புத்தகம் : The Wisdom Bridge
எழுதியவர் : Daaji Kamlesh D.Patel
இது ஒரு பென்குயின் ரேண்டம் ஹவுஸ் வெளியீடு. 2022-ல் வெளியிடப்பட்டது.
தாஜி என்னும் கமலேஷ் டி. படேல், குளோபல் ஹார்ட்ஃபுல்னஸ் மூவ்மென்டின் நான்காவது மற்றும் தற்போதைய ஆன்மீக வழிகாட்டி. கடந்த 40 வருடங்களாக தாஜி உலகத்திலுள்ள பல்வேறு நாடுகளில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு ஹார்ட்ஃபுல்னஸ் மெடிடேஷன் சொல்லிக் கொடுத்து வருகிறார். “தி ஹார்ட்ஃபுல்னஸ் வே” (ஜோஷுவா போலாக்குடன்) மற்றும் “டிசைனிங் டெஸ்டினி” ஆகிய இரு நூல்களை ஏற்கனவே எழுதி இருக்கிறார் தாஜி. இந்தியாவிலுள்ள கன்ஹா சாந்தி வனத்தில் தன்னுடைய குடும்பத்தினருடனும், பேரக் குழந்தைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்கிறார் தாஜி.
இந்நூல் எதைப்பற்றியது ?
இன்று குடும்பங்கள் சிதறிக் கிடக்கின்றன. தாத்தா பாட்டி ஓர் ஊரிலும் உற்றார் உறவினர் ஒரு நாட்டிலும், வளர்ந்து வரும் பேரன் பேத்திகள் வேறு ஒரு நாட்டிலும் என்று பலவிதமாக குடும்பங்கள் பிரிந்து வாழ்வது இன்றைய நிதர்சனம். அனைவரும் சேர்ந்து வாழ்ந்த ஒரு காலத்தில் தாத்தா பாட்டிகள், பேரன் பேத்திகளை நேரே கவனித்து வம்சாவளியாய் தாங்கள் கற்றுணர்ந்ததை எல்லாம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தொய்வில்லாமல் வழங்கி வந்தார்கள். ஆனால், இன்று தலைமுறைகள் பிரிந்து கிடப்பதால், அது அந்த பழைய முறையில் செய்வது சாத்தியமில்லாமல் போய்விட்டது. ஆனால், அதே நேரத்தில் இன்றைய அறிவியல் முன்னேற்றத்தால் செல்ஃபோன், வீடியோ கால், வாட்ஸப் என்ற தொலைத் தொடர்பு வழிகளின் பெருக்கத்தால், ஓரளவு இந்த பிளவை சரிக்கட்ட முடிகிறது.
தாஜியின் இந்நூல் இன்றுள்ள பெற்றோர்களுக்கும் தாத்தா பாட்டிகளுக்கும் தங்களுடைய குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளின் இன்றைய வளர்ப்பு முறையில் உள்ள சிக்கல்கள் என்ன, அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது, எந்தெந்த பருவத்தில் அவர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை எடுத்துச் சொல்கிறது.
இதற்கு வேண்டிய ஒன்பது கொள்கைகளை வரிசைப்படுத்துகிறார் தாஜி. குழந்தை பிறப்பதற்கு முன்பே பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகள் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்கிறார். பிறகு வளரும் குழந்தையின் ஒவ்வொரு பருவத்திலும் எந்த விதத்தில் நாம் அவர்களுடைய பூரணமான, ஆரோக்கியமான, ஆனந்தமான வளர்ச்சிக்கு உதவ முடியும் என்பதை அழகாக எடுத்துக்காட்டுகிறார் தாஜி.
இது பெற்றோராய் இருப்பவர்கள், தாத்தா, பாட்டியாய் இருப்பவர்கள் அனைவரும் படித்து பயன்பட வேண்டிய கையேடு. இந்நூலை நீங்கள் படித்துவிட்டு, மற்றவர்களுக்கும் பரிசளிக்கலாம். நான் பரிபூரணமாக பரிந்துரை செய்கிறேன்.
**************************************************************


