குமாரசம்பவம் என்றால் என்ன? குமரனின் ...

இரண்டாம் சர்க்கம்

 

தாரகன் எனும்அசுரன் செய்கொடுமை தாளாது தேவரும் துடித்திட்டார்     

சூரிய்னைக் கண்ட தாமரை போல பிரும்மனைக் கண்டு முகம்மலர்ந்தார்

 

நான்முகனின் திருக்கண் தம்மேல் விழுந்ததும் அவரைப் போற்றிப் பாடினர்

 

“உலகத்தின்  முதல்வர்  நீவிர்! முக்கடவுள்  பணியையும் நீவிரே புரிகின்றீர்!

நீரில்நின் சக்தியைக்  கொண்டு  தாவர ஜங்கம உயிர்கள் தோற்றுவித்தீர்!

முக்குணம் சேர்ந்த நீவிர் முத்தொழில் மூன்றையும் ஒருங்கே செய்கின்றீர்!

ஆணாகி பெண்ணாகி இரண்டுமாகி  உலகின் முதல் தாய் தந்தையுமானீர் !

ஆயிரம் சதுர்யுகம் நின் பகல் அதில் விழிப்புடன்  படைப்புகள் படைக்கின்றீர்!

மறுஆயிர சதுர்யுகம்  நீர் உறங்க உலகமே பிரளய நீராகி  அழிகின்றது !

முதலும் முடிவும் இல்லாத நீவிரே அழிவற்றவர், உலகின் முழுமுதல் நாயகர் !

தாமே கருவியாகி படைத்தல் காத்தல் அழித்தல் மூன்றையும் செய்பவர் !

அடர்பொருள் அணுப்பொருள் பருப்பொருள் அனைத்துக்கும் அதிபதி நீவிர் !

பிரணவத்தை  மந்திரமாக்கி     ஸ்வரங்களை  யாகமாக்கி  பலன்களை   சொர்க்கமாக்கி

அனைத்திற்கும்  மூலமான வேதத்திற்கு வித்திட்ட முதல்வர் நீவிர்!  

பிருகிரதி- ஜீவன் தனித்தனி தத்துவம் என்பர், நீரோ இரண்டும் இணைந்தவர்

தேவர்கள் வணங்கும் பித்ருக்கள்  துதிக்கும்  ஆதி பகவானும்  நீவிர் !

அவிசும் நீவிர், அதை இடுபவரும் நீவிர், உண்பவர் நீர், உண்ணப்படுபவர் நீர்

அறிபவர் நீர் அறியப்படுபவரும் நீவிர்! அனைத்தின் பரம்பொருளும் நீவிரே!”

 

தேவர்மொழி கேட்ட நான்முகன் பார்வையால் அவர் துயரம் உணர்ந்தார்  

 

ஒளியின்றி மழுங்கிய வஜ்ராயுதம் கொண்ட இந்திரன்

வாடிய சர்ப்பமென  பாசக்கயிறு கொண்ட வருணன்     

ஆயுதம் ஏதுமின்றி  துயர்முகத்துடன் இருந்த குபேரன்

சக்தியிழந்த தண்டத்துடன் மனம்வெதும்பிய எமன்

சுவரில் பதித்த  சித்திரம்போல வெப்பமிழந்த சூரியன் 

வேகமின்றி தடைபட்டுத் தயங்கிக் கிடக்கும்  வாயு

 

பனிமறைத்த  சந்திரன் போல்  களையிழந்த தம்மக்களை கண்ட பிரும்மர்

காரணத்தை  அறிந்திடினும் காரியத்தை அவர்களையே  கூறப் பணித்தார்

 

பிரும்மருக்குப் பதிலுரைக்க இந்திரன் தேவகுரு பிரகஸ்பதியை வேண்ட

அறிவுக்கண் படைத்த பிரகஸ்பதியும்  கைகுவித்து சொல்லலானார்  

 

“ எல்லாம் அறிந்த தங்களுக்கு நாங்கள் படும் துயரம் தெரியாதா?

தங்களிடம் வரம் பெற்ற தாரகாசுரன் செய்யும் கொடுமைகள்   தீராதா?

தாரகன் மகளிர் வாடக்கூடாதென்று வெப்பம் குறைத்த  சூரியன்  

கலைகளை தாரகனுக்கு அர்ப்பணிக்கும் தாரகேசன் சந்திரன்

தாரகன் வனமலர்கள் உதிராமலிருக்க பயந்து வீசும் வாயு 

தனியே வந்த காலங்கள் மாறி ஒன்றாய் பயந்து வரும் ருதுக்கள்  

முத்தும் பவழமும்  தாரகனுக்கு  சமர்ப்பிக்கும் சமுத்திரராஜன்

தலைமீது ஒளிவீசும் ரத்தினம் கொண்டு காவல் பணிபுரியும்   வாசுகி  

ஆபரணங்கள் அனைத்தையும் காணிக்கையாய்த் தந்திட்ட  இந்திரன்  

 

இத்தனை சேவைகள்  செய்தும் கொடுமை குறையா தாரகன்

இந்திரனின் எழில்  நந்தவனத்தை அழித்து நிர்மூலமாக்கினன்

தேவமகளிரைச் சிறையிலிட்டு  சாமரம் வீசப் பணித்தனன்

தங்கமேருவைத்  தகர்த்தெறிந்து கேளிக்கை மலையாய் மாற்றினன்   

கங்கையின் தங்கத் தாமரை பறித்தெறிந்து  சேற்றுநீராய் மாற்றினன்

விண்ணில் பறக்கும் தேவரின்  பயணத்தைத் தடுத்து  நிறுத்தினன்   

யாகத்தின் பலனாம் அவிஸை  அக்னியிடமிருந்தே  பறித்தனன்

பாற்கடல் உதித்த இந்திரனின்  குதிரையையும் கவர்ந்தனன்

விஷ்ணுவின் சக்ராயுதம்தனை   அணியும் ஆபரணமாய் மாற்றினன்

இந்திரனின் ஐராவதத்தைத்  தன் யானைகள் கொண்டு தாக்கினன் 

தாரகன் கொடுமையில் தீராத சுரம் வந்ததெனத்    துடிக்கின்றோம் “

 

தேவர்படும்   கடுந்துயரம்  பகர்ந்து  பிரும்மரிடம்  வரம் வேண்டினர்

 

 

“தேவர் துயர்களைய  சேனைத்தலைவனை பிரும்மர்  படைத்திட வேண்டும்

அத்தலைவன்  துணைகொண்டு இந்திரன் தாரகனை அழித்திட  வேண்டும்

அவ்வீரன் கருணையால்  தேவகுலமும்   தம்பெருமையை  மீட்டிட வேண்டும்“

 

பிரும்மரும்  தேவர் துயர்களைக்  களையும்  சொற்களைச் சொல்லலுற்றார்  

 

“ நம்மக்கள் களிப்படைய மாண்ட புகழ் மீண்டுவர  காலம் கனிந்து வரும்

 உலக அழிவைத்  தடுக்கவே தாரகனுக்கு  வேண்டும்வரம் தந்தேன்

எந்நாளும் என்னாலும் இறக்கக்கூடாதென என்னிடமே வரம் பெற்றவன்    

கொடுமையினன்  ஆயினும் வரந்தந்த  நானே அழித்தல்  முறையன்று

சிவகுமரன்  தவிர வேறெவரும் தாரகனை அழித்தல் இயலாததொன்று        

சிவசக்தி ஒன்றே  அண்டம்  அனைத்திலும் அளவிலாப்  பெருமை பெற்றது

சிவனோ  ஸதியைப் பிரிந்து தவக்கோலம் பூண்டுள்ளார்   

ஸதியோ  பார்வதி உருவெடுத்து இமவான் மடியில்  வளர்கின்றாள்

பார்வதியின் பேரெழில்  சிவபிரானைக் காந்தமென இழுத்திட வேண்டும்

சிவனின் சக்தியைப் பார்வதி தாங்கி புத்திரன் பிறந்திட   வேண்டும்

உதித்திடும் புத்திரன்  தாரகனை அழித்து மூவுலகைக்  காத்திட வேண்டும்   

சிவபார்வதி ஒன்றுசேர தேவரும் உடனே முயன்றிடவேண்டும் “

 

வழிசொன்ன பிரும்மரின் மொழி கேட்டு தேவரும் வாழ்வில் ஒளி பெற்றார்

சிவபார்வதி   காதலில் கலந்திட மன்மதனே  தக்கவன் எனஇந்திரன் எண்ண  

கரும்புவில்லும் மலரம்பும் தரித்த மன்மதன் கண்முன்  தோன்றி நின்றனன்

 

(தொடர்ச்சி அடுத்த இதழில் )