கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

பயணக் கட்டுரைகள்!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நான் ஏழாம் வகுப்புப் படிக்கும்போது, சாரணர் இயக்கத்தில் – ஸ்கவுட் – சேர்ந்திருந்தேன். பள்ளிக்கூடங்களில், தேச பக்தி, விசுவாசம், பிறர்க்கு உதவுதல், பேரிடர்க் காலங்களில் சேவை போன்ற நல்ல விஷயங்களைக் கற்றுக்கொடுக்கவும், அவற்றில் பயிற்சியளிக்கவும் ஏற்பட்ட இயக்கம். எங்கள் ஸ்கவுட் மாஸ்டர், நல்ல தடித்த மீசையுடன், அடித்தொண்டையிலிருந்து வரும் குரலுடன் (ஒருமுறை குங்குமம் படத்தில் வரும் ‘மயக்கம் எனது தாயகம்’ பாடலை அவர் பாடினதாக நினைவு), ஸ்கவுட் யூனிஃபார்மில் ‘விரைப்பாக’ நடந்து வருவார். அவர்தான் எங்களை ஒருமுறை பழைய கடலூருக்கு (கடலூர் ஓ.டி.) இரண்டு நாட்கள் ஸ்கவுட் முகாமுக்கு அழைத்துச் சென்றார். போக வர இரயிலில் பயணம். அங்கு ஒரு பள்ளியில் தங்கியது, இரவில் கடற்கரையில் பயிற்சி, லைட் ஹவுஸ் அருகில் அமர்ந்து உணவு, ஆடல், பாடல், பகலில் பள்ளிக்கூடங்களுக்குச் சென்றது என இரண்டு நாட்கள் மகிழ்ச்சியாகக் கழிந்தன. திரும்பி வந்தவுடன், நான் எழுதிய கட்டுரைதான் என் முதல் பயணக்கட்டுரை! எல்லா மாணவ, மாணவிகளுக்கும் முன்னால், ஒரு பாலர் சபையில் என் கட்டுரையை வாசித்து, பாராட்டும், கைதட்டல்களும் வாங்கியது நினைவிருக்கிறது!

ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குத் தரை மார்கமாகவோ, கடல் அல்லது வான் வழியாகவோ செல்வதும், புதிய இடங்களைப் பார்ப்பதும், அங்குள்ள மக்களின் கலை, கலாச்சார, வரலாற்று மரபுகளைத் தெரிந்து கொள்வதும் மிகச் சிறந்த அனுபவமாகும். இந்த அனுபவங்களின் தொகுப்பே ‘பயணக் கட்டுரை’யாக எழுதப்படுகின்றன. பயணக் கட்டுரைகள் வாசிப்பதால், நமது பூகோள, சரித்திர, சமூக அறிவுக்குப் புதுப் புது செய்திகள் கிடைக்கின்றன. பயணம் தொடர்பான கட்டுரை, கதை, கவிதை, படம், திரைப்படம் ஆகியவற்றைப் பயண இலக்கியம் எனலாம் என்கிறது விக்கிபீடியா. 

பயணங்களின் பல வகைகளைப் பட்டியலிடுகிறது ‘வித்யாபாநு’ இதழில் சோமசுந்தரம் பிள்ளை எழுதிய கட்டுரை (1911).     அரசியல் தொடர்பான பயணம், கலை, பண்பாடு, மக்கள் தொடர்பான பயணம், தெய்வத் தொடர்பான க்‌ஷேத்திரங்களுக்குப் பயணம், கல்வி, தொழில் நுட்பம் தொடர்பான பயணம், உல்லாசப் பயணங்கள் என பலவகைப் பயண அனுபவ நூல்கள் கிடைக்கின்றன.

வழிப் பயண அனுபவத்தை உரைக்கும் ‘ஆற்றுப்படை’ நூல்கள் தமிழ் இலக்கியங்களில் நிறையவே இருக்கின்றன.

சேலம் பகடலு நரசிம்ஹலு நாயுடு அவர்கள் எழுதிய ‘ஆரிய திவ்யதேச யாத்திரையின் சரிதம்’ தமிழின் முதல் பயண இலக்கியம் எனப்படுகிறது. பின்னால் ஏ.கே.செட்டியார், சோமலெ, நெ.து சுந்தரவடிவேலு, மணியன், சாரதா நம்பியாரூரான், சாவி, தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான், பரணீதரன், சிவசங்கரி, வா.மு.சேதுராமன், லேனா தமிழ்வாணன், எஸ்.ராமகிருஷ்ணன் போறோர்கள் எழுதியுள்ள பயண இலக்கிய நூல்கள் நமக்குக் கிடைக்கின்றன. 

பயணக் கட்டுரைகளில் தி.ஜா வின் பாணி வித்தியாசமானது – சென்ற இடங்களைக் கலை நயத்தோடும், அங்கு சந்தித்தவர்களுடன் உரையாடியதை ஓர் அழகிய கதை போலவும் எழுதியிருப்பார். காவேரிக் கரை கிராமங்களையும், தோப்புகளையும், மனிதர்களையும் சுவாரஸ்யமாக விவரித்திருப்பார் தனது ‘நடந்தாள் வாழி காவேரி’ யில். சிவப்பு சூரியன் (ஜப்பான் பயணக் கட்டுரைகள்), ‘கருங்கடலும் கலைக்கடலும்’ (ரொமானியா, செக்கோஸ்லவாக்கியா பயணக் கட்டுரைகள்) வாசிக்க வேண்டிய பயணக் கட்டுரைகள்.  

தமிழில் பயணக்கட்டுரைகளுக்கு முன்னோடியாக இதழாசிரியர், எழுத்தாளர் ஏ.கே.செட்டியார் அவர்களைச் சொல்லலாம். 1850 – 1925 இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட பல பயணக்கட்டுரைகளைத் தொகுத்து, ஆறு நூல்களாக வெளியிட்டார். 1940 ல் தன்னுடைய பயண அனுபவங்களைத் தொகுத்து ‘உலகம் சுற்றும் தமிழன்’ என்ற பெயரில் நூலாக வெளியிட்டார். மற்றும் மலேயா முதல் கனடா வரை, அமெரிக்க நாட்டிலே, ஜப்பான் கட்டுரைகள், தமிழ்நாடு – நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள் போன்ற நீல்களையும் எழுதியுள்ளார். பல நாடுகளுக்கும் பயணம் செய்து, முதன் முதலாக மகாத்மா காந்தி பற்றிய ஆவணப் படம் எடுத்தவர் ஏ.கே.செட்டியார் (1940). இன்றும் அதன் பிரதி நாம் காணுவதற்கு சென்னை தக்கர் பாபா காந்தி நிலையத்தில் கிடைக்கிறது.

ஏ.கே. செட்டியாரின் ‘இந்தியப் பயணங்கள்’ புத்தகம் சமீபத்தில் வாசித்தேன். 1954 ல் முதற் பதிப்பு. இன்று வாசிக்கும்போதும் அதில் உள்ள விவரணைகளும், செய்திகளும், எள்ளலும், துள்ளலும், நகைச்சுவையும் பிரமிக்க வைக்கின்றன. அயல்நாடுகளின் பெருமை பேசும் பல தமிழர்களுக்குத் தமிழ்நாட்டின் பேரழகும், அதன் பெருமைகளும் தெரியாது; தெரிந்துகொள்ளவும் விருப்பமிராது என்று வருத்தமுடன் சொல்கிறார் ‘பிரயாணம் செய்யுங்கள்’ கட்டுரையில்.

தனது நாட்டையறியாத ஒருவன் வெளிநாடு செல்வதில் பயனொன்றுமில்லை என்கிறார்.

இந்தியாவில் எல்லா இடங்களுக்கும் ரயிலிலேயே பிரயாணம் செய்கிறார். ரயில் பிரயாண அனுபவங்கள் நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பவை.

இந்தோ – சீனா ரயிலில் கால்நடைப் பிராணிகளையும் ஏற்றிச்செல்வார்கள் என்று கூறி, “காக்கை குருவி எங்கள் ஜாதி” என்ற கொள்கையை நடைமுறையில் கடைபிடிப்பதாக பகடி செய்கிறார்.

அமெரிக்காவில் உள்ள ‘காமிரா ஸ்பெஷல்’ ரயிலைப் பற்றிச் சொல்கிறார். விடுமுறைத் தினங்களில் இயற்கை வனப்புள்ள இடங்களுக்குச் செல்லும் அந்த ரயிலில் காமிரா வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்! ரயிலில் ஒரு பெட்டியில் புகைப்படச் சாமான்கள் விற்பார்களாம். புகைப்படங்களை உருதுலக்குவதற்கு (டெவெலப்) இருட்டறையும் அந்த ரயிலில் உண்டாம்! பிரயாணச் சீட்டு இல்லாமல் கூட பிரயாணம் செய்யலாம்; ஆனால் புகைப்படக் கருவி இல்லாமல் பிரயாணம் செய்ய முடியாது என்று சொல்கிறார்.

மலை ரயில்கள், பூமிக்குக் கீழே செல்லும் ரயில்கள், ஆகாய ரயில்கள் (ரோப் ரயில்வே), சமுதிரத்தில் செல்லும் ரயில்கள் என பலவித ரயில்களை விவரிக்கிறார். மறந்து விடாதீர்கள், எழுதப்பட்ட வருடம் 1954 க்கு முன்பு!

அன்றைய கல்கத்தா (கல்கத்தாவில் உணவுப் பஞ்சம் வந்ததே தவிர, கலைப் பஞ்சம் வரவில்லை என்கிறார்!), ரயிலுக்கு பயணச்சீட்டு வங்குவது முதல், பயணிப்பது வரை இருந்த சிரமங்கள், முசபர்பூர் ரயில் நிலையத்தில் பட்ட அவதி, சரித்திர ஆசிரியர் மெக்காலே புகழ்ந்து எழுதிய காசி நகரம், காசியின் பெருமைகள், டெல்லி செல்லும் ரயிலில் ஸ்டவ் அடுப்பில் பால் காய்ச்சிய அம்மா, ‘டோங்கா’ பயணம் என சுவாரஸ்யமான விவரங்கள்!

வியாபாரத்தைப் பற்றி எழுதினால் குஜராத்திகளோடு முடியும். உத்தியோகங்களைப் பற்றி எழுதினால் மதராஸிகளோடு முடியும் என்று சொல்லிவிட்டு, “மதராஸிகள் என்றால் தமிழர், தெலுங்கர், கன்னடியர், மலையாளத்தார் எல்லோரும்தான்” என்கிறார். அது அப்போது! 

ஜயப்பூர், பம்பாய் எலிபெண்டா சிற்பங்கள், ராஜ்கோட், பூரி ஜகந்நாதம், பீஜப்பூர், கோவா, திருவண்ணாமலை, புதுச்சேரி, தரங்கம்பாடி, குமரிமுனை என இரண்டு, மூன்று பக்கங்களில் முக்கியமான செய்திகளை மிக எளிய தமிழில், சுவாரஸ்யமாகச் சொல்கிறார். பயணக் கட்டுரைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிய, ஏ.கே. செட்டியாரின் புத்தகங்களை வாசிப்பதே சிறந்த வழி!

(இந்தியப் பயணங்கள் – பிரயாணக் கட்டுரைகள். ஏ.கே.செட்டியார். சந்தியா பதிப்பகம் சென்னை 600083.)