இரண்டாம் ராஜேந்திரன்-2

முன்கதை: வருடம் 1054. கொப்பம் போர்க்களத்தில் சோழ-சாளுக்கிய போரில், சோழ மன்னன் ராஜாதிராஜனின் யானை மீதிருந்து இறந்து விழவே, இளவரசன் இரண்டாம் ராஜேந்திரன் சோழ முடிசூட்டி படை நடத்தி எதிரிகளை வென்றான். இனி தொடர்வோம்.
ராஜராஜ சோழன் மாபெரும் வெற்றிகளை அடைந்ததற்கு முக்கிய காரணம், அவன் மகன் மாவீரன் ராஜேந்திரன் படைத் தலைமை. அது போல் ராஜேந்திரனின் ஆட்சியில் அவன் அடைந்த மாபெரும் வெற்றிகளுக்குக் காரணம் அவனது மூன்று மகன்கள்: ராஜாதி ராஜன், இரண்டாம் ராஜேந்திரன், வீரராஜேந்திரன். ராஜாதிராஜன் மரணத்துக்குப் பிறகு, இரண்டாம் ராஜேந்திரன் மன்னனாகி கங்கைகொண்ட சோழபுரம் திரும்பினான்.
இரண்டாம் ராஜேந்திரனின் இளமைக் காலத்தைப்பற்றி சில வரிகள். ராஜேந்திர சோழதேவருக்கும், மகாராணி முக்கோகிலன் அடிகளுக்கும் மகனாகப் பிறந்தான். ராஜேந்திர சோழதேவனின் 9 மகன்களில் ஐந்தாவதாகப் பிறந்தான். இளவரசனாக இருந்தபோதே பாண்டிய நாடு, ஸ்ரீவிஜயம் நாடுகளில் இருந்த கலகங்களை அடக்கினான். மேலும் இலங்கையில் பொலன்னருவா, மற்றும் ரோகணத்தில் போரிட்டு அவைகளை சோழநாட்டுடன் சேர்ப்பதில் முக்கிய பங்கு வகித்தான். அங்கு பலம் பொருந்திய படைத்தலைவர்களை அமர்த்தினான். 1044 ல் தந்தை ராஜேந்திர சோழதேவர் மறைந்தபின், யுவராஜாவாகி , அண்ணன் ராஜாதிராஜன் மன்னனான உடன், அவனுடன் சேர்ந்து அரசாண்டான். கொப்பம் போர்ச்சமயம், ராஜாதிராஜனின் மகன்கள் சிறியவர்களாக இருந்த படியால், தானே மன்னனாகினான்.
இரண்டாம் ராஜேந்திரன் மன்னனான பின், 1055 ல் இலங்கை இளவரசன் விஜயபாகு இலங்கையில் சோழப்படையைத் துரத்தும் பொருட்டு முயற்சிகளில் இறங்கினான். இலங்கைப் படை சோழப்படைகளைத் தாக்குவதும், சோழப்படை இலங்கைப்படைகளைத் தாக்குவதும் தொடர்ந்தது. பொலன்னருவாவை நோக்கி விஜயபாகுவின் படைகள் முன்னேறின. இரண்டாம் ராஜேந்திரன், இலங்கையிலிருந்த சோழப்படைகளை பலப்படுத்த தனது மகன் உத்தமனை அனுப்பினான். பொலன்னருவா நெருங்கிய விஜயபாகுவின் படைகள் உத்தமனின் படைகளால் வீரட்டியடிக்கப்பட்டது. விஜயபாகு மீண்டும் ரோகண மலைப்பகுதியில் தஞ்சம் புகுந்தான். 1058 ல் விஜயபாகு, ரோகணத்தை சோழர் பிடியிலிருந்து விடுவித்து வாக்கிரிகலாவில் முடிசூட்டிக்கொண்டான். மீண்டும், பொலன்னருவா மீது படையெடுத்தான். உத்தம சோழன் இலங்கைப்படையை முறியடித்து அனைத்துக் கலகங்களையும் அடக்கினான். ராஜேந்திரன் அவனுக்கு ‘உத்தம சோழ லங்கேஸ்வரன்’ என்ற பட்டமளித்தான். அவனும் 1059- 1072 ல் அவனது மறைவு வரை திருக்கோணமலையிலிருந்து இலங்கையை ஆண்டிருந்தான்.
இப்பொழுது, சாளுக்கிய சமாச்சாரங்களுக்கு வருவோம். கொப்பத்துத் தோல்விக்குப் பின், அந்த அவமானத்துக்குப் பழி வாங்க சாளுக்கியன் சோமேஸ்வரன் துடித்துக்கொண்டிருந்தான். 1062ல், முடக்காறு நதிக்கரையில் (கிருஷ்ணா, துங்கபத்ரா இரண்டு நதிகளின் சந்திப்பில்) இந்தப் போர் நடந்தது. சோழப்படையில் ராஜமகேந்திர சோழனுடன், வீரராஜேந்திர சோழனும் சேர்ந்து போரிட்டனர். (ராஜமகேந்திரன் இரண்டாம் ராஜேந்திரனா அல்லது அவனது மற்ற தம்பியா என்பது பற்றி சரித்திரம் முடிவெடுக்கவில்லை. இப்போதைக்கு ஏதோ ஒரு சோழன்!). போரில் சாளுக்கிய படைத்தலைவன் தண்டநாயக வளதேவன் கொல்லப்பட்டான். மீண்டும் மீண்டும் சோழரே வென்றனர்.
பிறகு, சாளுக்கிய சோமேஸ்வரன் வெங்கியைக் கைப்பற்ற தொடுத்த போரும் இதே போர்க்களத்தில்தான் நடந்தது. சாளுக்கியன் தோற்றாலும் துவண்டானில்லை. அது கூடலசங்கமம் என்ற இடத்தில் நடந்தது. அதிலும் சாளுக்கியப்படை பலமாகத் தோற்கடிக்கப்பட்டது. இத்தனை முறை தோற்றாலும், தளராமல் மீண்டும் மீண்டும் போர் தொடுத்த ஒரே மன்னன் சரித்திரத்திலேயே இவன் தானோ?
சுற்றிப்பகை இருப்பது சோழ நாட்டுக்கு வழக்கமாகி விட்டது. பாண்டியர்கள் இவன் ஆட்சியில் அடங்கிக்கிடந்தது ஒரு ஆச்சரியமே! இலங்கை மன்னன் மானபரணன் யோசித்தான். அண்டைநாட்டு மன்னர்கள் அணிவரும் சோழனுக்கு அடிபணிந்து போனதால், வேறு யாருடன் கூட்டணி அமைப்பது என்று யோசித்தான். கலிங்க நாட்டு மன்னன் வீர சாலமேகனுக்கு ஓலை அனுப்பி கூட்டணி அமைத்தான். ராஜேந்திரன் திட்டமிட்டான்: ‘இலங்கையை பலமிழக்கச் செய்யவேண்டுமென்றால், கலிங்கத்தை அடக்கவேண்டும்’. கலிங்கத்து மீதும், இலங்கை மீதும் ஒரே நேரத்தில் படையெடுத்து, இருவரையும் வெற்றி கொண்டான்.
பலப்பலப் போர்களில் தன்னுடனும், அண்ணன் ராஜாதிராஜனுடனும், தந்தை ராஜேந்திர சோழ தேவருடனும் சேர்ந்து போரிட்ட தம்பி வீரராஜேந்திரனை யுவராஜாவாக்கினான். வீரராஜேந்திரனுக்கு ‘கரிகால சோழன்’ என்ற பட்டமளித்துப் பெருமைப் படுத்தினான். மேலும் வெற்றி கொண்ட பல ராஜ்யங்களுக்கு, தன் தம்பிமார்களை ஆளுனராக்கினான்: அவர்கள் சோழபாண்டியன், சோழகங்கன், சோழ அயோத்யராஜன். அனைவரும் பெயருக்கேற்றார் போல அந்தந்த ராஜ்யத்தின் ஆளுநர்களாக இருந்தனர்.
இத்தனை ரணகளத்திலும் கலைப்பாதை ஒன்றும் ஆன்மீகப் பாதை ஒன்றும் இருந்தது. கலைஞர்களை ஆதரித்தான். நாட்டியம், நாடகம், போற்றினான். தஞ்சைப் பெரிய கோவிலில் ‘ராஜராஜேஸ்வர நாடகம்’ என்ற இசைநாடகத்தை நடத்தி, அதில் பங்கு பெற்ற நடனமணிகளுக்கு உவந்தம் அளித்து ஊக்கமளித்தான். இந்த நாடகம் ராஜராஜனின் வெற்றிகளைக் காட்டும் நாட்டிய நாடகமாகும். ஆலயப்பணியில், திருக்கோயிலூர் உலகளந்தப்பெருமாள் கோவிலைப் பெரிதுபடுத்தினான். உலக்கையூர் என்ற இடத்தில் அகஸ்தீஸ்வரர் கோவிலைக் கட்ட முயன்ற போது, தடங்கல் ஏற்பட்டது. அங்கிருந்த கிராமவாசிகள், கட்டமைப்புக்குத் மூட்டுக்கட்டையிட்டுத் தடை செய்தனர். (அந்நாளிலேயே இந்தப்பிரச்சினை இருந்தது). மன்னன் மக்களிடம் பேசி அனைவரது ஒப்புதல்களையும் பெற்று கோவிலைச் சிறப்பாகக் கட்டி முடித்தான். 1059 ல் வீற்றிருந்த பெருமாள் கோவிலைப் பெரிது படுத்தினான்.
அரசனென்றாலே என்றுமே போர் தான். அந்நாளில் எதிரிகள் நான்கு பக்கமும் இருக்கும் போது சோழ மன்னர்கள் தங்கள் ஆற்றலால் தமிழத்தின் பொற்காலத்தை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். ஆயினும் பிரச்சினை இல்லாத வாழ்வு ஏது? அரசாங்கங்கள் தான் ஏது? சரித்திரம் விரைவில், விவரமாகப் பேசும்.
