மனம் - வாழ்க்கை கவிதை

சொந்தமென்று வந்தவொன்று சொந்தமில்லை என்றானால்

   சந்ததமும் சங்கடங்கள் சொந்தமென்று ஆகும்

அந்தவொரு துன்பநிலை அனுபவிக்க நேர்ந்துவிட்டால்

   அந்தமென உடலாவி அனலின்றி வேகும்.

எந்தவொரு மனிதனுக்கும் இல்வாழ்க்கை பட்டமது 

   அந்தரத்தில் கயிறின்றி ஆடுமெனில் நோகும்.

சிந்தவிழி நீரில்லா சந்தர்ப்ப சூழ்நிலையை

   சந்திக்க விட்டபடி சகலதுமே போகும் 

*

பந்தொன்று பலகால்கள் பட்டடேதா னுதைவாங்கும் 

   பரிதாப நிலைவந்து படர்வதுபோ லாகும்   

பொந்துக்குள் குடியிருக்கும் பொல்லாத பாம்பின்வால்

    பிடித்திழுத்து விட்டதுவாய் பாதியுயிர் சாகும்  

கொந்தளிக்கும் பெருங்கடலின் கோரஅலை மோதலினைக்

   கொண்டதுவே இதயத்தின் குமுறல்க லாகும்

நந்தவனம் தீப்பிடிக்க நறுமலர்கள் கருகுகையில்

   நறுமணமும் துர்மணமாய் நாறுவதா யாகும்!

*

சந்தர்ப்ப சூழ்நிலைகள் சதிசெய்து விடுவதினை 

    சரிசெய்ய முடியாத சாபத்தின் எல்லை.

குந்தகங்கள் விளைவித்துக் கொடுக்கின்றப் பரிசாக

   குடும்பத்துள் மூளுகின்ற கொடுந்துயர முல்லை,

வெந்தழிந்த வனத்துக்குள் விளையாடும் புகைபோல

   வேர்கருகி மடியும்வரை விட்டிடாதத் தொல்லை

பந்தத்துள் நிகழ்மெனில் பலியாடாய்க் அறுபட்டுப்    

   போகும்பா தைமிகவும் தூரத்தில் இல்லை