குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.

  “குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.

  எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

  பார்த்து, கேட்டு மகிழுங்கள் !

 

இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:

 

  1. பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020
  2. அம்மா அப்பா ! –  ஜூலை 2020
  3. ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020
  4. இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020
  5. எனது நாடு – செப்டம்பர் 2020
  6. காக்கா ! காக்கா ! – செப்டம்பர் 2020
  7. செய்திடுவேன் ! – அக்டோபர் 2020
  8. மயிலே! மயிலே! மயிலே! – அக்டோபர் 2020
  9. நானும் செய்வேன் ! – நவம்பர் 2020
  10. அணிலே ! அணிலே ! –  நவம்பர் 2020
  11. எல்லையில் வீரர் ! – டிசம்பர் 2020
  12. பலூன் ! பலூன் ! பலூன் ! – டிசம்பர் 2020
  13. ஜன கண மன ! – ஜனவரி 2021
  14. ஊருக்குப் போகலாமா ? – ஜனவரி 2021
  15. எங்கள் வீட்டு மொட்டை மாடி ! – பிப்ரவரி 2021
  16. பட்டம் விடலாமா ? – பிப்ரவரி 2021
  17. சாமி என்னை காப்பாத்து ! – மார்ச் 2021
  18. கடற்கரை போகலாம் ! – மார்ச் 2021
  19. பிறந்த நாள் ! – ஏப்ரல் 2021
  20. வேப்ப மரம் !    – ஏப்ரல் 2021
  21. பஸ்ஸில் போகலாம்   – மே  2021   
  22. சிட்டுக் குருவி – மே   2021  
  23. ஆகாய விமானம் – ஜூன் 2021
  24. எங்கள் வீட்டுத் தென்னை மரம் – ஜூன் 2021

 

  1. பாட்டி – கதை சொல்லு !

 

பாட்டி, எனக்கொரு கதை சொல்லு !

தூக்கம் வரலை – கதை சொல்லு !

சமத்தாய் இருக்கேன் கதை சொல்லு !

புதுசு புதுசா நீ கதை சொல்லு !

 

ராமர் சீதை கதை சொல்லு !

அல்லா இயேசு கதை சொல்லு !

புத்தரைப் பற்றியும் நீ சொல்லு !

மகாவீரர் என்பவர் யார் சொல்லு !

 

மகாபாரதக் கதையெல்லாம்

மறக்காமல் எனக்கு நீ சொல்லு !

கிருஷ்ணனின் லீலைகள் நீ சொல்லு !

வெண்ணை திருடிய கதை சொல்லு !

 

தெனாலிராமன் கதை சொல்லு !

அக்பர் பீர்பால் கதை சொல்லு !

குரங்கு யானை எல்லாம் பேசும்

பஞ்சதந்திரக் கதை சொல்லு !

 

உன்னைப் பற்றியும் கதை சொல்லு !

அப்பா அம்மா கதை சொல்லு !

அண்ணன் தம்பி கதை சொல்லு !

அடிக்கடி எனக்கு கதை சொல்லு !

 

ஏதாவது நீயும் கதை சொல்லு !

இட்டுக் கட்டி கதை சொல்லு !

பாட்டி உன்னைக் கட்டிக்கறேன் –

விடாமல் எனக்கு கதை சொல்லு !

 

             

26. வீட்டுக்கு வா !

எனக்குப் பிடித்தது இட்டிலி !

தொட்டுக்க வேண்டும் சட்டினி !

சொய் சொய் என்று சத்தம் போடும்

தோசை என்றால் ஆசையே !

 

புஸ் புஸ் என்று உப்பிய பூரி –

புகுந்தே நானும் புறப்படுவேன் !

டால் சப்பாத்தி குருமா என்றால்

ஜாலி, நானும் சாப்பிடுவேன் !

 

வடையின் ஓட்டையில் விரலை விட்டு

வட்டமடித்து சாப்பிடுவேன் !

அடை என்றாலும் எனக்குப் பிடிக்கும் –

அரக்கப் பரக்கத் தின்பேன் நான் !

 

முறுக்கு தட்டை சீடை என்றால்

கடக்கு முடக்கென்று கடித்திடுவேன் !

காராசேவு கடலை மிட்டாய் –

எல்லாம் பிடிக்கும் சாப்பிடுவேன் !

 

எங்கள் வீட்டுத் தின்பண்டங்கள் –

உனக்கும் தருவேன் வருவாயா ?

அம்மா உனக்கும் எல்லாம் தருவாள் –

வா வா ! வீட்டுக்கு வா வா வா !