
உயிர்வாழும் பொது உரிமை எமக்கில்லையா? – மனிதர்
பசியாறப் பலவழிகள் பாரில் இருக்கையிலே!
தன்னுடல் தனை வளர்க்க
மன்னுயிர் கொல்லுதல்
என்னவிதம் நியாயம்?
எண்ணிப்பார் மனிதா!
அன்னையர் போல் தினமும்
அரும்பசிக்குப் பாலமுதம்
தந்தவரை நன்றியின்றி
கொன்றுதின்ன மனம்வருமோ?
மண்ணுழுது நீரிரைத்து
மணியுதிரப் போரடித்து
வண்டியிழுத்ததற்கு
வலிகூலி இதுதானோ?
பால்பெருக்க மருந்தூசி!
மடிகறக்க மின்கருவி!
குளிர்பதனம் செய்தவிந்து!
வேதனைதான் எம்வாழ்வோ?
உரோமம், கொம்பு, புனுகு,
சருமம், தந்தம் இன்னும்
பறிக்காமல் விட்ட மீதம்
ஏதேனும் உள்ளதுவோ?
பட்டிழை கூட்டும் புழுக்கள்
பருமுத்துச் சிப்பிகளாய்
கொன்றுபட்ட உயிரினங்கள்
கோடானு கோடியன்றோ?
சுயநல வேட்கையினால்
இனம்பல அழித்துவிட்டீர்!
பரிசோதனைக் கூடமதில்
பிராணிவதை செய்கின்றீர்!
இயற்கை உரமாய் எங்கள்
கழிவினின்று பயன்பெற்றும்
பால்சுரத்தல் நின்றுவிட்டால்
அடிமாடா யாக்குவதேன்?
மகரந்தம் மலர் சேர்த்து
மகசூல் தரும் தேனீக்கள்
சேகரம் செய்த தேனை
கவர்ந்துண்ணல் சரிதானோ?
காட்டு வாசிகளாய் முன்னர்
வேட்டையாடி ஊன் உண்ணக்
கற்றுத் தந்ததே முதலில்
வனவிலங்கு தானென்றால்
உழுது பயிர் விளைவித்து
உண்ணும்முறை அறிந்தபின்
ஊனுண்ணல் ஆறறிவின்
பரிணாம வளர்ச்சியோ?
மாட்டுப் பொங்கலிட்டு
வழிபட்டால் ஆயிற்றோ?
மனதில் சற்றே ஈரம்,
கனிவேதும் வேண்டாமோ?
கொன்றவரின் பாவம்
தின்றால் தீருமெனில்,
தின்பவ ரெல்லோரும்
கொன்றேதான் தின்றாரோ?
பிராணிகளை இறைவன்
வாகனமாய்க் கொண்டதுவும்
கருணையுடன் எமது குலம்
காப்பதற் கேயன்றோ?
உயிரினம் ஒவ்வொன்றும்
இறைவனின் படைப்பென்னும்
உண்மையை மதியா மனிதர்
மதம்பிடித் தாடுவதோ?
உடல்தேய உழைத்துதவும்
பிராணிக ளெலாம் தத்தம்
கடமைகளை நிறுத்திவிடின்
உம்நிலைமை என்னாகும்?
ஊனுண்டு உடல்வளர்த்தும்
நோய்கொண்டு போமென
கரோனா காண்பித்தும்
கருணைகொள்ள மாட்டீரோ?
ஜீவகா ருண்யம்போதித்த
புத்த சமண சைவர்முதல்
அருட்சோதி வள்ளல் வரை
வாழ்ந்திருந்த நாடிதுவே!
பிராணிகளின் சார்பில்
பசுநான் இறைஞ்சுகிறேன் எம்
உழைப்பை மதித்தேனும்
உயிர்ப்பிச்சை தந்திடுவீர்!
