Asian Indian Young Couple Riding On Bicycle, Posing For A Photo

 “ படித்திருந்தும் இப்படி  முட்டாளாய் இருந்திட்டோமே …கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்திருக்கலாமோ… யாருக்குத் தெரியும்  இப்படி நம்பிக்கை மோசம் செய்வான் என்று….மாலை போட்டவன்  காலை வாருவான், கைகளைப் பற்றியவன் , இப்படி  நட்டாற்றில் விடுவான் என்று நினைக்கவில்லையே … என் முகத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்தது ஏமாற்றவா.. “ நினைக்க நினைக்க  ஆவேசம் பொங்கியது. அழக்கூடாது. நடக்க வேண்டியதைப் பார்ப்போம்.

குடிமைப்பணித்   தேர்வுக்காக அவளும் அவனும்  சேர்ந்து படித்தனர்   இவள்  படித்ததை அவனிடமும் , அவன்  படித்ததை இவளிடமும் பகிர்ந்து  கலந்து படித்தனர்  ; படிப்பின் தூரம் குறைந்து மனத்தால் நெருங்கினர். இவர்கள் சேர்ந்து படித்ததை சகப் பயிற்சியாளர்கள் அனைவரும் அறிவர். அவர்களே இவர்களது  நெருக்கத்தை கேலியும் கிண்டலும் பேசி  உற்சாகப் படுத்தினர் .இருவரும்  முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றனர் . அவன் நேர்முகத் தேர்வில்  காவல்துறைப்பணிக்கு  தேர்வாகிவிட்டான . இவள்  ஆட்சிப்பணிக்கான  நேர்முகத்தேர்வில் தேர்வாகவில்லை . இதே  வைராக்கியத்தை விட்டுவிடாமல்  அந்தப் பயிற்சி நிலையத்தில் பயிற்றுநராகப் பணியாற்றிக் கொண்டே அடுத்த தேர்வுக்காக  தயாராகிக் கொண்டிருக்கிறாள் .                                                                  அவன் காவல்துறை  பயிற்சி முடித்ததும்  தில்லியிலே  பணியமர்த்தப் பட்டான். அவனுக்கு  பயிற்சிநிலயத்தில் பாராட்டுக்கூட்டம்  ஏற்பாடு செய்திருந்தனர் . அவன்  விடைப்பெற்று செல்லும் நாளில் அவனிடம் அழுதாள்.. கைவிடமாட்டேன் என்று உறுதிகூறினான். சேர்ந்தே சினிமாவுக்குப் போனார்கள் . பிரிவின் துயரம்   நெருக்கத்தைத் தேடியது .   விடுதியில் உண்டனர் . உறங்கினர் .  கலந்தனர் . மறுநாள் பணியில் சேர டில்லிக்குப் பறந்தான்.  ஒரு மாதம்வரை  அனுதினம் இரவு பேசினார்; .மகிழ்ச்சியில் சிறகசைத்தனர்.                                                                        பிறகு வேலை அதிகமென்று பேச்சைக் குறைதான். அவனது   கைப்பேசி எண்ணை மாற்றிக்கொண்டான். அவனது மின்னஞ்சல் முகவரியையும்  மாற்றிக்கொண்டான். அவனது உயிர்த்துளி இவளுள்  வளரும்போது அவன்  தொடர்புக்கு அப்பால் போனான். நண்பர்கள் மூலம்  அவனைத் தொர்புகொள்ள பலவகையில் முயன்றும் முடியவில்லை. நண்பர்கள் எவரையுமே சாட்சி வைத்துக் கொள்ளவில்லையே. இவர்களது நெருக்கதை  ஊக்கப்படுத்தியவரெல்லாம் இவளை புண்படுத்துகிறார்கள்.. “சேர்ந்து படிக்கலாம். சேர்ந்து படுக்கலாமா? அவன் டில்லியில் எந்த வசதியான வடநாட்டு வெள்ளைத்தோல்காரியோடு திரிகிறானோ… “ நண்பர்கள் இவளுக்கு மனம்கொத்திகளாகினர். மனம் நைந்து.  சந்திப்பிள்ளையார் கோவில்முன் நின்று புலம்பினாள்

  “பிள்ளையாரப்பா உன் முன்னாலதானே  நாங்கள்  மாலை மாற்றி மஞ்சள்கயறு  அணிந்து கொண்டோம். நீ சாட்சி சொல்ல மாட்டாயா …என் கண்ணீருக்கு வழி  சொல்லுமாட்டாயா .” என்று இறைஞ்சினாள்.                           கணப்பொழுதில்  ஒரு குருவி  பிள்ளையாரின் முன் வைக்கப்பட்டிருந்த  பொங்கலைக் கொத்திக்கொண்டு இவளது தோளுக்கு மேல்  எதிரிலிருக்கும் விளக்குகம்பத்திற்குப் பறந்தது. இவள் ஏறிட்டுப் பார்த்தாள் . அங்கே ஒரு குருங்காமிரா பொருத்தி இருந்தது. கண்கள் நீர் பொங்க அப்பகுதி  மின்சேவை அலுவலரிடம் கெஞ்சி அன்றைய நாளின் காமிரா பதிவின் நகலைப்  பெற்றாள்  .                                                                பின்னர்  தனது பயிற்சிநிலைய  அலுவலரின்  உதவியால்   திரையரங்க  நுழைவுவாயில்  அந்நாளைய காமிரா பதிவிலிருந்தும் , உணவகத்து காமிரா பதிவிலிருந்தும் நகல் பெற்றாள். ஆனால் அவள் கெத்தாக,  கெஞ்சலாகப்  பல பொய்களைச் சொல்லி காமிரா பதிவு நகல்களைப்  பெறும்போது  அவர்களின் பார்வைமேய்ச்சலின் பற்கள் அவளை துளைத்த ரணம் சொல்லில் அடங்காது,                                                 நாள்காட்டித் தாள்கள் கரையக் கரைய குழந்தை வளர்ந்து கொண்டிருந்தது. ஐ.எ.எஸ். பாஸ் பண்ணிவிட்டுத்தான்  வீட்டுக்கு வருவேன்  என்று மாதாமாதம் பெற்றோர்களுக்கு பணம் அனுப்பி  சந்தேகம் வராமல்  பார்த்துக்கொண்டாள் .’ ஊரை,உறவை  மறைக்கலாம். வயிறை மறைக்கமுடியுமா. அவனிடம் இருந்து எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில்  ‘ நேரே  அவனது  பெற்றோரை சந்தித்து முறையிடுவோம். முடியாத பட்சத்தில்  சட்டபூர்வமாக முயலுவோம். ‘ என்று  புறப்பட்டாள் .

   ஆட்டோவிலிருந்து  இறங்கியதும் அவள் அந்த வீட்டை நிமிர்ந்து பார்த்தாள் .கம்பீரமாகத் தோன்றியது. உள்ளே இடப்புறம் வளைந்து நின்ற ஒற்றைத் தென்னையும், வலப்புறம்  குளிர்நிழல் குடை விரித்திருக்கும் வேம்பும்  அழகு சேர்த்தன. வந்த வேலையை விட்டுட்டு இப்படி மனதை பறிகொடுத்ததால் தானே இவ்வளவு துயரம். இன்னும் தனக்கு புத்தி வரலையே ,கடிந்து கொண்டு முன் நகர்ந்தாள்.                            சுற்றுச்சுவரில் ஒரு பித்தளைத் தகட்டில்  அவனது பெயர் , இந்திய காவல்பணி என்று மின்னியது. அவளைக்  கேலி செய்வது போலிருந்தது. கரும்பழுப்பில் மஞ்சள் பூ பொறித்த கனத்த இரும்புப்படல் அவனது  மனதைப் போலவே வழிமறித்து  நின்றது. அதை உந்தித்  தள்ளினாள்;   தாழிடாமல்   இருந்தது , முனகலோடு  திறந்தது. வீட்டிற்கு முன் இடப்புறம் ஒரு முல்லைக்கொடி கம்பைப் பற்றி மேலே ஏறத்துடித்துக் கொண்டிருந்தது. வலப்புறம் மல்லிகை ,செவ்வந்தி,சாமந்திப்பூ செடிகள் கண்ணுக்கு குளிர்வைத் தந்தன. வாசலை விட்டு விலகி கருப்பு இன்னோவா கார் நின்றிருந்தது .கைகள் நடுங்க மெல்ல அழைப்புமணியை அழுத்தினாள். மைனாவின் மென்கூவல் ஒலித்தது.                                                                 “இதோ வர்றேன் “ என்ற கனிந்த குரலைத் தொடர்ந்து சிவப்பு வளையல்கள் ஒளிர, சோப்புக்குமிழ்கள் படிந்த வலக்கரம் கதவை திறந்து ,                 “ வாங்க,உள்ளே ” என்றபடி மின்னலாக  உள்ளே மறைந்தது .

  காலை மணி பத்திருக்கும். காலைச் சிற்றுண்டிக்குப்பின் அவனது  பெற்றோர்  இருவரும்  செய்தித்தாள்களை புரட்டிக் கொண்டிருந்த நேரம். ஐந்தரையடி  உயரம் கொண்ட அவளது வட்டமுகத்தில்  கருவுற்று துயரமேகத்தை  மறைத்து புன்னகைத்து கைகளைக் கூப்பினாள். பெற்றோர்  அவளை அடையாளம் கண்டு அமரச் சொல்லி உபசரித்தனர் .        

இவளை பார்த்ததும்  அவனுக்கு பாராட்டுவிழா நடந்தபோது, இவள் உற்சாகமும் சுறுசுறுப்புமாய் இனிய சொற்களைக்  கோர்த்து நிகழ்ச்சியை நடத்திய விதம்; இவளது  ஈர்ப்பான முகம் பெற்றோரது  நினைவுக்கு வந்தது, இன்று அவளது உடல்நிலை மாற்றம் அவள்மீது பரிவைச்  சுரந்தது . இந்தச் சூழலில்  தனக்கும் அவர்களது மகனுக்கும்  உள்ள உறவையும், மகனது  சிசுவை  சுமந்துகொண்டு இருப்பதை விம்மலுக்கிடையில்  சொன்னாள்.                                            அவளது இந்நிலைக்கு மகன்தான் காரணம் என்பதை தந்தை ஏற்க  மறுத்தார். தாய் இறுக்கதை  தளர்த்தி வெடித்தார் .   

“கலக்டருக்கு படிக்கிற பொண்ணு ,ஒரு மூணாவது  மனுஷருக்கு  கூட தெரியாம கல்யாணம் செஞ்சுக்கலாமா …? எங்கமகன் தான்  உன்னை கல்யாணம் செஞ்சுகிட்டதுக்கு  சாட்சிகள் இருந்தால் உன்னை எங்க மகனுக்கே  கல்யாணம் செஞ்சு  வைக்கிறதில எங்களுக்கு மறுப்பில்லை. ஆனா இதில் பொய்யோ கபடமோ இருந்தால் பொண்ணுன்னு  பார்க்காம தக்க தண்டனை வாங்கித்தரத்  தயங்க மாட்டோம் “

“நீங்களும்  எனக்கு அம்மா அப்பா மாதிரிதான் . உங்கள் மகன் மீது கொண்ட அளவற்ற பிரியத்தாலும் , நம்பிக்கையாலும் , என்னைப் பற்றி யோசிக்காமல் உங்கள் மகனிடம் என்னைக் கொடுத்து விட்டேன். ஆனால் தங்கள் மகன் என்னோடு தொலைப்பேசியில் பேசவும் ,மின்னஞ்சலில்  தொடர்பு கொள்ளவும் தவிர்க்கிறார். கைப்பேசி எண்ணையும்  , மின்னஞ்சலையும் மாற்றிக் கொண்டார் என்றறிந்ததும் தான் வயிற்றில் வளரும் சிசுவுக்காக நானே சாட்சிளைத் தேடினேன்.மஞ்சள்கயறு கட்டிய கோலத்தில்  ஒரு தன்படம் கூட எடுத்துக்கொள்ளத் தோன்றாமல் போனதே என்ற தன்னிரக்கம் என்னைப் பிழிந்து வதைத்தது .                                                           2019  ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி  அந்த ஜன நடமாட்டமில்லாத  பிள்ளையார் கோவிலில் நாங்கள் கல்யாணம் செய்து கொண்டோம். கோவிலுக்கு எதிரே உள்ள மின்கம்பத்தில் பொருத்தப் பட்டுள்ள  கண்காணிப்பு காமிராவில் பதிவு  உள்ளது. அதன் நகலைப் பெற்றுள்ளேன். அதே நாளில் உணவகத்தில் உண்டது, திரைப்படத்திற்கு சென்றது, அன்றிரவு விடுதிக்கு சென்றது  என எல்லாவற்றிற்கும்  சாட்சிகளாக கண்காணிப்புகாமிரா பதிவுகளைப் பெற்றுள்ளேன். இதோ பாருங்கள் . இந்த சாட்சிககளைப் பெற நான் பட்ட சொற்காயங்களும் ,விழுங்கும் பார்வைகளும், ஏளனங்களும் சொல்லத் தக்கன அல்ல. நான் பட்ட துன்பம் எந்தப்பெண்ணுக்கும் நேரக் கூடாது.” தேம்பினாள்.

அப்பா பேச்சிழந்து உறைந்திருந்தார். அம்மா அவளை ஊடுருவிப் பார்த்தாள்.  “ நாங்கள்  விடுதி அறைக்குள் இருந்த நிலைக்கும் ஆதாரம் கேட்பீர்களானால்… , அம்மா…தெய்வமே .. என் வயிற்றில் வளரும் சிசுவின் மரபணுவையும் சோதித்துக் கொள்ளுங்கள் “ என்று மூச்சுவிடாமல் பேசியவள் மூர்ச்சையானாள். சரியும் முந்தானையை சரிசெய்யும் வேகத்தில் லாவகமாய் அம்மா அவளைத் தாங்கி மடியில் ஏந்தினாள் .

அப்பா ஓடி தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தெளித்து மயக்கம் தெளிவித்தார். “அம்மா பதறாதே. உன் வயிற்றில் வளரும் குழந்தைப் பற்றி கவலை வேண்டாம். அது எங்களது குடும்ப வாரிசு. நீ நினைத்திருந்தால்  உன்னிடம் உள்ள ஆதாரத்தை எல்லாம் மின்னூடகங்களில் கொடுத்தோ , வழக்கு தொடுத்தோ  எங்களது மகன் பணிக்கு களங்கத்தையும் ,எங்கள் குடும்பத்திற்கும்  தீரா அவப்பெயரையும் ஏற்படுத்தி இருக்கலாம். ஆனா அப்படி செய்யாமல் எங்களிடமே முறையிட்டாய். அவனுக்கு நடத்திய பாராட்டு விழாவிலே உன்னைப் பற்றி விசாரித்தோம் . உன்னை நம்புறோம். கவலைப் படாதே உள்ளறையில் போய்  ஓய்வெடு.” என்றார். அவளுக்கு உயிர் மீண்டு வந்தது போல் இருந்தது.

.