குண்டலகேசியின் கதை -3

KANKALAI #குண்டலகேசி-அறிமுகம் #சங்க இலக்கியம் #ஐம்பெரும் காப்பியங்கள் - YouTube

முன் கதைச் சுருக்கம் :

A0111

பூம்புகார் நகரத்துப் பெருங்குடி வணிகனின் அருமை மகள் பத்திரை.
சிறு வயதில் தாயை இழந்தாலும் அன்புத் தந்தையின் அரவணைப்பில் மகழ்ச்சி அடைந்தாள்..
ஒருநாள், அரசனின் வீரர்கள், கொடிய கள்வன் காளன் என்பவனைக் கொலைக் களத்திற்கு இழுத்துச் செல்வதைக் கண்டாள். அவன் மீது காதல் கொண்டாள்…….

குண்டலகேசி (மூலமும் உறையும்): By Praveen Kumar G by நாதகுத்தனார்

பத்திரை நிலை!

ஓதிய கல்வி, கேள்வி,
ஒன்றுமே உதவ வில்லை.
ஈதலும், அறமும் கொண்ட
இல்லதன் பெருமை விட்டாள்.
கோதிலாத் தந்தை காத்த
குலமுறை மரபும் விட்டாள்.
காதலால் நாணும் கெட்டாள்,
காரணம் அறிய மாட்டாள்

 

எயிற்றிலே நஞ்சை ஏந்தும்
எழில்கொளும் அரவம் உண்டு
வயிற்றிலே முத்தைத் தாங்கும்
வனப்பிலாச் சிப்பி உண்டு
பயிற்றியே விளக்கும் கல்வி
பாங்குடன் கற்ற போதும்,
கயிற்றினால் ஆடும் பாவை
காதலால் ஆனாள் பாவை.

( எயிற்றில் — பல்லில்)

தோழியிடம் தன் காதலைக் கூறுதல்

என்னுயிர் அனையாய் நானிங்கு
இயம்பிடும் சொற்கள் கேளாய்!
இன்னுயிர் தங்க வேண்டின்
இவனையான் மணக்க வேண்டும்
மின்னெனச் செல்வாய், எந்தை
விரும்பிட இதனைச் சொல்வாய்
மன்னனைப் பார்த்துப் பேசி
மாற்றிட வேண்டும் ஆணை.

 

தோழியின் அறிவுரை

கள்ளினை அமுதாய் எண்ணிக்
களிப்புடன் பருக லாமோ?
முள்ளினை மலராய் எண்ணி
முடிதனில் சூட லாமோ?
புள்ளினை வேடன் கையில்
புகலெனக் கொடுக்க லாமோ?
கள்ளமும் சூதும் கொண்ட
கயவனை விரும்ப லாமோ?

 

செய்தி அறிந்த தந்தை புலம்புதல்

மங்கையின் தோழி செய்தி
வணிகனைக் கண்டு சொன்னாள்.
வெங்கதிர் தளர்ந்து மேற்கில்
வீழ்வதைப் போலச் சாய்ந்தான்.
தங்கிய புகழும் போனால்,
தள்ளரும் மானம் போனால்,
எங்குலப் பெருமை போனால்,
இங்குநான் வாழேன் என்றான்.

 

இந்தவோர் இழிவு நேர
என்பிழை செய்தேன் கொல்லோ!
முந்தையோர் முறைகள் யாவும்
முடிந்தன கொல்லோ! என்றன்
சொந்தமும் நட.பும் ஊரும்
சொல்வதைப் பொறுப்பேன் கொல்லோ!
சிந்திடும் கண்ணீர் மல்கச்
செப்பினன் உயிரைத் தாங்கி.

பத்திரையிடம் தந்தை கூறுவது

வழிவழியாய் வந்தகுடிப் பெருமை விட்டு
வழிப்பறிசெய் கொள்ளையனை விழைந்தாய் போலும்
பழிவருமே தந்தைக்கு மறந்தாய் போலும்
பற்றென்மேல் வைத்ததெல்லாம் துறந்தாய் போலும்
விழிவிரித்த வலையினிலே விழுந்தாய் போலும்
வெல்லுமதி முழுதினையும் இழந்தாய் போலும்
அழிவென்ற வழிவிரும்பி நடந்தாய் போலும்
அன்புடனே சொல்கின்றேன், கடந்து போவாய்.

கேட்டவை எல்லாம் தந்தேன்
கேட்டினைத் தரவே மாட்டேன்.
காட்டுவாழ் புலிஅன் னானைக்
கடிமணம் புரிய ஒப்பேன்
ஊட்டியே வளர்த்த பெண்ணை
உயிருடன் இழக்க மாட்டேன்
நாட்டினில் வேறு நல்லோன்
நன்மணம் செய்து வைப்பேன்.

 

பத்திரை மறுமொழி.

உளத்தினால் விரும்பி விட்டால்
உறுமணம் என்றே சொல்வர்.
வளத்தினால், புகழால் ஓங்கி
வாழ்வதால் தயங்கு கின்றாய்.
அளத்தலில் அன்பால் மெல்ல
அவனையான் திருத்தி, வாழ்வில்
விளைத்திடும் விந்தை கண்டு
வியந்துநீ மகிழ்வாய் என்றாள்.

 

பொம்மையால் மகிழ்ந்த காலம்
போனதே பின்னர் என்றன்
அம்மையால் மகிழ்ந்த காலம்
அதுவுமே போன தந்தோ!
இம்மையில் மகிழ மீண்டும்
இந்தவோர் வாய்ப்புத் தந்தால்
செம்மையாய் வாழ்ந்து காட்டிச்
சிறப்பதைக் காண்பாய் நீயும்!

(தொடரும்)