முன்கதைச்சுருக்கம்: புத்தரின் உபதேசங்களில் ஈடுபட்ட மகத நாட்டரசன் பிம்பிசாரன் தனது அரண்மனைத் தோட்டத்து அசோகமரத்தடியில் புத்தர்பிரானுக்காக ஒரு வழிபாட்டு மேடையை அமைத்திருக்கிறான். இளவரசன் அஜாதசத்ரு கேட்டுக்கொண்டபடி அவனுக்கு அரசைக் கொடுத்துவிட்டு பிம்பிசாரன் நகரிலிருந்து சிறிது தொலைவில் வசித்துவந்தான். அரசி லோகேஸ்வரி  இதனை விரும்பவில்லை. அவளுடைய மகன் சித்ராவும் பிட்சுவாகிவிட்டதில் மிகவும் நொந்து போயிருக்கிறாள்.

          அரசிக்கு புத்தமதத்தில் நம்பிக்கை தளருகின்றது; அதனைப் பலவாறு நிந்திக்கிறாள். நகரில் புத்தருக்கெதிராகக் கலகம் மூள்கிறது. வழிபாட்டுமேடை உடைத்தெறியப் படுகிறது. பிட்சுணி உத்பலா கொலை செய்யப்படுகிறாள். புத்தரின் எதிரியான தேவதத்தன் அரசன் அஜாதசத்ருவைத் தன்வயப்படுத்த முயல்கிறான். அரண்மனை நாட்டியமங்கையான ஸ்ரீமதியை புத்தரின் வழிபாட்டு மேடையில் நடனமாடச் செய்ய இளவரசிகள் முனைகின்றனர்.

          இனித் தொடர்ந்து படிக்கவும்:  

                                         ————————————

                                                   அங்கம் – 3

                                         காட்சியிடம்- மாற்றமில்லை.

                               ஸ்ரீமதியும் மாலதியும் நுழைகின்றனர்.

 

          மாலதி: சகோதரி, எனக்கு அமைதியில்லை.

          ஸ்ரீமதி: உனது மனதை எது பாரமாக்கிக் கொண்டுள்ளது?

          மாலதி: அவர்கள் உங்களை நாட்டியத்திற்கு அலங்கரித்துக் கொண்டிருந்தபோது, நான் யாருக்கும் தெரியாமல் சுவர்மீதேறி, பின்புறமிருந்த சாலையை எட்டிப்பார்த்தேன். பிட்சுணி உத்பலாவின் உடலை அவர்கள் அடக்கம் செய்ய எடுத்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தார்கள்; அதன் பின்னால்……

          ஸ்ரீமதி: உம்.. சொல்….

          மாலதி: சகோதரி, நீ என்னிடம் கோபம்கொள்ள மாட்டாயல்லவா? என் உடல் தளர்கிறது……

          ஸ்ரீமதி: எல்லாவற்றையும் சொல்!

          மாலதி: நான் அவரை அந்த உடலருகில் கண்டேன். ஈமச்சடங்குக்கான மந்திரங்களை அவர் உச்சரித்துக் கொண்டிருந்தார்.

          ஸ்ரீமதி: நீ யாரைப்பற்றி என்ன சொல்கிறாய்?

          மாலதி: நான் இருந்த இடத்திலிருந்து பார்த்தபோது அது அவரைப்போலவே- என் காதலரைப் போலவே இருந்தது.

          ஸ்ரீமதி: அது உண்மையிலேயே அவராக இருந்தாலும் இருக்கக்கூடும்.

          மாலதி: நான் எனது விடுதலையைப் பெறும்வரை அவரைக் கண்ணால்கூடத் தொலைவிலிருந்தும் பார்க்கமாட்டேன் என உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ளேன்.

          ஸ்ரீமதி: உனது உறுதிமொழியைக் காப்பாற்று. ஏக்கத்துடன் கடலை உற்றுநோக்கினால் எதிர்க்கரையை அடைந்து விடலாம் என எண்ணாதே! நிறைவேறவே முடியாத கனவுகளால் உன் சிந்தையைக் குழப்பிக்கொள்ளாதே!

          மாலதி: என்னக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் நான் அவரைக் காண ஆசைப்படவில்லை. அவர்கள் அவரையும் கொன்றுவிடுவார்களோ என்று பயப்படுகிறேன்; அதனால் அவரருகே இருக்க ஆசைப்படுகிறேன். எனது உறுதியிலிருந்து நான் தவறினால் என்மீது சினம் கொள்ளாதே!

          ஸ்ரீமதி: உனது இதயத்தின் தாபக்குரலை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

          மாலதி: என்னால் அவரைக் காப்பாற்ற முடியாது என்று எனக்குத் தெரியும்; ஆனால் இறக்கும்போதிலாவது அவருடன் சேர்ந்து நானும் இறப்பேன் அல்லவா? ஓ சகோதரி! என்னால் இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. எனக்கு இந்த ஜன்மத்தில் விடுதலைக்கான உதவி ஒன்றுமே இல்லை!

          ஸ்ரீமதி: நீ இறுதியில் யாரிடம் சென்று சேர்வாயோ அவரே உனக்கு விடுதலையை அளிப்பார்; ஏனெனில் அவர் சுதந்திரமானவர். எனது இதயத்தின் வலியை உனது சொற்கள் எனக்கு நினைவுபடுத்துகின்றன.

          மாலதி: என்ன வலி அது, சகோதரி?

          ஸ்ரீமதி: ஒரு பழைய காயத்தின் வலி, இன்னமும் மாறாமல் என் இதயத்தில் உள்ளது. எனது வெளிப்புற உறவுகளை நான் எவ்வளவு அறுத்துக்கொள்ள முயற்சித்தாலும், அவை இன்னும் ஆழமாகச் சென்று வேரூன்றி மறைந்துகொள்கின்றன.

          மாலதி: இந்த அரண்மனையிலேயே உன்னைவிடத் தனிமையானவர் வேறு யார் இருக்கிறார்கள்? ஆனால் நான் செல்லவேண்டும் சகோதரி. எனக்காகச் சில சமயங்களில் மன்னிப்புக்கான பாடல்களை நீ கூறுவாயா?

          ஸ்ரீமதி: (இசைக்கிறாள்)

                     ஓ புத்தரே! பாவங்களிலிருந்து விடுதலை பெற்ற நீர்

                     எங்களது அத்துமீறல்களை மன்னிப்பீராக!

          மாலதி: (திரும்பத் திரும்ப நமஸ்கரித்த வண்ணம்)

                     ஓ புத்தரே! எனது அத்துமீறல்களை மன்னிப்பீராக!

                     சகோதரி! கேட்டாயா? திரும்பவும் அந்தக் கூச்சல்கள்! அவர்கள் ஒவ்வொருவருமே கொடியவர்கள், இரக்கமற்றவர்கள். புத்தபிரான் தமது ஈடற்ற கருணையால் இப்பூமிக்கு வந்துள்ளார்; இருப்பினும் நரகத்தின் நெருப்பு அணைக்கப்படவில்லையே. நான் இனியும் தாமதிக்கலாகாது. சகோதரி, விடைபெறுகிறேன். நீ உனது விடுதலையை அடைந்தபின்பு எனக்கு அழைப்பு அனுப்பு, எனக்குக் கடைசியாக ஒரு வாய்ப்பினைக் கொடு.

          ஸ்ரீமதி: வா, நான் உன்னுடன் வாயில்வரை வருகிறேன்.

                     அவர்கள் வெளியே செல்கிறார்கள். ரத்னாவளியும் மல்லிகாவும் நுழைகிறார்கள்.

          ரத்னாவளி: தேவதத்தனின் சீடர்கள் பிட்சுணியைக் கொலைசெய்து விட்டனரா? இதைச் செய்ய என்னதான் காரணம்? அவள் ஒரு விவசாயியின் மகள்தானே?

          மல்லிகா: ஆனால் இன்று அவள் இந்தப் புண்ணிய மதத்தைச் சேர்ந்தவளல்லவா?

          ரத்னாவளி: புனிதமான நூல்கள் அவளுடைய ரத்தநாளங்களில் ஓடும் ரத்தத்தை மாற்ற முடியுமா?

          மல்லிகா: மதக் கோட்பாடுகளின் மாற்றங்கள் ரத்தத்தின் மாற்றத்தைவிடப் பெரிதென்று இன்று நாம் காணவில்லையா?

          ரத்னாவளி: போதும் இந்தப் பைத்தியக்காரத்தனம்! தனது குடிமக்களின் ஆத்திரத்தால் அரசன் பெரிய கஷ்டத்தில் இருக்கிறான்- என்ன நிலை! இந்தப் பிச்சைக்காரனுடைய மதம் பேரரசின் பெருமையை மொத்தமாக உறிஞ்சிவிட்டதே!

          மல்லிகா: குடிமக்களின் சினத்திற்கு வேறொரு காரணமுமுண்டு. மகாராஜா பிம்பிசாரர் தனது ஆசிரமத்திலிருந்து கிளம்பி இந்த வழிபாட்டு மேடைக்கு வந்து வழிபாடு செய்யப் புறப்பட்டுள்ளார். ஆனால் அவர் இன்னும் அரண்மனையை வந்து சேரவில்லை. அவர்கள், மக்கள் ஏதோ சந்தேகப்படுகிறார்கள்.

          ரத்னாவளி: நானும் அவர்களின் ரகசியமான சொற்களைக் கேட்டேன். அது கெடுதலையே தெரிவிக்கிறது என்று வருத்தத்துடன் கூறுகிறேன். ஆனால் இது, கடந்தகாலத்து முறையற்ற செயல்களின் பலன்தான்.

          மல்லிகா: என்ன முறையற்ற செய்கை?

          ரத்னாவளி: மகாராஜா பிம்பிசாரர் தனது தந்தை காலத்திலிருந்த வேத மதத்தைக் கொலைசெய்தார்- உண்மையில் அது தனது பெற்றோரையே கொலைசெய்வதற்குச் சமமல்லவா? அல்லது அதற்கு மேலும் கூட? அப்போது அணைக்கப்பட்ட யாகத்தீ பழிவாங்குமென்றும், அவனையே (அரசனையே) எரித்துவிடும் என்றும் பிராமணர்களால் வரப்போவது பற்றி கூறப்பட்டது.

          மல்லிகா: உஷ்! மெல்லப்பேசு! இந்த சாபம் நிறைவேறப் போகிறதோ என்று எத்தகைய மனவருத்தம் அவருக்கு, அரசருக்கு உண்டாகி இருக்கிறதென்று நீ அறிவாயா?

          ரத்னாவளி: யாருடைய சாபத்தைக் கண்டு அவர் அஞ்சுகிறார்?

          மல்லிகா: புத்தருடைய சாபம்தான். தனது மனத்தில், மகாராஜா, புத்தரைக்கண்டு மிகவும் பயப்படுகிறார்.

          ரத்னாவளி: ஆனால் புத்தர் யாரையும் சபிப்பதில்லை. தேவதத்தர் ஒருவருக்கே சாபம் கொடுக்கத் தெரியும்.

          மல்லிகா: அதனால்தான் தேவதத்தருக்குப் பெரும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தங்கள் விலையுயர்ந்த காணிக்கைகளைப் பழிவாங்கும் தெய்வங்களுக்காக பத்திரப்படுத்தி வைத்துள்ள மனிதர்கள் கருணையுள்ள கடவுள்களை ஏமாற்றுகிறார்கள்.

          ரத்னாவளி: பற்களும், நகங்களும் போன கிழட்டுச் சிங்கம்போல, தாக்கத் தெரியாத கடவுள்கள் பட்டினிதான் கிடக்க வேண்டும்.

          மல்லிகா: எது எப்படியாக இருந்தாலும், இன்று மாலை, புத்தருக்கான வழிபாடு கட்டாயமாக அந்த அசோகமரத்தடியே நடைபெறப் போகிறது என நான் கூறுகிறேன்.

          ரத்னாவளி: அவ்வாறு நடைபெறுவதாயின், நடக்கட்டும். இன்னுமொன்று சொல்வேன்- அதற்குமுன்பு இந்தப்பெண் தனது நாட்டியத்தை அந்த வழிபாட்டுத்தலத்தில் ஆடி முடித்திருப்பாள்.

                     மல்லிகா வெளியேற, வாசவி உள்ளே நுழைகிறாள்.

          வாசவி: நான் ஆயுதங்களுடன் வந்துள்ளேன்.

          ரத்னாவளி: எதற்காக?

          வாசவி: பழிவாங்க! அந்தப்பெண் என்னைப் பல சமயங்களில் அவமதித்திருக்கிறாள்.

          ரத்னாவளி: அவளுடைய நீதிபோதனைகளாலா?

          வாசவி: இல்லை. எனது மரியாதையைப் பலவந்தமாகப் பிடுங்கியெடுத்து….

          ரத்னாவளி: அதனால்தான் நீ இந்த வாளை வைத்திருக்கிறாயா?

          வாசவி: அதற்கு மட்டுமல்ல. ஒரு புரட்சிக்கும் வாய்ப்புள்ளது; அது நிகழுமானால் நான் பதிலடி கொடுக்காமல் சாகமாட்டேன்.

          ரத்னாவளி: அப்படியானால் உனது பழிவாங்குதல் எப்படி நிகழும்?

          வாசவி: இந்த கழுத்து ஆபரணம் அதனை நிறைவேற்றும் (காட்டுகிறாள்).

          ரத்னாவளி: இந்த வைரமாலையா?

          வாசவி: இந்த அரசகுடும்பத்துக்கேற்ற விலையுயர்ந்த அவமதிப்பு. இந்தப் பரிசை நான் அவள்மீது வீசியெறிவேன்.

          ரத்னாவளி: ஆனால் அவள் அதனை மறுத்துத் திரும்ப உன்னிடமே வீசினால்?

          வாசவி: அப்போது என்னிடம் இது இருக்கிறதே (வாளைக் காட்டுகிறாள்).

          ரத்னாவளி: நாம் மகாராணி லோகேஸ்வரியை அழைத்து வரலாம்- இந்தக் காட்சி அவளை மகிழ்வடையச் செய்யும்.

          வாசவி: நான் அவளைத் தேடினேன்; ஆனால் அவள் தனது அறைக்குள் தாளிட்டுக்கொண்டு இருக்கிறாள் என்றார்கள். அது இப்புரட்சி பற்றிய பயத்தாலா அல்லது தனது கணவன்மீது கொண்ட சினத்தாலா என்று யாரால் கூற இயலும்?

          ரத்னாவளி: ஆனால் இன்று அந்த நாட்டியக்காரி அவமானப்படுத்தப்படும்போது மகாராணி கட்டாயமாக இங்கிருக்க வேண்டும்.

          வாசவி: ஒரு நாட்டியப்பெண்ணின் அவமதிப்பு!  ஒரு நாடகத்திற்கான நல்லதொரு பெயர்.

          மல்லிகா: நான் நினைத்தபடியே அது நடந்திருக்கிறது. மகாராஜா அஜாதசத்ரு, தனது நாட்டிலுள்ள புத்தரின் எல்லாச் சீடர்களையும் வரவழைக்கக் கூறியுள்ளார்.

          ரத்னாவளி: மிகவும் நல்லது! அவர்களின் கதையை முடிப்பதற்காக பிறகு அவர்களை அவர் தேவதத்தரின் சீடர்களிடம் ஒப்படைக்கலாம்.

          மல்லிகா: அதுவல்ல அவருடைய எண்ணம்.  புனிதப்படுத்தும் பாடல்களை அவர்கள் அரசருக்காக இசைக்க வேண்டும். அவர் தனது உயிருக்கு ஆபத்து விளைந்துவிடும் பயத்தில் இருக்கிறார்.    

          வாசவி: ஏன்? என்னவாயிற்று?

          மல்லிகா: நீ கேள்விப்படவில்லையா? தலைநகருக்கு வரும்வழியில் மகாராஜா பிம்பிசாரர் படுகொலை செய்யப்பட்டார் என ஜனங்கள் பேசிக்கொள்கிறார்கள்.

          வாசவி: ஓ! என்ன கொடூரம்! நிச்சயமாக இது உண்மையாக இருக்குமா?

          மல்லிகா: நிச்சயமாக, ஒரு ரகசியமான வலி, அல்லது மன வியாகூலம் அரசரின் உள்ளத்தை அரித்துக் கொண்டிருக்கிறது.

                                                                                  (தொடரும்)