(சான் பிரான்சிஸ்கோவில் வீட்டிலிருந்து  நான் எடுத்த  காலையிலே  )

.                     காலையிலே!

கொஞ்சம் கதிரொளி, கொஞ்சம் இளவளி
     கூடிட வேண்டும் காலையிலே
பஞ்சின் ஒருதுளி பரவும் வான்வெளி
     பார்த்திட வேண்டும் காலையிலே
கெஞ்சும் குயிலொலி,கொஞ்சும் கிளியொலி
     கேட்டிட வேண்டும் காலையிலே
மிஞ்சும் பனிமலி பச்சைப் புல்வெளி
     மிதித்திட வேண்டும் காலையிலே.

கொஞ்சம் மலர்மணம், கொஞ்சம் மண்மணம்
     குலவிட வேண்டும் காலையிலே
துஞ்சும் இருளினம் இல்லை மறுகணம்
     தோய்ந்திட வேண்டும் காலையிலே
செஞ்சொல் பனுவல்கள் செய்து தமிழினில்
     திளைத்திட  வேண்டும் காலையிலே  ்
நெஞ்சின் கவலைகள், நேற்றின் திவலைகள்
     நீங்கிட  வேண்டும்   காலையிலே