நான் இதை வாங்கி இருக்கவே கூடாது

நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள்

இன்னும் யார் யாருக்கோ

தேவைப்படும் போதெல்லாம்

அலைபேசி ஒலிக்கிறது

வீட்டுக் கதவு தட்டப்படுகிறது.

இரவல் வாங்கியவர்கள் யாரும்

விரைவில் தருவதே இல்லை

வீடு வந்து ஒருபோதும்

ஒருமாதம் தொடர்ச்சியாக

வீட்டில் இருந்ததும் இல்லை

 

நிலையாமைத் தத்துவங்கள்

படித்திருந்த போதும்

பொதுவுடைமை நூல்கள்

வாசித்திருந்தபோதும்

பக்குவம் போதவில்லை

எனதென்ற உணர்வை

மனம் விடுவதாயில்லை.

 

இரவல் கொடுத்து விட்டு, 

திரும்ப வரும் நாள் வரையில்

நினைத்துக் கொண்டேயிருக்கிறது

திரும்ப வந்தாலும்

இனி எப்பொழுது

யார் கேட்டுவருவார்களோ

என பதட்டப்படுகிறது

இது மனநோயாய் இருக்குமோ?

 

“அதென்ன தங்கப் பல்லாக்கா டே

ரொம்பத்தான் சலம்புத”

என நினைப்பவர்கள் மட்டும்

வாங்கி வையுங்கள்

வீட்டில் ஒரு கோக்காலி