நானும் இசையும்!
வாட்ஸ் ஆப் குழுமங்களில் சில சமயங்களில் நல்ல விஷயங்களும் நடக்கின்றன. அழகிய சிங்கர் ‘இசை புதிது’ என்ற ஒரு குழுவைத் தொடங்க, அதில் 70 க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் இசை ஞானத்தை வெளிப்படுத்துகிறார்கள் – பாடல்கள் இயற்றுவது, பாடல்கள் பாடுவது, இசை குறித்த சந்தேகங்களை விவாதிப்பது, சங்கீத சம்பந்தமான குவிஸ் என காலை ஐந்து முதல் இரவு 11 வரை ஒரே இசை மழை!
சின்ன வயதிலேயே இசை என்னுடன் வந்தது. அம்மாவின் அம்மா, பாட்டி வீட்டில் எல்லோரும் பாடுவார்கள். அந்தக் காலத்தில், வீட்டுப் பெண் குழந்தைகளுக்குப் பாட்டு சொல்லிக்கொடுப்பது என்பது ஒரு மரபு! பெண் பார்க்க வந்தால், ஓரிரு கீர்த்தனங்களைப் பாடச் சொல்வது வழக்கம். அதற்காகவேனும் கொஞ்சம் பாட்டு சொல்லிக்கொள்வார்கள் – பெரிய கச்சேரி செய்யும் எண்ணங்கள் எல்லாம் இருக்காது. அதையும் மீறி ஓரிருவருக்கு சங்கீதம் மீது விருப்பம் இருந்தாலும், குடும்பம் குழந்தைகள் என, மேலே சங்கீதம் பழக வழியிருக்காது. இப்போது காலம் மாறிவிட்டது – நிறைய குழந்தைகள் பாட்டு கற்றுக்கொள்கிறார்கள் – கர்நாடக சங்கீதம், சினிமா சங்கீதம், கிராமீயப் பாடல்கள், திருமறைகள், பிரபந்தங்கள், பாரதியார் பாடல்கள் என எல்லாவற்றுக்கும் இப்போது வகுப்புகள் நடக்கின்றன. புதுக்கவிதைகளைக் கூட இசைவடிவில் கேட்கமுடிகிறது. வரவேற்க வேண்டிய மாற்றங்கள்தான்.
ஆல் இந்தியா ரேடியோ வில் நிலைய வித்வான்களின் வாத்திய இசை, வாய்ப்பாட்டு இவை தவிர, ஒரு மணி நேரக் கச்சேரிகள் என கேட்டு மகிழ்ந்த காலம் என் இளமைக் காலம். இரவு ஒன்பது மணியிலிருந்து பத்து மணி வரை அரங்கிசையில் அப்போது பிரபலமாயிருந்த ஜி என் பி, மதுரை மணி, செம்மங்குடி சீனிவாச அய்யர், தண்டபாணி தேசிகர், மதுரை சோமு, பாலமுரளி கிருஷ்ணா, எம் எஸ், எம் எல் வி, ராதா ஜெயலட்சுமி போன்றோரின் வாய்ப் பாட்டு, துரைசாமி ஐயங்கார், எஸ் பாலச்சந்தர், சிட்டிபாபு வீணை, செளடய்யா, டி என் கிருஷ்ணன், லால்குடி ஜெயராமன், எம் எஸ் கோபாலகிருஷ்ணன் வயலின் என ஒலிபரப்புவார்கள். மாலை ஆறு மணியிலிருந்தே வேலைகளை முடித்து, ரேடியோவின் முன் வந்து அமர்ந்து கொள்வார்கள் – பெரிய சபாக்கள், கச்சேரி சீஸன்கள் இல்லாத காலம். அனைத்து இசைக் கச்சேரிகளும் ரேடியோவில்தான்!
சென்னை போன்ற பெரிய நகரங்களில் சபாக் கச்சேரிகள் நடக்கும். டிவி வந்தபிறகு, கச்சேரிகள் குறைந்துவிட்டதாகவே தெரிகின்றன. இப்போது விரல் நுனியில், யூ டியூப் எல்லா கச்சேரி, சினிமா, தனிப் பாடல்களையும் ‘செல்’வழி நம் பாக்கெட்டுக்குள் கொண்டு வந்து விட்டது!
சினிமாப் பாடல்களையே கேட்டுக்கொண்டிருந்த எனக்கு கர்நாடக இசையில் விருப்பம் வந்தது யேசுதாஸ் அவர்களின் ‘சிந்துபைரவி’ படப் பாடல்களைக் கேட்ட பிறகுதான். அதன் பிறகு மகாராஜபுரம் சந்தானம், பாலமுரளி கிருஷ்ணா, கே.வி.என்., மதுரை சேஷகோபாலன், சஞ்சை சுப்ரமணியன், மல்லாடி பிரதர்ஸ், டி.எம்.கிருஷ்ணா, சுதா ரகுனாதன், பாம்பே ஜெயஶ்ரீ என எல்லோருடைய பாட்டுகளையும் கேசட் / சிடி வடிவில் வாங்கி, இருபத்தி நான்கு மணி நேரமும் இசையுடன்தான் நாட்கள் நகர்ந்தன! அவ்வப்போது, நேரம் கிடைக்கும்போதெல்லாம் சபாக்களிலும் கச்சேரி கேட்பதுண்டு. அதன் அனுபவமே தனிதான்.
இசையை ரசிப்பது என்பதே ஒரு கலைதான்! என் மரியாதைக்குரிய குரு திரு பி ஆர் வெங்கடசுப்ரமணியன் மிகச் சிறந்த கர்நாடக இசைக் கலைஞர் – கீ போர்ட் ஆர்டிஸ்ட், பாடலாசிரியர், பரதநாட்டியங்களுக்கு பாடல் மற்றும் இசையமைப்பது என பன்முகங்கள் கொண்டவர். ராகங்கள் பற்றியும், தாளங்கள் பற்றியும், ஒரு பாடலை எப்படி ரசிப்பது என்பது பற்றியும் அவரிடம் இருந்து நான் நிறையத் தெரிந்து கொண்டிருக்கிறேன். ஆர்மோனியம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன் – முறையாகப் பயிற்சி செய்யாமல் விட்டுவிட்டேன்! ஆனாலும் எங்கள் வீட்டு ஐயப்பன் பூஜையில் பாடும் பாடல்களைப் பாடி அவற்றை முறைபடுத்திக்கொண்டேன்! எப்போது சங்கீதத்தில் எந்த சந்தேகம் வந்தாலும், உடனே அவரிடம் கேட்டுக்கொள்வேன். எழுத்து, இலக்கியம் என சிறிது பாதை மாறிவிட்டாலும், இசைக்கென செலவிடும் நேரம் குறைந்து விட்டாலும், இசையின்பால் உள்ள ஈர்ப்பு இன்னும் உயிர்ப்புடன் இருப்பதற்கு திரு வெங்கடசுப்ரமணியம் ஒரு முக்கியமான காரணம்.
ஃப்ராங்க் தாமஸ், என் ஆசிரியர் ஶ்ரீனிவாஸ் அவர்களின் பி.ஏ.வாக இருந்தவர். தாமஸுக்கு இசையின் மீது இருந்த காதல் சொல்லிமாளாது! டி.எம்.எஸ். குரலில் மெல்லிசைக் குழுக்களில் பாடுவது அவரது பொழுதுபோக்கு. எங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், பழைய பாடல்களைப் பாடிப் பொழுதைப் போக்குவோம்! அவரது மெல்லிசைக் குழுவில் ஓரிரு முறை நான் பாடியிருக்கிறேன்! அவர் கர்நாடக இசை கற்றுக்கொள்ள மயிலாப்பூர் வள்ளுவர் சிலை அருகில் வசித்து வந்த திரு பத்மனாபன் (செம்பை அவர்களின் சிஷ்யர்) அவர்கள் வீட்டுக்குச் செல்வார். ஆசை யாரை விட்டது? தோளில் ஜோல்னாப் பையில் இசைப் பயிற்சி புத்தகத்துடன் மதியங்களில் அவர் வீட்டிற்குச் சென்று பாட்டு கற்றுக்கொண்டது ஒரு காலம்! நேரமின்மை, சோம்பல் என என் இசைப் பயிற்சி பாதியிலேயே – கீதம் வரையில் -நின்றுபோனது. கற்றுக்கொண்ட சில துக்கடாக்கள் இன்னும் நினைவில் இருக்கின்றன. என் இசைப் பயிற்சி, என் இசை ஆர்வம் இவற்றை உடனிருந்து வளர்த்து விட்ட தாமஸ், ஒரு நாள் விடியற்காலை மறைந்துவிட, அவர் நினைவுகளும் அவருடன் பாடிய பாடல்களும் மட்டும் என் நினைவில் இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கேசட்டுகளைம், சிடி க்களையும் கொடுத்துவிட்டேன். சிலவற்றை மட்டும் ‘பென் டிரைவி’ல் சேமித்து வைத்துள்ளேன். அவ்வப்போது கேட்கும்போது இருபத்தைந்து வருடத்துக்கு முந்தைய நினைவுகள் இசையாய் மனதில் ஓடிக்கொண்டிருக்கின்றன!
இப்போது மீண்டும் ‘இசை புதிது’ குழுவில், பாட்டுக்களையும், தொண்டையையும் தூசி தட்டி எடுத்துப் பார்க்கிறேன். இசை வல்லுனர்கள், ஸ்மியூல் மற்றும் கரோக்கியில் பாடுபவர்கள், திருமறை, திருப்புகழ் முறையாகப் பாடுபவர்கள், பாடல் புனைபவர்கள், சினிமாப் பாடல்களில் தேர்ச்சி பெற்றவர்கள் என ஒரு திறமைகள் நிறைந்த குழு அது. தினமும் ஒரு ராகம், அதில் உள்ள கர்னாடக இசைப் பாடல்கள், சினிமாப் பாடல்கள், பக்திப் பாடல்கள் என அனைவரும் கலக்குகிறார்கள். இதில் சிலர் இந்திப் பாடல்களும் பாடுகிறார்கள். இங்கும் கிடைக்கும் நேரத்தில் எல்லோருடைய பாடல்களையும் கேட்கிறேன் – அவ்வப்போது பாடி, ‘இவனே பாடும்போது நமக்கென்ன?’ என்று மற்றவர்களை நினைக்க வைத்து, அவர்கள் தொடர்ந்து பாடுவதற்கு உதவி செய்கிறேன்!
இலக்கியத்தில் செய்வது போல, இசையிலும் பலருக்கும் வாய்ப்பளித்து ஊக்குவிக்கும் அழகியசிங்கர் பாராட்டுக்குரியவர்.
இசையை பற்றி பேச நிறைய இருக்கின்றது – என் இசைப் பயிற்சியைப் போல, பாதியிலேயே இங்கு நிறுத்திக் கொள்கிறேன் – மீண்டும் நேரம் கிடைக்கும்போது இந்த இ(ம்)சைக் கட்டுரையைத் தொடர்வேன்!




பிரமாதம், டாக்டர்
இது தொகையறா தான்..
கச்சேரி இனி தான்…
அன்பும் வாழ்த்தும்!
LikeLike