குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.

  “குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.

  எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

  பார்த்து, கேட்டு மகிழுங்கள் !

இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:

 

  1. பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020
  2. அம்மா அப்பா ! –  ஜூலை 2020
  3. ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020
  4. இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020

 

  1. எனது நாடு

Consulate General of India - Dubai

எனது நாடு இந்தியா !

என்றும் நானும் இந்தியன் !

உலகம் போற்றும் நாடிது !

உயர்ந்த காந்தி வீடிது !

 

இமயம் முதல் குமரி வரை –

எங்கள் தேசம் விரியுது !

எந்த பாஷை பேசினாலும்

அன்பும் பண்பும் தெரியுது !

 

தெலுங்கு தமிழ் இந்தி என்று

மொழிகள் பல பேசுவோம் !

தோளோடு தோள் சேர்த்து

தோழமை கொண்டாடுவோம் !

 

கங்கை முதல் காவிரி

அனைத்தும் எங்கள் சொந்தமே !

பரதம் பாட்டு கலைகள் பல

பிறந்து வளரும் பூமியே !

 

இந்து முஸ்லிம் கிறித்துவர்கள் –

இணைந்து வாழும் தேசமாம் !

இறைவன் என்றும் ஒன்றுதான் !

மறைகள் காட்டும் மார்க்கமாம் !

அன்னை தந்தை தந்த நாட்டை –

பேணி நானும் போற்றுவேன் !

அடுத்து வரும் தம்பி தங்கை

வாழ்த்தும் விதம் வாழுவேன் !

 

சித்தர் புத்தர் அவதரித்த –

சீர் மிகுந்த இந்தியா !

புத்தி சக்தி புவிக்களித்து –

புகழைச் சேர்த்த இந்தியா !

 

உலகம் போற்றும் தேசமென்று

இந்தியாவை மாற்றுவோம் !

ஒற்றுமையாய் வாழ்ந்து நாங்கள்

உலகுக்கு வழி காட்டுவோம் !

 

                  

 

  1. காக்கா ! காக்கா !

Vegetarian Crow(Raven) Feeding In Jaipur India. - YouTube

 

காக்கா காக்கா வா வா வா !

என் ஜன்னல் பக்கம் வா வா வா !

உன்னைப் பார்த்தால் எப்போதும்

என் உள்ளம் துள்ளுது கா கா கா !

 

எங்கள் வீட்டுச் சாப்பாட்டில் –

உனக்கும் கொஞ்சம் தருவேன் நான் !

என்னைப் பார்த்து தலை சாய்க்கும் –

நண்பன் நீயே கா கா கா !

 

கருப்பாய் இருப்பது தனி அழகு என

கற்றுக் கொடுத்தாய் கா கா கா !

கொத்தித் தின்னும் உன் அழகை

நித்தம் ரசிப்பேன் கா கா கா !

 

தாத்தா பாட்டி பல பேர்கள்

தனியே இருப்பார் வீட்டினிலே !

நீயே அவர்கள் துணை காக்கா !

தினமும் அவரை பார்த்துக்கொள் !

 

கூட்டம் கூட்டமாய் பறக்கின்றீர் !

சேர்ந்து வாழ்ந்தே சிறக்கின்றீர் !

செல்லமான என் காக்கா !

பக்கம் வந்து பார் காக்கா !

 

காக்கா காக்கா வா வா வா !

என் ஜன்னல் பக்கம் வா வா வா !

உன்னைப் பார்த்தால் எப்போதும்

என் உள்ளம் துள்ளுது கா கா கா !