்தது.

மன்னன் அரண்மனையில் பஞ்சணை மீது படுத்திருந்தான்.

வெகு நேர முயற்சிக்குப் பின்.. அயற்சியால் .. தூங்கினான்.

நாள் முழுதும் பிரச்சினைகள்..

மன்னர் என்பது பிரச்சினைகளின் மொத்த உருவம்.

கனவுகளும் தொந்தரவுகளால் அவனைத் துரத்தியது.

கனவில் ஒரு காட்சி .. கீழ் வானத்தில் சந்திரன் பிரகாசிக்கிறான்..

அந்த நிலா.. அவன் பார்க்கும் போதே இரண்டாகப் பிளக்கிறது.

கனவிலிருந்து விழிக்கிறான்.

என்ன கனவு இது?

மீண்டும் உறக்கம்.

அதே கனவு.

சந்திரன் உடைகிறான்.

நன்கு விழித்த மன்னன் மெல்ல எழுந்து உப்பரிகை செல்கிறான்.

வானத்தை நோக்க.. சந்திரன் இரண்டு பகுதிகளாகத் தெரிந்தது.

சோம பானத்தை இரவு மிதமிஞ்சி அருந்தி விட்டேனோ? – மன்னன் மயங்குகிறான்.

வானத்தில் சந்திரன் முழுமையாகச் சிரிக்கிறான்.

காலை .. மன்னன் அரண்மனை சோதிடர்களை அழைத்து..

தன் கனவைக் கூறி விளக்கம் கேட்கிறான்..

அரண்மனை சோதிடர்களது விளக்கம் அரசனுக்கு திருப்தியளிக்கவில்லை.

அன்று காலை அரசபையில் .. வெளி நாட்டு பிரமுகர்களாது சந்திப்பு நிகழ்ந்தது.

அவர்கள்.. அரபு நாட்டவர்கள். இலங்கைக்குச்  சென்று கொண்டிருந்தவர்கள்.

மன்னன் அவர்களிடம் தனது விசித்திரக் கனவைப்பற்றிக் கூறினான்.

அவர்களது முகங்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.

“மன்னவா.. அரபு நாட்டில் இறைவனது தூதர் அவதாரம் எடுத்திருக்கிறார்.

அவர் இந்த அற்புத லீலை செய்துள்ளார். நாங்கள் இதைக் கண்ணாரக் கண்டிருக்கிறோம்” – என்றனர்.

மன்னன் வியப்புடன் “ “யாரோ அவர் யாரோ?” – என்றான்.

“அவரது பெயர் முகம்மது நபி. இஸ்லாம் மதத்தின் ஸ்தாபகர். இறைவன் அவருக்கு குரான் என்ற வேத நூலை 23 வருடங்கள் உபதேசித்தார்.” -என்றனர்.

மன்னன் மனம் அந்த விந்தையில் இணைந்தது.

மனதில் ஒரு சங்கல்பம்.

இஸ்லாமே தனது வாழ்க்கை வழி -என்று உறுதி பூண்டான்.

பிறகு எல்லாம் ரகசியமாக நடந்தது.

நாட்டின் பல பகுதிகளுக்கு பல ஆளுநர்களை நியமித்தான்.

கப்பலில் யாருக்கும் தெரியாமல் ஏறி சில நாட்களில் மெக்கா சென்றடைந்தான்.

நபிகள் நாயகத்தைக் கண்டு அவரது சீடனாகி – இஸ்லாம் மதத்தைத் தழுவினான்.

சில வருடங்கள் மெக்காவில் வாழ்ந்ததான்.

ஜெட்டா நாட்டு மன்னனின் தங்கையை மணந்தான்.

பூமாலையில் விழுந்த வண்டு போல்.. பேரின்பத்தை அடைந்தான்.

தாஜூதீன் என்ற பெயரைக் கொண்டான்.

ஆயினும், சேர நாட்டை அவன் மறக்கவில்லை.

அந்த மதத்தின் உயர்ந்த கொள்கைகளை சேர நாட்டிலும் பரப்ப வேண்டும் என்று எண்ணம் கொண்டான்.

சேர நாட்டில் மசூதிகள் அமைக்கப் பெரு விருப்பம் கொண்டான்.

கி பி 629`:

திரும்பி வர பயணம் மேற்கொண்டான்.

வழியில் ஓமான் வந்தவுடன் உடல் நிலை குன்றியது.

தனது முடிவு நெருங்கிவிட்டதை சேரமான் உணர்ந்தான்.

உடனே.. சேரநாட்டில் தான் ஆட்சிக்கு வைத்திருந்த தலைவர்களுக்கு கடிதங்கள் எழுதினான்.

‘இக்கடிதம் கொண்டுவரும் எனது நண்பர்களை சிறப்பாக வரவேற்று உபசரிக்கவும்’- என்று எழுதினான்.

அதை தனது நண்பர்களிடம் கொடுத்து அனுப்பினான்.

‘மாலிக் பின் தினார்’ என்பவன் தன் நண்பர்களுடன் கேரளா சென்றடைந்தான்.

அந்தக் கடிதங்களைக் கண்ட அந்த ஆட்சியாளர்கள் மகிழ்ந்தனர்.

சேரமான் மறைந்ததை எண்ணிக் கண் கலங்கினர்.

‘மாலிக் பின் தினார்’ கொடுங்களூரில் சேரமான் மசூதியைக் கட்டினார்.

அது இந்தியாவின் முதல் மசூதி!

அவருக்குப்பின் சேரநாட்டில் பல மசூதிக்கள் எழுந்தன.

காலப்போக்கில் …இந்தியாவில் அன்று பயிரிடப்பட்ட இஸ்லாத்தின் முதன் நாற்றுக்கள் மெல்ல மெல்ல வளர்ந்து மரங்களாகித் தோப்பானது. .

ஒரு கதை முடிகிறது..

(கொசுறு : இந்தக் கருத்தை மையமாக வைத்து கவிஞர் கண்ணதாசன் கதை எழுதி  ஒரு திரைப்படம் எடுக்க இருந்ததாக அவரே தன்  சுய சரித்திரத்தில் எழுதியுள்ளார். பிறகு அதை மையகமாக வைத்து சேரமான்  காதலி என்று ஒரு நாவல் எழுதினார். அதற்கு சாகித்ய அகாதமி விருது கூட கிடைத்தது ) 

அது சம்பந்தப்பட்ட வரிகள் சில: 

 

மறு கதை விரைவில்.