முன்கதைச்சுருக்கம்: புத்தரின் உபதேசங்களில் ஈடுபட்ட மகத நாட்டரசன் பிம்பிசாரன் தனது அரண்மனைத் தோட்டத்து அசோகமரத்தடியில் புத்தர்பிரானுக்காக ஒரு வழிபாட்டு மேடையை அமைத்திருக்கிறான். அவன் இளவரசன் அஜாதசத்ருவிற்கு கேட்டுக்கொண்டபடி அவனுக்கு அரசைக் கொடுத்துவிட்டு நகரிலிருந்து சிறிது தொலைவில் வசித்துவந்தான். அரசி லோகேஸ்வரி இதனை விரும்பவில்லை. அவளுடைய மகன் சித்ராவும் பிட்சுவாகிவிட்டதில் மனம்மிக நொந்து போயிருக்கிறாள்.

            நாட்டியமங்கையான ஸ்ரீமதியை வழிபாட்டு மேடையில் காணிக்கை செலுத்தக் கூறியுள்ளனர். இளவரசிகளுக்கும் அரசிக்கும் அதில் விருப்பமில்லை; எவ்வாறு ஸ்ரீமதியைத் தண்டிக்கலாம் எனக் கலந்தாலோசிக்கின்றனர். இதனிடையே நகரில் புத்தருக்கெதிராகக் கலகம் மூள்கிறது. புத்தரின் எதிரியான தேவதத்தன் அரசன் அஜாதசத்ருவைத் தன்வயப்படுத்த முயல்கிறான். புத்த பிட்சுக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். அரண்மனை நாட்டியமங்கையான ஸ்ரீமதியை புத்தரின் வழிபாட்டு மேடையில் நடனமாடச் செய்வதன் மூலம், அவளையும் தண்டித்து, வழிபாட்டு மேடையையும் அலங்கோலமாக்கலாம் என இளவரசிகள் கலந்தாலோசிக்கின்றனர்.

           இனித் தொடர்ந்து படிக்கவும்:  

                                           ————————————

           பத்ரா: அஜிதா, அது என்ன சப்தம்? யாரோ அழுவது போல உள்ளதே அல்லது அது கோபத்தில் கத்தும் குரலா?

           நந்தா: அழிப்பவர்கள் ஏற்கெனவே தோட்டத்தில் தங்கள் நாசவேலையைச் செய்கிறார்கள் போலுள்ளதே. சீக்கிரம், ஸ்ரீமதி! வா, அரசியின் மாளிகையில் நாம் ஒளிந்து கொள்ளலாம்.  (நந்தா செல்கிறாள்)

           பத்ரா: வா அஜிதா. இது ஒரு பயங்கரமான தீயகனவு போலுள்ளதே!

  (எல்லா இளவரசிகளும் வெளியே செல்கிறார்கள்)

           மாலதி: சகோதரி, நான் கேட்பது மரணத்தின் குரலை! ஆகாயத்தில் அந்தத் தீப்பிழம்பைக் கண்டாயா? நகரமே சீக்கிரத்தில் பற்றி எரியப் போகிறது. ஓ! நமது கடவுளின் பிறந்தநாளன்றுதான் இந்தச் சாவின் வெறியாட்டம் நிகழ வேண்டுமா?

           ஸ்ரீமதி: புதிய பிறப்பின் வெற்றிகரமான ஊர்வலம் சாவின் வாயில்வழியாகவே செல்லும்.

           மாலதி: எனது பயங்களை எண்ணி நான் வெட்கப்படுகிறேன் சகோதரி. நாம் வழிபாட்டுக்குச் செல்லும் வேளையில் பயப்படுவதென்பது எவ்வளவு கொடுமையானது.

           ஸ்ரீமதி: எதனைக் கண்டு நீ பயப்படுகிறாய் சகோதரி?

           மாலதி: எந்த அபாயத்தை எண்ணியுமல்ல, ஆனால் எனக்கு ஒன்றும் புரியாததனால் எல்லாமே இருட்டாக உள்ளது.

           ஸ்ரீமதி: வெளித்தோற்றங்களுக்கிடையே வாழாதே. தனது அழிவற்ற பிறந்தநாளைக் காணும் அவரிடம் உன்னையே கண்டெடு; நமது பயங்களனைத்தும் மறைந்துவிடும்.

           (ஒரு காவல்பெண் நுழைகிறாள்.)

           காவல்பெண்: எனக்குக் கீழ்ப்படிய மாட்டாயா, ஸ்ரீமதி?

           மாலதி: நீங்கள் ஏன் இவ்வளவு கொடூரமானவர்களாக மாறிவிட்டீர்கள்? எங்களை இங்கிருந்து போகச் சொல்லாதீர்கள். இரு பெண்கள் தோட்டத்து மண்ணில் அமர்ந்து கொண்டிருந்தால் அது உங்களை எவ்விதத்தில் துன்புறுத்துகிறது?

           காவல்பெண்: அது உங்களுக்குந்தான் என்ன நன்மையைச் செய்யப்போகின்றது?

           மாலதி:  ஏனெனில் எங்கள் கடவுள் ஒருதரம் இங்கு வந்திருப்பதனால், இந்தத் தோட்டத்தின் மூலையிலுள்ள மண்கூடப் பவித்திரமானது; நீ எங்களை வழிபாட்டு மேடையை அடைய அனுமதிக்காவிட்டால், நாங்கள் இங்கேயே அமர்ந்து, இருக்குமிடத்திலேயே பாடல்களைப் பாடாமலும், மலர்களை இடாமலும் எங்கள் உள்ளங்களில், அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடுவோம்.

           காவல்பெண்: நீங்கள் ஏன் பாடக்கூடாது? நான் அதைக்கூடக் கேட்கத் தகுதியில்லாத மோசமானவளா? மற்ற காவலர்கள் இப்போது இங்கே இல்லை: ஸ்ரீமதி, நமது கடவுளின் புகழை உன் இனிய குரலால் நீ இசைப்பதனை நான் கேட்க  எனக்கு ஒரு வாய்ப்பை அளி. நானும் அவருடைய தொண்டர் என்று நீ அறிந்துகொள்ள வேண்டும். என்றைக்கு எனது பாவமிகுந்த கண்களினால் அவரை இந்த அசோகமரத்தடியில் கண்டேனோ, அன்றிலிருந்து எனது உள்ளத்தில் ஒரு நிரந்தரமான இடத்தை அவர் எடுத்துக்கொண்டுவிட்டார்.

           (விழுந்து பணிகிறாள்)

           ஸ்ரீமதி: (இசைக்கிறாள்)

                     அறிவின் ஒளியான சூரியனுக்கு வணக்கங்கள்!

                     எனது உள்ளத்தின் ஆனந்தத்திற்கு வணக்கங்கள்!

                     பெருந்தன்மையின் கடலுக்கு வணக்கங்கள்!

                     சாக்கிய குலத்தின் மகனுக்கு வணக்கங்கள்!

           என்னுடன் நீயும் ஏன் இசைக்கக்கூடாது?

           காவல்பெண்: எனது பாவம் நிறைந்த நாவினால் நான் அதனைக் கூறலாமா?

           ஸ்ரீமதி: உனது உள்ளத்திலுள்ள அன்பு உன் நாவைப் புனிதமாக்கும். என்னுடன் கூடப் பாடுவாய்!

                     (அவர்கள் சேர்ந்திசைக்கிறார்கள்)

                     அறிவின் ஒளியான சூரியனுக்கு வணக்கங்கள்!

                     எனது உள்ளத்தின் ஆனந்தத்திற்கு வணக்கங்கள்!

                     பெருந்தன்மையின் கடலுக்கு வணக்கங்கள்!

                     சாக்கிய குலத்தின் மகனுக்கு வணக்கங்கள்!

           காவல்பெண்: எனது உள்ளத்திலுள்ள சுமை இப்போது மிகவும் குறைந்துவிட்டது. இந்தநாள் ஒரு நிறைவான நாள். நான் உன்னிடம் கூறவந்ததைக் கூறிவிடுகிறேன். இங்கிருந்து தப்பிச்செல்ல நான் உனக்கு ஒரு வழியைக் காண்பிக்கிறேன்.

           ஸ்ரீமதி: ஆனால்…. ஏன்? எதற்காக?

           காவல்பெண்: மகாராஜா அஜாதசத்ரு, தேவதத்தரிடமிருந்து தீட்சை பெற்றுக்கொள்ளப் போகிறார். அதனால், அசோக மரத்தின் கீழுள்ள நமது கடவுளின் வழிபாட்டு மேடையை உடைத்தெறிந்து விட்டார்.

           மாலதி: ஐயோ! ஐயோ! சகோதரி! இந்த அபாக்கியவதிக்கு அந்த வழிப்பாட்டுமேடையின் தரிசனம் மறுக்கப்பட்டு விட்டதே. எல்லாமே நசித்து விட்டதே!

           ஸ்ரீமதி: நீ எப்படி அவ்வாறு சொல்லலாம் மாலதி? நமது கடவுளின் நிரந்தரமான இருப்பிடம் சுவர்க்கத்தில்தான். மகாராஜா பிம்பிசாரர் கட்டிவைத்த மேடைதான் அழிக்கப்பட்டது; ஆனால் நமது கடவுளின் இருப்பிடம் கற்களால் பலப்படுத்தப்பட வேண்டாம்; ஏனெனில் அவருடைய புகழ் ஒன்றே அதனை எப்போதும் காப்பாற்றும்.

           காவல்பெண்: இந்த வழிபாட்டு இடத்திற்கு யாரேனும் மாலை வழிபாட்டிற்கு விளக்கைக் கொண்டுவந்தாலோ அல்லது ஒரு பாடலைப் பாடினாலோ, அவர்களுக்கு மரணதண்டனையே அரசரால் விதிக்கப்பட்டுள்ளது. அதனால், ஸ்ரீமதி, நீ இங்கு ஏன் இருக்க வேண்டும்?

           ஸ்ரீமதி: நான் இங்கேயே தான் இருக்க வேண்டும்.

           காவல்பெண்: எத்தனை நேரம்?

           ஸ்ரீமதி: வழிபாட்டுக்கு அழைப்பு வரும்வரை – நான் உயிரோடு உள்ளவரை.

           காவல்பெண்: நான் முதலிலேயே உன்னிடம் மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன்.

           ஸ்ரீமதி: மன்னிப்பா?

           காவல்பெண்: அரசரின் ஆணைப்படி நான் உனக்குத் தீங்கிழைக்க நேரலாம்.

           ஸ்ரீமதி: அப்படியானால் நீ அதனைச் செயல்படுத்த வேண்டும்.

           காவல்பெண்: என் கரங்கள் அரண்மனை நாட்டியமங்கையைத் தாக்கலாம்; ஆனால் எங்கள் கடவுளின் பெண் ஊழியர் முன்பாக நான் சிரம்தாழ்த்திப் பணிகிறேன். எனக்கு மன்னிப்பை அளிப்பாயாக.

           ஸ்ரீமதி: என்மீது விழும் அத்தனை அடிகளுக்கான மன்னிப்பையும் அளிக்க எனது தலைவர் அருளுவாராக. புத்தபிரானே, மன்னிப்பீர்! புத்தபிரானே, மன்னிப்பீர்!

                                (இன்னொரு காவல்பெண் நுழைகிறாள்.)

           இரண்டாம் காவலாளி: ரோடினி!

           முதலாமவள்: என்ன? பாடலி?

           பாடலி: நமது தாயான பெண்மணி உத்பலாவை அவர்கள் கொன்றுவிட்டனர்.

           ரோடினி: ஓ, என்ன துர்ப்பாக்கியம்!

           ஸ்ரீமதி: யார் அவளைக் கொன்றது?

           பாடலி: தேவதத்தனின் சீடர்கள்.

           ரோடினி: ரத்த ஆறு ஓடத் துவங்கிவிட்டது. அவ்வாறெனின் நம்மிடமும் ஆயுதங்கள் உள்ளன. இந்தப் பாவத்திற்கான தண்டனை கிடைக்காமல் போகாது. ஸ்ரீமதி, இப்போது மன்னிப்பைப்பற்றிப் பேசாமல், ஆயுதங்களை எடுத்துக்கொள்.

           ஸ்ரீமதி: என் ஆர்வத்தைத் தூண்டாதே, ரோடினி. நான் ஒரு வெறும் நாட்டியப்பெண் தான்; ஆனாலும் என் கைகள் நீ வைத்திருக்கும் வாளை ஏந்த விழைகின்றன.

           ரோடினி: இந்தா, எடுத்துக்கொள்!

           அவள் வாளைக் கொடுக்கிறாள்; ஸ்ரீமதி அதனைப் பெற்றுக் கொண்டவள், கைகள் நடுங்க அதனைக் கீழே தவற விடுகிறாள்.

           ஸ்ரீமதி: வேண்டாம், வேண்டாம்! என்னிடம் எனது தலைவரிடமிருந்து பெற்ற மற்ற ஆயுதங்கள் உள்ளன. போராட்டம் தொடங்கிவிட்டது. அனைத்து தகாத செயல்களும் முறியடிக்கப்படட்டும். என் தலைவரின் எண்ணம் நிறைவேறட்டும்!

           பாடலி: வா, ரோடினி, நாம் அன்னை உத்பலாவின் உடலை இடுகாட்டிற்கு எடுத்துச் செல்வோம்.

           (அவர்கள் செல்கிறார்கள். ரத்னாவளி வேறுசில காவலர்களுடன் உள்ளே நுழைகிறாள்.)

           ரத்னாவளி: அவள் இதோ இருக்கிறாள். அவளுக்கு அரசரின் ஆணை என்னவென்று தெரியட்டும்.

           ஒரு காவலன்: ஸ்ரீமதி, அரசரின் நாட்டியமங்கை, அவருடைய கட்டளைப்படி, அசோகவனத்திற்குச் சென்று அங்கு நடனமாட வேண்டும்.

           ஸ்ரீமதி: நடனமாடவா? இன்றைய தினத்திலா?

           மாலதி: என்ன? இப்படியொரு கட்டளையைப் பிறப்பிக்க மகாராஜா அச்சம் கொள்ளவில்லையா?

           ரத்னாவளி: ஆ! கட்டாயமாக! உண்மையாகவே மக்களின் தலைவருக்கு தனது நாட்டிய மங்கையின் முன்பு நடுநடுங்கும் காலம் வந்துவிட்டது. ஓ! எத்தகையதொரு திருத்தவே முடியாத பட்டிக்காட்டுப் பெண்!

           ஸ்ரீமதி: எப்போது நாட்டியமாட வேண்டும்?

           ரத்னாவளி: இன்றுமாலை, வழிபாட்டு நேரத்தில்….

           ஸ்ரீமதி: நமது கடவுளுடைய இருக்கைக்கு முன்பாகவா? அவருடைய கோயிலிலா?

           ரத்னாவளி: ஆமாம்.

           ஸ்ரீமதி: அப்படியே ஆகட்டும்!

          (அனைவரும் செல்கின்றனர்)

         ( தொடரும் )