நீ போ அம்மா வந்திடுவா என்ற ...

பழைய கடன்!

நேற்றுக் குறித்த  பேச்செல்லாம்
     நினைவு நிழலின் வீச்சாகும்.
ஆற்றில் சென்ற வெள்ளத்தில்
     அடுத்த நாளும் குளிப்பதுண்டோ?
போற்றி அழைத்த போதினிலும்
     போன காலம் வந்திடுமோ?
காற்றில் கரைந்து போயிற்றோ?
     கண்முன் மறைந்து போயிற்றோ?

கடந்த காலக் கிழிசலினைக்
     கண்டு தைத்துச் சரிசெய்ய
உடைந்து   போன      ஊசியேனும்
      உலகில்  இன்று  கிடைத்திடுமோ?
நடந்து முடிந்த அத்தனையும்
     நன்றோ, தீதோ, எதுவெனினும்
கிடந்து துடித்துப் புலம்புவதால்
     கிடைக்கும் பயன்தான் ஒன்றுண்டோ

மணிகள், நாட்கள், மாதங்கள்
     மறைந்த காலச் சேதங்கள்.
துணியும் இற்றுக் கிழிவதைப்போல்
     தொலைந்த காலம் அழிந்திடுமே.
அணியும் உடையும் நைந்துவிடும்
       அழியும் உடலும் மறைந்துவிடும்.
பணிகள் ,கடமை  முடித்திடுவோம்
      பழைய கடனைக் கழித்திடுவோம்!