எல்லாம் இருக்கிறது வீட்டில்

எனக்கென்று எதுவுமில்லை

பிடித்த உணவு, பிடித்த உடை,

பிடித்த பலகாரம், பிடித்த தேநீர்,

விழிப்பு வரும்வரை உறக்கம்,

பிடித்த புத்தகம், பிடித்த பாடல்,

பிடித்த திரைப்படம், பிடித்த கதாநாயகன்

எல்லாம் மறந்து பலகாலமாகிவிட்டன.

எனக்கு திருமணமாகிவிட்டது

விரும்பிய அலைவரிசை பார்த்து,

பாடல் கேட்டு, கூடவே பாடி,

சின்னதாய் ஆட்டம் போட்டு,

தூறல் ரசித்து, தூரிகை பிடித்து,

காதல் மொழிகள் கேட்டு, பேசி,

கையில் மருதாணி வைத்து

சில ஆண்டுகளாகிவிட்டன

எனக்கு இரண்டு குழந்தைகள்

 

உதிரிமல்லி வாங்கி

ரசித்துச் சரம் தொடுத்து

ஆசை தீர முகர்ந்து

தலையில் சூட அவகாசமில்லை

கோப்பை நிறைய

கொதிக்க கொதிக்க

சுக்குமல்லித் தேநீர் அருந்த

அவகாசமில்லை

அக்கம் பக்கம் நட்பு பாராட்ட

அம்மா, அக்காவிடம் அலைபேசியில் பேச

நாட்டு நடப்பு அறிய செய்திகள் பார்க்க

அவருக்கு வரும் இதழ்கள் படிக்க

எதற்கும் நேரமில்லை

எது எப்படிக் கிடந்தாலும்

கொஞ்ச மட்டுமே குழந்தைகளைத் தூக்குவார்.

எழுதும்போது குழந்தைகள் குறுக்கிட்டால்

கடுங்கோபம் வரும் அவருக்கு

வீடு திரும்பியதும் தேநீர் வேண்டும் அவருக்கு

வீடு திரும்பும் நேரம் மட்டும்

ஒருநாளும் சொல்லமாட்டார்

என்றாவது சொல்லிச் சென்றாலும்

சொன்ன நேரம் வரமாட்டார்

பண்டுவம் பார்ப்பது முதல்

பாடம் சொல்வது வரை

எல்லாம் செய்துமுடித்து

படுக்கையிலும் சிரிக்க வேண்டும்.

பரவசம் என்பதை உணர்ந்தே

பலகாலமாகிவிட்டது

  

அவதி அவதியாய் ஓடும் வாழ்வில்

இறந்த காலமே மறந்துவிட்டது

எதிர்காலமும் இறந்துவிட்டது

என் காலம் எதுவும்

என் கடிகாரப்படியில்லை

வீடு என்னும் தொழிற்சாலையில்

விடுமுறையே இல்லை

விலக்கு நாட்களிலும் விலக்கு இல்லை.

ஆனால் ஊரெல்லாம் சொல்லித் திரிவார்

அவ வீட்டுல சும்மாதான் இருக்குறா என்று