ஜோதிட அனுபவம் - மாமியார் மருமகள் சண்டை வணக்கம் நண்பர்களே! ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் மற்றும் சந்திரன் இணைவு இருந்தால் ஜாதகரின் ...

 

மாமியாரை அம்மா என அழைக்கலாமா?

சமீபத்தில் நான் ஒரு அதிசய செய்தியைப் படித்த பின் அதைப் பகிரா விட்டால் மண்டை வெடித்து விடும் போலிருந்தது.

அதற்கு முன்பு என் கவனத்தை இதுநாள் வரை ஈர்க்காத செய்தி ஒன்று ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாத கடைசி ஞாயிறு மாமியார்கள் தினமாம். மாமியார் தினம் இந்த வருடம் போன வருடம் இல்லை, 1934 ம் வருடம் முதல் கொண்டாட துவங்கினார்களாம். 1970 முதல்தான் அக்டோபர் கடைசி ஞாயிறு கொண்டாடத் துவங்கினார்களாம் கும்பிடப்பட வேண்டிய மருமகள்களும், மருமகன்களும்.

அதிசய செய்திக்கு வருவோம். கடந்த வாரம் ஒரு செய்தி இதழ் மணப் பருவத்தை நெருங்கிய மகளிரிடம் “ மாமியாரை அம்மா என அழைப்பீர்களா?” என கேள்வி ஒன்றை வைத்தது. இருபது பெண்களில் 19 பேர் அம்மா என அழைப்பதுதான் சரி என ஆணித்தரமாக கூறினார்கள்.

வருங் கால மாமியாரை மனதில் எண்ணிய பயம் கண்களில் தெரிய வில்லை.

பெரும் பாலானவர்கள் பிறந்த வீட்டை விட அதிக நாட்கள் வாழப் போவதும், அதிக பொறுப்புகள் எடுக்கப் போவதும் புகுந்தவீட்டில்தான், எனவே மாமியாரை அம்மாவாக அரவணைத்தால் வாழ்வில் வசந்தமே என்ற எண்ணத்தில் எடுத்த முடிவது.
புத்திசாலி பெண்கள்.

பெண்களும் வேலைக்குச் செல்லும் இந்நாளில் வீட்டில் ஒரு பாட்டி கிடைக்கப் பெற்றால் அது கடவுள் தந்த வரம்.

மருமகள்கள் அனைவரும் இந்த முடிவெடுத்தால் டெலி விஷனில் சீரியல் கதை எழுதுபவர்கள் வேலை இல்லாமல் போவார்களே!

சற்று யோசித்தால் இந்த மாமியார்- மருமகள் சண்டையை பெரிது படுத்தி சில சமயங்களில் கேவலப் படுத்தி உணர்வை நியாயப்படுத்தியவர்கள் 18ம் நூற்றாண்டுக்கு பின் முளைத்த நம் எழுத்தாளர்கள்தான். கதையாக இருக்கட்டும், நாடகம்-சினிமாவாக இருக்கட்டும் காமெடி காட்சிகளில் எங்கோ இலை மறைவு காய் மறைவாக நடக்கும் மாமியார்-மருமகள் சண்டையை பெரிது படுத்தி  காட்டி கைதட்டல் வாங்கினார்கள்.

பின்னர் மருமகள் அனுதாபம் பெற மாமியாரை கொடுமைக்காரியாக்கி, அந்த காட்சியை சேர்ந்தே அமர்ந்து பார்க்கும் மாமியார் மருமகள் இருவர் கண்களில் நீரும், மனதில் வெறுப்பையும் வளர்த்தனர் நம் கதாசிரியர்கள்.

அது போகட்டும். எல்லா உறவுகளுக்கும் ஒரு வரலாறு இருக்குமே என வரலாற்றை திரும்பிப் பார்க்க மனம் எண்ணியது.

நமக்காக எழுத்தில் வடிக்கப்பட்ட முதல் ஆவணம் இதிகாசம். ஐந்தாவது வேதம் என கூறப்பட்ட மகா பாரதத்தில் இந்த யுத்தம் இல்லை. சமூக பொது நீதியாக விதுரன் கூறிய விதுர நீதியிலும் இல்லை.
மாறாக சங்க இலக்கியத்தில் ஒரிரு இடங்களில் மாமியார் மருமகள் உறவை கவிதையாக்கி உள்ளார்கள்.

அக நானூரில் ஒரு காட்சி, தொலை தூரத்திலிருந்து ஒரு தாய் தன் மகன் குடும்பம் நடத்தும் அழகை காண வருகிறாள். இருள் சூழும் நேரம் வீட்டின் முன் புறம் உள்ள தோட்டத்தில் மருமகள் முல்லைப்பூவில் மாலை தொடுத்து பேரனுக்குச் சூடும் அழகை ரசிக்கும் மகனைப் பார்த்து தானும் மதி மயங்கி நிற்கிறாள். மருமகள் மகனை வளைத்து விட்டாள் என்ற ஒப்பாரி  அங்கு இல்லை.

அடுத்த காட்சி புற நானூரில். கணவன் போரில் மாண்ட செய்தி கேட்டு மனைவி போர்களம் செல்கிறாள். கணவன் மார்பில் வேல் பாய்ந்து மாண்டு கிடக்கிறான். ஒரு கணம் உலகம் இயக்கத்தை நிறுத்துகிறது. அடுத்த கணம் தன் மாமியார் மகனின் இறப்பை எப்படி எடுத்துக் கொள்வாள் என்ற கவலை பாடலாய் வடிகிறது.

மாமியார்-மருமகள் உறவை நம் முன்னோர்கள் இப்படித்தான் பார்த்தார்கள். காட்சிகள் மாறியது பின்னர்தான்.

எல்லா உறவுகளையும் கோபுரத்தில் ஏற்றி கொண்டாடும் நம் கவிஞர் கண்ணதாசன் கூட மாமியார்-மருமகள் உறவில் தன் குசும்பை காட்டுகிறார்.

SKIT : மாமியார் மருமகள் – THE WORD

செட்டியார் ஆச்சி தன் கணவன் நாராயணன் செட்டியார் தேடிக் கொண்டு வந்த மருமகள் பற்றிய பாடலும் அதற்கு எதிர்பாட்டு பாடும் மருமகளும் கண்ணதாசன் வரிகளில்

செட்டி நாட்டு மாமியார் மான்மியம்

நல்லாத்தான் சொன்னாரு
நாராயணச் செட்டி!

பொல்லாத பெண்ணாக
பொறுக்கி வந்து வச்சாரு

வல்லூறைக் கொண்டு வந்து
வாசலிலே விட்டாரு

கல்லாப் பொறந்ததையும்
கரும்பாம்புக் குட்டியையும்

செல்லாப் பணத்தையும்
செல்ல வைச்சு போனாரு

ஊரெல்லாம் பெண்ணிருக்கு
உட்கார வச்சிருந்தா

தேரெல்லாம் ஓடிவந்து
திருவிழாக் கோலமிடும்.

எட்டுக் கண் விட்டெரிக்க
எந்தம்பி மகளிருக்க

குத்துக் கல்போலே ஒண்ணெ
கூட்டிவந்தோம் வீடுவரை!

ஆறாயிரம் வரைக்கும்
அள்ளி வச்ச சீதனமும்

ஆறு வண்டி சாமானும்
அடுக்கி வைக்க பாத்திரமும்

சொக்க வெள்ளிப் பால்குடமும்
சோதி மின்னும் ரத்தினமும்

பச்சரிசி மூட்டையுடன்
பருப்பு வகை அத்தனையும்

எட்டுக்கல் மூக்குத்தியும்
ஏழு பவன் சங்கிலியும்

கண்டசரம் தோடு
காப்பு வைர மோதிரமும்

கண்டாங்கிப் பட்டுவகை
காசியிலே நெய்த பட்டு

மெத்தையுமே பத்துவகை
விரிச்சு வைக்க கம்பளமும்

தேக்கு மரம் கடைஞ்சு
செஞ்சு வச்ச பீரோவும்

தந்திருப்பான் எங்க தம்பி
தன் மகளை தந்திருந்தா

வந்தாளே காலியம்மா
வாய்க்கரிசி இல்லாமல்

அப்பன் கொடுத்தா சொத்து
ஆறுநாள் தாங்காது

கப்பலிலே வருகுதூணு
கதையா கதைபடிச்சான்

கண்ணா வளத்த பிள்ளை
காலேசிலே படிக்க வைச்சு

மண்ணாளும் ராசாபோல்
வளர்ந்ததடி என்வீட்டில்

பெண்ணா இவ சனியன்
புத்தி கெட்டு போனேனே

தம்பிமக சமைச்சா
சபையெல்லாம் வாசம் வரும்

அள்ளி இலையிலிட்டா
அடுக்கடுக்கா வெள்ளிவரும்

உண்ணவொரு கையெடுத்தா
உள்நாக்கில் நீர்வடியும்

கத்தரிக்காக் கூட்டுவச்சா
கடவுளுக்கே பசியெடுக்கும்

வெண்டைக்கா பச்சடியும்
வெள்ளரிக்கா தக்காளி

கிண்டி விட்ட கீரைக்கும்
கீழிறங்கும் தெய்வமெல்லாம்!

அப்படிக்கி சமைப்பாளே
அள்ளியள்ளி வைப்பாளே

அடுப்படிக்கு நான்போக
அவசியமே இல்லாமே

உட்கார்ந்த பாய்வரைக்கும்
ஓடிவந்து வைப்பாளே

இவளும் சமைச்சாளே
எல்லாந் தலையெழுத்து

முருங்கையிலே கீரை
முளையாய் முளைச்சதடி

விடிஞ்சா எந்திரிச்சா
வேறுகாய் இல்லையடி

குப்பையிலே கீரை
கொத்தாய் கிடைச்சதடி

அப்பா இவ எடுத்து
அகப்பையிலே கிண்டி விட்டு

சப்பாத்திக் கள்ளியை போல்
தையல் இலை போட்டு

வச்சாளே! சாமி இந்த
வலுசாரத் தந்தானே

வந்த நாள் தொட்டு
என் மகனைப் பிரிச்சு வைச்சா

எந்த நாள் பாவமோ
இப்ப வந்து சுத்துதடி

தலைக்காணி மந்திரத்தால்
தாயை மறக்க வச்சா

கொலைக்காரி வந்து எங்க
குடும்பம் பிரிச்சுவைச்சா

மலையரசி காளி எங்க
மாரியம்மா கேக்கோணும்

பலகாரம் தின்பதற்கும்
பசியே எடுக்கலைடி

ராசாக் கிளி போலே
நல்ல பிள்ளை பெத்தெடுத்தேன்

பேசாக் கிளியாச்சு
பெண்டாட்டி நினைவாச்சு

ஊசப் பணியாரம்
உளுந்த வடைக்கு ஊசலடி

பாருடாண்ணு சொன்னா
பாக்காம போறாண்டி

கேளுடாண்ணு சொன்னா
கேக்க மனம் இல்லியடி

எப்பவோ நானும்
இது வரைக்கும் வாழ்ந்தாச்சு

கொப்பாக எங்களைய்யா
கொடுத்தத நான் வச்சிருந்தா

இப்பாவி கையாலே
இழிசோறு திங்கணுமா

ஆத்தா கொடுத்தாளே
ஆறு தலைமுறைக்கு

ஐயா கொடுத்தாரே
ஐநூறு பொன் வரைக்கும்

பூமி கொடுத்தாரே
போட்டாக்க பொன் விளைய

சாமி கொடுத்ததுபோல்
தாய் தகப்பன் தந்ததெல்லாம்

பாவி மகன் வாழ
பகுந்து கொடுத்தேனே

நீட்டி படுக்கும்வரை
நிம்மதியா வாழ்ந்தேனா

ஊட்டி வளத்த பிள்ளை
ஒரு வார்த்தை கேட்டானா

எல்லாம் முடிஞ்சதடி
எமன் வந்தால் போதுமடி

பல்லாக்கு தூக்கி
பரிவாரம் தூக்கி வந்து

பச்சை மரம் வெட்டி
பட்ட விறகடுக்கி

வச்ச பின்னே மீண்டும்
வாழ வரப் போறேனா

கொள்ளி வச்சு தலமாட்டில்
குடமுடைக்க வந்த பிள்ளை

பள்ளி வரை என்னை
பாத்து வச்சு காத்தானா

தேவி விசாலாட்சி
தென்மதுரை மீனாட்சி

காவலுக்கு நீதான்
கடைசி வரை வேணுமடி

ஒரு மகளைப் பெத்தேனா
உதவிக்கு வேணுமின்னு

மருமகளை நம்பி நின்னேன்
மகராசி பேயானா

நல்லாத்தான் சொன்னாரே
நாராயணன் செட்டி!

 

மேலே மாமியாரின் புலம்பலுக்கு மருமளின் பதிலுரை

அவகெடக்கா சூப்பனகை
அவமொகத்தே யாருபாத்தா

அவுகமொகம் பாத்து
அடியெடுத்து வச்சேன்நான்

பத்து வராகன்
பணங்கொடுத்தா எங்களய்யா

எத்தனைபேர் சீதனமா
இவ்வளவு கண்டவுக?

ராமாயணத்திலயும்
ராமனுக்கு சீதைவந்தா

சீதனமா இவ்வளவு
சேத்துவச்சா கொண்டுவந்தா?

கப்பலிலே ஏத்திவச்சா

கப்பல் முழுகிவிடும்

அவ்வளவு சாமான்
அரிசி பருப்புவரை

மாவு திரிச்சுவச்சு
மலைமலையா அடுக்கிவச்சு

ஊறுகாய் அத்தனையும்
ஒண்ணுவிடாமவச்சு

நாக்காலி முக்காலி
நாலுவண்டி ஏத்திவச்சு

பாயும்தலையணையும்
பலவகையா கட்டிவச்சு

ஆளுவீடடங்காத
அழகான பீரோவும்

கண்ணாடிச்சாமானும்
கனத்தவெள்ளி பாத்திரமும்

அம்மிகுழவி
ஆட்டுக்கல் அத்தனையும்

கட்டிகொடுத்து
என்னை கட்டிக்கொடுத்தாக

வைரத்தால் கண்டசரம்
வளைககப்பு மோதிரங்கள்

சிறுதாலி பெருந்தாலி
சுட்டியெல்லாம் செஞ்சாக

தூக்கமுடியாம
தூக்கு கழுத்தூரு

முந்நூறு பவுனுக்கு
முள்ளங்கி பத்தைப்போல

எங்கையா ஆத்தா
எனக்குக் கொடுத்தாக

ஒருவேலை சோத்துக்கும்
உதவியில்லை இவ்வீட்டில்

மாமியார் இண்ணு சொல்லி
மாரடிச்சு என்னபண்ண?

கல்யாணியாச்சியும்தான்
கட்டிவிட்டா தன் மகளை

ஒருபொட்டுதாலி
ஒருவேளைச் சாப்பாடு

அதுமாதிரி இவளும்
அடைஞ்சிருக்க வேணுமடி

சம்பந்தம் பண்ணவந்தா
சண்டாளி சூப்பநகை

வேறேவைக்க நாதியில்லை
வீடில்லை வாசலில்லை

சோறுவைக்க பானையில்லை
சொத்துமில்லை பத்துமில்லை

புள்ளைதான் பெத்துவச்சா
பெண்ணோடு சோறு வர

தலைகாணிமந்திரமாம்
சங்கதிய கேலுங்கடி

பெண்டாட்டி சொல்கேக்க
புத்தியில்லா ஆம்பிளையா?

வீட்டு மருமகளா
வெளக்கேத்த வந்தவளை

சக்கதளத்தி போல நெனைச்சு
சதிராடுகின்றாளே

எங்களுக்கும் அண்ணந்தம்பி
ஏழுபேரு இருக்காக

அவுகளுக்கு பெண்ணாட்டி
அணியணியா வந்தாக

எங்காத்தா ஒருவார்த்தை
எடுத்தெறிஞ்சு பேசவில்லை

என்னைப்போல் பெண்ணாக
எண்ணிநடந்தாக

சனியம் புடிச்ச
என் தலையில்வந்து உக்காந்தா

மாமியார்க்கரியின்னா
மனசிரக்கம் கூடாதா

சாமியாரா ஆக
தன்மகனை விட்டிருந்தா

நாம ஏன் இங்கவந்து
நாத்தசோறுங்கோணும்?

அவுகளுக்கு நாஞ்சொல்லி
அலுப்பா அலுத்துவிட்டேன்

செவிடா இருக்காக்
சேதிசொல்ல எண்ணமில்லே

பட்டதெல்லாம் போதும்
பகவானே இங்கவந்து!

சட்டியிலே பொட்டு
தாளிச்சு கொட்டிவிட்டா

வட்டியிலே போட்டு
ஒரு வாய்ச்சோறு வைக்கையிலே

கொட்டுகிறா கொட்டு
தேள்கூட கொட்டாது

அவளுக்கழுவேனா
அன்னாடம் புள்ளைகொண்ட

சீக்குக்கு அழுவேனா
தினமும் கவலையடி

கோட்டையூர் அம்மந்தான்
கூலிகொடுக்கோணும்

பொன்னரசி மலையரசி
பு த்தி புகட்டோணும்

எங்க சொகங்கண்டேன்
இங்குவந்த நாள்முதலா?

கடவுளுக்கு கண்ணிருந்தா
காட்டுவான் கண்ணெதிரே

வத்தக்குழம்பு
வறுத்துவச்ச மொளகாயும்

பத்தியம்போல் சாப்பிடத்தான்
பாவி இவ வீடுவந்தேன்

தம்பி மகளை எண்ணி
தாளமில்லே கொட்டுறா

நம்பி அவளும்வந்தா
நாயாப்போயிருப்பா

கும்பி கருகி
குடல்கருகி நின்னிருப்பா

வெம்பி வெதும்பி
வெளக்குமாறாயிருப்பா

தம்பி மகளாம்
தம்பிமக தெரியாதா?

நாமா இருந்தமட்டும்
நாலுழக்கு பாலூத்தி

தேனா கொடுத்து இவள
திமிர்புடிக்க வச்சிருக்கேன்

போனாபோகட்டுமிண்ணு
பொறுத்து கெடந்தாக்க

தானான கொட்டுகிறா
தடம்புரண்டு ஆடுகிறா

அவதலைய போட்டாத்தான்
ஆத்தா எனக்கு சொகம்

எப்பவருவானோ
எடுத்துக்கினு போவானோ

இப்பவா சாவா?
இழுத்து வலியெடுத்து

கெடையாகெடந்து
கிறுக்கு புடிக்காமே

சாகவே மட்டா
சத்தியமா நான் சொல்றேன்

எங்க கொலதெய்வம்
இருந்தா பழிவாங்கும்

பங்காளி மக்களெல்லாம்
பாக்க பழிவாங்கும்

படுத்துனா மருமகள
படுத்துட்டா இண்ணு சொல்லி

நடுத்தெருவில் நிண்ணு
நாலுபேர் சிரிப்பாக

பாக்கத்தான் போறேண்டி
பாக்கத்தான்போறேன்நான்

ஒருத்தனுக்கு முந்தானை
ஒழுங்காநான் போட்டிருந்தா

இருக்கிற தெய்வமெல்லாம்
எனக்காக கேக்கோணும்

அவகெடக்கா சூப்பநகை
அவமொகத்த யார்பாத்தா?

ஜூலை மாதம் 30 மாமனார்கள் தினமாம்.