அம்மா என்றால் அன்பு…
“அல்லி! இன்றைக்கு என்ன டாபிக்” என்றாள் அங்கயர்க்கண்ணி மாமி.
“மாமி. உலகில் ஐந்தாவது புத்திசாலி மிருகம் பற்றி தான் சொல்லப்போகிறேன்” என்றாள் அல்லிராணி
“மாமி, “கொஞ்சம் இரு மனிதன், சிம்பன்சி, டால்பின், யானை, அப்புறம் ஆக்டோபஸ் தான்”.
அல்லி ஆச்சரியத்தில் மூழ்கினாள்.
மாமி சொன்னாள்: “அதுக்குத் தமிழில் பேய்க்கணவாய் என்று பெயர்”.
அல்லி, “சூப்பர் மாமி” என்றவள், ”ஆக்டோபஸ் பார்ப்பதற்கு ஏலியன் மாதிரி, எட்டு உறுப்புகள், மூன்று இதயம், எட்டு மூளை கொண்ட விசித்திர ஜந்து. எப்படிப்பட்ட புதிர்வழி, அதாவது maze அமைத்தாலும் அதிலிருந்து வெளியே வரக் கூடிய அறிவு படைத்தது. எதிரிகளிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள உருமாற்றம் செய்து கொள்ளும் திறன் கொண்டது. பாதுகாப்புக்காக எதிரிகள் மீது விஷத்தையும் கக்கும். பெண் ஆக்டோபஸ் ஒருமுறையே கருத்தரித்துக் குஞ்சு பொரிக்கும். நான்கு வருடங்களே உயிர் வாழும்” என்றாள்.
மாமி, ”மேட்டருக்கு வாடி!” என்றாள்.
அல்லி சிரித்தாள்.
”மாமி இன்று ஒரு ஆக்டோபசின் மர்மக்கதை சொல்லப்போகிறேன். ஆழ்கடல் ஆராய்ச்சிக்கு கலிபோர்னியாவில் ஒரு ROV (Remote operated vehicle) மூலமாக 4600 அடி ஆழத்தில் சமுத்திரத்தின் அடித்தளத்தில் கண்ட காட்சி இது. அங்குக் கல்லால் ஆன கட்டை ஒன்றில் ஒரு ஆக்டோபஸ் படுத்துக்கிடந்தது. ஆராய்ச்சியாளர்களுக்கு அது என்ன செய்கிறது என்று விளங்கவில்லை. அண்மையில் தான் அந்த ஆக்டோபஸ் அங்கு வந்திருக்கவேண்டும். மறுபடி ஒரு மாதத்துக்குப் பின் அந்த ஆய்வாளர்கள் அங்கு சென்ற போது அதே காட்சி. அதே இடத்தில் அதே ஆக்டோபஸ் படுத்துக்கிடந்தது. இம்முறை அது ஒரு பெண் ஆக்டோபஸ் என்பதைக் கண்டு கொண்டனர். அது எந்த பாதுகாப்பு முறையும் செய்து கொள்ளாமல் அப்படியே கிடந்தது. மறுமாதமும் இதே நிலை. ’ஒரு வேளை அந்த ஆக்டோபஸ் உடல் நலம் குறைந்ததோ? அல்லது காயம் பட்டதோ?’ ஏதோ ஒன்றை மறைத்துக் கொண்டிருக்கிறது போல் தோன்றியது.
சரி பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று ஆய்வாளர்கள் மறுபடியும் மறுபடியும் 18 முறை வந்து பார்த்தனர். அந்த ஆய்வுகளில், அதற்குக் காயம் பட்டிருப்பதையும், அது எந்த உணவும் உண்ணாமல் இருந்ததையும் பார்த்தனர். முடிவில் கண்டது இது தான். 150 முட்டைகளை தனது எட்டு உறுப்புகளால் மூடி எதிரிகளிடமிருந்து வருடங்கள் பல, உண்ணாமல் ஓயாமல் காத்திருக்கிறது.
கடைசி முறை ஆய்வாளர்கள் போன போது, அந்த ஆக்டோபஸ்சைக் காணவில்லை. பொதுவாகவே, முட்டைகள் பொரித்ததும் தாய் உயிரை விட்டு விடுமாம். அந்த இடத்தில் 150 முட்டைக்கூடுகள் விரிந்து கிடந்தது. மக்களைப் பெற்ற அந்த மகராசி குஞ்சுகளைப் பெற்று அதைக் கண்ட பின் தன்னுயிரையும் விட்டாள். எந்த உயிரினங்களிடமும் தியாகம் செய்து அன்பு செய்வதில் தாய்க்கு மிஞ்சுவது ஒன்றும் இல்லை.”
கதை கேட்ட அங்கயர்க்கண்ணி மாமியும் கண்கலங்கினாள். ‘அம்மா என்றால் அன்பு’ என்று அவள் வாய் முணுமுணுத்தது.
இது ஒரு அதிசய உலகம்!
