பாகம் 2

தன் முன்னாள் காதலியும் தற்போது  பீலியஸின் மனைவியுமான தீட்டிஸ்  தன்னிடம் கிரேக்க – டிரொஜன் யுத்தத்தில் டிரோஜன்கள் கை  ஓங்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டதும் முதலில் திகைத்த  ஜீயஸ் கடைசியில் அப்படியே செய்வதாக வாக்குக் கொடுத்தான். 

ZEUS AND HERA

இதைத் தன் மனைவி ஹீரா தெரிந்துகொள்ளக் கூடாது என்று மனதார விரும்பினான். ஆனால் தீட்டிஸ் மீது  தன் கணவனுக்கு இருக்கும் ஆசையை நன்குத் தெரிந்த ஹீரா ஜீயஸைச்  சாடினாள்.  அது ஜீயஸின் கோபத்தைத் தூண்டியது . ‘ என் சக்திக்கு முன் நீயோ வேறு எந்தக் கடவுளோ குறுக்கே நிற்க  முடியாது. எனக்கு எது சரியென்று தோன்றுகின்றதா அதைத் தான் செய்வேன்! ” என்று ஆணித்தரமாகக் கூறினார். ஹீராவின்   மகன்  தந்தையின் கோபத்தைக் கிளறவேண்டாம்  என்று வேண்டிக்கொள்ள ஹீரா அரை மனதுடன் சமாதானமானாள்.

ஜீயஸ் தான்  செய்யவேண்டியதைத் தீர்மானம் செய்துகொண்டார். அகிலிஸை ஏமாற்றிய கிரேக்க வீரர்களுக்கு ஒரு பாடம் புகட்ட முடிவு செய்தார்.

கிரேக்கப் படைத் தளபதி அகெம்னன் கனவில் போய் ‘டிரோஜன்களைக்  கொன்று போரில் வெற்றிபெற இதுவே சரியான தருணம் ‘ என்று பொய்யான தகவலை அசரீரியாகக் கூறினார். அதை உண்மை என்று மனதார நம்பிய அகெம்னன் தன் முக்கிய ஆலோசகர்களை ஒன்று கூட்டினான்.

அவர்களிடம் ஜீயஸ் தன் கனவில் சொன்ன செய்தியைக் கூறினான்.  ஆனால் அதேசமயம்  தன் வீரர்களின் விசுவாசத்தைப் பரிசோதிக்கவேண்டும் என்று விரும்பினான் அகெம்னன்.  அதன்படி ஜீயஸ் கடவுள் தன்  கனவில்   கிரேக்கப்படைகள் தோல்வியைத் தழுவி ஹெலனை மீட்க இயலாமல் சொந்த ஊருக்குத் திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறியதாக அறிவித்தான். அதைக் கேட்டு ஊருக்குத் திரும்ப எத்தனிக்கும் வீரர்களை இந்த ஆலோசகர்கள் தடுத்து நிறுத்தி ஒற்றுமையை உண்டாக்க வேண்டும் என்பது அவனது திட்டம். 

அது போலவே வீரர்கள் அனைவரையும் அழைத்து ஜீயஸ் கடவுள் தம்மை  வஞ்சித்துவிட்டதாகக்  கூறினான்.

அதைக் கேட்ட அனைவரும் சொந்த ஊருக்குத் திரும்ப மிகுந்த உற்சாகத்தோடு தங்கள் கப்பல்களைச் சரிசெய்ய ஆரவாரத்தோடு புறப்பட்டனர்.    

இலியட் கதையின் போக்கே மாறியிருக்கும் இது இப்படியே நடந்திருந்தால்.. 

தன் கணவன் கிரேக்கருக்கு எதிராக சதி செய்வதை உணர்ந்த ஹீரா , தன்  கணவன் ஜீயஸின் தலை வழியாகப் பிறந்த தலைமகள் அதீனியைத் தன் துணைக்கு அழைத்தாள்.  அவள் அறிவும்  அழகும் தந்திரமும் போர்க் குணமும் நிரம்பியவள்.   அழகிப்போட்டியில் தன்னைத்  தேர்ந்தெடுக்காததற்காக  டிராய் நாட்டின் பாரிஸ் மீது வன்மம் கொண்டவள். டிரோஜன்களை அழிப்பதில்  ஹீராவைவிட அதிக ஆர்வம் கொண்டவள். அவள்  கிரேக்கரில் மாபெரும் தளபதி  ஓடிஸியூஸ்  எண்பனைச் சந்தித்து தனது திறமையெல்லாம் காட்டி ஓடிப்போகும் ஆசையுள்ள வீரர்களைத் திரும்பப் போருக்கு  வரவழைக்க உத்தரவிட்டாள்.  

The Odyssey Setting - How Did Setting Shape the Epic? - Ancient Literature

ஓடிஸியூஸ் அகெம்னனிடமிருந்து  செங்கோலை  வாங்கி வீரர்கள் அனைவரையும் சாம தான பேத தாண்டா முறைப்படி மீண்டும் போருக்கு வரும்படி அறைகூவல் விடுத்தான். அவன் பேச்சிலும் திறமையிலும் மயங்கிய கிரேக்கர் அனைவரும மீண்டும் பலவித உத்வேகத்துடன் டிரோஜன்களை அழிக்க உறுதி பூண்டனர்.  அகெம்னனக்கு எதிராகப் பேசிய தெர்சிடிஸ் என்ற வீரனைத் தாக்கிக் காயப்படுத்தித் தன் நிலைப் பாட்டை உறுதியாக்கினான்.  ஓடிஸியூஸ் மற்றும் நெஸ்டர் இருவரும் கிரேக்க மாண்பினைப் பற்றியும், ஹெலனைத் திரும்பக் கொண்டு வருவது தங்கள் மானப்  பிரச்சினை என்பதையும் வீரர் மத்தியில் நிலை நாட்டினர். வீரர்கள் அனைவரும் முன்னைவிட அதிக உத்வேகத்துடன் போருக்குத் தயாரானார்கள்.   

அப்போது அகெம்னனும் அவர்கள் உற்சாகத்தில் கலந்துகொண்டு தன் கனவை  நினைவில் கொண்டு இதுவே டிரோஜன்களை வெல்லச் சரியான தருணம் என்று  உறுதி கொண்டான். 

தீர்க்கதரிசி  கால்காஸ் என்ற கிரேக்கநாட்டு அறிஞன் போருக்குப் புறப்படும்முன் நடைபெற்ற பலி  நிகழ்ச்சி ஒன்றை நினைவு கூர்ந்தான். அந்தப் பலி மேடையில் ஒரு பெரிய நாகம் வந்து அங்கே இருந்த தாய்ப் பறவையும் அதன் எட்டுக் குஞ்சுகளையும் விழுங்கியது. பின்னர் ஜீயஸ் அவரின் ஆணைப்படி ஒரு கல்லாக மாறியது. இந்தச் சம்பவத்தின் பொருள் என்ன என்பதையும் அவனே விளக்கினான். ஒன்பது  பறவைகளை விழுங்கியதால் ஒன்பது ஆண்டுகள் இவர்கள் போரிட்டாலும் வெற்றி காண இயலாது என்பதன்  சூசகமான அறிவிப்பு அது . பத்தாவது ஆண்டு இப்போது துவங்கிவிட்டது. டிரோஜன்களை வெற்றி கொள்ள இதுவே சரியான தருணம் என்பதை விளக்க வீரர்கள் வெறிக் குரல் எழுப்பினார். 

பின்னர்    அகெம்னன் வீரர்கள் அனைவரிடமும் பேசும்போது சில சமயங்களில் ஜீயஸ் கிரேக்கரைக் குழப்பப் பார்க்கிறார் என்றும் ஆனாலும் அவரது ஆசி எப்போதும் கிரேக்கர் பக்கமே என்று முழங்கினான். சற்று முன்னர் அக்கிலீசுடன் சண்டை போட்டதற்கும் இந்தக் குழப்பம் தான் காரணம்  என்றும் விளக்கினான்.

பின்னர் கடவுளர்களுக்குக் கொடுக்கவேண்டிய பலிகளையெல்லாம் மிகச் சிறப்பாக செய்து அனைவரையும் திருப்திப்படுத்தினான். ஆனால் பலிகளையெல்லாம் ஏற்றுக்கொண்ட ஜீயஸ் அவனுடைய பிரார்த்தனையை மட்டும்  ஏற்றுக்கொள்ளவில்லை.

அதினீ அவர்களுக்குத் துணைவர அகெம்னன் போருக்குத் தகுந்த வியூகங்கள் வகுத்தான்.  வீரர்கள் அனைவரும் கப்பல்களிலிருந்தும், பாசறைகளிலிருந்தும் புறப்பட்டு ஆற்றுச் சமவெளியை அடைந்தார்கள்.  

தன்னுடன் வந்திருக்கும் ஆயிரக் கணக்கான வீரர்களை நினைத்து மிகவும் பெருமையடைந்தான் மாபெரும் கிரேக்கத் தளபதி   அகெம்னன்.  படைத்தலைவர்களையும் அவர்களின் கப்பலைப் பற்றியும்  விளக்கமாகக் கூறி அவர்களையும்  பெருமைப் படுத்தினான். ஆயிரக்கணக்கான இடங்களிலிருந்து வந்த பல்லாயிரக்கணக்கான வில்லாளிகள், வாள்  வீரர்கள் , வெண்கலக் கேடய வீரர்கள் புரவி வீரர்கள் அனைவரையும் போற்றினான் அகெம்னன்.  

அக்கிலிஸ் மட்டும் சினம் வசப்பட்டு வராமல் தன் கப்பலிலேயே அமர்ந்திருந்தான்.  அதனால் அஜாக்ஸ் என்பவன் அக்கிலிஸிற்கு அடுத்த சிறந்த தளபதியாக விளங்கினான். 

 

அதேசமயம், ஜீயஸ் கிரேக்கப் படை புறப்பட்டுவிட்டதை டிராய் நாட்டு மன்னனுக்கு அறிவிக்கும்படி  அய்ரிஸ் தேவதைக்கு  உத்தரவிட்டார் ஜீயஸ்.   

Troy, Trojan defenders, Greek attackers - a photo on Flickriver

 டிராய் நாட்டு சக்கரவர்த்தி பிரியம்  அவனது மூத்த  மகனும் தன்னிகர் இல்லாத  தளபதியுமான  ஹெக்டர் மற்றும் பல உப தளபதிகள் ,  மந்திரிமார்கள் ஆகியோருடன்   ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தான்.    

அய்ரிஸ் தேவதை கிரேக்கப் படையின் முன்னேற்றத்தைக் கூறியதும் ஹெக்டர் தன் படை வீரர்கள் அனைவரையும் வந்து குவியுமாறு  உத்தரவிட்டான். தன் படை வீரர்களின் அணிவகுப்பைப் பார்த்த ஹெக்டர் மனம் பூரித்தான். எண்ணற்ற வீரர்கள். தளபதிகள் தங்கள்  புரவிப்படை காலாட்படை, ஈட்டிப்படை அனைத்தும் தயார் நிலையில் அந்த மலைச் சிகரத்தில் குழுமியிருந்ததைப் பார்த்துப் பெருமிதமடைந்த ஹெக்டர் எத்தனை ஆயிரம் கிரேக்க வீரர்கள் வந்தாலும் சரி எத்தனைப்பெரிய தளபதி வந்தாலும் சரி அவர்களனைவரையும் கொன்று குவித்து டிராய் நாட்டின் பெருமையை நிலை நாட்டுவேன் என்ற உறுதியை மனதில் கொள்கிறான். 

கிரேக்கம் – டிராய் இந்த மாபெரும் நாடுகளின்  படைகளும் சரித்திரப் புகழ்பெற்ற  டிரோஜன் யுத்தத்திற்காகத் தயார் நிலையில் இருந்தன.   

(தொடரும் )