. கண்ணன் கதையமுது-20
(காளியனின் தொல்லை அகன்றதும் பிருந்தாவனத்து மக்கள் அச்சமின்றி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து் வந்தனர். கண்ணன் வழக்கம் போல் ஆநிரை மேய்த்து வந்தான்)
கண்ணனின் தோற்றப் பொலிவு
கொண்டையில் மயிலின் தோகை;
குண்டலம் இரண்டு காதில்;
கண்டவர் மயங்கும், மஞ்சள்
கவின்மிகு பட்டின் ஆடை;
கொண்டெழில் மணியின் மாலை;
குழலிசை இதழ்கள் கொஞ்சும்.
செண்டலர் மலர்மு கத்தான்,
திருவடி முளரிப் பூக்கள்!
முளரி- தாமரை)
.
கண்ணன் புகழ் பாடாமோ
(கவிக் கூற்று)
கொன்றையந்தீங் குழலூதும் கோவலன்பேர் பாடாமோ!
நன்றாம்பல் குழலூதும் நம்மிறையைப் பாடாமோ!
கன்றுபசு மகிழ்முல்லைக் குழலிறையைப் பாடாமோ!
சென்றுரலால் மருதொசித்த சிறுவன்சீர் பாடாமோ!
(மருதொசித்த – மருத மரங்களை முறித்த)
அன்றுபசி இன்றிமண்ணை அளைந்துண்ட ஆரமுதை,
வென்றுபல வல்லரக்கர் விதிமுடித்த விண்முகிலை,
நின்றுமிசை நச்சரவம் நீள்நடம்செய் நெடுமணியை,
என்றென்றும் உளத்துறையும் இன்னருளைப் பாடாமோ!
வேய்ங்குழலின் பெரும்பேறு
(கவிக்கூற்று)
முத்தமிட்டு முகுந்தனவன் மொய்மலரின் இதழ்தடவ,
மெத்தவிசை மேவுகின்ற மென்மைமிகு் வேய்ங்குழலே!
இத்தரையில் நீசெய்த இணையற்ற பெரும்பேறு,
பத்திசெயும் அடியவரும் பண்ணினரோ யானறியேன்!
மழைக் கால வருணனை
முகில்கூட்டம் வானை மூடும்;
முரல்வண்டு மலர்கள் நாடும்;
அகல்கானும் வளரும் ஓங்கி;
அன்றில்கள் ஒடுங்கும் ஏங்கி;
மிகவொலிசெய் இடிமு ழங்கும்;
வெண்ணிலவும் உடுவும் மங்கும்;
நகைமுல்லை விரியும், வாரி
நல்வெள்ளி பொழியும் மாரி!
ஆடை கவர்ந்து அருளுதல்!
குளிர்கால நோன்பு
மார்கழி வரவும் ஆயர்
மங்கையர் நோன்பி ருந்தார்.
ஊரினை விட்டுக் காலை
உதயமே ஆற்று நீரில்,
யாருமே இல்லை என்றே
இறங்கினார், ஆடை யாவும்
சேரவே கரையில் விட்டுத்
தெளிபுனல் ஆட லானார்.
ஆடைகளைக் கவர்தல்
முங்கிக் குளித்த கோபியர்கள்
முற்றும் தம்மை மறந்தாரே.
அங்கே வந்த மாயவனும்
ஆடை கவர்ந்து கடம்பமரத்
தொங்கு கிளைமேல் போயமர்ந்தான்.
தோகை மயிலார் தம்முடைகள்
எங்கே என்று பார்க்கையிலே,
எடுத்த கள்வன் முறுவலித்தான்.
கோபியர் கெஞ்சுதல்
தேட வேண்டா கோபியரே
சிறிது பாரீர் இங்கென்றான்.
ஆடைக் குவியல் அவனிடத்தில்,
அவரோ ஆற்று நீரிடத்தில்.
வாடைக் குளிரின் காற்றடிக்க
மஞ்ஞை அனையார் தத்தளித்தார்.
தாடா கண்ணா தந்துவிடு
தகுமோ விளையாட்(டு) எனவுரைத்தார்.
(மஞ்ஞை அனையார்- மயில் போன்ற கோபியர்)
அல்லைப் புரையும் அணியழகா
அன்பு கூர்ந்து தருவாயே!
எல்லை மீறும் விளையாட்டால்
எமக்கு வருமே பெருந்தொல்லை
நல்ல பிள்ளை நீயன்றோ?
நாங்கள் தவித்தல் காண்பாயோ?
ஒல்லை எங்கள் ஆடைகளை
ஓடி வந்து தந்துவிடு!
( புரையும்– போன்றிருக்கும்)
கண்ணன் விளக்கவுரை
உடைகள் இன்றி நீராடல்
ஒவ்வா(து) எனநீர் அறியீரோ?
குடையும் புனலை விட்டெழுந்து
கும்பிட்(டு) என்முன் வருவீரே!
விடையும் வினாவும் ஆனவன்முன்
வெட்கப் பட்டுப் பயனில்லை.
கடையில் உம்மைக் கடைத்தேற்றக்
கனிவால் செய்யும் கருத்தறிவீர்!
(குடையும்– மூழ்கி நீராடும்)
கடையில்-கடைசியில்)
கோபியர் உண்மை உணர்தல்
ஆறாய்ப் பெருகும் அறவுரையை,
அங்கே கேட்ட கோபியர்கள்,
வேறாய் அவனைக் கருதுவதால்
வெட்கம் அடைந்தோம் எனவுணர்ந்தார்.
மீறா(து) அவன்சொல் கைக்கூப்பி
மேலே வந்தார் உடைபெற்றார்.
மாறா உண்மைத் தத்துவத்தால்,
மாயை நீங்கிக் கதிபெற்றார்!
( தொடரும்)

Beautiful presentation
LikeLike
Beautiful presentation
LikeLike
தீராத விளையாட்டு பிள்ளையின் அறவுரை எக்காலத்திலும் யாவருக்குமானது அருமை
LikeLike