இந்தக் கதை ஹிந்தியில் அனு சிங் சௌதரி அவர்களால் எழுதப்பட்ட ‘நீலா (ஃப்ளூ) ஸ்கார்ப்’ என்ற கதைத் தொகுப்பிலிருந்து எடுத்து சுருக்கி மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கதையின் ஓட்டம் ஏதும் தடைபடவில்லை.

Railway ACT: Women And Children Cannot Be thrown From Reservation Coach At  Night

நான் அகமதாபாத் செல்வதற்கு பூரி-அகமதாபாத் இரயிலுக்காக வடனேரா ஸ்டேஷனில் நின்று கொண்டிருந்தேன். இது காலை ஏழு மணிக்கு அகமதாபாத் சென்று விடும். அங்கே நாள் பூரா வேலையை முடித்து விட்டு சாயங்காலம் இராஜதானி பிடித்து டில்லி செல்வது சரியாக இருக்கும்.

நான் ஒரு டாக்குமென்டரி படம் எடுப்பதற்காக அமராவதி வந்துள்ளேன். என்னிடம் கேமராக்காரர்களுக்கு வரமாகிய டீஎஸ்ஆர் 450 காமெரா இருக்கிறது. இது லகுவானதும் படம் எடுப்பதற்கு ஏதுவானதும் ஆகும். என்னுடைய அசிஸ்டண்ட் விஜய்யும் என்னுடன் இருந்தான்.

வடனேரா ஸ்டேஷனில் வண்டி இரண்டு நிமிடங்கள்தான் நிற்குமாதலால் மானிட்டரையும், ட்ரைபாடையும் விஜய்யிடம் ஒப்படைத்து விட்டு பத்து நிமிடங்கள் முன்பாகவே என் பெட்டிக்கு எதிரில் நின்று கொண்டேன். விஜய் உட்கார விரும்பினான்,  ஆனால் நான் சம்மதிக்கவில்லை. ஒரு கையில் கேமரா, முதுகில் பை, இரண்டு கைகளிலும் தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட், ஒரு செய்தித்தாள். கைகளும் காலி இல்லை, மூளையும் எதையோ யோசித்துக் கொண்டே இருக்கும். ஆனால் விஜய் பிரயாணத்தை முழுவதுமாக இரசிக்க விரும்பினான். ‘இரயில் வர நேரம் இருக்கிறது. டீ குடிக்கலாமா?’ என்று என் பதிலை எதிர்பார்க்காமல் என் அருகில் சாமான்களை வைத்து விட்டு சென்று விட்டான்.

நான் எங்கேயும் உட்கார விரும்பவில்லை. உட்காரும் இடம் தூரத்தில் இருந்தது, என் பெட்டியும் சரியாக இங்கே தான் வரும். மேலும் இங்கிருந்தே என்னால் டிவி பார்க்க முடிந்தது. சாமான்களையெல்லாம் தூக்கிக் கொண்டு அலைய யாரால் முடியும்?

விஜய் டீயும், வெங்காய பக்கோடாவும் வாங்கி வந்தான். நான் வரும்போதே பக்கோடா மேல் ஈக்களைப் பார்த்து விட்டதால் தண்ணீர் பாட்டில்களையும், பிஸ்கட்டையும் பையில் வைத்து விட்டு டீயை மட்டும் வாங்கிக் கொண்டேன். ரயிலின் வருகை அறிவிக்கப்பட்டது. இந்தப் பெட்டியில் நாங்கள் இருவர் மட்டுமே இங்கே ஏறுவதாக இருந்தது. இந்த வெயிலில் யார் பிரயாணம் பண்ண விரும்புவார்கள்!

இரயில் வந்தது. நீண்ட தூரம் பிரயாணம் செய்ய வேண்டிய இரயிலில் நடுவில் ஒரு சின்ன ஸ்டேஷனில் ஏறினால் நிறைய கஷ்ட-நஷ்டங்கள் இருக்கும். முதலாவது நமக்கு வேண்டிய இடம் கிடைக்காது. இரண்டாவது நீண்ட தூரத்திலிருந்து தங்கள் இருக்கையில் உட்கார்ந்து வருபவர்கள், எல்லா இடத்திலேயும் சாமான்களைப் பரப்பி வைத்திருப்பதால் அதன் நடுவில் நமது சாமான்களை நுழைப்பது மிகவும் துர்லபம், மூன்றாவது கழிப்பிடம். மூன்றாவதைப் பற்றி நினைத்தாலே தலை சுற்றுகிறது. இப்போது என் எதிரில் இந்த மூன்று சங்கடங்களும் இருந்தன.

வெள்ளை போர்வைக்கு உள்ளேயிருந்து பற்களேயில்லாத ஒரு முதியவர் ‘என்னால் மேலே ஏற முடியாது நாம் இடம் மாற்றிக் கொள்ளலாமா?’ பற்கள் இல்லாததால் அவர் பேசியதை விட சைகையினால் புரிந்து கொண்டேன். மற்றொரு புறம் ஒரு பெண்மணி புத்தகம் படித்துக் கொண்டே படுத்துக் கொண்டிருந்தாள். புத்தகத்திலிருந்து கண்களை மீட்கவும் இல்லை, அவள் காலடியில் இருந்த அவளது செருப்பு, பைகள், செய்தித்தாள்களின் துண்டுகள், சாப்பிட்ட தட்டுகள் இவற்றை அகற்றி என் சாமான்களை வைக்க இடமும் தரவில்லை.

நான் இன்னமும் இரயிலில் ஏறின மாதிரியே கைகளில் கேமரா, தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட் வைத்துக் கொண்டே நின்று கொண்டிருந்தேன். ‘இடத்தை நான் மாற்றிக் கொள்கிறேன். ஆனால் இவங்களைக் கொஞ்சம் நகர்ந்து இடம் தரச் சொல்கிறீர்களா?’ ‘இவர்கள் என கூட வரவில்லை’ என்று அந்தப் பெண்மணி சொன்னாலும் சிறிது கூட நகர முயற்சிக்கவில்லை.

இப்போது எனக்கு கோபம் தலைக்கு மேல் எறிற்று. என் காலாலேயே அவருடைய செருப்பு, சாப்பிட்ட தட்டுகள் இவற்றை வேகமாகத் தள்ளினேன். அவர்கள் படிப்பதிலேயேக் குறியாக இருந்தார்கள். இப்போது சலித்துக் கொண்டே பெட்டிகளை இழுக்கலானேன். ஆனால் அவைகள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தன. ‘தங்களது சாமான்களை ஒரு புறமாகத் தள்ளி வையுங்கள். இல்லாவிடில் அவற்றை வெளியில் தூக்கி எரிந்து விடுவேன்’. ‘அது எப்படி தூக்கி எறிவீர்கள். எதிரில் இடம் இருக்கிறதே! தெரியவில்லையா?’ ‘இல்லை. எனக்கு உங்கள் பிடிவாதம்தான் தெரிகிறது. சாயந்திரம் ஐந்தரை மணிக்கு யாராவது தூங்குவார்களா! எல்லாவற்றையும் ஒழுங்குபடித்தி சகபயணிக்கு உட்கார இடம் தரத் தெரியாதா! அங்கிள், நீங்கள் கீழ் பெர்த் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் மூன்று மணி நேரங்கள் எனக்கு உட்கார இடம் கொடுங்கள்’ என்று தீரரமானமாகப் பேசினேன்.

எனக்கு அந்தப் பெண்மணி மேல் மிகவும் கோபம் வந்தது. கையிலிருந்த பிஸ்கட், செய்தித்தாள் இவைகளை இருக்கையில் தூக்கிப் போட்டேன். அந்தப் பெண்மணியையும் அப்படியே தூக்கிப் போட வேண்டும் போல இருந்தது. ‘இவர்கள் என்ன நினைத்துக் கொள்கிறார்கள். ஒரு இடம் வாங்கி விட்டு முழு இரயிலையும் வாங்கி விட்ட மாதிரி நடந்து கொள்கிறார்கள். தான்அது செருப்பையும் சாமான்களையும் அடுக்கி வைக்க ஒரு வேலையாள் வேண்டுமோ! படிப்பது ‘பிரேமாஷ்ரம்’ நடப்பது ஒழுங்கீனம்!’ என்று முணுமுணுத்தேன். ‘தேப்ளா சாப்பிடுகிறீர்களா? நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்?’ என்று அங்கிள் கேட்டபோது வேண்டாவெறுப்பாக ஒரு துண்டு எடுத்துக் கொண்டு ‘ஒடிசா’ என்று சொன்னேன். அவ்வளவுதான் நான் எதிர்பார்த்த மாதிரியே அவர் என்னுடன் பேச ஆரம்பித்தார். தனது தந்தையைப் பற்றி, அவருடைய பள்ளியைப் பற்றி, அந்தக் காலத்தைப் பற்றி என்று பேச்சு நீண்டு கொண்டே போனது. இப்போது படுத்துக் கொண்டே அந்தப் பெண்மணியும் இந்தப் பேச்சில் கலந்து கொண்டாள்.

சுமார் பத்து மணிக்கு இரயில் புசாவல் என்ற இடத்தில் நின்றது. நான் ஏதாவது சாப்பிட கிடைக்குமா என்று இறங்க நினைத்த போது அந்தப் பெண்மணி ‘நீங்கள் இறங்குகிறீர்களா? எனக்கு தண்ணீர் வாங்கித் தர முடியுமா?’ என்று ஒரியாவில் கேட்டாள். ‘எனக்கு ஒரியா தெரியும் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்!’ ‘நீங்கள் தான் சொன்னீர்களே!’ ‘ஓ அப்போ புத்தகம் படிப்பது மாதிரி எங்களது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தீர்களா?’ என்று பரிகாசம் பண்னினேன்.

நான் தண்ணீர் வாங்கிக் கொண்டு பெட்டியில் ஏறி வருவதற்குள் விளக்கு அனைத்து விட்டு எனது இரு சக பயணிகளூம் தூங்கி விட்டனர். இரயிலில் ஓர் இரவில் தோன்றும் பழக்கம் அதோடயே முடிந்து விடுகிறது. ஒரு முறை ஷாலினி என்பவளுடன் ஸ்நேகிதம் ஏற்பட்டது அது சில நாட்களிலேயே முடிந்து விட்டது. அதற்குப் பிறகு நான் யாருடனும் பேச்சுவார்த்தை கூட வைத்துக் கொள்வதில்லை.

காலையில் தூக்கம் களையும் போது அகமதாபாத் ஸ்டேஷன் வந்திருந்தது. அங்கிள் தனது சாமான்களை அடுக்கிக் கொண்டிருந்தார். அந்தப் பெண்மணி அப்போதும் எழுந்திருக்காமலேயே மற்றொரு புறம் திரும்பிப் படுத்துக் கொண்டிருந்தார். இரயிலில் கூலிகளுடன் இருப்பத்தைந்து வயது ஒரு பையனும் ஏறி வந்தான். படப்படப்புடன் அந்தப் பெண்மணியைப் பார்த்து ‘அக்கா ஏன் இஃப்போனை ஆஃப் பண்ணி வைத்துள்ளாய்? நாங்கள் மிகவும் கவலைப் பட்டோம்.’ ‘நான் ஏன் ஆஃப் பண்ணப் போகிறேன்? சார்ஜ் இல்லை. நான் சார்ஜ் போட  பிளக் பாயிண்ட் கிட்ட போனால்தானே!’ என்று முதன் முறையாக புன்னகைத்தாள். ‘யாரோட உதவியை நாடி இருக்கலாமே?’ அவன் குரலில் கவலை தெரிந்தது. ‘அப்படி யாரும் எனக்குக் கிட்டவில்லை’ என்று பரிகசித்தாள். அந்த யுவன் எல்லா சாமான்களையும் கீழே இருந்து எடுத்தான்.

அத்துடன் கடைசியாக ஒரு சக்கர நாற்காலியையும், தாங்குக் கட்டையையும் எடுத்தான். மெதுவாக அந்தப் பெண்மணியைப் பிடித்து நாற்காலியில் உட்கார வைத்தான். அப்போதுதான் நான் பார்த்தேன் அவளது ஒரு கால் மரக்காலாக இருந்தது.

என் தலையில் ஒரு கூடம் தண்ணீர் கொட்டினமாதிரி இருந்தது.

அவர்களை ஏறிட்டு பார்க்கவும் வெட்கப்பட்டுக் கொண்டு தலை குனிந்து உட்கார்ந்து விட்டேன்.